Home நாவல்அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.

அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.

அசுரவதம் - பறக்கும் அதிசயம் - பறவை அரசன்.

by Iyappan Krishnan
0 comments
This entry is part 19 of 19 in the series அசுரவதம்

​பஞ்சவடியின் ஆகாயம் அன்று ஏனோ ஒரு விசித்திரமான கோலத்தைக் கொண்டிருந்தது. மேற்கே சாயத் தொடங்கியிருந்த கதிரவன், தன் பொற்கரங்களால் மேகங்களைத் தழுவிக்கொண்டிருந்தாலும், அந்த வானம் தங்க முலாம் பூசியதாகத் தோன்றவில்லை. மாறாக, போர்க்களத்தில் சிந்த இருக்கும் வீரர்களின் உதிரத்தை அள்ளித் தெளித்தது போல, அடிவானம் நெடுகிலும் செந்நிறப் பிழம்பு பரவிக் கிடந்தது.

மேலும் அது, அந்திப் பொழுதில் இயற்கை காட்டும் வழக்கமான வர்ணஜாலம் அல்ல, விரைவில் நிகழப்போகும் ஒரு பெரும் கோரத்தின் கொடூர முகத்தை, இயற்கை அன்னை முன்கூட்டியே எச்சரிக்கும் குருதிச் சேற்றின் முன்னெச்செரிக்கையோ! என எண்ணத் தோன்றியது.

இன்னும் மாலை முழுமையடையாத அந்த வேளையிலேயே, திசையெங்கும் படர்ந்திருந்த அந்தச் செந்நிறமானது, வரப்போகும் பெரும் அழிவிற்கு வானம் சூட்டிய கோர மகுடம் போல இருந்தது. முன் மாலைப் பொழுதில் வானம் இப்படி தீயின் நாக்குகள் போல சிவந்திருந்தது, சீதையைத் தொடரும் துயரத்தை இராமனுக்கு எடுத்துச் சொல்லி, ‘இராமா.. சீதையைக் காப்பாற்று’ என்று சொல்வதைப் போல காட்சியளித்தது.

அச்சத்தில் உறைந்திருந்த சீதை சுயநினைவுக்கு வந்தாள். தலையை உதறி, இராவணன் பிடியில் இருந்த கூந்தலை விடுவித்துக் கொண்டாள் அலட்சியமாய். இராவணன் அச்செயலைத் தடுக்கவும் முயலவில்லை.

” மா பாதகா, நீ ஒரு ஆண்மகனா? என் நாயகனும் என் மைந்தனும் இல்லாச் சமயத்தில், தனிமையில் நிற்கும் பெண்ணிடம் வந்து வீரம் காட்டும் பேடி நீ. அதுவும் ஆயுதம் ஏதுமற்றப் பெண்ணிடம் வந்து உன் வீரத்தைக் காட்டுகிறாய்” என சீதை சினத்துடன் பேச, இராவணன் சிரித்தான்.

” ஆயுதம் இருந்திருந்தால்? ” என்றான் கேலி நிரம்பிய சிரிப்புடன் ” என்னைக் கொன்றுவிடுவாயோ?! பேதைப் பெண்ணே, நான் யாரென்று தெரியுமா? அகில உலகங்களும் கண்டு அஞ்சும் இராவணன்… இராவணேஸ்வரன்” என்று நகைத்தான்.

சீதையின் இதழ்களில் ஒரு கசப்பான புன்னகை அரும்பியது.

​”ஆயுதம் எதற்கு இராவணா? என் தந்தையின் அரண்மனையில், ஆயிரம் பேர் சுமக்க முடியாமல் திணறிய அந்தச் சிவதனுசை, நான் சிறுமியாக இருந்தபோது விளையாட்டாக இடது கையால் நகர்த்தி, அது இருந்த இடத்தை மெழுகித் துப்புரவு செய்தவள் நான். அன்று அந்த வில்லை நான் கையாண்ட விதம் உனக்குத் தெரிந்திருந்தால், இன்று ஒரு பேடியைப் போலத் தனிமையில் வந்து என்னைத் தீண்டத் துணிந்திருக்க மாட்டாய்!” என்றாள் சீதை.

இராவணனின் முகம் ஒரு கணம் சுருங்கியது. சீதை குறிப்பிட்ட அந்தச் சிவதனுசு, அவனது ஆறாத வடு. மிதிலையில் சீதைக்குச் சுயம்வரம் நடந்தபோது, உலகத்து மன்னர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்த ஜனகர், வேண்டுமென்றே இராவணனுக்கு அழைப்பு அனுப்பவில்லை.

“வில்லை வளைப்பவனுக்கு.. மகள்” என்ற பந்தயத்தில், ஒருவேளை இராவணன் வந்து தோற்றுப்போனால் அது அவனுக்கு அவமானம், அது போரில் முடியும், மேலும் எப்படியும் அவன் வருகை மிதிலைக்கும் சீதைக்கும் பெரும் துயரத்தைக் கொண்டுவரும் என்று கருதியே ஜனகர் அவனைப் புறக்கணித்திருந்தார்.

