- அசுரவதம் -1 முதல் சந்திப்பு
- அசுரவதம் : 2 – காலகேய தானவன்.
- அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன்
- அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்
- அசுரவதம் : 5 – புதுவரவு
- அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி
- அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை
- அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.
- அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.
- அசுரவதம்: 10 – பழியின் பயணம்.
- அசுரவதம்: 11 – நெடிது நின்ற நாயகன்.
- அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு
- அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்
- அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!
- அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்
- அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்குவா
- அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்
- அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.
- அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.
- அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்
- அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.
- அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)
- அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 3: சபரியின் தோழி)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 8: சபரி மோட்சம்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 9: புதிய நட்பு
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 – இரு மகளிர் .. இரு சிந்தனை.
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 – போகாதே.. போகாதே.. என் கணவா
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17: நீறு பூத்த நெருப்பு
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்
- அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6: உடையும் அரண்கள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 9: படபடத்த பட்டாம்பூச்சி
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 8: மாயைக் குகைகள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 10: ஒளியின் தவிப்பு!
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 11: தாய்க்கு ஒரு தாலாட்டு
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி
“கோழையைப் போல் தப்பித்து ஓடிவிடச் சொல்கிறாயா?”
சீதையின் அந்தக் கேள்வி அசோகவனத்தின் நள்ளிரவு அமைதியைப் பிளந்துகொண்டு ஒலித்தது. அவளது கண்களில் தெரிந்த அந்தப் பெருநெருப்பு, இலங்கையையே சுட்டெரிக்கும் வல்லமை கொண்டதாக அனுமனுக்குத் தோன்றியது.
சற்றுமுன் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்த ஒரு பேதைப் பெண்ணாகச் சில நாழிகைகளுக்கு முன் நின்றிருந்தவள், கணையாழியைக் கண்ட மறுகணம் உலகையே ஆளும் நாயகியாக விஸ்வரூபம் எடுத்திருந்தாள். அவள் கண்களில் கண்ட உறுதியும் வலிமையும் அளப்பரியனவாக இருந்தன.
“அன்னையே… ம்ம்ம… மன்னிக்க வேண்டும்!” என்று தட்டுத்தடுமாறி வார்த்தைகளை விடுவித்தான் அனுமன்.
“மகனே, உன் வருகையும் அந்த இராவணனைப் போலவே யாரும் அறியாச் செயல். நான் உன்னோடு திருட்டுத்தனமாகத் தப்பித்து வந்தால், என் நாயகனின் வீரத்திற்கு என்ன மதிப்பு? அந்த அரக்கன் என்னைத் திருடித்தான் வந்தான். என் நாயகனும் என்னைத் திருடிச் சென்றால், அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?”
அனுமன் மௌனித்தான். அவள் இயலாமையால் இங்கிருக்கவில்லை. அவளின் நோக்கம் அனுமனுக்கு மெல்லப் பிடிபட்டது.
“என் கணவன் தன் வில்லின் வலிமையால் அரக்கர்களை வீழ்த்தி, என்னைச் சிறைமீட்பதுதான் இக்ஷ்வாகு வம்சத்தின் வீரத்திற்கும், என் கற்பின் திண்மைக்கும் அழகு!” என்றாள் தீர்க்கமாக.
அவளது அந்த அறச்சீற்றத்தைக் கண்ட அனுமன், இரு கரங்களையும் கூப்பி அவளது பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.
அன்னையின் தெளிவும், கற்பின் மாண்பும் அவனது அகத்தை முழுமையாகக் குளிரச் செய்தன.
சீதையின் உள்ளத்தில் இத்தனை மாதங்களாக உறைந்திருந்த அந்த மாபெரும் துயரம், இராமனின் கணையாழியைக் கண்ட அந்த நொடியிலேயே முற்றிலுமாக அகன்றுவிட்டிருந்தது.
அவள் துயரம் நீங்கிய அந்தத் தருணத்தில், அங்கே யாருக்கும் தெரியாமல் ஒரு மாபெரும் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது.
பிரபஞ்சத்தின் கணக்குகள் மிக விசித்திரமானவை. ஒரு ஜீவனின் கண்ணீர் இன்னொரு ஜீவனின் பாவத்தைக் கழுவும் என்பது விதியின் விளையாட்டு.
