வலைப்பூ – 3

This entry is part 3 of 3 in the series வலைப்பூ

வெள்ளிக்கிழமை காலை. அர்ஜுன் சரியாகத் தூங்கவில்லை. கண்கள் சிவந்திருந்தன. முகச்சவரம் செய்யும்போதே கை லேசாக நடுங்கியது.

நேற்றிரவு சுசிக்குத் தெரியாமல் அந்த எண்ணிற்குப் பதில் அளிக்க முயன்றான். ஏதும் போகவில்லை. மீனாவின் பழைய எண்ணிற்கே செய்தி அனுப்பினான்:

“பிரிகேட் ரோட், டீ ஷாப் தானே. கட்டாயம் வருகிறேன்…”

இது தெரியாமல், சுசி வழக்கம் போலக் காலையில் அவளது மேசையில் தன் வேலையைச் செய்துகொண்டு இருந்தாள். மடிக்கணினி திறந்திருந்தது. அவள் ஒரு பயனர் அனுபவ ஆய்வாளர். மனிதர்கள் எந்த நேரங்களில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைக் கணிப்பது அவளது தொழில். அந்த விவரங்களே அவளது மென்பொருள் உருவாக்கத்திற்கான அடிப்படை.

ஆகவே, அர்ஜுனின் தற்போதைய பதற்றத்தைக் கணிப்பது அவ்வளவு கடினமாக இல்லை அவளுக்கு.

“மத்தியானம் ஒரு வாடிக்கையாளர் சந்திப்பு இருக்கு,” என்றான் அர்ஜுன். அவன் பேச்சில் இருந்த பதற்றத்தை அவள் கவனித்தாள்.

அவள் சிரித்துக்கொண்டாள்; அதை அவன் கவனிக்கவில்லை.

அவன் காலணியை மாட்டிக்கொண்டு ஏதோ சொன்னான். குரல் தொண்டைக்குள் சிக்கியது. சரிசெய்துகொண்டு “வரத் தாமதமாகும்,” என்றான்.

‘பிரிகேட் சாலையிலா?’ என்று வாய் வரை வந்ததைச் சுசி கேட்கவில்லை.

அமைதியாகத் தலையசைத்தாள்.

“சரி பார்த்துப் போ. கார் எடுத்துட்டுப் போ,” என்றாள்.

அறைக்கதவு சாத்தப்பட்டதும், சுசி தனது மடிக்கணினியின் திரையை மாற்றினாள். நேற்று இரவு அர்ஜுன் தூங்கிய பிறகு, சுசி அந்தப் பழைய வலைப்பூவுக்குள் நுழைந்திருந்தாள்.

அர்ஜுனின் கணிப்பொறியிலிருந்து அல்ல, அவளது சொந்தக் கணினியிலிருந்து. எங்கிருந்து உள்நுழைகிறோம் என்னும் இருப்பிடத்தை மறைக்கும் மென்பொருள் வழியாக.

அந்த வலைப்பூவின் மூலக்குறியீட்டை (Source Code) அலசியிருந்தாள். மீனா அவ்வளவு தொழில்நுட்ப அறிவு கொண்டவள் அல்ல. இருந்தும் வலைப்பூவில் யார் நுழைகிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு சாதாரண நிரலை மீனா பயன்படுத்தியிருந்தாள். பொதுவெளியில் கிடைக்கும் மிக எளிமையான கட்டமைப்பு என்பது சுசிக்குப் புரிந்தது.

சுசிக்கு அதைத் தகர்ப்பது ரொம்ப சுலபம். ஆனால் அவள் அதைச் செய்யவில்லை. மாறாக, மீனா எங்கிருந்து அந்த வலைப்பூவை இயக்குகிறாள் என்பதைத் தேடினாள். நேற்று மீனாவின் இணைய முகவரி ஹைதராபாத்தைக் காட்டியது. நேற்று இரவு வரை. ஆனால் இன்று அதிகாலை, அந்த முகவரி பெங்களூருவுக்கு மாறியிருந்தது. இந்திரா நகர் பகுதி.

