
கொடகுவைச் சேர்ந்த எழுத்தாளர் காயப்பண்டா சாந்தி கே. அப்பண்ணா, 2017-ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதைப்பெற்றவர். சாந்தி அப்பண்ணா தனது ‘மனசு அபிசாரிகை’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த உயரிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே ‘சந்தா புத்தக விருது’ மற்றும் ‘கொடகின கௌரம்மா விருது’ ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘பாஹுகாலு’ என்ற சிறுகதை, இவருக்கு முதல் விருதைப் பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது
***********************************************
கன்னடத்தில்: சாந்தி கே அப்பண்ணா தமிழில்: கே. நல்லதம்பி
சுமார் ஆறு மாதங்களாக அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் எப்போதும், ஏதாவது ஒரு ஓவியத்தை அவன் வரைந்து கொண்டிருப்பதை மட்டும்தான் அவள் பார்த்திருப்பது. ஓவியங்களைப் பார்த்துப் பார்த்து அவன் பிடித்துப்போனான் என்று சொல்ல முடியாது. அவளுக்கு நினைவிருப்பது போல் முதல் முதலாக அவன் ஓவியத்தைப் பார்த்த போதே அவளுக்கு அது விருப்பமாகி அதைத் திரும்பத் திரும்பப் பார்க்கிறாள்.
அது குறைவான மரங்கள் இருந்த ஒற்றையடிப் பாதையின் ஓவியம், வழிநெடுகச் சிந்திய முழுநிலா.
அதற்கு அவன் கொடுத்த தலைப்பு ‘சம் திங்க்ஸ் ஆர் நெவர் செட் பட் ஹெர்ட்”
அந்த முழுநிலா, அங்கே சிந்திக் கிடக்கும் மௌனம், அந்த வெறிச்சோடிய தெருமுனையில் காத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன். அது அடக்கி வைத்திருக்கும் விசும்பல் அந்த நொடி அந்தத் தெருமுனையில் நின்று பார்த்துக் கொண்டிருப்பது தான்தான் என்று தோன்றிவிட்டது. மறுநொடியே அவள் காமெண்ட் செய்தாள். ‘யே ராத்தே… யே மௌசம்… ‘
அதற்குப் பொருத்தமாக மறுவாரமே அவன் பௌர்ணமி ஒளியில் பொங்கும் கடலின் ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கும் வீடியோவைப் பதிவு செய்தான், பின்னணியில் அதே பாட்டு, ‘யே ராத்தே… யே மௌசம்…’ அவள் நெஞ்சம் ஒரு முறை தடுமாறிப் பிறகு எழுதியது,
காமெண்ட் செய்திருந்தாள்… ஃபிதா!
அதன் பிறகு அவன் வரையும் ஓவியங்கள், எடுக்கும் படங்கள், பின்னணிக்குப் பொருந்தும் பாட்டுக்கள், வெறுமனே பகிரும் ஏதோ ஒரு பாட்டின் வரிகள் எல்லாம் தனக்காகத்தான் என்று தோன்றும். அதற்குப் பொருத்தமாக அவள் எதையாவது பதிவு செய்வாள். இருவரும் மற்றவருடைய போஸ்டிற்கு காமெண்ட் செய்ய மாட்டார்கள். ஆனால் அது எதற்கோ அவன் பகிரும் போஸ்ட்கள் தனக்குத்தான் என்று அவளுக்குத் தோன்றும். அதுபோலவே, தான் பதிவு செய்யும் போஸ்ட்களுக்கு அவன் லைக் போடாவிட்டாலும் அவன் அதைப் பார்க்கிறான் என்றும், அதற்கு