சீதை அமர்ந்து கண்ணீர் வடித்ததும், அவள் துரும்பினை வீசி இராவணனை ஏளனம் செய்ததும், அரக்கியர்களின் ஆங்காரக் கூச்சல்களை அறிந்ததும் என அத்தனைக்கும் சாட்சியாக நின்ற அந்த மரம் அங்கே உயிர்பெற்றது.
பின்னிருந்து ஓசை வருவதைக் கேட்டுச் சீதை திரும்பினாள்.
“இன்னொரு அரக்க மாயை!” என்றாள் அசட்டையாக, உயிர் பெற்று நின்ற அந்த மரத்தை நோக்கி.
“தேவி, அடியேன் மாயத்தினால் வந்தவனல்லன். நானும் அரக்கன்தான், ஆனால்…”
என்று அவன் முடிக்கும் முன்பே, அனுமன் சீதைக்கும் அவனுக்கும் நடுவில் சென்று நின்றான்.
“என்ன ஆனால்…” என்று கோபத்துடன் சீதைக்கு அரணாக நின்றான் அனுமன்.
“வானரனே, அஞ்ச வேண்டாம்; என் மீது சந்தேகமும் கொள்ள வேண்டாம். என் பெயர் சசோகா, நர மாமிசம் உண்ணும் கொடூரத்தைச் செய்து வந்தவன். அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன்.”
அனுமனின் முஷ்டிகள் இறுகின. அவன் கண்களில் விரோதம் குடிபுகுந்தது.
“அவசரம் வேண்டாம், நான் சொல்வதை முழுதும் கேள். நான் ஒருமுறை அடர்ந்த வனத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருந்த ஒரு முனிவரின் தவத்தைக் கலைக்க முயன்றேன். தவம் கலைந்த முனிவர் சினத்துடன் எனக்கு ஒரு கொடிய சாபமிட்டார். மானுடர்களை வதைத்துத் தின்னும் நீ அடுத்த பிறவியில் ஒரு மரமாகப் பிறப்பாய் என்றார்.”
அவன் கண்கள் நீரினைக் கொட்டியபடியே இருந்தன.
“அரக்கர்களின் பூமியான இலங்கையிலேயே வேரூன்றி நிற்பாய். காலங்கள் கடக்கும். இராவணனால் கடத்தப்பட்டு வரும் தூய்மையான கற்பரசியான சீதை, உன்னுடைய நிழலில்தான் வந்து தங்குவாள். அவளது கண்ணீரும் துயரமும் உன் வேர்களை நனைக்கும். என்றைக்கு ஒருவன் அவளைத் தேடி வந்து அவளிடம் இராமனின் கணையாழியைத் தருகிறானோ, என்றைக்கு அவளது துயரம் முற்றிலுமாகக் கரைகிறதோ, அந்த நொடியில் உன் பாவங்களும் தீரும் என்றார்.”
அனுமன் தன் எச்சரிக்கையை விடாமல் அவனின் அசைவுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
“என் தவறு உணர்ந்து மன்னிப்பு கேட்டேன். ‘சாபவிமோசனம் தாருங்கள் முனிவரே, என் பிழைகளைக் களைந்து நான் நல்ல ஒரு மனிதனாக மாற விரும்புகிறேன்’ என்றேன் என் கண்களில் நிறைந்த சோகத்துடன்.
அதற்கு அவர், ‘சோகம்’ நிறைந்த அரக்கனான நீ, அன்றுமுதல் துயரத்தை நீக்கும் அசோக மரம் என்று புனிதமடைவாய்! என அருளினார்,” என்று முடித்தான் சசோகா.
சாபம் என்பது தண்டனையல்ல; அது ஆன்மா தன்னைத் தானே திருத்திக்கொள்ளக் காலம் அளிக்கும் ஒரு மாபெரும் வாய்ப்பு. அத்தனை யுகங்களாகத் தன் ஆன்மாவின் இருளைப் போக்க ஒரு மரமாக அங்கே தவம் கிடந்த ஒருவன், இப்போது சீதையின் துயரம் தீர்ந்த மறுகணம் தன் சாப விமோசனம் பெற்றான்.
