உலகெங்கும் நிறைந்திருக்கும் இயற்கையின் கருணை அளவிட முடியாதது. எந்த உயிரினத்திற்கும் இயற்கை அன்னை தன் கருணையைச் சற்றும் குறைத்து வழங்குவதில்லை. இயற்கையின் கருணை ஒரு அமுதசுரபி, வற்றாத நதி. அந்தக் காடு இயற்கையின் கருணையைப் பரிபூரணமாக உள்வாங்கி, அழகிற்குப் பஞ்சமின்றி விளங்கியது. அடர்ந்த மரங்கள் வானை முத்தமிட, இலைகள் பசுமையில் பிரகாசிக்க, பசும் மரகதத்தின் இடையிடையே தங்கமும் வெள்ளியுமென முதிர்ந்த இலைகள் பளிச்சிடுகின்றன. அந்த வனத்தில், கோதாவரி என்னும் பேரெழில் கொண்ட காட்டாறு, தன்னுள்ளே நவநிதியங்களைச் சேர்த்து இழுத்துச் செல்லும்போது, ஆங்காங்கே உள்ள பெரும் பாறைகளைத் தழுவி, இனிய இசையை உருவாக்கிக் கொண்டு ஓடுகிறது.
ஆற்றின் கரைகளில் மயில்கள் சுதந்திரமாய் நடனம் ஆட, ஓங்கி உயர்ந்த மரங்களின் உள்ளிருந்து குயில்கள் கீதம் பாட, காற்று அவற்றினூடே தன் மெல்லிசையை எதிரொலிக்கிறது. இலைகளில் முத்துக்களாய் காலைப் பனி மின்னி ஒளிர்கின்றன. வனம் பல மூலிகைகளின், நறுமணம் கொண்ட அகில், சந்தனம் போன்றவற்றின் மணத்தையுன் காற்றில் கலந்து, மனதை மகிழ்வில் ஆழ்த்துகிறது.
வண்ண மலர்கள் காட்டை அலங்கரிக்க, பூகளினிடையே தேனீக்கள் ரீங்காரமிடுகின்றன.
அங்கே இயற்கையின் ஆக்கிரமிப்பில்
மரங்களிடையே வெய்யோனின் ஒளி ஊடுருவி, தரையில் நிழல் பொன்னிற வலை பின்னுகிறது. மான்கள் துள்ளி ஓட, கிளிகள் கிளை மாறி கலகலக்கின்றன. பகலில் சூரிய ஒளி மரங்களைத் தழுவி, காட்டிற்கு பொற்கம்பளம் விரிக்கிறது என்றால்,
இரவில், நிலவொளி காட்டை வெள்ளியால் மூடியதைப் போல பரவி நிற்கிறது. வான் நட்சத்திரங்கள் மின்ன, காடு கனவுலகமாய் மாறுகிறது. வனத்தின் ஒவ்வொரு அசைவிலும் இயற்கையின் ஆன்மா உணர்த்தப்படுகிறது.
இந்தக் காடு, மனதை அமைதியில் ஆழ்த்துகிறது. மரங்களின் அசைவு, இயற்கையின் நடனமாக கண்களை கவர்கிறது. பறவைகளின் குரல்கள், கவிதையின் வரிகளைப் போல இதயத்தை தொடுகின்றன.
நதியின் ஒரு பகுதியில் மூங்கில் குடில்கள் அமைதியாக நின்றன. பனை ஓலைகளால் அல்லது புற்களைக் கொண்டு வேயப்பட்ட கூரைகள், சுற்றி வளர்ந்திருக்கும் பூச்செடிகளும் கொடிகளும் குடில்களின் மேல் படர்ந்து வாசம் பரப்பி அந்த இடத்தை மிக இரம்மியமாக அடித்திருந்தன.
அந்த நதிக்கு மறுபக்கமோ அரக்கர்கள் ஆதிக்கத்தில் இருண்டு கிடக்கின்றது. இயற்கையால் உண்டான கற்குகைகளும், பெரு மரங்களின் வேர்களில் உண்டான இடைவலிகள், பிலத்துவாரங்கள் என அவர்கள் தங்கள் குடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அந்த இடம் பலவகையான விலங்குகள், பறவைகள் , அடித்து இழுத்து வரப்பட்டு தின்று வீசப்பட்ட மனிதர்களின் மிச்சங்கள் என கலந்து ஒரு வகையான துர்பாசனையும், அங்கே நெருங்க முடியாத அச்சத்தையும் ஏற்படுத்தின. அவர்கள் எலும்புகளைக் கொண்டு தங்கள் எல்லைகளை வரையறை செய்திருந்தனர்.
