நட்பின் புன்னகை

“ஒரு இரண்டுகோடி ரூபாய் மதிப்பு இருக்குமா, உங்களுடைய அந்த வீடு?” என்று கேட்டான் செல்வம். அதற்கு முதலில் ஒரு சின்ன புன்னகையைக் காட்டினான் எழிலரசன்.

அவர்கள் இருந்தது ஒரு அழகான நவீன உணவகம். பார் வசதியுடன் கூடியது. ஒரு வாரகாலம் ஓடியாடி வேலை செய்து முடித்து, சனிக்கிழமை இரவு அங்கே வந்து அமர்ந்து ‘அப்பாடா’ என்று சிறிது நேரத்தைக் கடத்திச் செல்வது செல்வத்துக்கு மிகவும் பிடிக்கும். சில்லென பியர், கூடவே சில்லி சிக்கன் அல்லது காரமாக சுண்டல் என கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டு முடிக்க சில மணி நேரம் ஆகிவிடும். விலை அதிகம் என்பதாலும், முக்கிய பெரும்புள்ளிகள் வந்துபோகும் இடம் என்பதாலும் உடனே எழுந்து செல்லவும் அவசியமில்லை.

கூடவே ஒட்டிக்கொண்டு வரும் மகேந்திரன் சரியான கருமி. எப்போதுமே ஒரு ரூபாயைக் கூட தன் பையில் இருந்து எடுக்க மாட்டான். ஆனால் செல்வத்துடன் நன்றாக அரட்டை அடித்துக் கொண்டே செலவு வைப்பான். அவனுக்குத் தனியாக அசைவ விருந்து உண்டு. சொல்லப்போனால் செல்வத்தை விட அவனுக்குத்தான் அதிகம் செலவாகும். சில சமயம் ஆயிரத்தையும் தாண்டிவிடும். இருந்தாலும் கண்டுகொள்ள மாட்டான் செல்வம்.

“செல்வம், இன்னும் நம்ம ஊர் பக்கம் விலை உனக்குத் தெரியலை. ஒரு சதுரஅடி இப்போது நாலாயிரம் ரூபாயைத் தாண்டிடுச்சு. எங்க வீடு இருந்த இடம் மட்டுமே கிட்டத்தட்ட பத்துகோடி ரூபாய் வரும். பெரிய வீடு இல்லையா, கட்டடம் சேர்த்து ஒரு இருபதாவது வரும்” என்றான் எழிலரசன். அதைக் கேட்டதும் அப்படியே அசந்துபோனான் செல்வம். வாயில் வைக்க இருந்த வறுத்த கோழிக்கறியைத் தட்டில் நழுவவிட்டு வியப்பாகப் பார்த்தான் மகேந்திரன்.

எழிலரசன் செல்வத்தின் கல்லூரித் தோழன். அப்போதெல்லாம் செல்வம் பேருந்தில்தான் கல்லூரிக்குப் போவான். பேருந்தில் இருந்து இறங்கி ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும். அப்போதே விலை உயர்ந்த காரில்தான் கல்லூரிக்கு வருவான் எழிலரசன். அவர்கள் பரம்பரை பணக்காரர்கள் என எல்லோரும் சற்றே ஒதுங்கியே இருப்பார்கள். ஆனால் எழிலரசன் அந்தப் பணத்திமிர் எதுவுமின்றி மிக எளிமையாகப் பழகுவான். கல்லூரிக்கு வருவதைப் போல இன்னும் நான்கைந்து வண்டிகள் உண்டு என்று சொல்வான். சில சமயம் வெளிநாட்டு பைக்குகளில் கூட வருவான். அதன் விலையைக் கேட்டால் இன்னொரு காரே வாங்கலாமே என பிரமிப்பாக இருக்கும்.

விலையுயர்ந்த ஆனால் கண்ணை உறுத்தாத சட்டை, மெல்லிய தங்கச்சங்கிலி, சின்னதாக வைரமோதிரம் என வசதியிலும் அடுத்தவர் கவனத்தை இடறாமல் இருக்க மெனக்கெடுவான். நல்ல அழகன் அவன். சிலநேரம் செல்வம் நடந்து செல்வதைப் பார்த்து அவனையும் வண்டியில் வரக் கூப்பிடுவான். செல்வத்துக்குத்தான் சங்கடமாக இருக்கும். உடனே எழிலரசனும் இறங்கி வண்டியை டிரைவருடன் அனுப்பிவிட்டு செல்வத்தின் தோளில் கைபோட்டபடி நடக்க ஆரம்பித்துவிடுவான். அவனுக்கான செலவுகளைக் கூட கணக்கு பார்க்காமல் செய்வான் எழிலரசன். பிரதிபலன் பார்க்காத நட்பு அவன்.

“இப்போ அந்த வீடு?” என ஆவலாகக் கேட்டான் மகேந்திரன், கோழியை முடித்துவிட்டு அடுத்து மீன் வறுவலில் கவனம் செலுத்திக்கொண்டே. அவனிடம் ‘சும்மாயிரு’ என்பதாகக் கண்ணைக் காட்டினான் செல்வம். அவன் அந்தக்கண்காட்டுதலைச் சரியாகக் கவனிக்கவில்லை.

