அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..

This entry is part 43 of 43 in the series அசுரவதம்

காலத்தின் அத்தனைச் செயல்களையும் கண்டு அதற்கு ஒரே சாட்சி நான் என்பது போல நின்றிருந்தது அந்தக் நீலப் பெருங்கடல். அதன் கரையில், பற்பல யுகங்களின் அழுத்தம் தாங்கிய மகேந்திர மலையின் உச்சி முகட்டில் அனுமன் அமர்ந்திருந்தான். சாம்பவானை விட்டு நீங்கிச் சென்ற பின் அவன் உள்ளம் சமுத்திரத்தின் பேரிரைச்சலை உள் வாங்கியது போல அலைமோதிக் கொண்டிருந்தது.

தன் தலையை உதறி நினைவுகளில் இருந்து விடுபட முனைந்து கடலை நோக்கினான். அவன் கண் முன்னே நீண்ட அந்தப் பெருங்கடல் வா வா உன்னை விழுங்குகிறேன் என்பதைப் போலத் தன் அலை கரங்களை வீசி கடற்கரையிலும் மலைகளிலும் நின்றிருந்த வானரங்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடந்தது அந்தக் கடலில் கரைந்திருந்த ஆதிநீலம். எல்லையற்ற பெருவெளி தன் தாகம் தாளாமல் திரவ வடிவமாகக் கரைந்து நிற்பது போன்றதொரு வடிவு கொண்டிருந்தது. அதன் மீது, விடியலின் முதற்கதிர்களைப் பொன்னிறக் குழம்பாக அள்ளி வீசிக் கொண்டிருந்தான் கதிரவன். அந்த நீலமும் பொன்னும் ஒன்றோடொன்று கலந்து, மானுட சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஏதோவொரு புதிய சொர்க்க உலகத்தை அக்கணத்தில் சிருஷ்டி செய்துகொண்டிருந்தன.

கரையில் நின்றிருந்த மாருதியின் விழிகளில் அந்த ஒளியின் நடனம் வந்து விழுந்தது.

அவன் அகம் புதியதொரு தரிசனத்தைக் கண்டது. அந்த நீலமும் பொன் வானமும் அவனுக்குள் இரண்டு பேருருவங்களாக உருமாறின. அது கோசலத்து நாயகனும், அவர்தம் பிராட்டியும் அன்றி வேறில்லை. இராகவனின் மேனி அன்றும் இன்றும் என்றுமிருக்கும் அந்தப் பெருங்கடலின் நீலம். ஆனால், அந்த நீலத்தின் மீது அன்னை ஜானகியின் பொன்னொளி படர்ந்திருக்கும் வரையில் தான் அந்த நீலத்திற்குப் பொருள் இருக்கிறது.

பிராட்டியார் ராமனின் மேனியில் படர்ந்திருக்கும் பொன்னிறக் காலைக்கதிர். அவளது இருப்பே அந்த நீலத்தைக் கருணையாக, அழகாக, வழிபடத்தக்க பேரமைதியாக மாற்றுகிறது. பிராட்டியோடு இருக்கும் ராமன், காலையின் பொன்னொளி தழுவிய இந்தச் செழுங்கடலைப் போன்றவர்.

ஆனால், அன்னை இல்லாதிருக்கும் இராமனின் தற்போதைய கோலம்? மாருதியின் நெஞ்சு விம்மியது.

அந்தக் கருணைப் பெருங்கடலின் மீது மீண்டும் அன்னை சனகியின் பொன்னொளியைப் படரச் செய்ய வேண்டும். அந்த நீலமும் பொன்னும் மீண்டும் இணைந்து நிற்பதை தான் காண வேண்டும் . அது ஒன்றே அவன் வாழ்வில் இனி மிஞ்சி இருக்கும் ஒரே செயல்.

இராமா இராமா…

அனுமனின் நெஞ்சில் ராம நாமம் ஒரு பெருந்தீயாக மூண்டது. அவனது கரிய விழிகளில் அந்த நீலக் கடலும் பொன்னொளியும் உருகி ஒன்றாகிக் கலந்தன. அவன் கண்கள் அந்தக் காலைச் சூரியனை நோக்கின.

வானின் எல்லையில் செக்கச்செவேலெனத் தகித்துக் கொண்டிருந்தது அந்தப் பெருவட்டம். ஒரு செந்நிறத்துப் பழம்… அனுமனின் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பி மறைந்தது.

