Home தொடர்நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 5 (b)

நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 5 (b)

0 comments
This entry is part 6 of 6 in the series நாணலிலே காலெடுத்து

மலையில் பிறவா சிறு தென்றல்
மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல்
முகிலில் மறையா முழு நிலவு
பூந்துகிலில் மறையும் முழு நிலவு
எது?
பெண்!

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
– கொத்தமங்கலம் சுப்பு


அத்தியாயம் ஐந்து (b)


மூர்த்தி விரல் நகம் கடித்தபடி ஒரு கையூன்றி லேப்டாப்பில் தான் எழுதியதைப் படித்துக் கொண்டிருந்த கீர்த்தியையே பார்த்தார். அதே குறுகுறு கண்கள். கண்களின் மேல் ப்ரொக்ரஸிவ் லென்ஸ் போடப்பட்ட நீல பார்டர் கண்ணாடி. கொஞ்சம் கூடக் கறுக்காத தலை முடி. வீட்டில் இருப்பதனால் அணிந்திருந்த பிங்க் டாப் அண்ட் டார்க் ப்ளூ தொள தொளா லெக்கின்ஸ். ஸூம்பா,யோகா,வாக்கிங்க் என நிதமும் செய்யும் கட்டுக் கோப்பான உடம்பு. பார்ப்பவர்கள் ஐம்பது ப்ளஸ் என்று சொல்ல மாட்டார்கள். நாற்பதுகளில் இருக்கிறாள் என்று தான் சொல்வார்கள்.

தன்னையும் செல்ஃபோன் மிரரில் பார்த்துக் கொண்டார். முடி நரைத்திருக்கிறது. கண்ணாடியில் பவர் மாறி இருக்கிறது. முகச் சுருக்கம் எல்லாம் இல்லை.. ஓரளவிற்கு ஓகே தான்.

குறுநாவல் என்ன எழுதலாம் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்த போது காஃபி மணம் அருகில் வந்தது. கீர்த்தி -டபரா டம்ளரில் காஃபி. அழகான ப்ரெளன் நிறம். சர்க்கரை கிடையாது. ஸ்ட்ராங்க் அவருக்குப் பிடிக்கும். சுவைத்தார்.

கீர்த்தி கொடுக்கும் காஃபியிலேயெ குணத்தை மெலிதாகக் காட்டிவிடுவாள். லைட் டிகாக்‌ஷன் என்று இருந்தால் மூட் இல்லை என அர்த்தம். டிகாக்‌ஷன் இல்லாமல் நெஸ் கஃபே என்றால் கோபம் என்று அர்த்தம்.

அட..இதை வைத்தே எழுதலாமே.. இதோ இவள் என் மனைவி. என் வாழ்வில் அக்கறை கொண்டவள். கண்களிலேயே ஆதுரம், பாசம் தெரிகிறது. இவளைப் போலவே வாழ்வில் எத்தனை பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பற்றி எழுதினால் என்ன?.

எத்தனை வருடங்கள் ஆனாலும் பெண் என்பவள் ஒரு புதிர் தான். ஆண்களுக்கு மட்டுமில்லை. பெண்களுக்கும் கூட.

மடமடவென சுருக்கம் எழுதிப்பார்த்து முழுக்க எழுதி முடித்தும் விட்டார்.

அது என்ன அது. ரெமினெஸென்ஸ் (reminesence). கடந்த கால நினைவுகளை அலசி எழுதிப் பார்ப்பது.

யெளவனப் பருவத்திற்கே உரித்தான இன்ஃபாச்சுவேஷன் கொண்ட சித்ரா. திருமண வாழ்க்கையில் ஏமாற்றம் ஆக, இவன் ரிஷப்ஷனில் மெல்லிய அழுகை;

மகளைத் தாழ்த்தி மகனை உயர்த்திய மூர்த்தியின் பாட்டி;

மதிக்கவில்லை என்றாலும் அன்னை மேல் பாசம் கொண்ட மூர்த்தியின் அம்மா;

கவிதாவின் கணவரின் விபத்துக்குப் பிறகு கவிதாவும் அனிதாவும் நெருக்கமானார்கள். கவிதாவிற்குக் கம்பெனிகள் கூடின. அனிதாவிற்கும் கேஷ் க்ளையண்ட்ஸ் கூடின. என்ன இருவருக்கும் கம்பெனி ஒரே மாதிரியாய் இன்க்ரிமெண்ட் கொடுத்த போது தான் மறுபடி சண்டை ஆரம்பித்தது. எனக்கு அஸிஸ்டெண்ட் ஸேல்ஸ் மேனேஜர் போஸ்ட் கொடுத்திருக்கலாம் – கவிதா; எனக்கு ப்ரமோஷன் கொடுத்திருக்கலாம். நான் கவிதா சேச்சியை விட ஒருபடி கூட – அனிதா.  ம்ம். அது வேறு கதை;

பின் வாழ்வில் இணைந்த கீர்த்தி; பரிசாய் வந்த யோகிதா-அவளின் எதிர்பாரா மறைவு; டாக்டர் வசுமதியின் ஆழமான அன்பு + கோபம். ம்

என்ன இந்தப் பல வருடங்களில் சந்தித்த பெண்களைப் பற்றி முழுக்க எழுத இயலாது. நீண்டுவிடும். எனில் செலக்டிவ் ஆக எழுதியாயிற்று. இருபதுக்கும் மேலான வருடங்கள் தாவியாகி விட்டது.

