“ஆஹா. விழிகள் மையேந்தி ஆட, என் குழலில் இருக்கும் மலர்கள் ஆட, என் கைவளைகளும் ஆட இவர் முன்னால் ஆடவேண்டும் என்று தோன்றுகிறதடி சித்ரா… என்ன அழகு… வெண்ணிலா முகம் என்றால் வெண்ணிலவுக்குக் களங்கம் இருக்கும்..இவரழகு என்ன அழகடி இவளே…”
“ஆமாம் தலைவி…. மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ.. ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையான் என தென்னாட்டுப் பாடலில் வரும் … அழியாத அழகுடையவராக்கும் இவர்.. விஷ்ணு என்ற தெய்வம் … ஆனால் ராமப்ரியர் என்று அழைக்கப் படுபவர்…”
“அவ்வப்போது உன் மொழியில் பேசி அதற்கு மொழி பெயர்க்கவும் செய்கிறாய் சித்ரா.. நல்லது.. இவர் எனக்கு வேண்டுமே..உடனிருப்பவர்கள் யார்?”
“உடன் இருப்பவர்கள் அவரது மனைவிகள் ஸ்ரீ தேவி பூதேவி என்பர்..”
“சரி, உங்கள் கதைகள் எனக்கு எப்போதும் புரிவதே இல்லை. தந்தையிடம் கேட்கப் போகிறேன் இந்த விக்ரகத்தை…” என்றாள் லகிமார்..
“அப்பா”
“சொல்.. லகி”
“எனக்கு ஒன்று வேண்டும்”
“இந்த நாடே உனக்குத் தானே.. சொல்.. லகி”
“நான் எனக்கே எனக்காக.. நான் விளையாடுவதற்காக ஒரு விக்ரகம் வேண்டுமே..”
“லகி… ஷாஹென்ஷா கஜினிக்குத் தெரிந்தால் என் பாடு கஷ்டம்.. ஏற்கெனவே இங்கே வைத்திருக்கிறேன்.. சிலவற்றை உருக்கிப் பொன்னாக்குவதற்கு.. இதில் நீ கேட்டால்?”
“அப்பா..தயவு செய்து ” என தோள் தொட்டு சுல்தானின் தாடி கொண்ட மோவாயினை நிமிர்த்தினாள் லகி..
அவள் கண்களின் கெஞ்சலில் நெகிழ்ந்தான் ஏஜாஸ்.. “சரி எடுத்துக் கொள்..”எனச் சொல்ல ஒரே மகிழ்ச்சி தான் லகிமாருக்கு..
சித்ராவிடம் சொல்லி பணிமக்களை அழைத்து ராமப்ரியரை ஹேரத்துக்கு எடுத்துச் சென்று வைக்க…
“சித்ரா…”
“என்ன தலைவி…?”
“இரு.. இவர் இவ்வளவு நாள் தனியாக இருந்தாரே பசித்திருக்காதா?”
“இருக்காது தலைவி..”
“போடி உனக்குத் தெரியாது..கொஞ்சம் வாட்டமாய் இருக்கிறது. முகம்..கொஞ்சம் நீரில் வாசனையிட்டுக் கொண்டு வா..அப்படியே அந்த மெல்லிய பட்டையும்..”
“சரி தலைவி..”
வாசனைத் திரவிய நீரினால் ராமப்ரியருக்கு க் குளியல்..கொஞ்சம் தள்ளி திரைமறைவில் அவன் தேவியருக்கு.. எல்லாம் லகியே செய்தாள்..
பின் சித்ராவிடம்,
“பழங்கள் அப்புறம் ஆகாரம்.. கொண்டுவா.. இவருக்குக் கொடுத்து பின் நான் உண்ணப் போகிறேன்…”
“தலைவி”
“ஏனடி உன் கண்களில் கண்ணீர்..?”
“இல்லை.. ஏன் ஏன் இப்படி…?”
“இவர் மீது… இவர் மீது என்னவென்று தெரியவில்லையடி…ஈர்ப்பு, காதல், அன்பு என்ன வேண்டுமானால் சொல்லிக் கொள்ளேன்.. இவருக்குச் சொந்தமானவள் நான் என்று மட்டும்தான் எனக்குத் தோன்றுகிறது…இவரே என் ப்யாரா…”
“இது நடக்குமா தலைவி…?”
“என் ஆழ்மனத்தில் சொல்லி வைக்கப் போகிறேன் இவளே..அது சொல்லிவிடும்.”.எனச் சொன்னாள் லகிமார்..
சில தினங்கள் கழிந்த ஒரு மாலை நேரம்..
ஹரேமில் விளக்குகள் ஏற்றப்பட்டுக் கொஞ்சம் ஒளி எங்கும் சிந்திக் கொண்டிருந்தது..
தலைவியின் அறையில் நுழைந்த சித்ரா திகைத்தாள்..
“தலைவி என்ன இது… நடனமாடப் போகிறீர்களா என்ன…?”
அகன்ற கடல் போன்ற விழிகளில் அஞ்சனம் தீட்டப் பட்டிருக்க கண்ணிமைகளில் சிறிதாய் வண்ணம் பூசப்பட்டிருக்க நெற்றியில் ஆபரணம்..அழகிய மேலாடை இடையாடை.. இடைமேல் உறவாடிய ஒட்டியாணம் காற்சலங்கைகள் காலில் தீட்டப்பட்ட செம்பஞ்சுக் குழம்பின் சிவந்த எல்லைகள்..
ஏற்றம் மிகுந்த எழிலாய் லகிமாரும் தோற்றத்தைக் கொண்டிருந்தாள்தான்..
”வெகு அழகாய் இருக்கிறீர்கள் தலைவி..”
லகிமார் சிரித்த வண்ணம் மெல்ல நடக்க அவளுடன் கால்சலங்கையும் சிரித்தது..
“ஆடப் போகிறேன் சித்ரா.. என் ப்யாராவிற்காக..அப்போதே சொன்னேனே
மைவிழி கொண்டேன் இன்று
…மயக்கமாய்ப் பார்வை கொண்டு
பொய்யுடல் தன்னில் நகைகள்
…பூண்டுதான் நிற்குங் காலம்
மெய்யென எந்தன் அன்பை
…மேன்மையாய் இந்த மேலோன்
சற்றெனும் உணரு வானோ
…சாய்வனோ எந்தன் மேலே
தெரியவில்லையடி, எனது ப்யாரா என்னை ஏற்றுக் கொள்வானா.?. அவனை மகிழ்ச்சிப் படுத்த ஆடப் போகிறேன் நீயும் பாரேன்..”
சித்ரா குழறினாள்.. “தலைவி இது நடக்கும் விஷயமில்லை”..
“ஆம் நடனமாடும் விஷயம்..”
“அவர் தெய்வம்”
“ஏன் மானுடலை தெய்வம் ஏற்றுக் கொள்ளாதோ.. மன்னிப்பாய் சித்ரா.. மானுடல் என்று விட்டேன் மானுடத்தை உங்கள் தெய்வம் ஏற்காதோ?”
“அப்படி இல்லை.. நீங்கள் அழகாய் குபேரை நிக்காஹ் மணம் புரிந்து..”
“குபேர்…”. சிரித்தாள் லகிமார்.. “அவனுக்கானவளில்லை நான்.”. ராமப்ரியரைச் சுட்டினாள்..”இவருக்கானவள்…”
(தொடரும்)