“அன்னையே, தங்களின் துயரத்தைத் தினம் தினம் அறிந்தவன் நான். தாங்கள் உங்கள் நாயகரைச் சேரும் நாள் வரை நான் விரும்பியே மரமாக நிற்கப் போகிறேன். என் நிழலில் இனி உங்களை யாரும் தீங்கு செய்ய முடியாது,” என்று சீதையை வணங்கி மீண்டும் பழையபடி மரமாகி நின்றான் சசோகா.
அந்த மரத்தின் கிளைகளிலிருந்து பல்லாயிரம் சிவந்த மலர்கள் மழையெனப் பொழிந்தன. அவை சாபவிமோசனம் பெற்ற ஓர் ஆன்மாவின் ஆனந்தக் கண்ணீராகப் பொழிந்தன.
“சசோகா, இனி இந்த மரம் துயரம் நீங்கியதைச் சொல்லும் அசோக மரம் என்றே அழைக்கப்படும். உன் பெயரால் இந்த வனம் அசோகவனம் என்றே அழைக்கப்படட்டும்,” என்று சீதை அவனுக்குச் சொன்னாள்.
அன்னையிடம் விடைபெற்றுச் செல்ல அனுமன் தயாரானான். ஆனால், அவனது கால்கள் அங்கிருந்து அகல மறுத்தன.
“அன்னையே, இந்த இலங்கை முழுவதையும் அழித்துவிட நினைக்கிறேன். எனக்கு அனுமதி தாருங்கள்,” என்றான் அனுமன்.
சீதை சிரித்தாள்.
“அனுமா, நீ இங்கே ஒற்றனாக, தூதுவனாக வந்திருக்கிறாய். ஒரு ஒற்றனின் வேலை செய்தியறிவதோடு முடிந்துவிடும். ஆனால், ஒரு மாவீரனின், ஒரு மதியூகியின், ஒரு தளபதியின் வேலை அங்குதான் தொடங்குகிறது.
எதிரியின் பலமறியாது அவனிடம் போரிடுவது சாத்தியமற்றது. எதிரியின் பலத்தை அறிவது என்பது உன்னை நீயே ஒரு கண்ணாடியில் பார்ப்பது போன்றது. உன்னுடைய பலவீனங்கள் என்ன என்பதை உனக்குக் காட்டும் ஆகச்சிறந்த கருவி உன்னுடைய எதிரியின் பலம்தான். ஆகவே எதிரி என்பவன் உன்னுடைய நிழல் ஆகிறான்.”
சீதை சொல்லச் சொல்ல அனுமனின் கண்கள் வியப்பில் விரிந்தன.
“எதிரியின் பலத்தை மிகையாக மதிப்பிடுவது அச்சத்தைத் தரும்; குறைவாக மதிப்பிடுவது அகம் நிறைந்த அதீத தன்னம்பிக்கையில் தன்னை அழிவின் குழிக்குள் தள்ளிவிடும்,” என்றாள் சீதை.
“அன்னையே, தங்களின் அரசியல் ஞானம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது!” என்றான் அனுமன்.
“வியக்க வேண்டாம் அனுமா, நான் அகில உலகத்தையும் கட்டியாண்ட தயரதனின் மருமகள். போரின் அத்தனை தர்ம, நியாய, சூத்திரங்களையும் அறிந்த ஜனகனின் மகள்.. எல்லாவற்றிற்கும் மேலாக…” என அவள் கம்பீரமாகக் கையை உயர்த்திய போது அனுமன் மண்டியிட்டுப் பணிவுடன் சொன்னான்.
“எல்லாவற்றிற்கும் மேலாக அண்ணல் இராமனின் உயிர் நீங்கள். அவரின் உள்ளமும் மனமும் நீங்கள்,” என்று தலை வணங்கி நின்றான்.
“மகனே, நீ மதியூகி என்பதை நான் அறிவேன். உனக்கு ஒன்று நான் சொல்ல வேண்டியதில்லை. நிதானத்தைத் தவறவிடாதே,” என்றாள் சீதை.
“உத்தரவு தாயே,” என்று மீண்டும் வணங்கியபடியே பதில் சொன்னான் அனுமன்.
