Home நாவல்நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 3

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 3

0 comments

“இவ்ளோ பெரிய ஹால், ஹால் நடுவே மாடிப்படி. முதல்லயே ஏறிப்பார்க்கணும்னு தோணலையே” எனச் சொன்னபடி பெருமாள் தாவித் தாவி ஏற, பின்னால் நான்.. என் பின்னால் ப்ரகதி, ப்ரபாகர்.

ப்ரகதி ‘இப்படி ஆகும் என்று தெரியும்’ எனச் சொன்னாளல்லவா…

அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிட ஆம்புலன்ஸிலிருந்து இருவர். முன்னால் ஒரு வெள்ளைக் கோட்டு நபர்…டாக்டர், இன்னொரு நபர் ஃபாரன்ஸிக், பின் ஒரு கான்ஸ்டபிள்.

“ரெண்டு பேர் வரதா சொன்னீங்களே பட்டாபி?”

பட்டாபி மையமாய்ச் சிரித்து “ஒருத்தருக்கு வயித்துவலியாம்.. ம், இவரைக் கூட்டிக்கிட்டு வந்துட்டேன்.. என்ன ஆச்சு?”

பெருமாள் மெளனமாகக் கையைக்காட்ட, அவர்கள் அந்த அறைக்குள் போனார்கள். பட்டாபி புகைப்படம் எடுக்க ஆம்புலன்ஸ் ஆட்கள் ‘ஆ’ என கருணாகரனின் தொங்கலை வேடிக்கை பார்த்தார்கள்…

“சைந்தவி, பெரியசாமிய பைரவனைக் கூட்டி வரச்சொல்லு..(பைரவன் கொக்குப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் வளர்க்கப்படும் நாய்) ப்ரமோத்த கூப்பிட்டு ஸ்டேஷனுக்கோ இங்கயோ வரச் சொல்லு” என்றவர் ப்ரகதியைப் பார்க்க ப்ரகதி மடமடவெனச் சொல்ல ஆரம்பித்திருந்தாள்.

“என்னன்னு தெரியலை.. மாமா வழக்கம்போல இருக்கறா மாதிரி இல்லை.. ஏதோ சோர்வாதான் இருந்தார். நாங்க இன்னிக்கு காலைல்ல வந்தோம், ஏதோ ஒப்புக்குக் கேட்டுட்டு தலைவலின்னு மாடிக்குப் போய் படுத்துக் கொண்டுவிட்டார்.. கீழே காஃபிக்காக வந்தவர் கிட்ட மால் போறோம்னு சொன்னோம்.. சரின்னுட்டார். ஏதோ ரொம்ப விரக்தில இருக்கறா மாதிரி இருந்தது. விட்டா ஏதாவது செஞ்சுக்கிடுவாரோன்னு கூட தோணினது. ப்ரபாகர்.. நான் சொன்னேன்ல உன்கிட்ட..”

ப்ரபாகர் பேந்தப் பேந்த முழித்து பின் முறைத்து “ஷ்.. ப்ரகதி, கொஞ்சம் சும்மா இரேன்” என்றான்.

“ஏன் அவங்களத் தடுக்கறீங்க? ஹச்சோ, என்ன சொன்னீங்க? மாடியா? வாங்க பார்க்கவே இல்லையே” என பெருமாள் சொல்லி ஏற நாங்கள் பின் தொடர்ந்து கொண்டிருந்தோம்.

முடிவில் மாடியில் இரண்டு அறைகள்.. வலது பக்க அறையைக் காண்பித்தாள் பிரகதி. “ஏன் அங்க லைட் எரியுது…?”

அவர்களை அமைதியாக்கி நானும் பெருமாளும் அனிச்சையாய் துப்பாக்கியை எடுத்துக் கொண்டோம்…

மெல்ல உள் நுழைய.. அதுவுமொரு பெட்ரூம்.. படுக்கை கலைந்திருந்தது.. பெட்டைத் தாண்டி ஒரு கதவு. பாத்ரூமாய் இருக்க வேண்டும். அங்கும் விளக்கெரிந்தது.

அந்தப்பக்கம் போக நினைக்கையில் தரையில் ரத்தத் தீற்றல்கள். சுவற்றிலும் யாரோ மோதியது போல…

இந்தப் பக்கம் சில பல பொருட்கள் கீழே விழுந்திருந்தன.. குட்டியாய் சண்டை நிகழ்ந்திருக்க வேண்டும்..

