- நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 1
- நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 2
- நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 3
- நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 4
மெதுவாக தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே
மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே
சிறிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க
வா செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேனிலவு தான்
– கண்ணதாசன்
அத்தியாயம் மூன்று
சென்னை விமான நிலையத்தின் இம்மிக்ரேஷன் கெளண்ட்டரில் இருந்த வரிசைகளில் நின்றிருந்த மூர்த்திக்கு அலுப்பாக இருந்தது. எல்லாம் இந்த அம்மாவால் வந்தது. இந்த வருடம் உனக்கு எப்படியும் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டாள்.
ஜூன் ஜூலை துபாயில் ட்ராவல் ஏஜென்ஸிக்குப் பிஸியான உச்சக் கட்டம் என்று சொல்லியும் கேட்கவில்லை.”அதெல்லாம் முடியாது. நாங்கள் பெண் பார்த்து வைத்து விட்டோம். வந்து நீ பார்த்து சரி சொன்னால் பத்து நாளில் கல்யாணம் வைத்து விடலாம்.எங்களுக்கும் பாரம் குறைந்தாற்போல இருக்கும் “ என லெட்டரிலும் ஃபோனிலும் ஒரே அழுகை. சரி என ஆஃபீஸில் அடம்பிடித்து லீவ் வாங்கினால் ஃப்ளைட் டிக்கட் கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் சென்னைக்கு நேரடிப் போக்குவரத்து இல்லை. இன்ஃப்ளூயன்ஸ் உபயோகப் படுத்தி துபாய் கொழும்பு சென்னை வாங்கி.. கொழும்பில் ஆறு மணி நேரம் தாமதம். பின் சென்னை வருகையில் பொலபொலவென விடிந்தும் விட்டது.
முதலில் கல்யாணம் என்ற போது சற்றே சிரிப்பாக வந்தது. கல்யாணமா எனக்கா. எனக்கே எனக்காய்ச் சொந்தமாய்க் கொள்வதற்கு ஒரு பெண் வரப்போகிறாளா?
மூர்த்தி ஒன்றும் முற்றும் துறந்தவனில்லை. பல பெண்களுடன் பேசியிருக்கிறான். பழகி இருக்கிறான். பழைய நடிகைகள் தேவிகா,ஜெயச் சித்ரா என அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். சில பெண்கள் அவனிடம் கொஞ்சம் விழுந்தும் பழகினார்கள். இருந்தும் அவன் எல்லைக் கோட்டை மீறி ஆசை எதுவும் ஏற்பட்டதில்லை.
என்ன ஒன்று. பெண்ணின் புகைப்படம் அம்மா அனுப்பவே இல்லை. “எல்லாம் நாங்க பார்த்திருக்கிறோம்டா. உனக்குப் பிடிக்கும். பிடித்தாத் தான் கல்யாணப் பேச்சே. சரியா” என்று விட்டாள்.
கொழும்பில் விமானம் கிளம்பக் காத்திருந்த சமயத்தில் மூர்த்திக்குப் பரபரவென்றிருந்தது. எப்படி இருப்பாள் பெண். அழகாய் இருப்பாளா? குணமாய் இருப்பாளா? என்னைப் புரிந்து கொள்வாளா.. அதென்ன பாட்டு..
காவிரியின் மீனோ
பூவிரியும் தேனோ
தேவமகள் தானோ
தேடி வரலாமோ… இல்லை. நான் தான் பார்க்கப் போகிறேன். கற்பனை ஓராயிரம். ஒருமுறை பார்த்தால் என்ன?.
எனப் பலவாறாய் யோசித்திருந்ததில் தூங்கவே இல்லை மூர்த்தி.
ஒரு வழியாய் இமிக்ரேஷன் முடித்து கஸ்டம்ஸ் முடித்து வெளிவந்தான் மூர்த்தி. ஏர்போர்ட்டில் அப்பா, அம்மா, மாமா வந்திருந்தனர். “மாமா கூட வியாபாரத்தில் நொடித்து விட்டார். உன்னிடம் ஏதோ ஹெல்ப் எதிர்பார்க்கிறார்” என அம்மா லெட்டரில் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. சக்கரம் சுழலும் என்பது இது தான் என நினைத்துக் கொண்டான். பாட்டி இறந்த பிறகு அம்மா நிறைய மாறிவிட்டாள். அண்ணனிடம் ஏகப்பட்ட பாசம். மாமா நேரில் பார்க்கையில் சற்றே வாடியிருந்தார். அப்பா அதே சுறுசுறுப்பு. வாடா என அணைத்துக் கொள்ள அம்மா சிரித்தாள்.
