”முகத்தைப் பார்க்க முடியாது.. விழிகளைப் பார்த்தேன்.. கிடுகிடுவென என் இதயத்தைத் துளைத்தது.. யாருக்கும் வசப்படாத ஹிருதயம் என்னுடையது.. எதிரிகளுக்கு வாளால் பேசும்.. நண்பர்களைக் கௌரவிக்கும்..
ஆனால்… ஆனால் இவளது பார்வை.. பின் கைகளை மறைக்கவில்லையே அவள்.. என்ன அழகான ஓவியம் ஹென்னா வரைந்திருக்கிறாள்.. ஏற்கனவே சிவந்த கைகள்.. அதில் சிவப்புப் பூக்கள் சிவப்பு இலைகளென ஓவியம்… வெகு அழகு..
லகிமார்.. உன் கைகளோடு என் கைகள் சேரும் காலம் வெகுதூரத்தில் இல்லையடி….”
வேக வேகமாகக் குதிரையில் சென்று கொண்டிருந்த குபேரின் எண்ணவோட்டங்கள் சட்டெனக் கொஞ்சம் நின்றன..
அங்கே சற்றுத் தூரத்தில் ஆலமரத்தின் கீழ் தெரியும் ஒளி என்ன?
மாலை நேரமானதால் குதிரையைச் சற்று வேகமாய்ச் செலுத்திப் பார்க்க, ஆலமரத்தின் கீழ் அந்தப் பெரியவர் சாய்ந்திருந்தார்.. அவரிடம்தான் அந்த ஒளி..
மிக வயதானவர்… ஆனால் ஒரு தேஜஸ்.. அவரைச் சுற்றி ஒரு ஒளி போல.. அவரருகில் நெருங்கும்போதே ஒருவித பயமும் ஒருவித மரியாதையும் அவனுள் பரவுவதைக் குபேரால் உணர முடிந்தது..
குதிரையை நிறுத்தினான்.. உற்றுப் பார்த்தான்.. ஓ.. இவர் வேற்று மதத்தவர்.. சன்னியாசி போலும்.. நெற்றியில் மூன்று கோடுகள். தோள்களிலும்… வெற்று மார்பு.. இடையாடை கொஞ்சம் அழுக்காக… வெகுதூரம் நடந்திருப்பார் போலும்.. கண்கள் மூடியிருந்தார்..
“ஐயா.. பெரியவரே…”
கண்ணிமைகள் திறக்க விழிகள் பார்த்தன.. கூரிய ஒளி கொண்ட சாந்தமான விழிகள்.
“ஐயா தாங்கள்..?”
“நான் ஹொய்சளத்திலிருந்து வருகிறேன்.. அடியேனை ராமானுஜன் என்று அழைப்பார்கள்… சுல்தானைப் பார்க்க அவர் அரண்மனைக்குச் செல்கிறேன்.”
“அவ்வளவு தூரத்திலிருந்து வருகிறீர்களா?.. எப்படி வந்தீர்கள்? எப்போது புறப்பட்டீர்கள்?”
“இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.. கொஞ்சம் நடை.. கொஞ்சம் மாட்டு வண்டிப் பயணம்.. இரவில் தங்கல் என.. கொஞ்சம் எண்பதுக்கும் மேல் பிராயம் ஆகிவிட்டதப்பா, அதான் சற்றே கண்ணயர்ந்தேன்…”
“என்ன விஷயம் பெரியவரே…?”
“நீ யார்..?”
“மன்னியுங்கள்” என்றான் குபேர் அனிச்சையாக.. “என்னைச் சொல்லாமலே இருந்துவிட்டேன்.. என் பெயர் குபேர்.. பக்கத்து நாட்டு இளவரசன்..”
“ஓ..”
“ஆம்.. சுல்தானுக்குத் தெரிந்தவனும் கூட.. என்ன காரியம் எனச் சொன்னீர்கள் என்றால்..”
“வழக்கமாய் உங்களை முரடர்கள் கொள்ளையர்கள் என்பார்கள்.. நீ என்னிடம் நின்று தன்மையாய்ப் பேசுகிறாய், நன்றி குபேர்..”
“ஐயா.. மறுபடி தாங்கள் வந்த காரணம்..?”
