இந்த நாட்களில் ஒன்று – கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ்

தமிழாக்கம்: செல்வராஜ் ஜெகதீசன்

கேப்ரியல் கார்சியா மார்கேஸ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார். தனது சொந்த நாட்டில் "கபோ" என அழைக்கப்படும் இவர் 20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். பல பெயர் பெற்ற புனைகதையல்லாத ஆக்கங்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். . தனிமையின் நூறு ஆண்டுகள் - 1967, காலராக் காலக் காதல் - 1985, போன்ற புதினங்கள் பெரிதும் புகழ் பெற்றவை. 1982ல் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு 'ஒரு நூற்றாண்டுத் தனிமை' நாவலுக்காக வழங்கப்பட்டது. இவரது பல சிறுகதைகளும் சில குறுநாவல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் கடந்த ஜூன் 2013 இல் காலச்சுவடு பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.

மழையில்லாத, சற்றே சூடான ஒரு திங்கட்கிழமை காலை, எப்போதும் சீக்கிரம் எழுந்து விடும் ஆரேலியோ எஸ்கோவர் (படித்துப் பட்டம் பெறாத பல் மருத்துவர்) காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் திறந்தார். பிளாஸ்டர் அச்சில் பொருத்தப்பட்டிருந்த சில பொய்ப் பற்களையும், கைக்கருவிகளையும் எடுத்து, காட்சிக்கு வைப்பதைப் போல, மேசை கண்ணாடிப் பெட்டியில் அளவான வரிசையில் வைத்தார். அவர் அணிந்திருந்த காலர் இல்லாத கோடிட்ட சட்டை, ஒரு தங்க நிறப் பொத்தானால் கழுத்துப் பகுதியில் மூடப்பட்டிருந்தது, கால்சட்டை சஸ்பெண்ட் பட்டிகள் மூலம் இழுத்து உயர்த்தப்பட்டிருந்தது. காது கேளாதவர்கள் சற்றே உற்றுப் பார்ப்பது போல சூழலுக்கு அரிதாகவே ஒத்திருக்கும் தோற்றத்துடன், நிமிர்ந்து ஒல்லியாக இருந்தார் அவர்.

மேசையில் பொருட்களை ஏற்பாடு செய்தவுடன், துரப்பணத்தை இழுத்து, பல் நாற்காலியில் அமர்ந்து, பொய்ப் பற்களை மெருகூட்டத் தொடங்கினார். தான் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், தேவையில்லாதபோதும் தனது கால்களால் துரப்பணத்தை பம்ப் செய்து, சீராக வேலையைத் தொடர்ந்தார். எட்டு மணிக்குப் பிறகு, ஜன்னல் வழியே வானத்தைப் பார்க்க சிறிது நேரம் நின்றார், பக்கத்து வீட்டு முட்கம்பத்தில் வெயிலில் காய்ந்து கொண்டிருந்த சிந்தனையிலாழ்ந்த பருந்தையொத்த இரண்டு பறவைகளைப் பார்த்தார். மதிய உணவுக்கு முன் மீண்டும் மழை பெய்யும் என்ற எண்ணத்தில் பணியைத் தொடர்ந்தார்.

அப்போது, அவருடைய பதினொரு வயது மகனின் உரத்த குரல் அவர்கவனத்தைக் குலைத்தது.

“அப்பா.”

“?”

“தன் பல்லை புடுங்குவீர்களா என்பதை மேயர் அறிய விரும்புகிறார்.”

கையில் வைத்து பாலிஷ் செய்து கொண்டிருந்த தங்கப்பல்லை, பாதி மூடிய கண்களால் பார்த்துக் கொண்டிருந்தவர், “நான் இங்கே இல்லை என்று அவரிடம் சொல்” என்றார்.
சிறிய காத்திருப்பு அறையில் இருந்து அவரது மகன் மீண்டும் கத்தினான். “நீங்கள் பேசியது அவருக்கு கேட்டதாம், நீங்கள் இங்கு இருப்பது தனக்குத் தெரியும் என்கிறார்.”
பரிசோதித்த பல்லை, மேஜைமேல் வைத்தபடி அவர் கூறினார்: “ரொம்ப நல்லது.” மீண்டும் துரப்பணத்தை இழுத்து, இயக்கத் தொடங்கினார். அட்டைப்பெட்டி ஒன்றிலிருந்து இன்னும் சில பற்களை வெளியே எடுத்து மெருகூட்டத் தொடங்கினார்.

