முருகன் என் முன்னேர்

இன்றைக்கும் சென்னைக்குச் செல்லும்பொழுது மயிலாப்பூர் ராயர் மெஸ்ஸில் ஒரு வேளையாவது உண்ணாமல் திரும்புவதில்லை என்ற சபதத்தைக் காப்பாற்றிக்கொண்டுதான் வருகிறேன். குண்டாக இருந்தாலும் மெத்து மெத்தென்று இருக்கும் இட்லி, குழைந்திருக்கும் பொங்கல், தேங்காய்ச் சட்னி, தண்ணியாகச் சாம்பார், அவர்களின் பிரத்யேகமான காரச் சட்னி, ஏதாவது ஓர் இனிப்பு (அது பாதாம் ஹல்வாவாக இருந்தால் அந்த நாள் இனிய நாள்), இவை எல்லாவற்றுக்கும் பின்னர் கசப்பாக, கருப்பாக ஒரு காப்பி. இப்படி ஒரு வேளைச் சாப்பாட்டிலேயே அறுசுவையும் கிடைக்கும் இடம் ராயர் மெஸ். அதெல்லாம் போதாது என்றால் அங்கே இடம் கிடைக்கக் காத்திருக்கும் நேரத்திலும் பின்னர் வெளியே நின்று காப்பி குடிக்கும் நேரத்திலும் நண்பர்களோடு அடிக்கும் அரட்டை ஏழாவது சுவை.

இணையத்தில் தமிழ் புழங்கத் தொடங்கிய நாட்களில் தமிழ் இலக்கிய வாசகர்களும் எழுத்தாளர்களும் ஓரிடத்தில் பேசிப் பழகக்கூடிய இடமாகத் திகழ்ந்தது ராயர் காப்பி கிளப். எனக்குப் பின்னாட்களில் தமிழ் கற்றுத் தந்த ஆசான்கள் ஹரியண்ணா, பாரா, எழுத்தாளர்கள் நாகூர் ரூமி, பிஏகே போன்றவர்கள், நண்பர் சொக்கன் (அன்றைக்கு அவர் அறிமுகம்கூடக் கிடையாது), அவ்வப்போது இபா, சுஜாதா எனப் பெரிய தலைகள் எல்லாம் கூடிப் பேசும் இடம் ராயர் காப்பி கிளப். இந்தியாவை விட்டு வந்த பின் தமிழோடு தொடர்பில் இருக்க இந்த இணையக் குழுமம் ஒரு வழி என்பதற்காகவே நானும் இணைந்திருந்தேன். ஆனால் இவர்களுக்கு முன் வாயைத் திறக்கத் தைரியம் கிடையாது என்பதால் ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதுதான் என் வேலை.

ராயர் காப்பி கிளப் என்ற அந்தப் பெயருக்கு நான் முதலில் சொன்ன ராயர் மெஸ்தான் காரணம். அங்கு எப்படி அரட்டைக் கச்சேரி நடக்குமோ அது போலத்தான் இங்கு என உணர்த்தவே இந்தப் பெயர். இந்தக் குழுமத்தில் தொடர்ந்து இயங்கிய மற்றொரு பிரபலம் எழுத்தாளர் இரா. முருகன். வங்கிகளுக்கான மென்பொருள் உருவாக்கும் துறையில் இருந்தவர். அந்த அனுபவங்களையே புத்தகமாக எழுதியவர். என் துறையும் அதுதான் என்பதால் எடுத்த உடனேயே மனத்துக்கு நெருக்கமானவரானார். வெண்பா எழுதத் தொடங்கிய பின் அவர் அறிமுகம் கிடைத்தது. என்ன எழுதினாலும் எதிர் வெண்பா எழுதுவது, பாராட்டி இரண்டு சொற்கள் சொல்வது என்று வெகு பாந்தமாக எங்கள் தொடர்பு வலுவடைந்தது. கிரிக்கெட், அறிவியல் குறித்த தகவல் பரிமாற்றம், நகைச்சுவை, வம்புப் பேச்சு என்று எங்களுக்குப் பொதுவான தலைப்புகள் பலவும் கிடைக்க இந்தத் தொடர்பு நட்பானது. ஒரு கட்டத்தில் நினைத்தபோதெல்லாம் இராமு அண்ணா என அழைத்துப் பேசும் அளவுக்கு நெருக்கமானோம்.

பாடம் என்று தெரியாமலேயே அவரிடம் படித்தேன். இன்றைக்கு நான் எழுதுவதைத் திரும்பப் படிக்கும் பொழுது அதில் அவர் தாக்கம் இருப்பதை என்னால் உணர முடிகிறது.