அசோக் நகர் வீட்டை அடைந்து குளித்து ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டான் மூர்த்தி. மதுரையிலிருந்து சென்னைக்கு மூன்றுவருடம் முன் மாறியிருந்தார்கள். மூர்த்தியும் லோன் எடுத்து வாங்கியிருந்தான் அந்த வீட்டை.
“எப்போ கிளம்பணும்மா?”
“எங்கேடா?”
“பெண்பார்க்கணும்னயே. ஃபோட்டோ இப்பவாச்சும் காட்டக் கூடாதா எந்தக் காலத்துல இருக்க நீ.?”
“என்ன அவசரம்?” எனச் சிரித்து அவனுக்கு திருஷ்டி கழித்தாள் அம்மா. “உன் அப்பா உனக்கு ஒரு வேலை வெச்சிருக்கார். அத முடிச்சுட்டுப் பார்க்கப் போகலாம்”.
அப்பா அவனிடம் ஒரு பார்சலைத் தந்தார். “மூர்த்தி. வளசரவாக்கம் அந்த நகர்ல 39 வது தெருல்ல ஒரு அனாதை ஆசிரமம் இருக்கு. அங்க பாலா குமாரவேல்னு இருப்பாங்க. அவங்க கிட்ட கொடுத்துட்டு பேசிக்கிட்டிரு. மாமா,மாமி, நான் அம்மா அரை மணில்ல அங்க வரோம். அங்கருந்து 40வது தெரு தான் பொண் வீடு. போய்டலாம். உன் மாமா ஒரு ஃபோனை எதிர்பார்த்துக்கிட்டிருக்கார். முடிந்ததும் கிளம்பறோம்” என்றார்.
அப்பா ஏற்பாடு பண்ணியிருந்த காரை ட்ரைவர் மெளனமாகக் கிளப்பி வளசரவாக்கம் அந்த வீட்டின் முன் நிறுத்தினான். பாலா அனாதை ஆசிரமம் எனப் பலகை இருக்க வாசலிலேயே அந்தக் கண்ணாடி போட்டிருந்த பெண்மணி நின்றிருந்தார். அந்தக்கால எஸ்.வரலஷ்மியை நினைவு படுத்தும் தோற்றம்.
”பாலா மேடம்” எனச் சொல்லி பார்சலைக் கொடுக்க, கொஞ்சம் முகம் இறுகி வாங்கிக் கொண்டவர், “ நீங்கள் தான் கார்டனரா?. உங்கள் அப்பா ராமபத்ரன் சொல்லியிருந்த ஆள். இதோ இந்த சந்தின் வழியாக வாருங்கள்” என பின்புறம் உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். மூர்த்தி வேறு வழியில்லாமல் பின் தொடர்ந்தான். “ நீங்கள் தவறாக..” எனச் சொன்னதைக் காதிலேயே வாங்கவில்லை அவர். தன் உடையைப் பார்த்துக் கொண்டான். லைட் க்ரீம் பாண்ட். டார்க் ப்ரெளன் ஷர்ட். காதுவரை வழியும்கிருதா. அடர்த்தியான தலைமுடி. கார்டனர் போலவா இருக்கிறேன்?!
அங்கே ஓரிடத்தில் தென்னங்கன்றும் மண்வெட்டியும் இருந்தது. ”கொஞ்சம் தோண்டுங்க கார்டனர். பின் கன்னு நடலாம்” என்று சொல்லிவிட்டு பாலா கிடுகிடுவென்று அகல மூர்த்தி முழித்தான்.
பின் சரி ஏதோ தப்பாய் நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. கொஞ்சம் தோண்டிப் பார்க்கலாம் எனக் முழுக்கையை சற்றே மடக்கி விட்டுக் கொண்டு தோண்டி முடிக்கும் போது “ஹலோ யாரது?” என்ற குரல். பின்னால் தபதபவென ஒரு பெண் ஓடிவந்தாள்.