தன் போஸ்ட் வழியாக எதிர்வினை செய்கிறான் என்றும் தோன்றும். ஒருமுறை மழை பெய்து ஓய்ந்த பின்னான ஒரு பரந்த வெட்டவெளியின் படத்தைப் பகிர்ந்திருந்தான். அதைப் பார்த்ததும் அவள் நெஞ்சம் திக்கென்றது. எந்தக் காரணமும் இல்லாமல் தானும் அப்படி ஒருநாள் நிம்மதியாகப் பரந்து கிடக்க வேண்டுமென்று தோன்றியது. உண்மையான நிம்மதி மழையால் அல்ல, ஈர்த்துக்கொள்ளும் பூமியால் அல்ல, அல்லது அவ்விரண்டின் பதத்தில் அல்ல? அப்படி அவள் அந்த ஓவியத்தைப் பார்த்து யோசித்தாள். இதுபோன்ற சிந்தனைகள் முன்பு எப்போதும் வந்ததில்லை. வரும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். ஆனால், இப்போது இந்த நடுவயதில், பெயர் தெரியாத ஒருவனுக்கு அலைபாயும் மனக்கடலை எப்படிச் சமாளிப்பதென்பது அவளுக்குத் தெரியவில்லை. இளமையில் தனக்குள் எழும் காரணமற்ற சிலிர்ப்பிற்கும், ரோமாஞ்சனத்திற்கும், மெல்லிய அதிர்விற்கும் இப்போது நடுவயதின் உணர்ச்சிப் பெருக்குக்கும் எந்த வேறுபாடும் இருக்கவில்லை! அப்படி என்றால் எதற்கு வயதாகி இருக்கிறது? தேகத்திற்கு மட்டுமா? மனம் பக்குவப்படுகிறது என்கிறார்களே அது என்ன? தெரிவுகளை ஒதுக்கி வைத்து அதிகத் தகராறு செய்யாமல் இருப்பதை ஏற்றுக்கொண்டு எப்படியாவது வாழ்ந்து விடுவதா? அல்லது வேறு வழி தெரியாமல், உணர்வற்று உள்ளுக்குளேயே வெந்து, வெந்த வாடையை வெளிக்காட்டாமல் காத்துக் கொண்டு, அப்படி வெந்து போவதே வாழ்க்கையில் போதுமானது என்று பொய்யாக நம்பிவிடுவதா? அல்லது உண்மையாகவே உணர்வற்று இருந்து விடுவதா?
திருமணம் செய்துகொடுத்தபோது அவளுக்குத் தெரிவு செய்யும் வாய்ப்பிருக்கவில்லை. அப்படிப் பார்க்கப்போனால் இப்போதும் கிடையாது. எந்தக் குறையுமில்லாத நிம்மதியான வாழ்க்கை. தன்னைச் சுற்றி அன்பான குடும்பம். அழகான குழந்தைகள், சமுதாய விதிகளுக்கு எல்லா வகையிலும் பொருந்திப் போகும் மாதிரியான வாழ்க்கை. ஆனால் ஏதோ சொல்லத் தெரியாத சங்கடம் நெஞ்சைப் பிழிகிறது என்பதைத் தவிர அவளுக்கு பெரிய குறையொன்றுமில்லை. தினசரி சமையல், எந்தச் சேலை, எந்த நகை, கணவன், பிள்ளைகள், வீட்டிற்கு எதை வாங்க வேண்டும், எந்தச்செடியை நடுவது, எந்தப் பூவை முடிவது இதுபோன்ற சின்னச்சின்ன மகத்துவங்கள் கொண்ட விஷயங்கள். பல சமயம் எதையும் யோசிக்காமல் இவற்றை எல்லாம் செய்ததும் உண்டு. உள்ளுணர்வில் எல்லாம் இயங்குகிறது என்பது போல். ஆனால் ஆழ்மனக் குளம் கலங்கிச் சிறு சலனத்தை உண்டு செய்வது போல ஏதோ ஒரு உணர்வு. அது என்னவென்று மட்டும் தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் அதற்கும் மேலே ஏதோ இருக்கிறது என்று தோன்றும் ஆனால் அது என்னவென்று புரியாது. ஏதோ வருத்தம், ஏதோ துயரம் வாட்டும்.