சற்று நேரத்திற்கு முன்புதான், யுகங்களுக்கும் முன்னாட்களில் ஆதி நிலத்தைப் பறை அடித்துக் கொண்டு நடந்து கால்களால் அளந்த சாம்பவான், அவனது காதுகளில் அந்தப் பழைய கதையை உதிர்த்திருந்தான். அண்டவெளி அறியாத பாலகனாய், குழந்தைப் பசியின் ஆவலோடு இருந்தபோது, அந்தப் பெருஞ்சுடரைப் பழமென எண்ணி வான்நோக்கிப் பாய்ந்த கதை. இந்திரனின் வஜ்ராயுதம் தாக்கியதும், தாடை முறிந்து அவன் வீழ்ந்ததும், மகனின் துயர் கண்டு பிரபஞ்சத்தின் மூச்சுக் காற்றையே வாயு பகவான் நிறுத்தி அச்சுறுத்தியதும், பின்னர் தேவர்கள் அத்தனை பேரும் திரண்டு வந்து அவனுக்குள் வரங்களை மழையெனப் பொழிந்ததும்… மறைந்துபோன ஒரு தொன்மத்தின் சித்திரமாக அவன் அகத்தில் விரிந்தது.

சாம்பவானின் வார்த்தைகள் ஒரு கல்லைப் போல அனுமனின் மனக்குளத்தில் விழுந்து மாபெரும் அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தன.

நான் யார்?

அந்த வினா அவனுக்குள் ஒரு பிரம்மாண்டமான இருள் குகையைப் போலத் திறந்துகொண்டது. அந்த இருட்குழம்பில் இருந்து வெளிவரத் துடித்தான். சுயம்பிரபையின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. புறக்கண்களை மூடி தன்னுள்ளே நடக்கும் அந்தப் பேரிரைச்சலை கவனிக்க ஆரம்பித்தான்.

சூரியனைப் பிடிக்கப் பறந்த அந்தப் பழைய சிறுவனுக்கும், இன்று இந்த மகேந்திர மலையின் உச்சியில் திகைத்து நிற்கும் இந்த வானரனுக்கும் என்ன தொடர்பு? எனக்குள் அப்படி என்ன பேராற்றல் சுருண்டு கிடக்கிறது? அதன் ஆதி விசை எங்குள்ளது? அது வாயு பகவான் என் தந்தை என்பதாலா? இல்லை, பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த இயக்கமுமே எங்கும் காற்றாக உறைந்திருப்பதனாலா?

நான் என்ற அகங்காரம்தான் மனிதனின் முதல் சிறை. என்னால் முடியுமா? என்ற சந்தேகம் அந்தச் சிறையின் இரும்புக்கதவு. சாம்பவானின் வார்த்தைகள் அந்தக் கதவைத் திறந்து விட்டன. இருட்குழம்பு வடிந்து ஓடியது. அகத்தின் ஒளி கூடியது.

தான் யார் என்பதும், தன் பலம் தனக்கே தெரியாமல், சுருங்கிப் போய்க் கிடந்த அவனது உள்ளுணர்வு, இப்போது மெல்ல விழித்தெழுந்தது.

அனுமன் என்பவன் ஏன் இந்த உலகில் வந்தான், அவனுக்கான கடமை என்ன என்று மீண்டும் மீண்டும் யோசித்தான்.

இராமன் கையில் இருக்கும் வில்லிற்குத் தானும் ஒரு அம்பு என்ற உண்மை அவனுக்குப் புரிந்தது. அம்புக்கு ஏது தனித்த பலம், அல்லது பலவீனம்? தன்னை இயக்கும் வில்லின் பலமே அம்பின் பலம். அம்பெய்யும் வீரன் எத்தனை வலிமையோடு அந்த அம்பினை வில் நாணில் வைத்து இழுத்து விடுகிறானோ, அப்போது தான் அந்த அம்பு தன் இலக்கை எட்டுகிறது. இயக்குபவனின் இலக்கே அம்பின் இலக்காகிறது.

நான் இப்போது உன் அம்பாகிறேன் இராமா. மெல்ல ஒரு அம்பெடுத்து என் அறியாமையைக் கொன்றுவிடு ராமா. என் அச்சங்கள், என் முன்வினைகள், வருவினைகள் எல்லாம் உன் அம்பிற்கான இலக்காக மட்டும். நீ எய்யும் அம்பு என்னை உன் வில்லிற்கான சிறந்த கணையாக மாற்றட்டும். என்று அனுமன் மனத்தினுள் கசிந்துருகினான்.