“அப்பா.”

“?”

அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

“நீங்கள் அவருடைய பல்லைப் பிடுங்கவில்லை என்றால், உங்களைச் சுட்டுவிடுவேன் என்கிறார்.”

அவசரப்படாமல், மிகவும் அமைதியான இயக்கத்துடன், துரப்பணத்தை மிதிப்பதை நிறுத்தி, நாற்காலியில் இருந்து தள்ளியிருந்த மேஜையின் கீழ் இழுப்பறையை இழுத்துப் பார்த்தார். ஒரு துப்பாக்கி இருந்தது. “சரி…அவரை வந்து என்னை சுடச் சொல்” என்றார்.

மேஜையின் கீழ் இழுப்பறையில் கை வைத்தபடி, கதவுக்கு எதிரே அமர்ந்திருந்த நாற்காலியை தள்ளினார். கதவருகே மேயர் நின்று கொண்டிருந்தார். முகத்தின் இடது பக்கத்தை ஷேவ் செய்திருந்தார், மறுபக்கம் வீங்கி (வலியுடன்!) ஐந்து நாள் தாடியுடன் இருந்தது. பல் மருத்துவர், மேயரின் கண்களில் விரக்தியடைந்த பல இரவுகளைக் கண்டார். விரல் நுனியால் மேஜை இழுப்பறையை மூடிவிட்டு, நிதானமாகக் கூறினார்: “உட்காருங்கள்.”

“காலை வணக்கம்,” என்றார் மேயர்.

“காலை வணக்கம்,” என்றார் ஆரேலியோ எஸ்கோவர்.

மருத்துவ உபகரணக் கருவிகள் கொதிக்கும்போது, நாற்காலியில் உட்கார்ந்து தலையை சாய்த்த மேயர், சற்று ஆசுவாசமாக உணர்ந்தார். குளிர்ந்த சுவாசம் அவரிடமிருந்து வெளிப்பட்டது. வசதிகள் குறைந்த ஒரு அலுவலகம் அது. ஒரு பழைய மர நாற்காலி, மோட்டார் இல்லாத மிதியடிப் பெடல் துரப்பணம், பீங்கான் பாட்டில்கள் கொண்ட ஒரு கண்ணாடி பெட்டி. நாற்காலிக்கு எதிரே தோள்பட்டை உயர துணி திரையுடன் கூடிய ஒரு ஜன்னல்.

பல் மருத்துவர் தன்னை நெருங்குவதை உணர்ந்த மேயர், தனது குதிகால்களைக் கைகளால் கட்டியபடி, வாயைத் திறந்தார். விளக்கு ஒளியை நோக்கி மேயரின் தலையைத் திருப்பினார் ஆரேலியோ எஸ்கோவர். பாதிக்கப்பட்ட பல்லை ஆய்வு செய்த பிறகு, மேயரின் தாடையை, கவனமான அழுத்தத்துடன், தனது விரல்களால் மூடினார். “மயக்க மருந்து தராமல் செய்ய வேண்டும்” என்றார் ஆரேலியோ எஸ்கோவர்.

“?”

“ஏனென்றால் சீழ்படிந்த கட்டி உள்ளது.”

