எளிதில்லை

பசியோடு
அழுதுகொண்டிருக்கிறது
பெயர் தெரியா குழந்தை,
குடித்துவிட்டு மனைவியை அடித்துக்கொண்டிருக்கிறான் குடிகாரனொருவன்
வீட்டுப்பாடம்
எழுதிவிட்டேனென அம்மாவிடம் பாராட்டு
வாங்கிக்கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி,
உணவு கேட்டு வாசலில்
நின்றுகொண்டிருக்கும் முதிர்ந்த யாசகிக்கு
உணவோடு
குளிருக்கு போர்த்திக்கொள்ள உடையொன்றை
அளித்துக்கொண்டிருக்கிறாள் பெண்ணொருத்தி
வேலைக்குப் போன அப்பாவைக் கேட்டு
தொந்தரவு செய்துகொண்டிருக்கிறான்
ஒரு சிறுவன்
மேகத்திற்குள் மறைந்த நிலவு
வரும் வரை காத்திருந்து
வந்த பிறகு பார்த்துக்கொண்டு
வீட்டுக்குள் நுழைகிறார் ஒருவர்
இன்பமும் துன்பமும் கலந்த
இந்த இரவைக் கடப்பதொன்றும்
அத்தனை எளிதில்லை
நான் உண்பதற்காக வாங்கிவந்த உணவை
நாய்க்குட்டிக்கு அளித்துவிட்டு
வீடு திரும்புமெனக்கு.

Author

Related posts

உருதுக் கவிதை உலகு: 15 – இப்ராகீம் ஸவுக்

மருத்துவர் பக்கம் – 44: பக்கவாதமும் சிகிச்சையும்

நல்லாச்சி – 43