இளம் வயதில், அது போன்ற ஒரு நாளில் ஓவியம் வரைய வேண்டுமென்று தீவிரமாகத் தோன்றி, தன்னால் வரைய முடியும் என்ற ஓவியங்களை மாலையே யூடியூப், முகநூல்களில் தேடத் தொடங்கினாள். ஓவியங்களைத் தேடியது என்னமோ உண்மைதான், ஆனால் கிடைத்தது மட்டும் ஓவியன். அப்படிக் கிடைத்தவனால் இப்போது தனக்குள் நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்திற்கு எந்தப் பெயரையும் அவளால் சூட்டமுடியவில்லை. அவன் ஓவியங்கள் எதற்காக ஈர்க்கின்றன. உண்மையில் கவருவது அவனா? ஓவியங்களா? அவன் கைவிரல்களில் படிந்திருக்கும் வண்ணங்களை தன் கன்னத்தில் பூசிக் கொள்ளவேண்டுமென்று தோன்றுகிறது? அவன் முன்னால் இருக்கும் கேன்வாசைப் போல் தான் எதற்கு உடம்பைத் திறந்து வைக்கக்கூடாது என்று தோன்றுகிறது. அவன் யாரோ தெரியாது. அவன் பெயரைக் கூட ஃப்ரொஃபைலில் போடவில்லை. முகத்தைக் காட்டியவனும் அல்ல. ஆர்ட் விலேஜ் என்று பெயர். ஆனாலும் எங்கேயும் ஊர் பெயரைக் கூடக் குறிக்கவில்லை. அவ்வப்போது பகிரும் கடைப் பலகைகளை விரிந்த கண்களுடன் பார்த்திருக்கிறாள். ஒருமுறை தார்வாட், ஒருமுறை பெங்களூர், ஒருமுறை சிர்சி மற்றொரு முறை ஷிவமொக்கா.. சரியான ஊர் சுற்றியாக இருக்க வேண்டும்.
இனி அவன் ஓவியங்கள்… துயரத்தை அதிகரிக்கச் செய்யும் வெற்றுக் கடற்கரை, நதிக்கரையில் மொட்டை மரம், வழி காத்துக் கொண்டிருக்கும் தனிப் பறவை, உடைந்த சிப்பி, நகரத்தை எரிக்கும் தீ, பாழடைந்த அரண்மனை, காட்டில் வீணாக சிந்திச் சிதறும் முழுநிலா… இது போன்றவைகள்தான்! இடையில் புத்தன், கிருஷ்ணன், ராதைகள் வந்து போனாலும் அவள் கண்களுக்கு மட்டும் வருத்தம் கலந்த அமைதியான புன்னகையொன்று புத்தனின் உதட்டோரத்தில் தெரியும். ஏதோ துயரத்தில் இருக்கிறான் பையன் என்று தோன்றும். பையனா, நடுவயதுக்காரனா, முதியவனா யாருக்குத் தெரியும். கை விரல் கோடுகளும், இயக்கமும் அவனுக்கு இன்னும் முப்பது கூட இருக்காது என்று சொல்கின்றன. அவனைப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. எதற்கென்று சொல்லத் தெரியவில்லை. இப்படி அழகாக ஓவியம் வரையும் அவன் எப்படி இருக்கிறான் என்று பார்க்கவேண்டுமென்று அவள் தன் மனதிற்கு ஆறுதல் சொல்வாள். அது அவ்வளவு தானா, இதொரு ஆர்வம் மட்டுமா என்று அடிக்கடி கேட்டுக்கொண்டாலும், அது அப்படியல்ல வேறு ஏதோ இருக்கிறது என்று அவளுக்குத் தோன்றும்.
அப்படிப் பார்க்கப் போனால் ஓவியம் வரையும் ஆசையில் வெப்சைட்டை அலசும் போது எத்தனை கலைஞர்களின் ஓவியங்களைப் பார்த்ததிருக்கிறாள். எத்தனை ஓவியங்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்திருக்கிறாள். எவ்வளவு யூடியூப் லிங்குகளை சேவ் செய்து கொண்டிருக்கிறாள். அப்படி இருக்க இவனுடையது மட்டும் எதற்குச் சிறப்பாகத் தோன்றுகிறது? ஒருவேளை நான் ஓவியம் வரைந்தால் அவன் தீட்டும் ஓவியங்களைப் போலவே வரைவேனோ? ஒற்றைப் பறவை, யார் வரவிற்கோ காத்திருக்கும் ஒற்றையடிப் பாதை, மழை பேய்ந்து நனைந்த பூமி, தரையில் விழுந்த பூ இது போன்றவற்றை ஈர்ப்பது அவன் ஓவியங்களா? அல்லது அந்த ஓவியங்களுடன் என்னை இணைத்துக்கொள்ளும் உணர்வா? அதனுடன் இணைய என் உண்மைநிலை அதுபோல் இருக்கிறதா? உண்மை சொல்ல வேண்டுமென்றால் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, பர்ஃபெக்ட்! அப்படி இருந்தாலும் என்ன அது புரியாத தனிமை? செய்ய எதுவுமில்லை என்று தோன்றும் போது எதற்கு அந்தப் பரிதவிப்பு? வெறுமை?