மெல்ல மெல்ல பாத்ரூம் கதவைத் திறந்தால்…

அங்கு யாருமே இல்லை.. ம்ஹூம் இல்லை என்றுதான் நினைத்தோம்.

குளிக்கும் பாத்டப் திரையினால் மூடப்பட்டிருக்க திறந்தால் குப்புற விழுந்திருந்த ஒரு உருவம். காவல் துறை காக்கி டிரஸ். பாத்டப்பில் நீரெல்லாம் இல்லை, அந்த உருவம் அசாதாரண நிலையில் தான் குப்புற விழுந்திருந்தது… அதன் கழுத்தில் ஒரு நீலக் கயிறு….

“சார் … என்னது இது?”

பெருமாள் இறுகினார்.. மெல்ல அந்த உருவத்தை நிமிர்த்த….

“ப்ரமோத்” … என அலறினேன். நான்…

“சைந்தவி கண்ட்ரோல் யுவர் செல்ஃப் – ” என்றார் பெருமாள்..

நாங்கள் கீழே வந்திருந்தோம்.. பட்டாபியுடன் வந்திருந்த ஆட்கள் மேலே மாடியில் சென்றிருந்தார்கள்.

ஜி ஹெச் ஆம்புலன்ஸ் பிஸி என்பதால் பிங்க் ஹாஸ்பிடலில் இருந்தும் ஒரு ஆம்புலன்ஸ் வந்து, அதிலிருந்தும் ஆட்கள்..

பிரமித்துப்போய் பிரபாகர், ப்ரகதி, ப்ரபாகரின் பார்ட்னர், வயதான ருத்ராபதி.. இறந்த கருணாகரனின் வீட்டு ட்ரைவர் முகுந்தன்… ஒரு ஓரத்தில் நின்றிருந்தார்கள்.

நான் அடக்க மாட்டாமல் அழுது கொண்டிருந்தேன்…

“சார்.. ப்ரமோத்.. ஹிஸ் டூ யங்க் டு டை… மாமனாரைப் பார்க்கப் போனவன் இங்க எதுக்கு வரணும்..?”

“தெரியலை சைந்தவி.. கொஞ்சம் இரு” என்றார்.. ஃபோன் மணியடித்தது.

“சொல்லுங்க ஆறுமுகம்..”

“சார், ப்ரமோத் வீட்டிற்குச் சொல்லிட்டேன்.. தே ஆர் கமிங். அவங்க அப்பா, மாமனார், வைஃப். ஒரு ஆக்ஸிடெண்ட்டுன்னு பொதுவா சொல்லியிருக்கேன்.. எனிடைம் தே வில் கம்..”

“ஓகே ஆறுமுகம்..” போனை வைக்கப் போனால் மறுபடி… ”ஸார் ஒரு நிமிஷம்”

“சொல்லுங்க..”

“அந்தக் கம்ப்ளைண்ட் கொடுக்கவந்த தம்பதிகள்… எழுதிக் கொடுத்துட்டுப் போய்ட்டாங்க சார்..”

“ரொம்ப முக்கியமா ஆறுமுகம்?”

“இல்லை.. ஆனாக்க அவங்க கிட்ட அவங்க வீட்டுக்கு லேண்ட் மார்க் என்னன்னு கேக்கறதுக்காக ஃபோன் பண்ணினேன்..”

“என்ன சொன்னாங்க?”

“போன் எடுக்கலை ஸ்விட்ச் ஆஃப்…”

“ஓ..சரி. சார்ஜ் இல்லாம இருக்கும்.. காலைல பார்க்கலாம்…”

“என்ன நடக்குது சார் நம்ம பாக்கத்துல? நான் வரட்டுமா? பெரியசாமிய விட்டுட்டு.. ப்ரமோத் நல்ல பையன் சார்..”

“என்ன வேணும்னாலும் நடக்கட்டும் ஆறுமுகம். ட்ரூத் வில் கம் அவ்ட் ஸூன்… ” எனச் சொல்லி ஃபோனை ஸ்ரீனிவாசப்பெருமாள் வைத்தார்.

Series Navigation<< நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 2

Author

You may also like

Leave a Comment