பிணவறையில் உறங்குகின்றவர்கள் – பாபு பரத்வாஜ் (மலையாளம்)

பிரவாசிகளுடே குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பிலிருந்து..

தமிழாக்கம்: யாழினி சென்ஷி

பாபு பரத்வாஜ் (1948–2016) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒரு மலையாள மொழி எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர். கோழிக்கோட்டில் பிறந்த பரத்வாஜ், தனது பத்திரிகைப் பணியை இடதுசாரி சார்புடைய மலையாள இதழான 'சிந்தா'வில் தொடங்கினார். அவர் தொலைக்காட்சி ஊடகத்திலும் பணியாற்றினார்; அவர் மீடியாஒன் டிவியின் நிகழ்ச்சித் தலைவராகவும், கைரளி டிவியின் கிரியேட்டிவ் எக்ஸிகியூட்டிவாகவும் இருந்தார். 2006 ஆம் ஆண்டில், அவர் 'டூல் நியூஸ்' என்ற மலையாள ஆன்லைன் செய்தி வலைதளத்தை நிறுவினார். அவர் சவூதி அரேபியாவில் சிவில் இன்ஜினியராக நீண்ட காலம் பணிபுரிந்தார் மற்றும் அவரது பல இலக்கியப் படைப்புகள் பாரசீக வளைகுடா பகுதியில் உள்ள இந்திய வெளிநாட்டவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்தன. Kalapangalkkoru Grihapadam (2006) நாவலுக்காக கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றார். பிரவாசியுடே குறிப்புகள், ஷவகோஷயாத்ரா, பொம்மலாட்டம், பிரவாசியுடே வாழியம்பழங்கள், பஞ்சகல்யாணி மற்றும் அத்ருஷ்ய நகரங்கள் ஆகியவை அவரது பிற படைப்புகள். அவர் இதயம் தொடர்பான நோயால் 2016 மார்ச் 30 அன்று இறந்தார்

காணாமல் போன எனது நண்பனை தேடிக்கொண்டிருக்கும் போதுதான்  நான் மருத்துவமனையில் சவக்கிடங்கில் இருக்கும் அநாதைப் பிணங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

அதுவரை புத்தகங்களில் வாசித்து அறிந்தது  என்னமோ ஆத்மாக்கள் தன்னை உரித்துவிட்டு  வீசி எறிந்த சரீரங்களின் கிடங்கு என்றுதான் .

வாழ்வில் ஒரு முறைகூட குளிரூட்டப்பட்ட அறையின் அனுபவம் இல்லாதவனுக்கு இறந்த  பிறகு மார்ச்சுவரியில் வைக்க வேண்டியிருந்தால் அந்த பாக்கியம் அவனுக்குக் கிடைக்கும்.

மரணங்கள் குறித்தான எல்லா நினைவுகளிலும்   கொதிக்கும் எண்ணையுடன்  ஒரு பெரிய வாணலிச்சட்டி நினைவுக்கு  வருகிறது . சில சமயம் அந்த சட்டியில் உடலுக்குள்ளிருந்த ஆத்மா எரிந்து பொரிந்து கொண்டிருப்பதை பரிதாபத்துடன் நினைத்துப் பார்க்கிறேன். வாழ்க்கையில் காயங்களை மட்டுமே வாங்கிக் கொள்பவனுக்கு இப்படி ஒரு குளிரூட்டல் இருக்குமென்று நினைத்துப் பார்க்கவில்லை.