அவள் இப்போது மெல்ல மெல்ல படியிறங்கத் தொடங்கினாள். சன்னலைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தவளுக்கு சுகம் தரும் இதமான குளிர்காற்றின் தொடுதல் போல் இருந்தது. அதில் ஒரு உன்மத்தமான பரிமளம் வீசியது. இதமான இசை இருந்தது. ஒரு அழைப்பு இருந்தது. அவள் இப்போது காற்றில் மிதக்க விரும்பினாள், கரைந்து போக விரும்பினாள்.
முதல் முறையாக விரும்பி ரிங்டோன் மாற்றினாள். ‘காணாத கடலிற்கு மனம் அலைபாய்கிறது…’
இதற்குப் பொருளில்லை. அவளுக்கு அது தெரியும். பொருள் தேடப் போகக்கூடாது மனம் அப்படிச் சொன்னது. இவை வெறுமனே பித்துக்குளித்தனம், விவேகம் எச்சரித்தது. ‘மண்ணாங்கட்டி! இப்படிப் பிறந்து அப்படி மடிந்து போகவேண்டுமா? என்ன பெரிதாக நடந்து விட்டது? அழகாக ஓவியம் தீட்டுகிறான். அவன் ஓவியங்கள் பிடிக்கின்றன. அப்படி அழகாக ஓவியம் வரைபவனைப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஒரு ஆர்வம், ஒரு சிறு ஏக்கம், மற்றபடி எதுவுமில்லை, ஒரு பேன் கர்ல் மொமெண்ட் அடையவேண்டும். மனம் கேட்டது.
‘அவ்வளவுதானா?’
‘அவ்வளவுதான் அவ்வளவேதான்..’ நெஞ்சம் கதறியது.
அதன் பிறகு அதிசயமான அமைதி.
அன்றொரு இரவு கணவனின் மார்பில் சாய்ந்து காலை வளைத்துப் போட்டு அருகில் இழுத்துக்கொண்டு கேட்டாள்.
“ஊருக்குப் போய் அம்மாவைப் பார்த்து வரவா?”
“போயிட்டு வா, எப்போது போகிறாய்?”
“நாளை?”
“இப்போது அப்புவுக்குத் தேர்வு நடக்கிறது, முடித்துக் கொண்டு போகலாமே?”
‘அத்தை இருக்கிறார்தானே. ஒரே நாளில் போய்த் திரும்பி விடுகிறேன். அம்மாவைப் பார்த்தே ஆகவேண்டும். கனவில் உடல்நிலை சரியில்லை”
“ஃபோன் செய்து பேசினாய்தானே? நலமாக இருக்கிறார்தானே. இதற்கெல்லாம் கவலைப் படுவார்களா?”
“இல்லை, நான் போய்த்தான் ஆகவேண்டும் பிளீஸ்” அவள் குரல் தழுதழுத்தது.
“இத்தனை கெஞ்சத் தேவையில்லை. தேர்வு நேரத்தில் போகிறாய் என்றால் ஏதோ மனதில் தீவிரமாகத் தோன்றி இருக்க வேண்டும். நல்லபடியாகப் போய் வா” கணவன் அவளைத் தழுவிக்கொண்டான்.
அவனைத் தழுவிக் கொஞ்சும்போது இத்தனை நாள் அசிங்கமென்று தோன்றிய அவன் தொப்பை இன்று எந்தத் தடங்கலையும் ஏற்படுத்தவில்லை என்பதை அவள் கவனித்தாள். அவன் மார்பில், முகத்தைப் புதைத்து மூக்கை உரசும்போது வேறொரு மணம் மிதந்ததுபோல்… வெகு நாட்களுக்குப் பிறகு அவள் பொய்யாக முனங்கினாள், உண்மையாக உச்சத்தை சென்றடைந்து வந்தாள். உதட்டில் தளும்பிய சிரிப்பிற்கு எந்த அர்த்தத்தையும் தேடாமல் வெட்கிப் படுத்தாள்.