இந்த வனம் தான் தண்டகாரண்யம், இயற்கையும் ஆன்மீகமும், மாயங்காளும் இணையும் மர்ம பூமி.
தண்டகாரண்யத்தில் எப்போதும் மந்திரமும், விலங்கினங்களின் ஒலிகளும், அரக்கர்களின் ஆரவாரங்களும், அவர்களால் பாதிக்கப்பட்டோரின் முனகல்களும் காற்றில் கலந்திருந்தன.
அங்கே, மிகச் சுதந்திரமாக உலவினாள் ஒருத்தி. அவள் பெயர் காமவள்ளி. அவள் ஒன்றும் சாதாரணப் பெண்ணல்ல, சிருஷ்டி கர்த்தாவான பிரம்மன்க்ன் பெயர்த்தி. அவளது அழகு பொன்னெழிலானது. மிக கம்பீரமானது. அவள் இளம்பெண், அந்த வனத்தின் வசந்தத்தின் மலர்ச்சி போல ஒளிர்கிறாள். பிரம்மன் தன் பெயர்த்திக்கு வஞ்சனை இல்லாது பேரெழிலை வழங்கி இருந்தான்.
கூந்தல், இரவின் கருமையை நிறைத்து அலை அலையாய் அசைகிறது. கண்கள், நீல நதியில் மின்னும் நட்சத்திரங்களைப் போல பிரகாசிக்கின்றன. அவள் புன்னகை, மலர்ந்த மல்லிகை வெண்மை நினைவூட்டும். கன்னங்களோ, பனித்துளி தீண்டிய ரோஜாவின் செம்மையை ஒத்திருக்கின்றன. நடை, மயிலின் அசைவைப் போல கம்பீரமும் நளினமும் கொண்டது.
சங்கினங்கள் வெட்கித் தலைகுனியும் நிறத்தையும், முகத்துக்குக் கீழே ஆடவர்கள் கண்கள் நிலைத்து மீள இயலாத பேரெழிலையும் கொண்டிருந்தாள்.
அவள் அணிகலன்கள், அழகுக்கு அழகு சேர்க்கும் நிலவின் துண்டுகள். அவள் முகம், ஒரு தேர்ந்த கவிஞனின் கவிதை ஒன்று வடிவம் பெற்றதைப் போன்றது.
இரு தாமரை மொட்டுகள் விரியக் காத்திருக்கும் நதியின் கரையோர வளைவுகளின் பேரழகு போதையா அல்லது இவளின் உடல் வளைவுகள் தரும் பேரழகு போதையா என வியக்க வைக்கும்படி அளவெடுத்து வடிவமைத்தது போன்ற உடலமைப்புடையவள்.
காமவள்ளி. இவளை இந்தப் பெயரால் அறிந்தவர்கள் குறைவு. அவள் நகரில் அவளின் மீனைப் போன்று அழகிய கண்களைக் கண்டு பெண்களும் அவளை மீனாக்ஷி என்றே அவர்கள் அழைப்பதுண்டு.
அந்த இளங்காலைப் பொழுதில் பகலவனின் பொன்னிற ஒளி கோதாவரியை தங்கமென அடித்து வைத்தது. சூரியன் அவளை தன் கிரணங்களால் தழுவிடக் கண்டவர்களால் அவளின் அழகையும் கோதாவரி நதியின் அழகையும் ஒப்பிட்டு எந்த அழகு சிறந்தது என்று கூறிட முடியாமல் திகைத்து நிற்பர்.
அவளோ நதியின் பேரழகை இரசித்துக் கொண்டே, யாரும் வர இயலாத அல்லது வரத்துணியாத வனத்தில் ஒருபகுதியில் இருக்கும், ஆற்றின் கரையில் உலவிக் கொண்டிருந்தாள், அவனையும் கண்டாள்.
அவள் வழக்கமாக நீராடும் அந்தப் பகுதி, ஆபத்துகள் நிறைந்த கூரிய பாறைகளும், அடர்த்தியான வனத்தில் உலவும் வலிய கொடூர விலங்குகள் அங்கே யாரையும் வர விடாமல் தடுத்து வைத்திருந்தன. அதற்காகவே அவள் அந்த இடத்தை தேர்ந்தெடுத்திருந்தாள்.