பிணவறையின் ஊழியர் வந்து  ஒவ்வொரு பிணங்களிலும் மூடியிருந்த துணியை அகற்றி அடையாளம் சொல்லிக் கொண்டிருந்தான். அவர்களுடைய நீண்ட உறக்கத்தைக் கலைக்கத் துணிவதில் மிக வருத்தமாக இருந்தது. என்னுடைய நண்பனை எனக்கு அடையாளம் காணமுடியவில்லை. அன்று மட்டுமல்ல  இனிமேல் என்றும். . அவன் எங்கு போனான். எப்படி மாயமானான் என்பதை நினைத்துக் கொள்வதற்காகவே இந்த பிணவறை நினைவுகளை பத்திரப்படுத்தி கொள்கிறேன்.  கிடங்கில்  பிணங்களை அடுக்கி வைத்திருக்கும் அலமாரிகள் என் நினைவுகளை கலைக்கிறது

என் குழந்தைகளுக்கு  சிறு பிராயத்தில் மூன்று அடுக்குகள் கொண்ட கட்டில் வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஏதோ திரைப்படம் பார்த்ததால் தோன்றியது.. ஒருமுறை குழந்தைகளுடன் ஒரு படுக்கை வசதி கொண்ட ஒரு ரயில் பயணத்தில் அந்த ஆசையை இன்னும் வலுவாக்கிக் கொண்டார்கள். ஆனால் என்ன காரணமோ கடைசிவரை அதை நிறைவேற்ற  முடியவில்லை.

குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். அவர்களுக்கு இன்று அந்த அவசியமும் இல்லாது போனது. குழந்தைகளுக்கு கூடுதல் வாக்குறுதிகளை அளிப்பதும், அதை மீறி கைகூடாமல் போவதும்தான் எனது வாழ்க்கையானது.

என் காதல் மனைவிக்குக்கூட  நான் கொடுத்த  பல உறுதிகள்  அனைத்தும் அவளில் இன்னும்  ஜீவனற்று உறைந்து இருக்கலாம்.  இப்படி பாழ்பட்ட எனது வெற்று வாக்குறுதிகளுக்காகத்தான் அவர்கள் என்னை இன்னும் நேசிக்கிறார்கள். இப்படி வாக்குறுதிகள் கொடுக்கவும்  அது கிடைக்காமலிருப்பதுமாக இருந்தால் என்ன பயன்  இந்த வாழ்வில். காதலின் பிரகடனத்தின்போதும்  நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள்தானே . இந்தக்  குறிப்புகளை எழுதும்போது கூட இந்தப் பிணவறையுடன் எங்கள் கனவுகளையும் வாக்குறுதிகளையும் சேர்த்துக்கொள்வேனென நினைக்கவில்லை. நான் துளியும் எதிர்பார்க்காத  தருணத்தில் சவக்கிடங்கில் அந்த நினைவுகள் தன்னை நிரந்தரப்படுத்துகிறது என்று தோன்றுகிறது.

இருபது வருடங்களுக்கு முன் அந்தப் பாலைவனத்தின் இருட்டை நான் இன்னும் மறக்கவில்லை. இதுபோல பல இரவுகள் உண்டு, எனினும் ஏன் அந்த இரவு மட்டும் தனித்து நிற்கிறது என்று பலநேரங்களில் யோசித்ததுண்டு,

ஒரு காலத்தை மற்றொரு காலத்திலிருந்து வேறுபடுத்துகிறது. காட்சியை மற்றொரு காட்சியுடன் மனம் அறியாமல் தொடர்புபடுத்திக்கொள்கிறது.  அன்று பகல் ஸாதினுடைய  ஒட்டகத்தின் மரணம் என் படுக்கையறை வரை வந்தது. என்னால் உறங்க முடியவில்லை. என் அறைக்கு வெளியே நிலா ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த நிலவில் கனவுகளின் சுகந்தமும் மரணத்தின் நெடியும் இருந்ததும்.

பாலைபூமியில் யாருக்கும் தெரியாமல் தங்கள் காலத்தைக் கழித்த மனிதர்கள் மற்றும் மிருகங்களுடைய ஆன்மாக்கள் சொர்க்க நரக வாசல்களைத் தேடி இந்த நிலவினூடே அலைந்து திரிந்து கொண்டிருக்கலாம்.

