மருத்துவர் பக்கம் – 39: நாய்க்கடியும் சந்தேகங்களும்

நாய்க்கடி என்பது நமது வாழ்வில் நீக்கமற இருந்து வருகிறது. நமது வாழ்வில் ஒருமுறையாவது நாய்க்கடிக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம்.

இந்நிலையில் பலருக்கும் வரும் ஒரே சந்தேகம்… “நாய்க்கடித்து அதற்கான தடுப்பூசிகள் எடுத்து வருகிறேன். நான் பத்தியம் இருக்க வேண்டுமா? ‘நான் வெஜ்’ சாப்பிடக்கூடாது என்கிறார்களே, அப்படியா?”

முந்தைய காலங்களில் வெறிநாய்க்கடி நோய் எனும் ரேபிஸ் நோய் வரும் போது “நாய் மாதிரியே குரைத்து, நாய் மாதிரியே ஊளையிட்டு, தண்ணீரை நக்கி நக்கிக் குடித்து, படுக்கைக்குக் கீழே போய் படுத்து பிறகு இறந்து போனார்” என்பது போன்ற கதைகள் அதிகமாகப் பரவி வந்தன. மக்களும் நாய் கடித்தால் நாய் போன்றே ஆகி மரணம் வரும் என்று நம்பினர். அதனால் நாய் கடித்து விட்டால், நாய் விரும்பும் ‘நான் வெஜ்’ உணவுகளான மாமிசம், முட்டை, மீன் உள்ளிட்டவற்றைத் தவிர்த்து வந்தால் மரணம் ஏற்படாது என்ற மூடநம்பிக்கை பரவியது.

பிறகு அறிவியல் வளர்ந்தது. ரேபிஸ் என்பது வைரஸ் மூலம் உண்டாகும் நோய் என்று தெரிந்தது. ரேபிஸ் வந்தவர் நாய் போன்று ஆவதில்லை. அவருக்கு மூச்சுக்குழாய் தசைகள் இறுக்கம் காண்பதால் தண்ணீர் பருக இயலாது. எனவே தண்ணீரைப் பார்த்தாலே பயப்படுவார். இதை ‘ஹைட்ரோஃபோபியா’ என்போம். காற்று வேகமாக அடித்தாலும் தசைகள் இறுக்கம் காணும். இதை ‘ஏரோஃபோபியா’ என்போம். இதன் விளைவாகவே தண்ணீரை மடக்கென்று குடிக்காமல் நக்கிக் குடிப்பர்; காற்று இல்லாத படுக்கைக்குக் கீழே படுப்பர். மூச்சுக்குழாய் இறுக்கம் காண்பதால் பேச்சும் சரியாக இராது. பேச முனையும் போது குரைப்பது போன்றும், வலி தாங்காமல் கத்தும் போது ஊளையிடுவது போன்றும் தோன்றுகிறது. மற்றபடி நாய் மாதிரி மாறுவதெல்லாம் இல்லை.

நாய்க்கடிக்கு போடப்படும் 0-வது நாள், 3-வது நாள், 7-வது நாள், 28-வது நாள் ஆகிய நவீன தடுப்பூசிக்கு எந்தப் பெரிய பக்கவிளைவுகளும் இருப்பதில்லை. அதற்கென எந்த உணவுப் பத்தியமும் இல்லை. உங்களின் உணவுக்கும் நாய்க்கடிக்கும் அதன் தடுப்பூசிக்கும் துளிச் சம்பந்தமுமில்லை.

ஒரு காலத்தில் நாய் கடித்தால் வயிற்றுப்பகுதியில் 14 முதல் 21 முறை தொடர்ந்து ஊசி போட்டு எதிர்ப்பு சக்தியைத் தூண்ட வேண்டியிருந்தது. அந்தப் பழைய தடுப்பூசிக்கு நரம்பு மண்டலம் மற்றும் ஜீரண மண்டலம் சார்ந்த பக்கவிளைவுகளும் அதிகம் இருந்தன. அதனால் மருத்துவர்கள் உணவைப் பொறுத்தவரை அசைவம் தவிர்க்கலாம் என்று கூறியிருக்கலாம். ஆனால் இப்போது நவீன ‘செல் கல்ச்சர்’ தடுப்பூசிக்கு அத்தகைய எந்தப் பக்கவிளைவுகளும் இல்லை. எனவே எந்த உணவுப் பத்தியமும் அவசியமில்லை.

எனக்கும் எனது மகள்களுக்கும் முன்கூட்டிய ரேபிஸ் எதிர்ப்பு சக்தி தடுப்பூசிகளை 0-வது நாள், 3-வது நாள், 28-வது நாள் போட்டுக் கொள்ளும் போதும் தினசரி பல்லடம் பிராய்லர் கோழி உண்பதையும், நாமக்கல் லேயர் கோழி முட்டைகள் உண்பதையும், அவ்வப்போது வங்காள விரிகுடா தந்த மீன்கள் உண்பதையும், மணப்பாறை சந்தையில் வாங்கிய ஆட்டு மாமிசம் உண்பதையும் நாங்கள் நிறுத்தவில்லை. எங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

நாய்க்கடிக்கும் ‘நான் வெஜ்ஜிக்கும்’ எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற தீர்ப்புடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

Author

Related posts

ஞான நூல்கள் – 18 & 19

அறிவெழுச்சி: 10

பாகோஸ் என்கிற நபும்சகன் – 8