“எங்கள் ஊருக்குச் சொந்தமான ஒரு விக்ரகம் உங்கள் சுல்தானிடம் இருக்கிறது.. அதைப் பெற்றுக்கொள்ள வந்திருக்கிறேன்…”
“விக்ரகம்.. ஓ உங்கள் பாஷையில் கடவுள்.. எங்களுக்கு உருவ வழிபாடு கிடையாது..”
“அது அவரவரைப் பொறுத்தது அப்பனே..”
“ஆனால் அது இருக்குமா என எனக்குத் தெரியவில்லை பெரியவரே.. உங்களிடம் வாதமும் நான் செய்ய மாட்டேன்.. ஏதோ ஒன்று தடுக்கிறது.. ஆனால்..”
“நிறைய ஆனால் போடாதேப்பா.. சொல்.”
“உங்களுக்கு ஒரு உதவி செய்ய முடியும்.. இங்கிருந்து எட்டுக் காதம் இருக்கிறது டெல்லி. அங்கிருந்து அரைகாதம் அரண்மனை சுல்தானுடையது.. என்னுடன் வருகிறீரா?.. கொஞ்சம் இருங்கள். அருகிலிருக்கும் கிராமம் சென்று உங்களுக்குச் சிவிகை ஏற்பாடு செய்கிறேன்.. கிடைக்கவில்லையெனில் ஒரு மாட்டு வண்டியாவது..”
“புரியவில்லை குபேர். எனக்கெதற்கு இது செய்கிறேன் என்கிறாய்?”
“தெரியவில்லை.. நான் வணங்கும் கடவுள் வேறு. நீர் சொல்லும் பெருமாள் வேறுதான்.. ஆனால் நான் என் தந்தைக்குப் பிறந்ததால் எனக்குக் கற்பிக்கப்பட்டதைச் செய்கிறேன். ஐயா அது மட்டுமல்ல..”
“பின்…?”
“உங்களிடம் கேட்கலாம் எனத் தோன்றியது.. கொஞ்சம் சொல்கிறீரா?.. என் மனதில் இருக்கும் குழப்பம் தீருமா?.. நான் ஆசைப்பட்டது நடக்குமா?.. ஏன் கேட்கிறேன் என எனக்கே தெரியவில்லை பெரியவரே…”
பெரியவர் சற்றே கண்ணை மூடினார்…” ராமப் பிரியரே.. உம்மைத் தேடி வந்தேன்.. இங்கே இவன் கேட்கிறான். பதில் சொல்லப்பா…” கொஞ்சம் உருகிக் கேட்டதில் உளத்துள் ஒரு குரல்..
“ம். அவன் ஆசை நடக்க வாய்ப்பில்லை.”
கொஞ்சம் திகைத்துக் கண்கள் திறந்தார்.. ஆவலுடன் பார்த்த குபேரிடம் சொன்னார்…
“இறைவன் சிந்திப்பது பாமரனுக்குப் புரியாது குபேர்..”
“புரியவில்லை ஐயா…”
“உனது ஆசை நிறைவேறாது எனத் தோன்றுகிறது.”
குபேர் கொஞ்சம் திகைத்தான்.. கோபப்பட்டான் மனதுள்.. பின் அமைதியானான்.. இல்லை.. ராமானுஜரின் விழிகள் அவனை அமைதியாக்கின..
“நேர்மையாய்ச் சொன்னதற்கு நன்றி ஐயா. நாம் டெல்லி போகலாம் இப்போது..”
அதே சமயத்தில் ஹரேமில் ஆடிய வண்ணம் பாடிக்கொண்டிருந்தாள் லகிமார்..
ஆடியே வணங்குங் காலம்
…அழகுடன் சிரிக்கின் றாய் நீ
ஊடிடும் உணர்வு பொங்க
…உளத்தினில் உன்னைக் கொண்டேன்
பாடிடும் பாடல் தன்னில்
…பாவையென் உள்ளம் சொன்னேன்
நாடியே வந்தேன் ப்யாரா
… நல்வழி வருவ தெப்போ
கனவினில் கைகள் கோர்த்தே
..ககனவான் வெளியில் நாமும்
வனப்புடன் பயணம் போனோம்..
…வண்ணமாய் எனது ப்யாரா
உணர்வினில் மகிழ்ச்சி ஊற்று
…ஓடுதே உன்னைக் கண்டு
நனவினில் இணைவ தெப்போ
..நற்பதில் சொல்லேன் கொஞ்சம்..
(தொடரும்)