மனதில் மீண்டும் அதிசயமான அமைதி.
ஆன்மாக்கள் உரையாடுகின்றன.
இங்கே நான் பொங்கினால் அங்கே அவன் தளும்புகிறான். இங்கே நான் வெட்கப்பட்டால் அங்கே அவன் சிவக்கிறான். இங்கே நான் வருந்தினால் அங்கே அவன் ஓவியம் தீட்டுகிறான். அவன் ஓவியத்தில் நான் இருக்கிறேன், அவன் இருக்கிறான். இல்லை, இல்லை, நாங்கள் இருவரும் கிடையாது, எங்கள் ஆன்மாக்கள் இருக்கின்றன. இதுதான் முதல் முறை ஓவியக் கண்காட்சி நடத்துவது, அப்படி அவன் குறித்திருந்தான். எல்லாம் விட்டு மைசூருக்கு எதற்கு வருகிறான், நாங்கள் இருவரும் இதுதான் முதல் முறையாகப் பார்க்க இருக்கிறோம். அவனை அடையாளம் காண்பது எளிது, அவன் ஓவியன், அவன் என்னை எப்படி அடையாளம் காண்பான்? நானும் புரொஃபைலில் என் படத்தைப் போடவில்லை, மயிலிறகின் ஓவியம் போட்டிருக்கிறேன். பெயர் கூட என் விருப்பப்படி மயிலிறகு என்றுதான் வைத்திருக்கிறேன். ஆன்மாக்கள் உரையாடுவது உண்மை என்றால் நான் அவனுக்கு அடையாளம் தெரிவேன், நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் இதற்கு முன் அறிந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. அதுதான் உண்மை. அது போதும்.
அமைதியான உறக்கம்.
“உங்களுக்கு வருத்தமில்லைதானே? எதற்கோ போகவேண்டுமென்று தோன்றுகிறது.”
“போடி பைத்தியம், புறப்பட்டு நின்ற பிறகு? பேசாமல் போய் வா”
“அத்தையிடம் எல்லாம் சொல்லியிருக்கிறேன், இரண்டு நாளைக்கு இரண்டு வகைக் கூட்டு, சாம்பார் ஃப்ரிட்ஜில் இருக்கிறது. சாரி”
‘அதெல்லாம் எங்களால் செய்துகொள்ள முடியாதா? இதுதான் நீ முதல் முறையாக ஊருக்குப் போவது?”
‘அப்படியல்ல…, உங்களை நான் மிகவும் காதலிக்கிறேன்… தேங்க்யு” அவள் கணவனின் கையப் பற்றிக்கொண்டு அழுத்திப் பிடித்து மெல்லக் குசுகுசுத்தாள்.
“ஏ, இதென்னா புதுசா?” கணவன் சிரித்தான்.
அவள் கண்கள் பனித்தன.
அவன் சிரிப்பு மிகவும் இதமாக இருக்கிறதே. ச்சே என்ன வாழ்க்கை இது? இந்த விதிகள் எல்லாம் எதற்கு உருவாயின? காரணம் இல்லாமல் துடிக்கும் இந்த ஈர்ப்பிற்கு எந்தப் பெயர் வைத்துக் களங்கப்படுத்துவது? வெறுமனே, எந்தக் காரணமும் இல்லாமல் மனம் எதற்கு யாரையோ விரும்புகிறது? தன்னை அக்கறையுடன் ஆதரிக்கும், அன்பு செலுத்தும், சகல வசதிகளால் நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருக்கும் கணவன் இருக்கும் போது, உயிர், இரத்தம், சதையைப் பகிர்ந்துகொண்ட கண்மணிகள்போல் குழந்தைகள் இருக்கும் போது… இவை எல்லாவற்றையும் விட வேறு ஏதோ ஒன்றிருக்கிறது. அது இதல்ல, இங்கல்ல, வேறெங்கோ இருக்கிறது. அழைக்கிறது என்று தோன்றும் போது அப்படி எழுந்து போய் விடுவது போல் இருக்கிறதா இந்த வாழ்க்கை? ஆயிரமாயிரம் டிஸ்டார்ட்ஷன்கள் வாழ்க்கை முழுதும் வரும். மிகவும் அழகாகச் சிங்காரித்துக்கொண்டு, சைகை செய்து அழைக்கும் ஆனால் அவற்றைக் கடந்து, விவேகத்துடன் இலக்கை நோக்கிப் போகவேண்டும். எது அந்த இலக்கு? உண்மையாக எங்கே இருக்கிறது? வாழ்க்கைப் பயணத்தை இலக்கை அடைவதற்காக வீணடிக்க வேண்டுமா? அப்படியொரு பயனற்ற இலக்கை அடைவதால் என்ன பலன்?