இதுவரைக்கும் நான் என்னும் தன்னுணர்விற்கும், இயலாமை என்னும் சஞ்சலத்திற்கும் நடுவே ஊசலாடும் மனதை ஒருமுகப்படுத்த அனுமன் கண்களை மூடினான். மூச்சைக் கவனித்தான். பிராண வாயு உடலெங்கும் பரவியது. மனதின் சலசலப்புகள் அடங்கின. அவன் உள்ளம் முழுக்க இராம நாமம் மட்டுமே நிறைந்து கிடந்தது. மனதின் சலசலப்புகள் அடங்க, மனம் பேரமைதி கொண்டு நிச்சலனமானது.

அந்த அமைதியில், தன் வாலின் நுனியில் அவன் கட்டியிருந்த இராமனின் கணையாழி அவனது நினைவுக்கு வந்தது. அந்த மோதிரத்தில் இராமனின் கண்ணீரும், சீதையின் மீதான அவனது மாபெரும் காதலும், ஒரு மானிடனின் எல்லையற்ற துயரமும் உறைந்திருந்திருப்பதை அவன் உள்ளம் உணர்ந்தது.

பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த எடையையும் அந்தச் சிறு வளையம் தனக்குள் சுருக்கி வைத்திருப்பதை அனுமன் அகக்கண்ணால் உணர்ந்தான்.

அந்த எடையே அவனுக்குப் பெரும் ஆற்றலாக மாறியது. இராம நாமம் அவனது நாடி நரம்புகளில் ஊறியபோது, அனுமனுக்குள் இருந்த அந்தச் சிறு நான் உடைந்து சிதறியது. கண்கள் திறந்தான் மாருதி.

அவன் உதடுகள் உறுதியாக கம்பீரமாக ராமா… ராமா என சொல்லத் தொடங்கின. அந்தப் பேரோசைக் கேட்டு வானரங்கள் அங்கே குவியத் தொடங்கின. சாம்பவானும் வந்தான். அவன் கண்கள் விரிந்தன. பல யுகங்களுக்கு முன்பு தான் கண்ட அற்புதம் மீண்டும் அவன் கண் முன்னே நிகழத் தொடங்கி இருந்தது.

அனுமனின் உள்ளே நிகழ்ந்துக் கொண்டிருந்த பிரளயம் அடங்கி, அது இப்போது அவன் உடலில் வெளிப்படத் தொடங்கியது.

தான் என்னும் ஒரு நினைவு மறந்து பிரபஞ்சத்தில் படர்ந்திருக்கும் அணுக்களின் அங்கம் தான் இந்த உடல் என்னும் பேருண்மை அவனுக்குப் புரிந்தது. அண்டமும் வெளியும் காற்றும் நீரும் நெருப்பும் எல்லாமும் ஒன்றுக்குள் ஒன்றானவை, தானே அந்த ஒன்றின் அடக்கம், தானே அதன் இயக்கம்..

கண்களை மூடியிருந்த அனுமனின் இருள் குகைக்குள், முதலில் ஒரு புள்ளி தோன்றியது. அது ராம நாமம் என்னும் ஆதி நாதத்தின் சுடர். அந்த ஒளிரும் புள்ளியிலிருந்து பிரபஞ்சத்தின் அத்தனை விசைகளும் நரம்புகளாக, தசைநார்களாக அவனது அகத்தில் கிளைத்து வளரத் தொடங்கின.

இரும்பைக் காய்ச்சி வார்த்ததைப் போன்ற அவன் தோள்கள் இப்போது மலைச் சிகரங்களைப் போலப் பருத்துக் கிளர்ந்தெழுந்தன.

அகன்ற மார்பு, விரிந்த கடலின் பரப்புக்கு சவால் விடுவது போல விரிந்தது. ஆயிரம் மின்னல்களை ஒன்றாகக் கட்டி வைத்தாற்போல அவனது இரு கண்களும் பிரகாசித்தன. கரிய மேகங்களைக் கிழித்துக்கொண்டு சீறும் ஒரு மாபெரும் கருநாகத்தைப் போல, அவனது நீண்ட வால் வானில் சுழன்றடித்தது. இராமனின் புகழ் போலவும், இராவணனின் பாவக் கணக்கு போலவும் அது மேலும் உயர்ந்து வான் முட்டுமளவிற்குச் சென்றது.

