Home தொடர்வரலாற்றில் பொருளாதாரம் – 20

வரலாற்றில் பொருளாதாரம் – 20

by Viswanaath Thyagaraajan
0 comments

போன அத்தியாயத்தில் இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன், கிழக்கத்திய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று போர் புரிந்து, பின்னர் அந்த நாடுகளை தனது ராஜ்ஜியத்தில் இணைக்காமல் வணிக ரீதியிலான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு உலக வர்த்தகத்தின் ஒரு பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததைப் பற்றிச் சொன்னேன். ஆனால், இராஜேந்திர சோழன் காலத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதன் மகிமையை அல்லது செயல் திறனை இழந்து கொண்டு வந்தது. இதற்குப் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. பலவற்றுக்கு அரசியல் காரணங்கள் இருப்பதால், அவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு வணிக ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய சில காரணங்களைப் பற்றிப் பேசலாம்.

12ஆம் நுற்றாண்டில் இரண்டு விஷயங்கள் நிகழ்ந்தன. ஒன்று பாண்டியர்களின் எழுச்சி, இரண்டாவது சேரர்களின் வீழ்ச்சி.

பாண்டியர்களின் எழுச்சியால் கடல் சார்ந்த வணிகத்தில் முக்கியத் துறைமுகமான கொற்கைத் துறைமுகம் சோழர்களிடமிருந்து பாண்டியர்கள் வசம் சென்றது. சேரர்களின் வீழ்ச்சி நூற்றாண்டின் ஆரம்பித்திலேயே ஆரம்பித்திருந்தது. சேர ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்து கொண்டு இருக்கும் பொழுதே நிலப்பிரபுத்துவ அமைப்பு, தலையெடுக்க ஆரம்பித்தது. அதிக நிலம் வைத்திருக்கிறவர்கள் அந்தப் பகுதியை ஆட்சி செய்தார்கள். பெரிய ராஜ்ஜியமாக இல்லாமல் சிறு சிறு நிலப்பிரபுகள் வசம், சேர நிலப்பரப்பு இருந்த படியால் துறைமுகம் பக்கமாய் இருந்த நிலப்பிரபுகளே அதனை ஆண்டார்கள்.

ஆனால், பெரும் வணிகப் பகுதிகளை புதிதாய் உருவான சாமூதிரி ராஜாக்கள் ஆண்டு கொண்டு இருந்தார்கள். அப்படிப்பட்ட சாமூதிரி ஒருவரைத்தான் வாஸ்கோ ட காமா சந்தித்தார். வாஸ்கோ ட காமா ஏன் வந்தார் என்பதைக் கலிங்கத்தைப் பற்றிச் சொன்ன பின்னர் சொல்கிறேன்.

இப்படி இரண்டு பக்கமும் வணிகத் தொடர்புகளற்ற நிலையில், கிழக்கத்திய நாடுகளின் வணிகம் மற்றும் மேற்கத்திய நாடுகளின் வணிகம் இல்லாத சமயத்தில்தான் நேச நாடான கலிங்கத்தில் இருந்து வரித் தொகை சரியாக வந்து சேரவில்லை என்கிற காரணத்தைக் கொண்டு முதலாம் குலோத்துங்க சோழன் கலிங்கத்து மேல் படையெடுத்துப் போய் போர் புரிந்தார்.

சோழ ராஜ்ஜியத்திற்கு ஏன் கலிங்கத்து வரித்தொகை மட்டும் அவ்வளவு முக்கியமானதாக இருந்தது?

சோழர்களுக்குக் கலிங்கத்து வரி முக்கியமான விஷயமாக இருந்ததற்குக் காரணம் கலிங்கம் அமைந்திருந்த இடம்தான்.

கலிங்கம் என்பது நிலம் சார்ந்த வணிகச் சாலையான பட்டுப் பாதையும், கடல் சார்ந்த வணிக வழியான நறுமணப் பாதையும் சந்திக்கிற இடம்.

வணிக ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலிருந்து எவ்வளவு வரி கிடைத்திருக்கும்? என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. கலிங்கத்துத் துறைமுகத்தில் இருந்து இலங்கை, ஜாவா, சுமத்திரா, பாலி, தென் ஆப்பிரிக்கா, ரோமானிய நாடு, சீனா ஆகியவற்றோடு இங்கு வணிகம் நிகழ்ந்து உள்ளது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி இருந்த பொழுது, இந்த நிலப்பரப்பின் வணிகம் தங்களது கைகளில் இருக்க வேண்டுமென்று நினைத்தனர். அதற்காகப் பலவற்றைச் செய்தார்கள். அதில் முக்கியமாக இருந்தது, உப்புவேலியை அமைத்து இந்திய நிலப்பரப்பை இரண்டாகப் பிரித்ததுதான். இந்த வேலி அன்றைய கலிங்கம்.. இன்றைய ஒடிசாவில் இருந்து, அன்றைய ஒன்றிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் இருந்த பெஷாவர் வரைக்கும் நீண்டு இருந்தது. இந்த அமைப்பைப் பார்த்தோமானால் வெறும் உப்புக் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்காக மட்டும் உருவாக்கப் படவில்லை என்ற சந்தேகம் வருகிறது. பல நூற்றாண்டு காலமாய்ப் புழக்கத்தில் இருந்த பட்டுப் பாதையையும், நறுமணப் பாதையையும் சந்திக்க விடாமல் செய்து அந்த வணிகத்தைத் தங்களது வசம் வைத்துக்கொள்ளத்தானோ என்று தோன்றுகிறது.