“மகனே, இந்த இலங்கை பல சூழ்ச்சிகளும் தந்திரங்களும், ஆபத்துகளும் நிறைந்த இடம். இந்த இடர்களில் நீ சிக்காமல் இருக்க நான் இறைவனிடம் யாசிக்கிறேன். மேலும் என் கற்பின் மீதும், என் இறைவன் என் நாயகன் மீதும் கொண்ட பக்தியின் மீதும் சாட்சியாக உனக்கு ஒரு வரமளிக்கிறேன். இன்று முதல் நீ சிரஞ்சீவி. உனக்கு யாராலும் எந்தக் காலத்திலும் மரணம் வராது,” என்று சொல்லிக் கிளையில் இருந்து வீழ்ந்துகொண்டிருந்த பூக்களைக் கையில் ஏந்தி, வணங்கி நின்ற அவனுக்கு ஆசி வழங்குவது போல அவன் தலை மீது வைத்தாள்.
“அன்னையே… அன்னையே….” அனுமனுக்கு வேறு வார்த்தைகள் எழவில்லை. அவன் நாக்குழறியது. அவன் உள்ளம் நெகிழ்ந்து பேச முடியாத அளவுக்கு மூச்சுத் திணறியது. இரு கைகளை உயர்த்தி அவளைப் பலமுறை வணங்கினான். அவள் நடந்த காலடித் தடங்களில் தன் உடல் முழுவதும் படும்படி உருண்டான்.
அன்னையின் கருணை என்பது ஒரு பெருங்கொடை. அது இந்தப் பூமியில் மனிதத்தை என்றும் உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு தெய்வீக அமுதம். அந்த அமுதத்தின் சுவை தந்த மகிழ்வில், உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவன் தன்னிலை இழந்து நின்றான்.
“அனுமனே, எழுந்திரு. இனி உன் செயல்கள் யாவும் வெற்றியாகும்,” என்ற சீதையின் குரல் அவனை மீண்டும் தன்னிலைக்குக் கொண்டு வந்தது.
“தங்கள் உத்தரவு அன்னையே. நீங்கள் கோடிட்டுச் சொல்லிவிட்டீர்கள். இனி மிச்சம் அனைத்தும் அடியேனின் செயல். தங்களின் ஆசி துணையிருக்கும்,” என்று வலம் வந்து வணங்கி அந்த இடத்தை விட்டு நகர்ந்து வனத்தின் இன்னொரு பக்கம் சென்றான்.
வனத்தின் வேறு முனையில் நின்ற அனுமன், தன்னை இராவணன் தந்திரமாக அலைக்கழித்துச் சோர்வடையச் செய்ததை நினைவுகூர்ந்தான்.
போர் என்பது முதலில் நிகழ்வது மனிதர்களின் நினைவுக் கூட்டில்தான். போர்க்களத்திற்கு வரும் ஒரு வீரன் ஏற்கனவே தன் அகத்தில் தோற்றுவிட்டான் என்றால், அவனது கையில் இருக்கும் வாள் வெறும் இரும்புத்துண்டு மட்டுமே. அவனது வாளின் கூர்மையை விட, அவனது அகத்தின் கூர்மையை மழுங்கடிப்பதே சிறந்த போர் வியூகம்.
எதிரியிடமும் பாடம் கற்கலாம். அந்தப் பாடத்தை எதிரிக்கும் செயல்படுத்திக் காட்டலாம். அன்னையின் வரம் அதற்கு உதவும். மேலும் இதுவரை தூதனாக மட்டுமே உள்நுழைந்த அந்த கிஷ்கிந்தையின் இணையற்ற மதியூகியின் அகம் விழித்துக் கொண்டது.
அவன் கண்களில் இதுவரை இல்லாத தந்திரம் குடியேறியது. அவன் உதடுகள் விசித்திரப் புன்னகையை ஏந்தி மெல்ல மெல்ல விரிந்தன.
பின்குறிப்பு: சசோக அரக்கனின் கதை மலையகவாசிகளின் ‘பில் ராமாயணத்தில்’ வரும் ஒரு காட்சி. சிம்சுபா மரம் அசோக மரமெனப் பெயர் பெற்றதன் காரணத்தை உள்புகுத்தி அவர்கள் வழக்கில் இருக்கும் ஒன்று.
(தொடரும்)