கரு நீல ஷிஃபான் சேலையில் பெரிதான வெள்ளைப் பூக்கள். வெள்ளை ரவிக்கை. நடுவகிட்டின் மேல் குட்டிப் பொட்டு. மென்மையான ரோஜாவண்ணம் பூசிய உதடுகள். பளிச்சென்ற மா நிற முகம். காதுகளில் குட்டி ஜிமிக்கிகள் லயத்துடன் ஆடின. வந்த வேகத்தில் அவளது சேலை கொஞ்சமே கொஞ்சம் விலகியிருக்கக் கண்ட இளமையில் மூர்த்தி பேச்சிழந்தான்.
”தேகத்தின் பொன்வண்ணம் தோய்ந்திருக்கும் பொற்சிலையும்
வேகமாய் வந்ததுவோ விண்.. மேலிருந்து வந்த தேவதையா..?. சே என்ன நினைக்கிறேன் நான்.”
அவள் அவன் பார்வையைப் பொருட்படுத்தவில்லை. ” நீங்கள் தான் பாலாம்மா சொன்ன கார்டனரா? என்ன ஆள் நீங்க?. தென்னை மரம் நட இப்படியா வெள்ளையும் சொள்ளையுமா வருவது” என்ற படி அங்கிருந்த பக்கெட்டிலிருந்து சிறிய ப்ளாஸ்டிக் மக்கில் நீரெடுத்து விட்டாள். “உள்ளே வையுங்கள். மணல் தள்ளிப் பூசுங்கள்” சொல்லச் சொல்ல ஒரு வித மயக்கத்திலேயே சமன் செய்து எழுந்தான்.
“கையை நீட்டுங்கள்” என்றாள் அவள்.
“எதற்கு?”
“கை கழுவ வேண்டாமா?” புன்னகை புரிய மூர்த்திக்கு உள்ளே பற்றியது. இவளையே அம்மாவைப் பார்க்கச் சொன்னால் என்ன. 40வது தெருவிற்கெல்லாம் போக வேண்டாம்.
அவள் நீர்வார்க்க அங்கேயே கை கழுவினான். “ஆமாம் இன்னும் தென்னங்கன்று இருக்கிறதா?”.
“இப்போதைக்கு இது ஒன்று தான். ஆமாம் பூச்செடிகள் எல்லாம் பராமரிப்பீர்களா?!”.
அவன் முழிக்க, “சொல்லிக் கொடுத்தால் செய்வான் கீர்த்தி” எனப் பின்னால் குரல். கண்ணாடி போட்ட பாலா குமாரவேல். சிரித்தார். அவர் பின்னால் அம்மா, அப்பா, மாமா மாமி. கூட ஒரு பெரியவர்.
“என்ன சொல்கிறீங்க பாலாம்மா. இவர் கார்டனர் தானே..” அந்தக் கீர்த்தி குழம்பினாள்.
“கார்டனர் தான். உன்னைப் போன்ற ஒரு பூந்தோட்டத்துக்குச் சொந்தக்காரனாகப் போகிறவன்” என்றார் பாலா. அதற்குள் மூர்த்தியின் அம்மா.”ரொம்பக் குழப்பாதீங்க. குழந்தைகள் முழிக்குதுங்க.. மூர்த்தி இதான் நாங்க பார்த்து வச்சுருக்கற பொண். கீர்த்தி. இந்த ஆசிரமத்துக்கு அப்பப்போ வருவா. அதுவும் இன்னிக்கு ஒரு குழந்தைக்கு பர்த்டேயாம் சாக்லேட் கொடுக்க வருவார்னா இவ அப்பா’ பெரியவரைச் சுட்டினார். “சரி இங்கேயே பெண் பார்க்கறதை வச்சுக்கலாம்னு நினச்சோம் நானும் உன் அப்பாவும். கீர்த்தி பிடிச்சுருக்கா உனக்கு?”.
கீர்த்தி கிடுகிடுவென தன்னைச் சரிசெய்து கொண்டாள். தலையைக் கோதி விட்டுக் கொண்டாள். கொஞ்சம் தன் அப்பாவை முறைத்தாள். “அப்பா திஸ் இஸ் பேட். நான் கண்ணராவியா இருக்கேன். கொஞ்சம் நன்னா ட்ரஸ் பண்ணியிருப்பேனில்லை. அவரை வேற கார்டனர்னுட்டேன்”.
“மூர்த்தி. நான் கேட்ட கேள்விக்கு பதில்” என அம்மா கேட்க கண்களால் ம் சொன்னவன் கீர்த்தியைக் கண்களால் காட்டினான். “கீர்த்தி உனக்கு?” எனக் கேட்க கீர்த்தி தலை குனிந்து ப்ளாஸ்டிக் மக் எடுத்து தென்னங்கன்றின் மேல் நீருற்றினாள்.