குறுநாவலில் அனைத்து பாத்திரங்களுக்கும் பெயர் மாற்றியிருந்தார் மூர்த்தி. டாக்டர் வசுமதியின் அட்வைஸிற்கப்புறம் குறுநாவலின் கதாநாயகன் தன் நினைவின் மிச்சங்களை அசை போட்டுக் கொண்டிருந்தான் – வருடங்கள் உருண்டோடினாலும் – என்று முடித்திருந்தார்.

”குறுநாவலுக்கு கரு என்று பார்த்தால் ஒன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டும். இல்லை. இருக்கிறது. பெண்கள். தன் வாழ்க்கையில் தான் சந்தித்த பெண்களைப் பற்றி எழுதிப் பார்த்தல். ரெமினிஸென்ஸ் ஆஃப் தி பாஸ்ட்”  என நினைத்தார் மூர்த்தி.

இப்போது முடித்ததை இதோ கீர்த்தியிடம் படிக்கக் கொடுத்தாகி விட்டது.

”அது யார். ஸாராஹ் ஸோரென்ஸன். அமெரிக்கன் கம்பெனியில் ஒரு மேனேஜர். அவளது விழித்தூண்டிலில் இருந்து அழகாய்த் தான் தப்பித்தேன். ஆனால் அதை எல்லாம் எழுத இயலுமா என்ன?. கீர்த்திக்குக் கூடத் தெரியாது” மூர்த்தி நினைத்துப் பார்த்தார்.

நாவலோ,சிறுகதையோ,குறு நாவலோ – எழுதுபவன் மனதில் நடந்த நிகழ்வு, பார்த்த நிகழ்வு, கேட்டவை என்று தான் உருவாகும். அதில் உண்மை 60 சதவிகிதம் தானிருக்கும். 40 சதவிகிதம் கற்பனை தான். எது கற்பனை எது உண்மை எனத் தெரியாவண்ணம் எழுதுவது என்பது தான் சவாலே. எவ்வளவு உண்மையாய் எழுதி இருக்கிறேன் என்பது கீர்த்திக்குப் புரியவேண்டும் புரியும்!.

கொஞ்சம் அசைந்தாள் கீர்த்தி.  நெற்றி நுனியில் சுருள் முடி விழுந்து அழகூட்டியது. இவள்.. என் ஷக்தி. எனக்கு உற்சாகம் தருபவள்.

சக்தி ஆகினை; சாந்தம் கொடுத்தனை;

சலனம் தீர்த்தனை; சிரித்தே மகிழ்ந்தனை

பக்தி கொடுத்தனை; பாசம் காட்டினை

பாழும் உளமதன் பிணியைப் போக்கினை

முத்தி நெகிழ்ந்தனை; மூர்க்கம் தகர்த்தனை

மெல்லப் பேசினை; மேன்மை காட்டினை

நித்தம் வாழ்விலே ஒளிதான் கூட்டிய

நீள்கண் பாவையே நீதான் நான்இனி..”

யெஸ்ஸு. நான் வேறு இவள் வேறு இல்லை.

படித்து முடித்து நிமிர்ந்து பார்த்தாள் கீர்த்தி. கண்களில் கலக்கம்.

“ம். இன்னும் நம்ம யோ. நம்மகூடவே இருப்பது மாதிரி பிரமை இல்லியாங்க.”

“ம்”

“ஆமா. பெண்களைப் பத்தி எழுதறேன்னீங்க. நம்ம மாட்டுப் பொண் யஷ்வியை விட்டுட்டீங்களே. நம்ம பையன் கெளதம்மோட வைஃப்”

எழுதியிருக்கலாம் தான். டாக்டர் வசுமதியின் அட்வைஸிற்கப்புறம் பிறந்தவன் கெளதம். அப்புறம் வளர்ந்து பி ஈ முடித்து ஐ டி கம்பெனியில் வேலை. பின் அதே கம்பெனியில் வேலை பார்த்த பஞ்சாபிப்பெண் மீது காதல் , மோகம்.