நான் காற்றாக வேண்டும். எல்லாவற்றையும் தொடக்கூடிய, எங்கும் நிற்காத, யார் பிடியிலும் சிக்காத காற்றைப் போல் நான் வாழவேண்டும். நானொரு சுதந்திர ஆன்மா. எனக்கு எல்லை போட்டு யாரும் தடுக்க முடியாது. ஆனால் என் உடல், பகுத்தறிவு, மதிப்பு, மரியாதை, மானம், ஒழுக்கம் என்ற இரும்புக் கூட்டில் அடைக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த ஆன்மா அந்தக் கம்பி இடுக்குகளிலிருந்து தப்பித்துக்கொண்டு வெளியே பறக்கத் தவித்துக் கொண்டேயிருக்கிறது. பறக்கும்… பறந்தே பறக்கும். திரும்பி வரவேண்டிய சில கட்டாயங்களுக்காகத் திரும்பியும் வரும்.
நான் வருவேன். நான் அப்படி எங்கே போய்விடப் போகிறேன். அப்படிப் போவது என் நோக்கமல்ல.
வேறொன்றுமில்லை, ஒருமுறை பார்க்க வேண்டும். பார்த்து வருவேன், மீண்டும் கூடு திரும்பி விடுவேன். இந்த வாழ்க்கைக்கு அது போதும்.
பேருந்துப் பயணம் முழுதும் மனம் பேசிக்கொண்டே இருந்தது. சன்னலோரம் உட்கார்ந்தவளுக்கு, காற்றில் பறக்கும் முன் சுருள், இறுகும் மார்பு, கண்களில் எரியும் ஒளி, மிகவும் புதிதாகத் தோன்றி இதமாக இருந்தது.
“என்னம்மா திடீரென்று?”
“உன்னைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது, வரக்கூடாதா?”
“அப்புக்கு தேர்வு இருக்கிறதே?”
“அம்மா, பிளீஸ்”
“சிறிது நேரத்தில் புறப்படுகிறேன் என்கிறாயே?”
“கல்பனாவைப் பார்க்க வேண்டும், பார்த்து விட்டு வருகிறேன்.”
“உண்மையாக யாரைப் பார்க்க வேண்டும்?”
“அம்மா, பிளீஸ், எதையாவது சொல்ல வேண்டாம். உன் மயில் நிறச் சேலையைக் கொடு. அதை உடுத்திக் கொள்ளவேண்டுமென்று தோன்றுகிறது”
அம்மாக்களுக்கு நாம் சொல்லாமலே எல்லாம் தெரிகின்றன. தொப்புள் கொடி உறவென்றால் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
‘அம்மா விரைவில் திரும்பிவிடுவேன்”
“கவனமாப் போயிட்டு வா”
பாதுகாக்க வேண்டிய பலவற்றைப் பெண்ணின் தோளிலேற்றி அவள் சுமையை அதிகரித்திருக்கிறது இந்த சமுதாயம்! அவற்றை உதறித் தள்ளி லகுவாகும் நாள் எப்போது வரலாம்?
ஆர்ட் விலேஜ். வெல்கம்ஸ் யு.