வெளியே தன் காரை நிறுத்தும் போதுதான் எழிலரசனை கவனித்தான் செல்வம். சற்று அடையாளம் தெரியவில்லைதான். பத்து ஆண்டுகள் ஆகியிருந்தபடியால் உடனே கணிக்க முடியவில்லை. முன்புறம் முடி கொட்டியிருந்தது. கொஞ்சம் நிறம் குறைந்து இருந்தது. சற்றே உடல் இளைத்தும் இருந்தான். உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தபோது திரும்பிய எழிலரசன் உடனே செல்வத்தைக் கண்டுகொண்டு கட்டித்தழுவிக்கொண்டான்.

இதற்கு முன்பே ஊரில் இருந்து கிடைத்த தகவல்கள், கேள்விப்பட்டிருந்த சம்பவங்கள் எல்லாம் ஏற்கனவே செல்வத்தின் மனதில் பதிவாகியிருந்தது. பங்காளிச்சண்டை, வியாபார வீழ்ச்சி என எல்லாவற்றையும் இழந்துவிட்டு குடும்பம் தனித்தனியாகப் பிரிந்துவிட்டதாக தகவல்கள். இருந்தாலும் தற்போது அதை எழிலரசனிடம் கேட்டு அவனைத் தர்மசங்கடத் தில் ஆழ்த்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். ஆனால் மகேந்திரனுக்கு எதுவும் தெரியாததால் கேட்டுவிட்டான். முகம் சற்று சிறியதானாலும் தயங்காமல் பேசினான் எழிலரசன்.

“அதுவா, அதெல்லாம் வித்தாச்சு, வாங்கினவங்க எங்க வீடெல்லாம் இடிச்சுட்டாங்க. இப்போ அங்கே பெரிய மால் கட்டறதா இருக்காங்க” என்றான் எழிலரசன்.

அவன் முன் இருந்த சமோசா மேல் செல்வம் கார சாஸ் ஊற்ற முனைய, வேண்டாம் எனத் தடுத்தான். சிறிதாக ஒரு விள்ளல் வாயில் போட்டபடி சிரித்தான். அப்போதிருந்தே எழிலரசன் டிரிங்க்ஸ் அருந்தியதில்லை. இப்போதும் லெமன் ஜூஸ் வைத்து மெல்ல மெல்ல சிப்பிக்கொண்டிருந்தான். அவன் தட்டில் தன்னிடம் இருந்த சமோசாவை, கார சேவுகளை எடுத்துப்போட்டான் செல்வம். எழிலரசனுக்கு அவை மிகவும் பிடிக்கும் என செல்வத்துக்குத் தெரியும். ஆனால் யோசனையாகவே இருந்த எழிலரசன் துளிக்குமேல் சாப்பிடவில்லை.

“ஓ, அப்போ உங்க பங்கு நிறைய வந்திருக்குமே, பெரிய ஆள்தான் நீங்க” என்ற மகேந்திரன் பியரை வாயில் கவிழ்க்க ஆரம்பித்தான். செல்வமும் கல்லூரி நாட்களில் இவையெல்லாம் சாப்பிட்டதில்லை. கணினித்துறை வேலை, கொஞ்சம் வசதியான பின்தான் இப்படியெல்லாம் சாப்பிடப் பழகியிருந்தான்.

“மகேந்திரா, இவங்க பூர்விகப் பணக்காரங்க. ஊர் பண்ணையார் குடும்பம்னு சொல்லுவாங்க இல்லையா, அதுபோல. பங்காளிச்சண்டை அதுஇதுன்னு வந்து எல்லாத்தையும் விட்டுக் குடுத்துட்டாங்க. அதும் இவங்க அப்பாவுக்கு அப்பவே இரக்ககுணம், விட்டுக்கொடுக்கும் பண்பு அதிகம். இவன் கூட கார்ல வந்து எங்க குடிசை வீட்டில் உட்கார்ந்து எங்க அம்மா கையில தோசை சாப்பிடுவான். அவ்ளோ பிடிக்கும் அவனுக்கு. அதுவும் வெங்காயம் நிறைய போட்டு பணியாரம்னா ஒரு பத்தாவது அம்மா கையால சாப்பிடுவான். எனக்கு பாதி அளவாவது கல்லூரிக்கட்டணம் இவன்தான் கட்டினான். இப்போ என்னடா பண்ற?”

“ஏதாவது கிடைச்ச வேலைக்குப் போவேண்டா. சரியா படிக்கலையா, ஊருக்குள்ள ஏதாவது செய்யலாம்னா ஏற்கனவே இருந்த நிலையும், இப்போ இருக்கும் நிலையும் தடுக்குது. எனக்கு ஒன்னும் தோணலைன்னாலும் பாக்கறவங்க பார்வை வேற மாதிரி இருக்கு. அதான் இங்க வந்துட்டேன். கடைகளுக்குச் சரக்கு கொண்டுபோய் சேர்ப்பது, இல்லைனா ஏதாவது சில்லரை வியாபாரம், சின்ன சின்ன வேலைகள், அப்படியே காலம் போகுது. ஆனாலும் ஒரு சொத்து மேல வழக்கு நடந்துட்டு இருக்கு. அது என் பக்கம் தீர்ப்பு ஆனா கண்டிப்பா எனக்குப் பெரியதொகை வந்திடும். எப்படியும் ஒரு நாலஞ்சு கோடி வரும். அதுக்காகத்தான் காத்திருக்கேன்.”