அன்று திரும்பி வரும்போது ஸாதி கூறினான், “பாலைவனத்தில் உடல்கள் அழுகுவதில்லை, உலர்ந்து வறண்டு கிடக்கின்றன. வெகு காலம் கடந்த பிறகு இந்த மணல் காற்றில் பொடிந்து வெகுதூரங்களில் தூசியாகப் பறக்கிறது. உடலின் தார்மீக விதிகள் மட்டும் உடையாமல் நெடுங்காலம் கிடக்கின்றன. எலும்புகளும் தசைநார்களும்.”

வெகுநேரம் உறக்கம் வராததால் நான் அறையை விட்டு வெளியே வந்தேன். என்னுடைய காபினின் பக்கத்தில் தொழிலாளர்கள் தங்குமிடம் இருந்தது. பாதியாகச் சாத்தி இருந்த கதவை மெல்லத் திறந்து உள்ளே நுழைந்தேன். அந்த ஜன்னலினூடாக நீந்தி வரும் நிலவில் குளித்திருந்தது அந்த அறை. திடீரென எதிர்பாராமல் நான் அந்தப் பழைய சவக்கிடங்கை நினைக்கிறேன். என்ன காரணத்திற்காக நினைத்தேனென இன்றுவரை புரியவில்லை.

பகலின் மரணமா, நிலாவா அல்லது வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் இந்த அடுக்குக் கட்டில்களாலா? அந்த நீண்ட அறையின் இரு புறமும் மூன்று அடுக்குக் கட்டில்கள். எல்லா அடுக்கிலும் ஒவ்வொரு மனித உடல். ஒரு மனித உடல் படுப்பதற்கான இடம் மட்டுமேயான அடுக்கு. ஒரு மனிதனின் கவலைக்குக்கூட இடமிருக்கவில்லை அதில்.

கட்டில்கள் அடுக்கப்பட்ட இடைவெளிக்குள் நடந்தேன். யாரையோ தேடுவதுபோலவே உறங்கிக் கொண்டிருப்பவர்களை நான் உற்றுப்பார்த்தேன். உறங்கிக் கொண்டிருப்பவர்களில் யாராவது முழித்துக்கொண்டால் நிலவொளியில் என்னைக் கண்டு பயந்து விடுவார்கள்.

தூக்கத்தில் அவர்கள் கனவு கண்டுக்கொண்டிருக்கலாம். அந்த முகங்களிலிருந்து கனவுகளை வாசிக்க முடிந்தால் என ஏங்கினேன். அவர்களுக்குத் தெரியாமல் அவர்களின் கனவுக்குள் செல்ல முடிந்தால் என்ன என்று யோசித்தேன். ஒவ்வொரு அடுக்கும் ஒரு குடும்பமாகத் தோன்றியது. அவன் தனியாகப் படுத்திருக்கவில்லை. அவனுடன் அவன் மொத்த வாழ்க்கையும் இருக்கிறது. நினைவுகள், நம்பிக்கைகள், கனவுகள், மையல்களும்கூட நிறைந்த தலையணையில் தலைசாய்த்துத்தான் ஒவ்வொருவரும் இங்கு உறங்கச் செல்கிறார்கள். பெரும்பாலும் அவன் நினைவுகளிலேயே மூழ்கிப் பொங்கிக் கிடக்கிறார்கள். அவன் மனமும் உடலும் பரிதவிக்கின்றது. அந்தத் தவிப்பின் சத்தத்தில் அறை நிறைகிறது. ஒவ்வொரு படுக்கையும் வாழ்வின் தணியாத பெருவலி. முடிவற்றதும்கூட.

