உயிர் வலி
உள்ளுக்குள் ஓர் வலி
நெடு நெடுவென வளர்ந்தபடி இருக்க
வெகு அருகாமையில் சந்தித்த விழிகள்
கூர்மையுடன் உயிர் கிழிக்கிறது
ஆழ்கிணறொன்றின்
மதிற்சுவர் மீதேறிப் பார்க்கிறேன்
பாசியும் வேர் நுனிகளுமுடைய
கலங்கிய நீரில் தெரிந்த நம் முகங்களின்
சிரிப்பைத் தேடித் தேடி
தொட்டுப் பார்க்க முயல்கிறேன்!
ஆழ்கிணற்றில் பாசி உண்ணும்
மீன்களின் வயிற்றுக்குள்
அச்சிரிப்பு ஒளிந்து கிடந்தது
பிறிதொரு காலத்தில் கிணற்று நீர் முழுவதும் வற்றியபோது
மீண்டும் பார்க்கிறேன்
மீன்களாய் ஒளிர்ந்த
நமது புன்னகைகளை..
*******
ஆயிரம் தட்டான்கள் இழுத்துச் செல்லும் நிலவு
நள்ளிரவில் கண் விழித்ததும்
பார்த்தேன் அந்தத் தட்டான்
அங்கிருக்கவில்லை
கனவு முழுவதும்
பறந்தலைந்த அது
விழிச்சிறைக்குள் வீழ்ந்துவிட்டது.
நீல வானில் ஒரு புறம்
வினோதக் காட்சியில்
ஆயிரம் தட்டான்கள் சேர்ந்து
முழுநிலவை இழுத்துச் சென்றது
அந்நிலவிறங்கிய கடலில்
ஆயிரமாயிரம் அலைகள் மீதேறி
ஒரு தேவதை பெரிய றெக்கை விரித்து
நித்தியம் பற்றி சில மணித்துளிகள்
பேசிப் பின் மின்னி மறைந்தது
அநித்தியம் பற்றி
இப்போதுதான் நினைக்கிறேன்
அடர்பாசிப் படிந்த மதில் சுவர்களில்
காலம் தேங்கி பின்னகர்கிறது