உறைபனி காலத்திற்கு முன்பிங்கே
இலையுதிர் காலத்திற்கு நன்றி!
வேர்கள் சாகாமல் காத்திடும்
இலைப் போர்வைகளுக்கு நன்றி!
வசந்தம் வரை உறங்கிடும்
தாவரங்களுக்குத் தளிரான நன்றி!
நீள் துயில் கொள்ளும்
வண்டுகளுக்கு வாஞ்சையான நன்றி!
நவம்பரில் நல்விளைச்சல் தந்திட்ட
உழவருக்கு முதல் நன்றி!
உழவுக்கு ஊனாய் உழைத்திட்ட
விலங்குகளுக்கு உளமார நன்றி!
பாதம் தாங்கும் பூமிக்கு
நிலம் தொட்டு நன்றி!
சுவாசம் தரும் காற்றுக்கு
மூச்சுள்ளவரை நன்றி!
தாகம் தீர்க்கும் நன்நீருக்கு
அகம் குளிர்ந்த நன்றி!
பசி போக்கும் உணவுக்கு
பணிவாய் ஒரு நன்றி!
தலை காக்கும் கூரைக்கு
சிரம் தாழ்ந்த நன்றி!
உயிரினங்கள் மகிழ்ந்து வாழ
வரமான இயற்கைக்கு நன்றி!
இதம் தரும் இன்னிசைக்கு
இதயம் கனிந்த நன்றி!
ரசனையால் இணைந்து மகிழும்
நண்பர்களுக்கு என்றென்றும் நன்றி!
அன்பும் கருணையும் அக்கறையும்
ஒன்றுக்கு பன்மடங்காய்த் தந்திடும்
உற்றம் சுற்றம் அண்டை அயலார்
யாவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
நன்றி நவிலும் நவம்பரில்
நாம் செய்நன்றி மறவாமல்
செலுத்த வேண்டிய யாவைக்கும்
சொல்ல வேண்டிய யாவருக்கும்
மெய்யன்போடு உரைத்திடுவோம்!
நன்றி!