சற்றுமுன் வரை அனுமன் ஒரு சாதாரண வானரப் புள்ளியாகப் பாறையின் மேல் நின்றிருந்தபோது, அந்த நீலக்கடல் அவனைக் கேலி செய்யும் ஒரு மாபெரும் அரக்கனாகத் தெரிந்தது. ஆனால் இப்போது, விஸ்வரூபம் எடுத்து நின்ற அவனது பிரம்மாண்டமான தோற்றத்தின் முன், அந்தத் தென்கடல் பதுங்கிச் சிறுத்துப் போனது. மலைகளை விழுங்கும் அகங்காரத்துடன் நுரைத்துக் குமுறிய அதன் அலைகள், இப்போது அனுமனின் காலடிக்குக் கீழே சிறுவர்கள் விளையாடும் ஒரு குட்டையில் எழும் சிற்றலைகளைப் போல அடங்கிப் போயிருந்தன.

எங்கும் இராம நாமம் ஒரே சீராக எழுந்ததில் அந்த மந்திரகிரி மலை ஒத்ததிர்வு ஓசையில் அதிர்ந்தது. மகேந்திரகிரி மலை அவனது பாதங்களின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் நொறுங்கத் தொடங்கியது.

அவன் கால்களை ஊன்றி நின்ற பாறைகள் நெறுநெறுவெனப் பொடியாகிப் புழுதியாய்ப் பறந்து அந்த வானரக் கூட்டத்தை அப்படியே மேகமூட்டம் போல மூடத் தொடங்கியது.

அவன் மேலெழுந்த தோற்றத்தை அண்ணாந்து பார்த்து, “ஆஞ்சநேயா… இராம தூதா!” என்று பக்தியிலும் பயத்திலும் சுற்றியிருந்த கோடிக்கணக்கான வானர வீரர்களும் கைகூப்பி நின்றார்கள்.

விண்ணுக்கும் மண்ணுக்குமாகப் பிரம்மாண்டமாக உயர்ந்து நின்ற அந்த மாபெரும் வானரம், தென்திசை நோக்கித் தன் இரு கைகளையும் நீட்டியது.

“அன்னையே! இதோ வந்துவிட்டேன்!” என்று முழங்கியபடி, தன் இரு கால்களையும் பாறைகளில் அழுத்தி, மகேந்திர மலையை அதலபாதாளத்திற்குத் தள்ளிவிட்டு ஆகாயத்தை நோக்கிக் குதித்தான் அனுமன். அவன் பாய்ந்த வேகத்தில் கூடவே மரங்களும், பாறைகளும், காட்டு வாழ் உயிரிகளும் கூட அந்த வேகத்தில் இழுக்கப்பட்டு அவனுடன் ஒரு காத தூரத்துக்கு பறந்து வந்தன.

அவன் வானில் பாய்ந்த மறுகணம் அங்கே இன்னும் ஒரு மாபெரும் இயற்கை விந்தை நிகழ்ந்தது.

வாயு பகவான் தன் மகனின் வரவை உணர்ந்து எல்லையற்ற அந்த ஆகாயத்தில், காற்றை வெறும் வாயுவாகப் பாய விடாமல், அதை அழுத்தமான, அனுமனை கீழே தள்ளி விட்டுவிடாத ஒரு வடிவமாக உருமாற்றினார்.

அனுமன் வானில் நீந்தும் போது ஆகாய கங்கையாகவும், பறக்கும் போது தாங்கி உயர்த்தும் பெருங்காற்றாகவும் நடந்து செல்ல முயன்றால், ஏற்று நிற்கும் படிக்கட்டாகவும் மாறியது வானில் பரந்து இருந்தக் காற்று.

தன் தந்தை உருவாக்கிய அந்தப் கண்ணுக்குத் தெரியாத காற்றின் படிகளில், பறக்கும் முன் வேகமெடுத்து ஓடும் கருடனைப் போலத் தன் பிரம்மாண்டமான கால்களை வைத்து ஓடத் தொடங்கினான். தேவையான நேரத்தில் பறக்கவும் வானில் நீந்தவும் செய்தான்.

அவன் பாய்ந்த வேகத்தில் மேகக் கூட்டங்கள் இரண்டாகப் பிளந்து விலகின. சட்டென எழுந்த வேகத்தில் அவன் திசை தவறாது இருக்கவும், அவன் தடுமாறமல் இருக்கவும் வாலின் நுனியில் கட்டப்பட்டிருந்த இருந்த கணையாழி, ஒரு மாபெரும் எடையாக மாறி அவனது உடலின் வேகத்தை நிலைநிறுத்தும் ஒரு மாபெரும் நங்கூரமாக மாறியது.