மேயர் அவர் கண்களைப் பார்த்தார். “சரி,” என்று புன்னகைக்க முயன்றார். பல் மருத்துவரிடம் எந்த புன்னகையுமில்லை. சுத்திகரிக்கப்பட்ட கருவிகளின் பேசினை பணிமேசைக்கு கொண்டு வந்து, அவசரப்படாமல், ஒரு ஜோடி குளிர்ந்த சிறுகுறடுகளை, தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தார். எச்சில் துப்பும் கிண்ணத்தை, தன் ஷூவின் நுனியால் தள்ளிவிட்டு, வாஷ்பேசினில் கைகளைக் கழுவச் சென்றார். இதையெல்லாம் மேயரைப் பார்க்காமல் செய்தார். ஆனால் மேயர், ஆரேலியோ எஸ்கோவர் மேலிருந்து கண்களை எடுக்கவில்லை.
கீழ்தாடையில் இருந்தது அந்த அறிவுப்பல். பல் மருத்துவர் கால்களை விரித்து, சூடான இடுக்கிகளால் பல்லைப் பற்றிக்கொண்டார். மேயர் நாற்காலியின் கைகளைப் பிடித்தபடி, தனது கால்களை முழு பலத்துடன் பிணைத்துக்கொண்டார், மேலும் அவரது சிறுநீரகத்தில் ஒரு குளிர்ந்த வெற்றிடத்தை உணர்ந்தார், எவ்வித சத்தமும் போடவில்லை. பல் மருத்துவர் மணிக்கட்டை மட்டும் நகர்த்தினார். எந்த துவேசமுமின்றி, மாறாக கசப்பான மென்மையுடன், கூறினார்: “இப்போது நீங்கள் அனுபவிக்கப்போகும் வலி, அந்த இருபது பேரின் மரணத்திற்குப் பதிலாக இருக்கும்.”

மேயர் தனது தாடையில் எலும்புகள் நொறுங்குவதை உணர்ந்தார், கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஆனால் பல் வெளியே வருவதை உணரும்வரை அவர் மூச்சு விடவில்லை. பின்னர் வெளிவந்த பல்லை கண்ணீரின் வழியே கண்டார். முந்தைய ஐந்து இரவுகளில் சித்திரவதை செய்த அது, இப்போது மிகவும் அந்நியமாகத் தோன்றியது. எச்சில் துப்பும் கிண்ணத்தை நோக்கி குனிந்து, வியர்த்து, மூச்சிரைக்க, தனது அங்கியை கழற்றி, பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுக்க முயன்றபோது, பல் மருத்துவர் ஒரு சுத்தமான துணியைக் கொடுத்தார்.
“உங்கள் கண்ணீரை உலர்த்துங்கள்,” என்று அவர் கூறினார். ஒரு நடுக்கத்துடன் மேயர் கண்களைத் துடைத்துக் கொண்டார். பல் மருத்துவர் கை கழுவும்போது, மேயர் இடிந்து விழும் போலிருந்த கூரையையும், சிலந்தியின் முட்டைகள் மற்றும் இறந்த பூச்சிகளுடன் தூசி படிந்த சிலந்தி வலையையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

பல் மருத்துவர் கைகளை உலர்த்திக்கொண்டு திரும்பினார். “படுக்கைக்குச் சென்று, உப்பு நீரில் வாய் கொப்பளியுங்கள்” என்றார். மேயர் எழுந்து நின்று, ஒரு சாதாரண இராணுவ வணக்கத்துடன் விடைபெற்று, அவரது அங்கிப் பொத்தான்களை போடாமல், கால்களை உதறி தளர்த்தியபடி, கதவை நோக்கி நடந்தார்.

“பில் அனுப்பு” என்றார்.

“உங்களுக்கா அல்லது அரசாங்கத்துக்கா?”

மேயர் அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. கதவை மூடிவிட்டு திரை வழியாகச் சொன்னார்: “இரண்டுமே ஒன்றுதான்.

Author

  • எழுத்தாளர் செல்வராஜ் ஜெகதீசன் 1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தற்சமயம் பணிநிமித்தம் (மின்பொறியாளர்) அபுதாபியில் (ஐக்கிய அரபு குடியரசு) வசித்து வருகிறார். "அந்தரங்கம்" (2008), "இன்னபிறவும்" (2009), “ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்” (2010), “நான்காவது சிங்கம்” (2012) “சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை” (2014) “பிரிவின் சாசனம்” தேர்ந்தெடுத்த கவிதைகள் (2019) ஆகிய கவிதைத் தொகுப்புகள் “யுகதர்மம்” சிறுகதைத் தொகுப்பு (2021) “இரண்டில் ஒன்று” (2020) குறுநாவல் தொகுப்பு & “கவிதையின் கால்தடங்கள், 50 கவிஞர்களின் 400 கவிதைகள் தொகுப்பு” (2013) வெளியாகியுள்ளன.

Related posts

சமன்பாடில்லா சமவெளிப் பயணம் -12 (இறுதிப் பகுதி)

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 –  இரு மகளிர் .. இரு சிந்தனை.

ஏழாவது பயணம் – ஸ்டானிஸ்லா லெம்