இப்படி ஏக்கமும் தவிப்புமாக இருந்து கடைசியில் சொந்த நாட்டுக்கு வரும்போது அத்தனை காலம் சகித்த தீராத் தேம்புதலில் இருந்து தப்பித்துக்கொள்ள முயல்கிறான். தன் தற்பெருமையில் நடிக்கிறான். ஒரு பாவப்பட்ட மனதின் விம்முதல்கள்தான் அந்தப் பாசாங்கின் நடிப்பிலுள்ளது என்பதைச் சுற்றி இருப்பவர்கள் புரிந்துகொள்வதில்லை. இப்படியாகத்தான் வெளிநாட்டிலிருந்து ஊருக்குத் திரும்புபவர்கள் நீர்த்து வெறுக்கத்தக்க கதாபாத்திரமாக மாறுகிறார்கள். அவன் எல்லோருக்கும் வேண்டும்; அதே வேளை அவன் யாருக்கும் தேவையுமில்லை. பாலைபூமியில் அவன் தனித்திருந்தான். அவனை ஆசுவாசப்படுத்த அவனுக்கு நினைவுகளிருந்தது. திரும்பி வருகின்ற அவனுக்கு அந்த நினைவுகள்கூடச் சமயத்தில் மோசம் செய்துவிடுகிறது. முன்பைவிடத் தனிமையை உணர்கிறான். ஒரு விசித்திர கதாபாத்திரமாக மாறுகிறான். மறுபடியும் தன் பயணத்தின் வழியைப் பாலை பூமிக்குள்ளேயே தேடுகிறான்.

கேரளத்தில் மிக அதிகமாக அவமானப்படுபவர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்தான் போலும். அவர்கள் வேதப்புத்தகத்தில் வருகின்ற யூசுப்பைப் போன்று ஆவார்கள். யூசுப்பின் சகோதரர்கள் இஸ்ரவேலர்களான வண்டிக்காரர்களுக்கு இருபது சேகல்களுக்கு விற்றவர்கள். யூசுப் கனவு காண்பதும் அதன் விளக்கத்தை விவரிப்பவனுமாக இருந்ததால் சகோதரர்கள் அவன் மீது பகை கொண்டனர். ஒவ்வொருவரது கனவுகள்தான் பாலை பூமிக்கான வழியைத் தேடவைக்கிறது.

இந்தக் கட்டில்களுக்கு நடுவே நின்றுகொண்டு இதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேனா? நினைவில்லை. ஆனால் அந்தச் சவக்கிடங்கை இந்தப் படுக்கை அறையில் ஏன் வைத்தேன் என்பது நினைவிருக்கிறது.

ஒவ்வொருவரும் வீட்டிற்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவுமே வீட்டையும் குடும்பத்தையும் விட்டுவிட்டுச் செல்கிறார்கள் என்பதுதான் வேதனை. இந்தக்கையறு நிலையென்பது தன்னையே மறுப்பதற்குச் சமம். அவன் விட்டுச் சென்றது ஒருக்காலும் திரும்பப் பெற இயலாதது என்பது உண்மை. இந்த வீட்டுக்கும் குடும்பத்துக்கும் அவன் திரும்ப வந்தாலும் முற்றிலும் அந்தக் காலத்திலிருந்து அந்நியப்படுகிறான். அந்த அழகின் பாகமல்லாதவனாகியிருக்கிறான். அவன் கொண்டு வருகின்ற அத்தரைப் பூசிக்கொண்டு சுற்றி இருப்பவர்கள் அவனது வியர்வை நாற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

ஒரு வகையில் குடும்ப சந்தோஷங்களுக்காகத் தன் கனவுகளைக் கல்லறைகளில் வைத்துக்கொள்கிறான். தன் அடையாளத்தை உரித்துவிட்டுப் பிணவறை அடுக்குகளில் இருக்கிறான். அவனுக்குச் சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஆறடி நீளமும் மூன்றடி படுக்கை மாத்திரம்தான். இந்தச் சிறிய இடத்தில்கூட அவனை நிரப்பிக்கொள்ள நேரமில்லை. அவன் கோட்டு சூட்டைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறானெனச் சுற்றியுள்ளவர்கள் நினைக்கிறார்கள். பகட்டைக் கொண்டு பாரத்தை மறைத்துவிட்டு இப்படி அநாதைப் பிணத்தைக் காத்துக் கிடப்பது அவனது வாழ்வாகிறது.

Author

Related posts

சமன்பாடில்லா சமவெளிப் பயணம் -12 (இறுதிப் பகுதி)

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 –  இரு மகளிர் .. இரு சிந்தனை.

ஏழாவது பயணம் – ஸ்டானிஸ்லா லெம்