மூர்த்திக்கும் கீர்த்திக்கும் பிரச்னை ஒன்றுமில்லை. யஷ்வியின் அம்மா மோனல் சிங்க் தான் குதி குதி என்று குதித்தாள் தன் சகோதர சிங்குகளுடன். யஷ்வியின் அப்பா ஏற்கெனவே காலமாகி இருந்தார்.

இவர் தனது நண்பன் மோகனையும் அழைத்துக் கொண்டு டெல்லி சென்றிருந்தார் ஹிந்தி மொழிபெயர்ப்புக்காக. மோகன் தான் சொன்னார், ”என்னா பேச்சுப் பேசுது மூர்த்தி. அந்தப் பொம்பளை”.

யஷ்வி தான் உறுதியாய் இருந்தாள் . மாமாக்களிடமும் அம்மாவிடமும் “ எனக்கு கெளதம் பிடிச்சுருக்கு. காரணம் என்ன தெரியுமா?” கீர்த்தியைச் சுட்டினாள்.  ”பாரும்மா பாருங்க மாமா. இந்த முகத்தில களங்கம் இருக்கா?. கண்ல சிரிப்பு எப்பவும் இருக்கு. இவங்களுக்கும் இதோ இந்த மூர்த்தி சார் – ஃப்ரொபஷன்ல டஃப் மற்றபடி இனிமையானவர் – இவருக்கும் பிறந்த கெளதம் எப்படி என்னைக் கைவிட்டுடுவான்னு நினைக்கற?”.

மொழிபெயர்த்து மோகன் சொன்ன போது இருவருக்கும் அகமகிழ்ந்து போனது. திருமணமும் ஆனது. திருமணம் நிகழ்ந்த அன்று அந்த மோனல் சிங் தான் வந்து மூர்த்தியை அருகழைத்தார். கண்களில் கண்ணீர். “ நான் பேசினத எதுவும் மனசுல வெச்சுக்காதீங்க. என் பொண்  என் பொண்.. நல்லா இருக்கணும்னு தான்..” பேச்சு வரவில்லை. உடைந்த ஆங்கிலம்.

எல்லா தாயார்களுக்கும் பெண் நல்ல படியாக இருக்க வேண்டும் என்ற கவலை இருக்கத்தான் செய்கிறது. தனக்குக் கிடைக்காதவைகள் கிடைத்து  இன்பமாய் வாழ்வில் இருக்க வேண்டும். அதற்குத்தான் ஆண்டவனிடம் ப்ரார்த்தனையே. மோனல் சிங்கும் விதிவிலக்கல்ல.

யஷ்வி ஒரு ஜெம். கெளதம் கம்பெனியில் ஹெச் ஆர். அப்போது தான் சாம்பாரில் போட்டு ஊற ஆரம்பித்த வடையைப் போல லேசாகப் பூசின மாதிரி இருப்பாள். அழகி. அதற்குமேல் வர்ணிக்காதடா மூர்த்தி. ஷி இஸ் யுவர் டாட்டர் இன் லா!.

கல்யாணத்திற்கு முன்னும் பின்னும் நேரில் சந்திக்கும் போது பொசுக்கெனக் காலில் விழுந்து பாவ் சூ – நமஸ்காரம் பண்ணுவாள். இவ்வளவு ஏன்? வீடியோ காலில் வந்தால் கூட கீழே விழுவதாக அபிநயம் பிடித்த பிறகு தான் பேச்சே ஆரம்பிப்பாள். அவளுடைய ஆதத் அப்படி (பழக்கம்).  பேசுவது அதன் சப்தம் வெளியே வரவே வராது – மோனல் சிங்கிடம் சண்டை போட்ட நாளைத் தவிர.

“எழுதியிருக்கலாம் தான் கீர்த்தி. ஆனா இதுவே ஜாஸ்தின்னு நினைக்கறேன். எப்படி வந்திருக்கு?”.

“நல்லாத் தான் இருக்கு” எனச் சொன்ன கீர்த்தியின் முகம் மாறியது. கண்களில் மெல்லிய பொய்க்கோபம்.

“யோவ்..கார்டனர்!. அது என்ன அது. பலவருஷங்களுக்கு முன்னாடி மாமா பொண் கொடுத்த முத்தம் மறக்க முடியலையாக்கும்”.

கிட்ட வந்து கன்னத்தில் நறுக்கென்று கிள்ளிவிட்டு படுக்கையின் அந்தப்புறம் அவள் ஓடினாள். மூர்த்தியும் கன்னத்தைத் தடவிய வண்ணம் சிரித்தபடியே அவளைத் துரத்தினார்.

பின் என்ன. கன்னத்தில் முத்தமிட்டால் தான் உள்ளம் கள்வெறி கொள்ளுமா என்ன?.

 கிள்ளினாலும் கூடத் தான்.

(முற்றும்)

Series Navigation<< நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 5 (a)

Author

You may also like

Leave a Comment