பலகை மிகக் கலை நயமாக இருக்கிறதே. படபடக்கும் நெஞ்சத்தையும், மயில் வண்ணத்து அழகான சேலையையும் சமாளித்துக்கொண்டு அவள் கியாலரி வாசலை நெருங்கினாள். அவள் உள்ளே நுழையும் போது வலது பக்கத்திலிருந்து ஒளிக்கதிரொன்று அவள் கன்னத்தை அதிகமாக ஒளிரச்செய்தது. கன்னங்களில் சிவப்புத் தெறித்துக் கண்களில் மின்னல் மின்னியது. ‘அப்பா, கடவுளே. அவனை இப்போது பார்த்தாக வேண்டுமா? பார்ப்பதுடன் எல்லாம் முடிந்து விடுமா? இந்தக் கனவுடன் வாழ்வதே மிகவும் இனிமையாக இருக்கிறது. ஒருவேளை அவன் என்னை அடையாளம் கண்டு கொள்ளாவிட்டால் நான் அதை எப்படித் தாங்கிக்கொள்வேன்? சரி, அடையாளம் கண்டுகொள்ளவில்லை, நானாகப் போய் எப்படி அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும்? சரி, அடையாளம் கண்டுகொண்டான், வெறுமனே சிரித்து விட்டு பார்வையாளர்களில் நானும் ஒருத்தி என்று சும்மா இருந்து விட்டால்? அல்லது இப்படி அவனுக்காக, அவனுக்காக மட்டுமே பலர் வந்திருந்தால், உண்மையாக அந்த ஆன்மாக்கள் உரையாடுமா? எதற்கு இந்தக் குழப்பம்? திடீரென்று இந்த நேரத்தில்? கற்பனையில் பெரும் சுகம் உண்மையை விடவும் மிகத் தீவிரமாக இருக்கும், துயரமும் கூட. அய்யோ, எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லைதானே? ஆனால், நான் எதற்கு வந்தேன்? பார்க்க.. வெறுமனே பார்த்து விட்டுப் போக. பார்த்து விட்டுப் போக மட்டுமா… அவ்வளவுதானா?
அவள் தனக்குள் அலறினாள். கண்கள் இருண்டு சோர்ந்து சரிந்தாள்.
மயிலொன்று அம்பு தாக்கி விழுந்தது போல், இயலாமையில் காயப்பட்டவள் போல்… எந்தத் தெம்பும் அந்த நொடியில் அங்கிருந்து தன்னை எழுப்ப முடியாது என்பது போல், எழ முடியாதோ என்பது போல் சரிந்தாள், அவள் நெற்றிக் கதவில் மோதி, இரத்தம் பீய்ச்சியது. யார் யாரோ வந்தார்கள், கையை நெற்றியில் அழுத்தி வைத்தார்கள், தண்ணீர் தெளித்தார்கள், “மேடம்… மேடம்.. . மேடம்…”
“வேறெதுவும் இல்லை, உங்கள் விரல்களை ஒருமுறை தொட வேண்டும். உங்களைப் பார்க்க வேண்டும். அதற்காக மட்டுமே வந்தேன். இந்த ஓவியங்கள் எல்லாம் என்னுடையவை. என் மனதின் பிரதிபலிப்பை நீங்கள் கவர்ந்து வரைகிறீர்களோ என்று தோன்றுகிறது. எதற்கு அப்படித் தோன்றுகிறது என்பது தெரியவில்லை.”
“ஆனால் இது என் மனமும் கூட…”
‘அப்படிப் பார்க்கப் போனால் நான் மிகவும் சுகமாக இருக்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் உங்கள் ஓவியங்களில் ஏதோ துயரம் தெரிகிறது அப்படி இருந்தும் அவை எதற்கு என்னுடையவை என்று தோன்றுகிறது?”
‘சுகம், மகிழ்ச்சி இரண்டும் வெவ்வேறு.”
“அநேகமாக, என் மனதில் ஏதோ துயரம் இருக்கிறது, இருக்கலாமோ… அதெப்படியோ நீங்கள் என் மனதை வாசிக்கிறீர்கள். இந்த ஓவியங்களில் நம் இருவரின் மனமும் இருக்கிறது. இது நம் ஓவியம். நம் ஆன்மாக்களின் ஓவியம்.”
“அடையவேண்டும் என்ற தீவிரத் துடிப்பு இருந்தால் போதும், எல்லாம் தானாக வந்து சேரும்”
“உண்மையா, நீங்கள் இதை நம்புகிறீர்களா? ஆனமாக்கள் உரையாடுகின்றனதானே?”
சிரிப்பு…
ஓ, அவன் சிரிப்பில் என்ன உயிர்ப்பு!
