ஈரநிலவின் நறுமணம் கசியும் வெளியில்
இந்த இரவின் கிளைகளில்
வெண்முத்துப்பரல்களாய்க் குலுங்கும்
ஓராயிரம் நிலாமொட்டுகளின் நெற்றியில்
தன் மென்விரல்களால்
காற்றைத்தொட்டு
முத்தமாய்ப் பதிக்கிறது
ஒளித்துகள்களால் நெய்யப்பட்ட கவிதையை
ஆடையாய் உடுத்த இரவு
ஆசைகளின் அடர்ந்த மெளனத்தில்
தூங்காதிருக்கும் கவிதைகள்
இரவின் காதில் ரகசியமாய் மொழிபவற்றை
தன் யாழில் சேமித்துக்கொள்கிறான்
யாரோ ஒரு பாணன்
அப்பாடல்களின் வெளிச்சம்பட்டு
சுடரின் முத்துகளென
நீ தந்த அன்பின் தீராத அமுதம்
ஒவ்வொரு நிலாவிலும் வழியும்போது
நனைந்த நினைவுகளின் பாதையெல்லாம்
ஒளிப் பூக்களால் நிரம்பும் இந்த இரவில்
உன் வானத்தில் மிதக்கத் தொடங்குகிறது
என் மௌனமும் ஒரு நீல நிலவாக.