திசையின் தூரத்திலிருந்து
சப்தித்துக்கொண்டேயிருக்கிறார் அவர்
காட்டுப்பறவையின் முரட்டுக்குரல் போல
எதை நோக்கியது அவர் சப்தம்
சப்தத்தின் உட்பொதிவு யாது
எழுதித்தந்திருக்கவில்லை அவர்
போவோர் வருவோர் அக்கம் பக்கம்
தம்மை நோக்கியே சப்தம் என ஊன்றி
அவரைத் தடுத்தாட்கொள்ளவோ
ஆற்றுப்படுத்தவோ யாருமற்றங்கு
தயக்கத்தை முன் விரித்துப் பின் செல்கிறேன்
வீட்டு நடையிலிருந்து வீதியிறங்கி வருகிறார்
அருகில் வந்து காதருகே விஷயம் கசிகிறார்
கோவிலில் அன்னதானமாமே வாங்கிக்கொடு என்கிறார்
வெற்று வயிற்றின் ஆரவாரக்கூச்சல்
சரி உணவு வாங்கி வருகிறேன்
என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்வேன் நான்
என் தந்தை வயதிலிருப்பவரைப் பார்த்து.