“அருமைடா… கல்யாணம்? குழந்தைங்க?” கேட்டான் செல்வம்.

“ஒரு பொண்ணு, ரெண்டாவது படிக்கிறா” என்றபோது சற்றே முகம் மலர்ந்தான் எழிலரசன்.

“சரிசரி, வா… கைகழுவிட்டு ஏதாவது கடைக்கு, துணிக்கடைக்கு, பொம்மைக்கடைக்குப் போலாம். என் குட்டி மருமகளுக்கு ஏதாவது வாங்கித் தரணும்.”

“அதெல்லாம் வேணாம் செல்வம், நீ ஒரு நாள் வீட்டுக்கு வா, அதுபோதும்.”

மகேந்திரன் உண்ட மயக்கத்தில் தடுமாறியபடி எழுந்து கிளம்பினான். கைகழுவிவிட்டு மேசையின் அருகில் உட்கார்ந்திருந்த எழிலரசனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான் செல்வம்.

“செல்வம்?” என்று ஏதோ தயங்கித் தயங்கி நின்றான் எழிலரசன்.

“சொல்லு எழில்” என்றான் செல்வம். அவனுக்கு எழிலரசன் தயங்குவதே மனதை ஏதோ செய்தது.

“வீட்டுக்குப் போனா சம்சாரம் திட்டிட்டே இருக்காடா, ரெண்டு நாளா வேலை எதுவும் கிடைக்கலை. ஒரு ஐநூறு இருக்குமா? அடுத்த தடவை தரேன்” என்று கேட்டு முடிக்கும்முன் எழிலரசனின் குரல் நடுங்குவதைக் கவனித்தான் செல்வம். இதைக் கேட்பதற்குள் அவன் முகம் சிறிதாகி வேர்த்து வடிவதைக் கண்டதும் திகீரென்று இருந்தது செல்வத்துக்கு. இப்படி அவனைப் பார்த்ததே இல்லை செல்வம்.

“அட பைத்தியம், நான் இப்போ சம்பாதிப்பது எல்லாமே நீ எனக்குக் கொடுத்த பரிசுடா. உண்மையில் இதெல்லாமே உனக்குக் கொடுத்தாலும் ஈடாகாது. நான் எங்க நிறுவனத்திலேயே உனக்கு ஒரு நல்ல வேலை ஏற்பாடு செய்து தர யோசிச்சுட்டு இருக்கேன். எங்கிட்ட கேட்க என்ன தயக்கம்? இந்தா… இப்போதைக்கு வச்சுக்கோ, நாளைக்கு மறுபடி நாம சந்திக்கணும், சரியா? நீ எனக்குப் பண்ணின செலவுக்கு இதெல்லாம் தூசு மாதிரி” என்று சொல்லிவிட்டுச் சட்டைப்பையில் இருந்து இரண்டாயிரம் ரூபாயை எடுத்து அவன் கையில் திணித்தான் செல்வம். கலங்கிய தன் கண்களை எழிலரசன் கவனித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

அவனைத் தன்னுடன் காரில் ஏற்றிக்கொண்டு அவன் சொன்ன ஒரு நிறுத்தத்தில் இறக்கிவிட்டான். எழிலரசனுக்கு நல்ல ஒரு வழியைத் தேடிக் கண்டறிய வேண்டும் என மனதில் ஒரு ஆதங்கம் ஏற்பட்டிருந்தது. அழுகை வரும்போல இருந்தது அவனுக்கு.

உணவகத்தில் கைகழுவிக்கொண்டே பார்க்கும்போது மேசையில் சாப்பிடாமல் மீதம் இருந்த சமோசா, கார சேவுகளைத் தனியே எடுத்துத் தாளில் மடித்துத் தன் இரண்டாவது படிக்கும் குழந்தைக்காகத் தன் பையில் எழிலரசன் வைத்துக்கொண்டதையும் கவனித்திருந்தான் செல்வம்.

Author

  • எழுத்தாளர் அப்பு சிவா, நாவல்கள், சிறுகதைகள் மற்றும் அறிவியல் புனைகதைகள் போன்ற பல்வேறு வகைகளில் எழுதியுள்ளார். அவருடைய சில படைப்புகளில் "இருள் சூழ் உலகு, பாமரன்" மற்றும் "கடவுள் துகள்" ஆகியவை அடங்கும். 

Related posts

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 9: படபடத்த பட்டாம்பூச்சி 

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 10

மருத்துவர் பக்கம் – 39: நாய்க்கடியும் சந்தேகங்களும்