தமிழாக்கம்: சாந்தி மாரியப்பன்
பி. பி. போர்க்கர் (1910–1984) கோவாவின் இயற்கை எழிலையும், கலாச்சாரத்தையும் தனது கவிதைகளின் மூலம் உலகிற்குப் பறைசாற்றியவர். இவர் மராத்தி மற்றும் கொங்கணி ஆகிய இரு மொழிகளிலும் இணையற்ற இலக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் ஒரு சிறந்த கவிஞர் மட்டுமல்லாது, சுதந்திரப் போராட்ட வீரராகவும், பல மொழிகள் அறிந்த அறிஞராகவும் திகழ்ந்தார். இலக்கிய உலகிற்கு இவர் ஆற்றிய தொண்டைப் பாராட்டி, 1967-ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. கவிதைகள் தவிர புதினம், சிறுகதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் தடம் பதித்தவர். இவரது 'சாசாய்' (Sasai) என்ற கவிதைத் தொகுப்பிற்கு 1981-ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. “மாஸா காவ்' (Mazha Gaav - எனது கிராமம்) என்ற கவிதை கிராமப்புற கோவாவின் அழகைப் போற்றும் ஒரு உன்னதப் படைப்பாகக் கருதப்படுகிறது.
குஞ்சுகள் சிறகை விரிக்கின்றன
எங்கெங்கோ உள்ளன அவற்றின் கூடுகள்
நமது பொன்மாலைநேரம் இப்போது
பொன்னொளிரும் மேகவிதானங்களுடன்
எத்தனை கவலைகள் இருப்பினும் போயினும்
மென்வெய்யில் பரந்து விரிகிறது
இருள் அடர்ந்து நிலவாகி
அமைதியாக மலர்கிறது
நேற்றைய நினைவுகளை முழுமுற்றாய் மறந்து
வாழும் இன்றைய நினைவுகளைச் சேமிப்போம்
குழந்தைபோன்ற தூய மனதோடு
இன்னொரு முறை உலகை நேசிப்போம்
கரையின் மென்மையான புற்களை
கடலலைகள் வருடுவதுபோல்
கைகளை இழந்திருந்தாலும்
உலகின் கண்ணீர் துடைப்போம்
இங்குதானிருக்கின்றன நம் தீர்த்தக்கரைகள்
நமது வேர்களினடியில் பாய்ந்துகொண்டு
அவை அப்படியே இருக்கட்டும் நண்ப –
நானொரு ஈரக்காடு நீயொரு தேவஏரி
தாகத்தோடு அங்கு வரும் உயிர்களெலாம்
மழலைபோன்றவர் அறிக தோழி
காலம் கனியும் ஒரு நாளில்
மகிழ்வுடன் அலங்கரிப்பேன் அதன் கரையை.