உடல் மேலெழும்பத் துடித்தாலும், கணையாழியின் எடை அவனது வேகத்தை சமன் செய்து கீழே இழுத்து அவனைச் சமநிலையில் பயணிக்க வைத்தது. கடலின் மேல் தர்மத்தின் ஒற்றைத் தூதனாக, காற்றையே பாதையாக்கி அவன் ஆகாயத்தைக் கிழித்துக்கொண்டு சென்றான்.

காலம் அவன் கதைகளை காற்றில் எழுதத் தொடங்கி விட்டது. இது எழுச்சியின் பயணம். விதியின் பயணம். சீதைக்கான தேடலின் பயணம். தென் திசை நோக்கி அவன் சென்ற பயணத்தின் ஆரம்பம் என்னமோ எளிதாக இருந்தது. ஆனால் என்னைத் தாண்டி எப்படி செல்வாய் என்று சவால் விடுவதைப் போல அவனுக்கான தடைகளை ஆங்காங்கே இயற்கை வைத்து இருந்தது. அனுமனுக்கு முன்பாக வினைகளைச் சுமந்தபடி விதி பறந்துக் கொண்டிருந்தது.

அதே நேரம், தென்திசையின் மறுமுனையில் அசோக வனத்தின் இருள் சீதையை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. சீதை இருக்குமிடம் நோக்கித் தன் பரிவாரங்களோடு வந்துகொண்டிருந்தான் இலங்கை வேந்தன் இராவணன். அவன் வருகை அறிந்து திரிசடை மிகவும் உள்ளம் கலங்கி இருந்தாள்.

கூடவே இரண்டு ஜோடிக் கண்கள், அந்த இருளில் மறைந்து சீதைக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தன..

அவை சூர்ப்பனகையின் கண்கள்.

பாகம் இரண்டு முற்றும்.

பி.கு: நாட்டுப்புற மற்றும் இலக்கியக் குறிப்புகள்:

வங்காள மொழியில் கிருத்திவாசர் எழுதிய ‘கிருத்திவாச ராமாயணம்’ மற்றும் ஒடிசாவின் பழங்குடி ராமாயணக் கதைகளில், இராமனின் கணையாழிக்கு ஒரு மாபெரும் உளவியல் மற்றும் பௌதீகத் தன்மை கற்பிக்கப்பட்டுள்ளது. இராமனின் பிரிவாற்றாமையும் கண்ணீரும் அந்த மோதிரத்தில் தங்கியிருப்பதால், அது பிரபஞ்சத்தின் எடையைக் கொண்டிருப்பதாக இந்த மரபுகள் கூறுகின்றன.

அனுமன் தன் உடலைப் பிரம்மாண்டமாக வளர்க்கும்போது அவனுக்கு அகங்காரம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அவன் காற்றில் தடம்மாறிப் பறந்துவிடக் கூடாது என்பதற்காகவும், வாலில் கட்டப்பட்ட அந்த மோதிரத்தின் எடையே அவனை ஒரு நங்கூரம் போலச் சமநிலையில் நிறுத்தியதாக நாட்டார் கதைகள் கூறுகின்றன.

அதேபோல, அனுமன் கடலைக் கடந்த விதத்தைப் பற்றி, தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான காவியமான ஜாவானிய ராமாயண ககாவின் – Ramayana Kakawin மற்றும் மலாய் நாட்டுப்புறக் கதைகள் (ஹிகாயத் செரி ராமா – Hikayat Seri Rama) ஒரு அற்புதமான வர்ணனையைக் கொண்டுள்ளன. அதன்படி, அனுமன் வானில் ஒரு பறவையைப் போலப் பறக்கவில்லை என்றும் வாயு பகவான் தன் மகனுக்காகக் காற்றை இறுகச் செய்து, கண்ணுக்குத் தெரியாத படிக்கட்டுகளாகவும் பாதையாகவும் மாற்றினார் என்றும், அனுமன் அந்தக் காற்றின் மீது ஓடியே கடலைக் கடந்தான் என்றும் கூறுகின்றன.

(தொடரும்)

Series Navigation<< அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்

Author

Related posts

அறிவெழுச்சி: 2

தரிசனம்

சலாவுதீன் – ஜெருசலேமை வென்ற மாவீரன்