உதாரணத்திற்கு இராமு அண்ணா ராயர் காப்பி கிளப் குழுமத்தில் எழுதியவற்றையே எடுத்துக் கொள்வோம். இன்றைக்கு அவை தொகுக்கப்பட்டு ‘ராயர் காப்பி கிளப்’ என்ற பெயரிலேயே புத்தகமாகக் கிடைக்கிறது. துணுக்குச் செய்திகள், நான்கடிகளில் வெண்பாக்கள், இரண்டு பக்கங்களில் ஏதோ தலைப்பை அழகாக அறிமுகப்படுத்துவது, புத்தக விமர்சனம், இலக்கிய உரசல்கள், லண்டன் அனுபவங்கள், அறிவியல், நாடகம், இசை என்று அவர் எழுதாத துறையே இல்லை என்பது போலக் கலந்துகட்டி எழுதி இருப்பார். ராயர் மெஸ் போலவே இந்த ராயர் காப்பி கிளப்பிலும் ஏழு சுவைகளும் இருக்கும்.

நவீனத் தமிழ், அந்தக் காலத்து மணிப்பிரவாளம், மலையாள நெடி அடிக்கும் தமிழ், இலக்கியத் தமிழ் என்று ஒவ்வொரு கட்டுரையும் வித்தியாசமாக இருக்கும். நீண்ட விசாரங்கள், அடுக்கி வைத்த புள்ளிவிவரங்கள், காத்திரமான கருத்துகள், நகைச்சுவை பொங்கி வழியும் பதிவுகள், படித்துக்கொண்டே வரும் பொழுது நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வரிகள் என்று அத்தனைப் பரிமாணங்கள் கொண்ட எழுத்து.

லண்டன் பாதாள ரயில் நிலையத்தில் குறுந்தொகைப் பாடலோடு அமரர் கல்கியின் துணைவியார் வரைந்த கோலமும் இருப்பதை நம் கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டுவார். அப்படியே அங்கிருக்கும் பாராளுமன்றம் பக்கம் போய்க் கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் அரசியல் எனக் கலந்துகட்டிப் பேசுவார். பாராளுமன்றக் கூட்டத் தொடரைத் தொடங்கி வைக்க அரசரோ அரசியோ வரும் பொழுது ஓர் உறுப்பினரைப் பிணைக்கைதியாகப் பிடித்து வைக்கும் வழக்கத்தைப் பற்றிச் சொல்வார். அங்கு “பிணைக்கைதியாகப் பிடித்து வைக்கப்பட்ட உறுப்பினர் அரச ரம்பங்கள் காதில் விழுந்து கழுத்தறுக்காமல் குஷியாகப் பாத்ரூமில் உட்கார்ந்து ப்ளேபாய் படித்துக்கொண்டிருக்கலாம்” என்ற ஒரு வரி நம் புன்னகைக்காகக் காத்திருக்கும். பிறகு எலிஸபெத் ராணியின் தேநீர் விருந்தில் துணிகளைத் துறந்து ஓடிய இளைஞன் பற்றி இருக்கும்; அதிலிருந்து ஸ்ட்ரீக்கிங் பற்றிய விளக்கம் இருக்கும்.

அடுத்த பக்கத்தில் பேருந்துப் பயணம் ஒன்றில் தமிழகக் கிராமங்களில் கவனித்தவற்றை விலாவாரியாக விளக்கும் கட்டுரை இருக்கும்; அதில் பேசாமல் புரோட்டாவைத் தமிழ்நாட்டின் தேசிய உணவாக அறிவித்துவிடலாம் என்ற சாடல் இருக்கும். கூடவே “கொளத்து மே மாடு கிர்கயா” என்ற தில்லிக்கேணி மொழி பற்றிக் குறிப்பு இருக்கும். சிக்கன விமானச் சேவை பற்றிய செய்திக் குறிப்பு இருக்கும், உள்நாட்டு – வெளிநாட்டு அரசியல் இருக்கும்.

ஏதோ நாடகத்தைப் பற்றிச் சொல்கையில் அதில் குறவர் வேஷம் போட்டுக்கொண்டு வந்தவர்களைப் பார்த்துச் சிரிக்கும் கூட்டத்தின் மேல் கோபம் இருக்கும். பன்னிரண்டு புள்ளிகள் கொண்ட பட்டியல் வடிவில் குந்தர் கிராஸ் எழுதிய ‘நண்டு நடை’ என்ற புத்தகத்திற்கு விமர்சனம் இருக்கும். ராமசந்திர குஹாவின் தெலுங்குக் கவிதைகள் குறித்த கட்டுரை ஒன்றைப் பற்றி எழுதும் பொழுது தெலுங்குக் கவிதையுலகோடு தமிழ்ச்சூழலை ஒப்பிட்டுப் பார்ப்பதில் கிண்டல் இருக்கும். தன்னைப் பற்றித் தெளிவத்தை ஜோசப் எழுதியதைக் குறித்துச் சொல்லும் பொழுது சுய எள்ளல் இருக்கும்.

ஹரியண்ணா எழுதிய வெண்பாவின் ஒற்றை வரியில் மரபின் முதிர்ச்சியும் புதுசின் பாய்ச்சலும் சச்சரவின்றிக் கலப்பதைச் சொல்வதில் ரசனை இருக்கும்; உரைநடையில் தொடங்கி வெண்பாவில் முடிக்கும் வடிவம் நன்றாக இருக்கிறது என்று அவர் குருநாதர் சுஜாதா சொன்னதால் அவ்வடிவத்தில் பல கட்டுரைகள் இருக்கும்.

