தமிழே அமிழ்தே – 15

This entry is part 15 of 15 in the series தமிழே அமிழ்தே

முகநூல் எனப்படும் ஃபேஸ்புக்கில் நடைபெற்ற ஒரு கவிதைப் போட்டிக்கு அடியேன் எழுதி வென்ற ஒரு கவிதை கீழே. (பெரிய திட்டமிடல்கள் இல்லாமல் மனம் போன போக்கில் எழுதி வென்றது என்பதால் மிகுந்த மகிழ்வளித்தது)

அந்த ஒரு மழை நாளில்..

உன் வீட்டில் யாரோ
குடி வந்திருக்கிறார்கள்.

‘மழை மட்டுமா அழகு
வெயில் கூடத் தான் அழகு’
காதில் விழும்
காணொளியில்
முத்துக்குமாரும் நீயும்
முகங்காட்டிப் போகிறீர்கள்.

ஞாபகங்களின் மழையில்
நனையத் தொடங்கியவனை
துரத்தியடிக்கின்றன
தூறல்கள் சில.

அந்த மழைப் பொழுதில் தான்
வாசலில் வைத்திருந்த
ரோஜாச்செடி
தலைநீட்டிப் பூத்திருந்தது.

மழை விட்ட ஓடும் நீரில்
காகிதம் கிழித்து
கப்பல் செய்து விட்டேன்.

உன்பக்கம் வந்ததும்
ஓடிப் போய் எடுத்தாய்.
கவிழ்த்தாய்; பிரித்தாய்
கன்னக்குழியோடு சிரித்தாய்
அப்படித் தான் கிடைத்தது
அந்த முதல் கவிதை.

பிறகெல்லாம்
மழைக்கால மேகங்களில்
மடி ஊஞ்சல் ஆடினோம்.

அட்சதை மழை பொழிய
ஊர்விட்டு நீ போன
ஒரு மழைப் பொழுதிற்குப் பின்
வாழ்வின்
பொருள் தேடிப் புறப்பட்டேன்
பாலைவனத்திற்கு.

விடுமுறைக்காலத்தின் இக்கணத்திலும்
விடாமல் பொழிகிறது மழை

இதே கருத்தை/செய்தியை இதே இனிமையுடன் மரபில் சொல்ல முயன்றால் அறுசீர் விருத்தத்தைத் தேர்ந்தெடுப்பேன். அது எளிதானது மட்டுமின்றி நல்ல சந்தநயம் தருவதுமாக என்னளவில் இருக்கிறது தான் காரணம்.

பார்க்க வந்தேன் உன்வீட்டை.
… பார்த்தால் யாரோ உள்வாசம்.
தீர்ந்து போகா மழைபோலும்
… திறந்து கொண்ட ஞாபகங்கள்
சேர்ந்து நனைந்த சிறுபொழுது
.. சிந்தை பூத்த கவிக்காலம்
வார்த்த கவிதைப் பூவெடுத்து
… அளித்தேன் நானும் அன்புடனே.

(மா மா காய் – அரையடி வாய்பாடு)

இதில் இன்னும் நுணுக்கமாக சீர்களைச் சொல்ல இயலும். காட்டாக, அரையடியின் ஈற்றுச் சீரை ஒரே மாதிரியாக, உன்னகத்தை (உன்வீட்டை) என்றோ, உள்ளிருப்பு (உள்வாசம்) என்றோ மழைபோலும் என்பதை மாமழையாய் என்றோ ஒன்றுக்கொன்று இயையும்படி செய்வதும் சிறப்பே. எனினும் இக்காலத் தலைமுறையைக் கருத்தில் கொண்டு எளிமைக்கும் புரிதலுக்கும் முன்னுரிமை தரலாம்.

இப்படித் தொடர்ந்து நெய்தால் அதே இனிமையும் கருத்தும் கொண்ட கவிதை மரபிலும் கிடைத்துவிடும்.

இதை இங்கே குறிப்பிடும் காரணம் அறுசீர் விருத்தம் பற்றி ஓர் அறிமுகத்திற்காகவே!

விருத்தம் என்பது ஆசிரியப் பா இனமாகும். தமிழ்ப் பாடல் வரலாற்றின் பெரும்பகுதியைத் தன்னகத்தே கொண்டது. விருத்தங்கள் எழுதப் பழகுவோர் அறுசீர் விருத்தம் எழுதித் தொடங்கலாம்.

இதில்
ஆறு சீர்கள் வரவேண்டும்
அரையடிக்கு வாய்பாடு அமைய வேண்டும்.
முதல் சீரும் நான்காம் சீரும் மோனை (முதலெழுத்து) ஒன்றி வர வேண்டும்.
ஒவ்வொரு அடியிலும் எதுகை (இரண்டாம் எழுத்து ஒன்றி) வர வேண்டும்.
கடைசிச் சீர் ஏகாரத்தில் முடிய வேண்டும்.

காட்டாக…

அரையடி வாய்பாடாய் (புளிமா புளிமா கூவிளங்காய்)

அறுசீர் விருத்தம் என்பதுவும்
…. அழகுத் தமிழின் பாவினமாம்
பெருகும் கவிதை எண்ணமதை
… பெரிதும் சுருக்கிக் காட்டுதலாய்
வருக முதற்சீர் மோனையுற
….வழங்கும் நான்காம் சீரிலுமே!
தருக எதுகை அவ்விதமே
… தனித்த அடிகள் யாவிலுமே.

Series Navigation<< தமிழே அமிழ்தே – 14

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

Related posts

பயமா.. உனக்கா?!

பேரன்பின் சாட்சியங்கள் – அமுதவல்லி நாராயணனின் ’என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து…

*திம்மராஜபுரத்துக் கதைகள்* –  நூல் விமர்சனம்