“பரவால்ல. சமர்த்துப் பொண். பிடிச்சுருக்காம்டா மூர்த்தி!”
*******************
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 என்பது சோர்வாகத் தான் இருக்கும். அந்த வருடம் நிகழ்ந்தவைகளை அசை போட்டு இரவில் ஆவலுடன் காத்திருந்து 12 மணி கடக்கையில் “ஹோ”வென உற்சாகம் பொங்கும்.
டிசம்பர் 31 இரவு என்பது வருடாவருடம் வருவது தான். ஆனால் இப்போது இந்த ஜூன்மாத இரவு எனது முதல் இரவு. எல்லாரும் அவரவர் வாழ்க்கையில் எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் இரவு இது.
காலையில் தான் மத்தளங்கொட்ட வரிச்சங்கம் நின்றூத முத்துத்தாமம் நிறை தாழ்ந்த பந்தற்கீழ் உறவுகள் சூழ்ந்திருக்க கீர்த்தியின் கைத்தலம் பற்றியிருந்தான் மூர்த்தி. இப்போது அந்த ஐந்து நட்சத்திர ஓட்டல் அறை – முதல் இரவிற்காக ரோஜாப்பூக்கள் சுவரில் ஒட்டப் பட்டிருக்க சில மலர்மாலைகள் தோரணங்களாய் படுக்கையில் தொங்க விடப்பட்டிருக்க, கீர்த்திக்காகக் காத்திருந்தான் மூர்த்தி.
“என்ன பேசலாம். எப்படி ஆரம்பிக்கலாம்?” என நினைத்தவண்ணம் இருந்தவனின் சிந்தனையைக் கலைத்து உள் நுழைந்தாள் கீர்த்தி.
குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய்,மெல்லிய பிங்க் நிறப் பூக்கள் போட்ட சேலை, மேட்சிங்க் ப்ளவ்ஸ், மெலிதாய் ஃபேஷியல் செய்யப் பட்டதால் பிரகாசிக்கும் முகம், வெள்ளிக் கீற்றாய்க் குட்டிப் புன்னகை முகத்தில்.
சில சமயங்களில் இப்படித் தான் ஆகி விடுகிறது.இப்படிப் பேசவேண்டும் அப்படிப் பேசவேண்டும் என நினைப்போம். ஆனால் எப்படியோ பேச்சு ஆரம்பிக்கும். பின்னால் எப்படி யோசனை பண்ணினாலும் நினைவுக்கு வராது.
அன்றும் அப்படித் தான் ஆனது. ஏதோ பேச ஆரம்பித்தார்கள். பேச்சு மென்மையாய் ஒருவித எதிர்பார்ப்புகளுடன் தொடர்ந்த வண்ணம் இருந்தது.
இடையில் கீர்த்தி,” ஒரு விஷயம்”
“என்ன?”
“தூங்கலாமா? காலையில் இருந்து ஒரே வேலை. களைப்பாக இருக்கிறது.”
வாஸ்தவம் தான். மூர்த்திக்கும் களைப்பாகத் தான் இருந்தது. கல்யாணம் செய்து வைத்த புரோகிதர் அப்படி. விடாமல் மந்திரம் சொல்லி நிறைய தடவை நாலுதடவை நமஸ்கரிக்க வைத்திருந்தார். முக்கியமாய் நலுங்கு அது இதென்று மதியமும் ரெஸ்ட் இல்லை. பின் ரிசப்ஷன் என இருந்ததால் குட்டியாய்க் கொட்டாவி வந்தது.
ரிசப்ஷனுக்குச் சித்ராவும் வந்திருந்தாள். சுமந்திருந்தாள். மூர்த்தியைப் பார்த்துக் கங்க்ராட்ஸ் சொன்ன போது ஏனோ அவள் கண்ணோரம் நீர். வெளிறிச் சிரித்து கீர்த்தியின் கைகளையும் குலுக்கினாள் அவள்.
”சரி. தூங்கலாம்” என்றான் மூர்த்தி கீர்த்தியிடம்.
நள்ளிரவில் கையை எதேச்சையாக நீட்டியதில் கீர்த்தி மீது பட விழிப்பு வந்து அவளைப் பார்க்கையில் அவளும் விழித்தவாறு அவனைப் பார்த்தவண்ணம் இருப்பதைக் கண்டான்.