இப்படி இன்னும் ஏராளமான ‘இருக்கும்’ இருக்கும்.

இந்தப் புத்தகத்தின் இறுதிக் கட்டுரை கலித்தொகையில் இருக்கும் ஒரு பாடலுக்கு விளக்கம். அதில் கடைசி வரி “உள்ளே பாளம் பாளமாகத் தங்கம் இருக்கிறது” என்பதுதான். அந்த வரியை இந்தப் புத்தகத்திற்கான விமர்சனமாகவும் கொள்ளலாம்.

இதையெல்லாம் படித்ததால் எனக்கும் இப்படிப் பலதரப்பட்டத் தலைப்புகளில் எழுத வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. என் வலைப்பக்கத்திலாகட்டும் இணைய இதழ்களிலாகட்டும் நான் படித்த, உணர்ந்த, ரசித்தவற்றைப் பற்றி எழுதி வருகிறேன். இதுதான் என்று இல்லாமல் அறிவியல், வரலாறு, செய்திகள் எனக் கலந்துகட்டிப் பத்திகளாக எழுதுவதற்கு இராமு அண்ணா எழுத்துகள் ஒரு தூண்டுதல் என்பதில் ஐயமே இல்லை.

இராமு அண்ணா தனது தீவிரப் பணிகளுக்கிடையேயும் எப்படியோ நான் எழுதும் கட்டுரைகளைப் படித்துவிடுவார். எதிர்பாரா நேரத்தில் அது குறித்துப் பேசுவார். சமயத்தில் முரண்படுவார். நன்றாக இருக்கிறதென்று பாராட்டுவார். எப்படி மேம்படுத்தலாம் என ஆலோசனை தருவார். எழுதத் தொடங்கிய காலத்தைவிட இன்றைக்கு நான் எழுதுவது கொஞ்சமேனும் மேம்பட்டிருக்கிறது என்றால் அதற்கு இது போன்று மூத்தோர் தந்த ஆலோசனைகளும் ஆதரவும்தான்.

எத்தனைக் கடினமான தலைப்பாக இருந்தாலும் எளிமையாகச் சொல்ல வேண்டும். நகைச்சுவை திணிக்கப்பட்ட ஒன்றாக இல்லாமல் படிக்கும் பொழுதே புன்னகை வர வைப்பதாக இருக்க வேண்டும். அந்தக் கட்டுரைக்குத் தேவையான மொழி என்ன என்பது தெரிந்து அதன்படி எழுத வேண்டும். ‘இது எனக்குத் தெரியும் பார்’ என்ற தொனி இல்லாமல், ‘நாம் இணைந்தே பயணம் செய்யலாம்’ என்ற எண்ணத்தோடு எழுத வேண்டும். இவையெல்லாம் அவர் எழுத்தில் இருந்து நான் கற்றுக்கொண்டவை. நான் எழுதும் பொழுது இவற்றைக் கொஞ்சமேனும் கடைப்பிடிக்கப் பார்க்கிறேன்.

முன்னேர் ஓய்வெடுத்துக்கொண்டுவிட்டது. தொடர்ந்து எழுதுவதுதான் நான் அவருக்குச் செய்யக்கூடிய கைம்மாறு.

ராயர் காப்பி கிளப் புத்தகத்தில் ஒரு தலைப்பு – “தம்பி தாளெடுத்து வா”. வெண்பா இலக்கணத்திற்காக அதை “தம்பிநீ தாளெடுத்து வா” என மாற்றி இராமு அண்ணா ஒரு வெண்பா எழுதி இருப்பார். அவர் நினைவாக அதே ஈற்றடிக்கு என் வெண்பா.

என்னால் முடியுமா என்றே மருண்டவனை
உன்னால் முடியும் உதவுகிறேன் நானென்று
நம்பிக்கை தானளித்து நல்லவரும் சொன்னாரே
தம்பிநீ தாளெடுத்து வா!

Author

  • இலவசக்கொத்தனார்  என்ற புனைபெயரிலும் எழுதி வரும் ராஜேஷ் கர்கா, ஒரு தமிழ் எழுத்தாளர். இவர் எழுதிய புத்தகங்களான ‘ஈசியாக எழுதலாம் வெண்பா’, செவ்வியல் தமிழ்க் கவிதை வடிவமான வெண்பா இலக்கணம் பற்றியது, ‘ஜாலியாத் தமிழ் இலக்கணம்’ தமிழ் இலக்கணத்தை எளிமையாகச் சொல்லும் ஒன்று. பெரு நாட்டில் பெற்ற பயண அனுபவங்களை ‘பெரு(ம்) பயணம்’ என்ற பெயரில் தமிழிலும், ‘Perambulating in Peru’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் புத்தகமாக இவர் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் இடையில் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். பல தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

Related posts

இரா. முருகனும் ‘சேது’ சிறுகதையும்

விழ வைத்த அன்பும், விடைபெற்ற சிரிப்பும்..

ஓர் விஸ்வரூபப் பெருவிருட்சம்