நன்றாகப் பார்த்தால் கலிங்கத்தை ஒரு புள்ளியாகக் கொண்டு தான் உப்புவேலியை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் மூலம் ஆங்கிலேயர்கள் அவர்களது எதிரி ராஜ்ஜியங்களுக்குக் கிழக்கத்திய நாடுகளின் வணிகம் கிடைக்காமல், மேற்கத்திய நாடுகளுக்கு வணிகக் கட்டணம் செலுத்த உப்பு மற்றும் உப்புக் கட்டிகள் கிடைக்காமல் போக செய்த சூழ்ச்சிதான் இது.

உப்புவேலியின் மற்றொரு முக்கிய நோக்கம் ஆங்கிலேயர்களின் பணப் பரிமாற்ற முறையை, சுதேசி ராஜ்ஜியங்களை ஏற்றுகொள்ளச் செய்வதுதான். ஆனால் சில வணிகர்கள் ஆங்கிலேயர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்த பணப் பரிமாற்ற முறையை ஏற்றுக்கொள்ளாமல் பண்டைய முறையான பண்ட மாற்று முறையில்தான் கடல் சார்ந்த வணிகங்களுக்குக் கட்டணம் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். எத்தியோப்பியா, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகள், திபெத்திய வணிகர்கள் ஆகியோர் உப்புக் கட்டிகள் அல்லது உப்பைக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு இருந்தார்கள்.

ஆக உப்புவேலியின் தொடக்கப் புள்ளியாக கலிங்கம் (ஒடிசா) இருப்பது ஆங்கிலேயர்களுக்கு அவசியமாக ஒன்றாக இருந்தது. சரித்திர காலம் தொட்டே கலிங்கத்து வணிக வாய்ப்புகள் அது தரும் லாபங்கள் மீது ஆசைப்பட்டுப் பல படையெடுப்புகள் நடந்திருக்கின்றன. அவை பின் வருமாறு

கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் அசோகர், கலிங்கத்தில் பௌத்த சமயத்தைத் தோற்றுவிக்கவும் பரப்பவும் படையெடுத்து வந்தார். இதனைப் படிக்கையில் அசோகரின் புத்த மதத்தின் மீதான பற்றுதல் எனப் பலர் நினைக்கலாம். ஆனால், உண்மையில் வணிக முக்கியத்துவம் வாய்ந்த கலிங்கத்தில் பௌத்த சமய வழிபாட்டு மையத்தைத் தோற்றுவித்து அதனை ஒரு பெரிய பொருளாதார மையமாக மாற்றக் கூட இருக்கலாம். ஏனென்றால் அசோகரின் காலத்தில்தான் பௌத்த மடாலயங்கள் வணிகத்தோடான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ஆரம்பித்தன. அத்தகைய முயற்சியில் ஒன்றுதான் கலிங்க தேச துறைமுகத்தில் ஒரு பௌத்த விஹாரம் அமைப்பது.

இதன் பிறகு கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் சாதவாகனர்கள் அவ்வப்போது வணிகக் காரணங்களுக்காக எல்லைப் பிரச்சனையைக் காரணம் காட்டி சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர். இதனைப் பெரும் போர் என்றெல்லாம் சொல்ல முடியாது.

பின்னர் இராஜேந்திரச் சோழன், குலோத்துங்கச் சோழன் படையெடுத்துப் போனது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இராஜேந்திரச் சோழன் போருக்குப் பின்பு அவர்களையே ஆட்சி செய்ய விட்டது எல்லாம் வணிக லாபத்திற்காகத்தான். குலோத்துங்கச் சோழனுக்கு கட்டாயம் ஒரு பெரும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடம் தேவை என்பதால் கலிங்கத்துப்பரணியில் சொல்லியவை எல்லாம் நடந்தது.

ஆனால் இந்த படையெடுப்பை விட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது ஔரங்கசீப்பின் படையெடுப்பு தான்.

சரித்திரத்தில் ஔரங்கசீப் தீவிர மத வெறியர் என்றும், அவர் பல கோயில்களை இடித்துள்ளார் என்றும் சொல்கிறார்கள். பல நூற்றாண்டுகள் போன பிறகும் ஔரங்கசீப்பின் பெயரை வைத்து பலர் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையிலேயே ஔரங்கசீப் கோயில்களை இடித்தாரா? அல்லது கோயில்களைச் சக்தி வாய்ந்தவையாக மாற்றும் வணிக மூலத்தைத் தடுத்து நிறுத்தினாரா?

தொடரும்.

Author

You may also like

Leave a Comment