தன்னுடைய இடத்தில் அன்னிய ஆடவனைக் கண்டஅவள் தன் வலக்கையால், இடுப்பிலிருந்த குறுவாள் ஒன்றை உருவிக் கொண்டு மெல்ல அவனை கவனித்தாள்.
அந்த இளைஞன் கட்டுக்கோப்பான உடலழகைக் கொண்டிருந்தான். மேலாடை இல்லாது, இடுப்பில் இறுகக் கட்டிய ஆடையின் மேல் குறுவாள்கள் சில கச்சையில் இருந்து தலை காட்டின. அங்கே கூர்மையான பாறை ஒன்றின் உச்சி மீது தன் ஒரு காலினை ஊன்றி, இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி சுற்றுப்புறங்களின் பிரக்ஞை அற்று மென் குரலில் மந்திரங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தான். அவன் ஆடைகளில் இருந்து நீர். சொட்டிக் கொண்டிருந்தன. அவன் மார்பிலும் நீர்த்துளிகள் இருக்க, சூரிய ஒளி அதன் மீது விழுந்து வைரமென அவை மின்னின. அவன் ஆடைகள் உடலோடு ஒட்டி இருக்க, அதுவரை அவள் கண்டிராத பேரழகுடன் அவன் இருந்தான்.
அந்த ஆற்றின் கரையோரத்தில் சலசலத்து நீர் அருந்திக் கொண்டிருந்த கட மான்களின் ஓசை கூட அவனை சற்றும் சலனப்படுத்தவில்லை.
அவன் முகம் அங்கிருக்கும் ரிஷிகளைப் போல ஒட்டி உலர்ந்து இல்லாமலும், அரக்கர்களைப் போல கொடூரம் தாங்கியதுமற்று மிகப் பொலிவோடு ஒரு வானுலக தேவனின் ஒளிபொருந்திக் காணப்பட்டது. சர்வ நிச்சயமாக இவன் மானுடனும் இல்லை என்று உறுதியாக தன்னுள் கூறிக் கொண்டாள்.
அவள் இந்த வனத்துக்கு அவ்வப்போது வரும் போதெல்லாம் தனித்திருக்க, இயற்கையின் எழிலை அள்ளிப்பருக வரும் அந்த இடத்தில் இப்போது தான் அவனை முதன் முதலாக பார்க்கிறாள். அந்த முகம் அவளை வெகுவாக ஈர்த்தது. அருகில் சென்று பார்க்க விரும்பினாள். குறுவாளை மீண்டும் தன் இடைக்கச்சில் வைத்தாள். அவனின் சிந்தை ஓட்டத்தை கலைக்க விரும்பாமல் மெல்ல மெல்ல பஞ்சு போன்ற தன் பாதங்களை வைத்து அவனை நெருங்கினாள். அவள் காலடியில் கற்கள் சில புரண்டன. அந்த ஓசையினால் அவன் தவநிலை கலைவதை அவளால் உணர முடிந்தது.
” இலங்கைச் செல்வியே, தாங்கள் அருகில் வர வேண்டாம், மேலும் நின்ற இடம் விட்டு சற்றும் நகர வேண்டாம். அபாயம்” என்று அவனிடம் இருந்து எச்சரிக்கை வந்தது.
அவள் ஆச்சரியத்துடன் நின்றாள். அவன் எப்போது தன்னை கவனித்தான்? தான் இலங்கையைச் சேர்ந்தவள் என்பது அவனுக்கு எப்படித் தெரிந்தது? அவன் கண்கள் இன்னும் மூடியேக் கிடக்கின்றன, பின் எப்படி அவன் நான் வருவதை கவனித்தான் என்றெல்லாம் யோசித்துக் கொண்டே, அவனின் அந்த எச்சரிக்கையை புறந்தள்ளி ” யார் நீங்கள், இங்கே உங்களை இப்போது தான் முதன் முறையாகப் பார்க்கிறேன். உங்கள் பெயரென்ன, இங்கே என்ன செய்கிறீர்கள்” என்று பல கேள்விகளை எழுப்பியவாரே முன் நகர்ந்தாள்.
அப்போது தான் அவள் எதிர்பாராத அந்த மாபெரும் விபரீதம் நிகழ்ந்தது.