ஈரேழுலகமும் பயந்து வியக்கும் தன் வீரத்தைப் பாராமல் தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஜனகரின் மீதும், அந்த வில்லை ஒடித்த இராமன் மீதும் இருந்த தீராத வன்மம் இராவணனின் கண்களில் தீயாகத் தெறித்தது.

​”சிவதனுசை நீ நகர்த்தியிருக்கலாம் சீதா! ஆனால் அதை உடைத்த உன் இராமனின் வீரம் இப்போது எங்கே? உதவிக்கு இளையவன் இலக்குவன் எங்கே?” என்று கோரமாக நகைத்தான்.

சீதை அவனைப் பார்த்து இழிவாகச் சிரித்தாள்.

” இராவணா, நீ வீரம் என்பதன் அடிப்படை என்ன? என்று அறியாதவன் போலிருக்கிறது. அன்று என் நாயகன் கையில் இற்று வீழ்ந்த சிவதனுசு.. அது அவரின் வீரத்தை உலகிற்குச் சொன்னது. ஆனால் இன்று உன் செய்கை? சீச்சீ… ” என்று இகழ்ந்தாள்.

” ஆம்… பெரும் வீரம் தான்.. அதுவோ இற்றுப் போயிருந்த பழைய வில்.. அதை உடைத்ததும் இல்லாமல் பெரும் பெருமைப் பேச்சு.. இதுதான் மகாக் கேவலம். மேலும் தாடகை என்னும் பெண்ணைக் கொன்ற பேடி அவன்” என்றான் இராவணன் கண்களில் சினம் கொப்பளிக்க..

” ஓ அப்படியா, இராவணா கேள், உன் உறவினர்கள் பதினாறாயிரம் பேரின் தலைகளைக் குவித்து வைத்திருக்கும் கோபுரத்தை இந்த காட்டில் நீ கண்டாயா? கர தூஷணர்களோடு அந்த மொத்த அரக்கர் படையையும் ஒரு நாழிகையில் அழித்தவர் என் நாயகன். நீயோ தனித்திருக்கும் பெண்ணிடம் வீரம் பேசி நிற்கிறாய்.

உன் வீரம் நானறியாததா? நீ கோழையாகித் தோற்றாயே .. கார்த்தவீரியார்சுனன், அவனையே வென்ற பரசுராமனின் கர்வம் அடக்கி, அவனையும் வென்றவன் என் கணவன்.. அதை நினைவில் கொள்..

அற்பனே, உனக்கு நான் மன்னிப்பு அளிக்கிறேன்.. என் கணவரும் இலக்குவனும் வருவதற்குள் இந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடு. ” என்று புலியெனச் சீறினாள் சீதை.

அவள் மீண்டும் குடிலுக்குள் சென்றுவிட்டாள். இராவணன் ஒரு கணம் அவளின் மன தைரியத்தைக் கண்டு அயர்ந்தான். அதே நேரம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் இராம இலக்குவர்கள் திரும்பி வந்து போரைத் தொடங்கும் சாத்தியத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்தான்.

” மேலும் உனக்குத் தெரிந்த ஒரு ரகசியத்தைச் சொல்லவா இராவணா?” என்றாள் சீதை, குடிலின் படியில் அமர்ந்து, அவனை இழிவாகப் பார்த்தபடி. அந்தப் பார்வை இராவணனை மேலும் மேலும் கோபத்தில் தள்ளியது.

” என்ன ரகசியம்… ” என்று இரைந்தான் இராவணன்.

” நளகூபன்… நினைவிருக்கிறதா ” என்றாள் சீதை.

சீதையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இராவணனின் அகங்காரத்தில் அமிலமாய் விழுந்தன.

பன்னெடுங்காலமாகத் தான் சேமித்து வைத்திருந்த வெற்றிகளின் கர்வத்தை, இந்தப் பெண் ஒரு நொடியில் கிழித்து எறிவதைக் கண்டு அவனது பத்துத் தலைகளும் சினத்தில் அதிரத் தொடங்கின.

​”நளகூபன்… நினைவிருக்கிறதா இராவணா?” என்று சீதை கேட்ட அந்த வினா, அவனது நரம்புகளை உறையச் செய்தது.

​இராவணனின் முகம் கறுத்தது. குபேரனின் மகனான நளகூபனின் மனைவி ரம்பையைத் தான் பலாத்காரம் செய்தபோது, நளகூபன் இட்ட அந்தச் சாபம் அவனது காதுகளில் இப்போதும் இடியாய் ஒலித்தது.