“உண்மைதானே? எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியால் இதயம் வலிக்கிறது… என்னை இழுத்து அணைத்துக் கொள்ளுங்கள், உடல் மிகவும் அயர்ந்து போயிருக்கிறது. தலையும் சுற்றுகிறது. தாங்க முடியவில்லை. நான் ஒருமுறை உங்கள் விரலைத் தொடவா? முத்தமிடவா?
அவன் அவளை மார்போடு தழுவிக்கொண்டான்… அவள் அவன் விரல்களை முத்தமிட்டாள்.
அவள் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் சிந்தியது…
போதும்.. போதும்.. போதும் என்றாள்… முனங்குவது போல். அவன் கைகள் அவள் மயில் சேலையைக் கடந்து அவள் மென்மையான வயிற்றை வருடியது. அவள் தாய்மையின் கோடுகளை மெல்லத் தடவியது. பாராட்டிய கண்களை முத்தமிட்டது.
உடனே அவள் நடுங்கினாள், துடித்தாள்.
தேகம் லகுவானது, நாணிக் கூசினாள்.
“மேடம், மேடம்… நத்திங் டு வர்ரி. யு ஆர் ஆல்ரைட். கமான்… ஓபன் யுவர் ஐஸ்.”
சுற்றிலும் இருந்த வெள்ளைத் திரைச்சீலைகள் மெல்ல அசைந்து கொண்டிருந்தன. வெள்ளை ஆடைகளில் யார் யாரோ…
நான் இறந்து சொர்க்கம் சேர்ந்து விட்டேனா?
“மேடம் இது மருத்துவமனை, நீங்கள் இப்போது மருத்துவமனையில் இருக்கிறீர்கள். சிறிது ஓய்வு தேவை. காலை சிற்றுண்டி சாப்பிடவில்லையா?’
ஓ, என்னைச் சுற்றி டாக்டர்கள், நர்சுகள் இருக்கிறார்கள். அவர்களும் அறிமுகமில்லாதவர்கள். அப்படி என்றால் மயங்கி விழுந்து மருத்துவமனை சேர்ந்திருக்கிறேன். அம்மாவுக்கு செய்தியைத் தெரிவித்தார்களா? யார் சேர்த்திருக்கலாம்? பில் எவ்வளவானது? எப்போது இங்கிருந்து அனுப்புவார்கள்? வீட்டில் என்ன சொல்வது. காய்ச்சல் விட்டது போல் தோன்றியது. மொத்தமாக எல்லாவற்றையும் யோசித்து சோர்ந்து போனாள்.
“எதையும் யோசிக்க வேண்டாம். உங்கள் ஃபோனை வாங்கிக்கொள்ளுங்கள். வீட்டாருடன் பேசுங்கள். நாங்கள் முன்பே சொல்லியிருக்கிறோம். கவலைப்படவேண்டாம்.”
ஃபோனைத் திறந்தால் அப்போதே சரியாக மதியம் இரண்டு மணி.
கணவன் அப்போதே பல முறை அழைத்திருந்தான். அம்மாவும் கூட.
வாட்ஸப்பில் முதல் செய்தி கணவனுடையது. “பார்த்து நடக்க வேண்டாமா, ஆட்டோ ஏறும் போது எச்சரிக்கையாக இல்லாவிட்டால் எப்படி? காலையில் சிற்றுண்டி கூட சாப்பிடவில்லையாம், அப்படி என்ன அவசரம்? அம்மா வந்திருப்பார், பார். நான் வந்துகொண்டிருக்கிறேன். அந்த ஆட்டோ டிரைவர் நல்லவர். மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தார். இல்லை என்றால் என்ன நடந்திருக்கும்?”
அப்படி என்றால் எனக்கு நடந்தது விபத்து, நான் ஆர்ட் கியலாரி போகவில்லை?!
அவள் உடனே அவளது முகநூலைத் திறந்தாள். ஆர்ட் விலேஜ் பதிவை அரை மணிக்கு முன் போட்டிருந்தான்.
நடைபாதையில் விழுந்து கிடக்கும் மயிலிறகு ஓவியம். தொலைவில் கடந்து போகும் பெயரில்லாக் கால்கள்.
தலைப்பு
‘மீண்டும் சந்திக்கலாம்’