துணிச்சல்காரியின் நடுக்கம்

அல்பாயுசில் போன
அப்பாவின் அஸ்தியைக்
கரைத்ததோடு அகன்றது
சொந்த பந்தம்

அழகியல் தொலைத்த
அம்மாவின் விழிகளுக்குள்
உயிர்த்திருக்கிறது ஈன்ற மகவிற்கு
விதி செய்யும் கனவு

கனன்ற பாலைக்குள்
பசுமை செய்த மந்திரக்காரி
இருண்மை வேய்ந்த கூரையில்
வெளிச்சத் துகள்களை
பரப்பிய மின்மினிக்காரி…

மூச்சுப் பிடித்து
உழைக்கும் அவள் சிந்தைக்குள்
சுழல்வது எல்லாம்
மகவின் வளர்ச்சியே

கொண்டை முடிந்த
அந்தப் போராட்டக்காரி
பிள்ளையின் கல்யாண
வைபவத்திலோ

நெஞ்சுரம் அற்று நிற்கிறாள்
நூறு விழுக்காடும்
நலனையே விரும்புகிறவள்
விலகிப் போகிறாள்

பொறாமை கனலும்
வஞ்கத் தம்பதியரை
இறைஞ்சு அழைக்கிறாள்

தன்னைத் தானே
சகுனத்தடையென
நம்ப வைத்திருக்கிறது
அயோக்கியச் சமூகம்!

Author

Related posts

வேதாளக் கேள்வி

கோடை மழை

எளிதில்லை