மீனா நிஜமாகவே பெங்களூரு வந்துவிட்டாள். லேசாக அதிர்ந்தாள் சுசி. நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தாள். உண்மையில் அர்ஜுனுக்கு வந்த அந்தப் பழைய புகைப்படம், பெல்லந்தூர் தட்பவெப்பம் பற்றிய மின்னஞ்சல்… இது எதுவும் மீனா அனுப்பியதல்ல. மீனாவுக்கு அர்ஜுனின் மின்னஞ்சல் முகவரியோ, அவன் பெல்லந்தூரில் இருப்பதோ தெரிய நியாயமில்லை.

வலைப்பூவின் பதிவுகளில் அவள் இன்னும் பழைய அர்ஜுனைத்தான் தேடிக்கொண்டிருந்தாள். தேடி எடுத்து அந்தப் புகைப்படத்தை அர்ஜுனுக்கு அனுப்பியது சுசிதான்.

இணையம் வழியாக அவளால் உருவாக்கப்பட்ட போலி எண்களிலிருந்துதான் குறுஞ்செய்தியும் மின்னஞ்சலும் சென்றன.

ஏனென்றால் அர்ஜுன் அந்த வலைப்பூவைத் திறந்ததிலிருந்து ஒரு மாதிரி உறைந்து போயிருக்கிறான். குற்றவுணர்ச்சியும், பழைய காதலின் கற்பனையும் அவனைக் கொன்றுகொண்டிருக்கிறது.

இதை அப்படியே விட்டால், அந்தப் பாரம் அவர்கள் வாழ்க்கையைச் சிதைத்துவிடும்.

இந்தக் கற்பனைப் பிம்பத்தை உடைக்க ஒரே வழி, நிஜத்தை அவன் எதிர்கொள்வதுதான். மீனா பெங்களூருவில் இருக்கிறாள் என்ற செய்தி அர்ஜுனைச் செயல்பட வைக்கும். ஒருமுறை நேரில் சந்தித்தால், பதினேழு வருடங்கள் இருவரையும் எவ்வளவு மாற்றிவிட்டது என்பது அவனுக்குப் புரிய வாய்ப்பிருக்கிறது. முடங்கிக் கிடக்கும் பழைய காதல் என்பது வெறும் மாயை எனத் தெரியும். அர்ஜுன் அதிலிருந்து வெளியே வருவான்.

ஆனால் மீனாவோ அங்கே வரப்போவதில்லை. அதுவே அவள் மீதான முதல் கசப்பை உண்டாக்கும். சுசி திரையில் ஒரு Google Map வரைபடத்தைத் திறந்தாள். அர்ஜுனின் அலைபேசியின் இருப்பிடம் இப்போது கோரமங்களாவைத் தாண்டிப் பிரிகேட் சாலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது.

மாலை நான்கு மணி. அங்கே மீனா வரப்போவதில்லை என்பது அர்ஜுனுக்குத் தெரியாது. அர்ஜுன் ஒரு கற்பனைக்காகக் காத்திருக்கப் போகிறான். வெறுமையோடு திரும்புவான். அத்தோடு இந்த அத்தியாயம் முடியும்.

இப்படித்தான் சுசி திட்டமிட்டாள். ஆனால் திட்டமிட்டபடி எல்லாம் நடந்துவிடுகிறதா என்ன? சுசியின் அலைபேசி ஒலித்தது. திரையில் தெரியாத ஒரு புதிய எண்.

எடுத்தாள்.

“சுசிதானே? நான் மீனா பேசுறேன்.”

சதுரங்கப் பலகையில் சுசி சற்றும் எதிர்பாராத திசையிலிருந்து ஒரு காய் நகர்ந்திருந்தது.

(தொடரும்)

Series Navigation<< வலைப்பூ – 2

Author

Related posts

இனியவன் – 5 (இறுதிப்பகுதி)

ஏப்ரல் – 1

நெஞ்சக் கனல்