“இனி எந்தப் பெண்ணையாவது அவளது சம்மதமின்றி நீ தீண்டினால், உனது தலைகள் நூறு சுக்கலாகச் சிதறிப்போகும்!” அந்தச் சாபமே சீதையைத் தொடுவதற்கு அவனுக்குப் பெரும் தடையாக இருந்தது.

​”நளகூபனின் சாபம் உன்னை ஒரு பேடியாக்கிக் குடிலுக்கு வெளியே நிறுத்தி வைத்திருக்கிறது. உன் வீரம் என்பது அந்தச் சாபத்திற்கு அஞ்சி நடுங்கும் ஒரு கோழையின் தந்திரம் மட்டுமே!” என்று சீதை எள்ளி நகையாடினாள்.

​இராவணனின் பொறுமை எல்லை கடந்தது. “சாபங்கள் என்னைச் சிதைக்கலாம் சீதா, ஆனால் உன்னை என்னுடன் தூக்கிச் செல்வதைத் தடுக்க முடியாது! அந்தப் பழைய சாபம் இருக்கட்டும், இன்று யாரால் என்னை தடுக்க இயலும். முடிந்தால் தடுக்கட்டும்” என்று கர்ஜித்தபடி தன் கையை மேலே உயர்த்தினான்.

​சட்டென்று ஆகாயத்தில் மேகக்கூட்டங்கள் சிதறின. சூரியனை மறைக்கும் அளவு பிரம்மாண்டமான புஷ்பக விமானம் மின்னல் வேகத்தில் இறங்கியது. அதன் நிழல் பஞ்சவடியின் அந்தச் செந்நிற மண்ணை இருளாக்கியது..

மேகக் கூட்டங்களைக் கிழித்துக் கொண்டு அது கீழே இறங்கி வரும்போது, அந்தி நேரத்துச் சூரியன் கடலில் விழுந்து தத்தளிப்பதைப் போலத் தங்கத்தின் ஒளி மின்னியது. அதன் மேல்பரப்பில் பதிக்கப்பட்டிருந்த வைடூரியங்கள், நீல வானத்தின் நீலத்தை உள்வாங்கிக் கொண்டு, பார்ப்பவர் கண்களைப் பறிக்கும் ஒளியைக் கக்கின. ஒரு பேரழகியின் மேனியில் படர்ந்திருக்கும் தங்க ஆபரணங்களைப் போல, அந்த விமானத்தின் தூண்கள் செதுக்கப்பட்டிருந்தன.

விமானத்தின் சாளரங்கள் ஒவ்வொன்றும் முத்தாரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவற்றில் செதுக்கப்பட்டிருந்த அன்னப் பறவைகள், உண்மையான பறவைகளோ என்று பிரமிக்க வைக்கும் வகையில் சிறகுகளை விரித்திருந்தன. அந்தப் பறவைகளின் கண்களில் பதிக்கப்பட்டிருந்த மாணிக்கக் கற்கள், ராவணனின் ஆக்ரோஷமான கண்களைப் பிரதிபலிப்பது போலச் சிவந்து காட்சியளித்தன. மொத்தத்தில் அது பறக்கும் அதிசய இயந்திரமாய் இராவணன் முன் இறங்கியது.

இராவணன் சிரித்தான். தன் இரு கைகளையும் கொண்டு அந்த குடிலைத் தூக்கினான். பெரும் மண்ணதிர்வு ஏற்பட்டது போல பூமி குலுங்கியது. சீதை நின்றிருந்த அந்தப் புனிதமான குடிலை, அதன் அடியோடு சேர்த்துத் தனது இருபது கைகளால் பெயர்த்து எடுத்தான்.

அதே நேரத்தில் தன்னை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்த இலக்குவனைக் கண்ட இராமனின் கண்கள் வியப்பில் ஆழ்ந்தன.

“உன்னை யார் இங்கே வரச் சொன்னது?” என்றான் இராமன். இலக்குவனின் பதிலைக் கேட்ட இராமனுக்கு உலகமே சுழன்றது போல இருந்தது.

“தம்பி, சூழ்ச்சியின் வலை நன்றாக நம்மைச் சுற்றிப் பிணைத்து விட்டது..” என்றான் இராமன் மிகுந்த கவலையுடன்.

பஞ்சவடியில் வேரோடு பிடுங்கப்பட்ட மரம் போல, குடில் அந்தரத்தில் எழுந்தது. அந்தக் குடிலை புஷ்பக விமானத்தில் வைத்து, குடிலோடு சேர்த்துச் சீதையைப் புஷ்பக விமானத்தின் மீது ஏற்றி, ஆகாய மார்க்கமாகத் தெற்கு நோக்கி விரைந்தான்.

திடீரென்று இராவணனின் எதிரே அந்த விமானத்தையே மூடும் அளவிற்குத் தன் சிறகை விரித்துக் கொண்டு நின்றான் பறவை வீரன்..

அவன்.. சடாயு, வானில் பறக்கும் அதிசயம்.

Series Navigation<< அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.

Author

You may also like

Leave a Comment