Home இலக்கியம்ஜப்பானிய சிறுவர் கதைகள் 20 – மொழியாக்கம்

ஜப்பானிய சிறுவர் கதைகள் 20 – மொழியாக்கம்

0 comments
This entry is part 18 of 18 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

கல் வெட்டும் யோஷி (石工のヨシ)

ஜப்பானிய நாட்டின் மலைப் பகுதியில் யோஷி என்னும் இளைஞன் வசித்தான். பாறைகளை வெட்டிச் சிறிய கற்களாக்குவது அவனுடைய வேலை. காலையில் கல் வெட்டப் புறப்பட்டால் வெயிலில் நின்று கல்வெட்டிக் களைத்து வீடு திரும்புவான். கல் வெட்டும் வேலையில் அவனுக்குக் குறைந்த வருமானம் கிடைத்தது. அதனால், மகிழ்ச்சி இல்லாமல் வாழ்ந்தான்.

அவனுடைய வருத்தத்தை ஒரு மலைத்தேவதை பார்த்தது. அவனுக்கு உதவி செய்ய நினைத்தது.

ஒருநாள் அவன் கல் வெட்டிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியே ஒரு பணக்கார இளைஞன் சென்றான். அவன் பட்டாடை உடுத்தி இருந்தான். அவனைச் சுற்றி நண்பர்கள் இருந்தனர். அவன் மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டான்.

அவனைப் பார்த்த யோஷி தானும் அப்படிப் பணக்கார இளைஞனாக இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்தான். அவனுடையை நினைப்பை மலைத்தேவதை அறிந்துகொண்டது. தன்னுடைய சக்தியால் அது யோஷியை பணக்கார இளைஞனாக மாற்றியது. அவன் பட்டாடைகள் உடுத்தி, நண்பர் சூழ மகிழ்ச்சியாக மாறிவிட்டான்.

சில நாட்கள் சென்றன.

கடைவீதிக்குச் சென்ற யோஷி அங்கே ஒரு அரசனைப் பார்த்தான். அரசன் பல்லக்கில் வந்தான். மன்னனை நான்கு பேர் சுமந்தனர். அவர்களுக்கு முன்னே குதிரைகளில் வீரர்கள் சென்றனர். பல்லக்கின் பின்னே சில வேலையாட்கள் நடந்து சென்றனர். மன்னனின் பரிவாரம் பார்ப்பதற்கு அலங்காரமாக இருந்தது.

யோஷிக்கு அரசனின் பரிவாரத்தின் மீது ஆசை வந்தது. தானும் ஒரு அரசனாக இருந்தால் தனக்கும் பரிவாரம் இருக்குமே என நினைத்தான்.

அந்த ஆசையையும் மலைத்தேவதை நிறைவேற்றியது. அவன் அரசனாகிவிட்டான். தான் நினைத்ததைப் போலவே பரிவாரங்களுடன் வீதியில் சென்றான். மகிழ்ச்சியாக இருந்தான்.

சில நாட்கள் சென்றன.

கோடைக்காலத்தில் ஒருநாள் வீதியில் பரிவாரங்களுடன் நடக்கையில், சுள்ளென வெயில் அடித்தது. பல்லக்கிற்கு உள்ளேயும் அவனுக்கு வெக்கையாக இருந்தது, வியர்த்தது. வெளியே எட்டிப் பார்த்தான் சூரியன் அவன் முகத்தைச் சுட்டது.

“சே.. என்ன இது? இப்படி வெயில் சுட்டெரிக்கிறது. அரசனாக இருந்து என்ன பயன்? எனக்கு வெயிலுக்கு மிஞ்சிய சக்தி இல்லை. நான் சூரியனாக இருந்தால்…” என நினைத்தான்.

உடனே மலைத்தேவதை அவனுடைய ஆசையை நிறைவேற்றியது. யோஷி சூரியனாகிவிட்டான்.

அவன் விருப்பப்படி யாருக்கும் கட்டுப்படாமல் சூரியனாக வானத்தில் சுற்றினான். தனக்கு மேல் யாருமே இல்லை நினத்து மகிழ்ச்சியாக இருந்தான். அவன் புவியைச் சுட்டெரிக்கும்போது இடையில் ஒரு மேகம் வந்து தடுத்தது. மேகம் நிழலாகப் புவியின் மீது படர்ந்தது. புவியில் அந்த இடத்தை வெப்பம் தாக்கவில்லை. அவனுக்குக் கட்டுப்படாமல் மேகம் இருப்பதைப் புரிந்துகொண்டான். சூரியனைவிடவும் மேகம் சக்தி வாய்ந்தது என நினைத்து, மேகமாக மாற நினைத்தான்.

அந்த ஆசையையும் மலைத்தேவதை நிறைவேற்றியது.

அவன் மேகமானதால் ஒரு நன்மை விளைந்தது. அவன் விருப்பப்பட்ட இடங்களிலெல்லாம் மழையாகப் பொழிந்தான். அவன் மழையாகப் பொழிந்த இடங்களில் நிலம் செழித்தது. தாவரங்களும், பயிர்பச்சைகளும் விளைந்து மனிதர்களுக்கு நன்மை விளைந்தது.

சில நாட்கள் கழிந்தன.

அவன் ஒரு பாறையின் மீது மழையாக மாறிப் பொழிந்தான். அங்கு எதுவும் விளையவில்லை. மீண்டும் பொழிந்தான், மாற்றமில்லை. அவனுக்குக் கோபம் வந்தது. தன்னுடைய சக்திக்கும் மீறியது பாறை என நினைத்தான். தானும் பாறையாக மாற நினைத்தான். அந்த ஆசைக்கும் மலைத்தேவதை செவி சாய்த்தது. தான் நினைத்தபடி பாறையாக மாறி வலிமையாக நின்றான்.

சில நாட்கள் கழிந்தன.

ஒருநாள் அந்தப் பாறைக்கு ஒரு கல் வெட்டும் இளைஞன் வந்தான். உளியை எடுத்துப் பாறையின் மீது வைத்து சுத்தியலால் அடித்தான். பாறையிலிருந்து சின்னக் கல் ஒன்று வெட்டப்பட்டுக் கீழே விழுந்தது. பாறையாக நின்ற யோஷி அதிர்ச்சி அடைந்தான். தன்னை விடவும் கல் வெட்டும் இளைஞன் பலசாலியா என நினைத்தான்.

அப்போது மலைத்தேவதை அவன் முன்னே தோன்றிப் பேசியது.

“யோஷி, இந்த உலகில் யாரும் யாரைவிடவும் சக்தி வாய்ந்தவர் என நினைக்காதே. அவரவர் இருக்கும் இடத்தில் திறமையாகச் செயல்பட்டால் பெரிய வெற்றியை அடையலாம். நீ மேகமாக இருக்கும்போது உன்னையும் அறியாமல் புவிக்கு உதவிசெய்தாய். அதைப்போல் உன்னுடைய உழைப்பில் கவனம் செலுத்து, உயர்வு அடைவாய்” என்றது.

தேவதையின் அறிவுரையை ஏற்ற யோஷி பழையபடி கல் வெட்டும் இளைஞனாக மாறினான். நன்றாக உழைத்தான், மற்றவர்களுக்கு உதவினான். அனைவரும் அவனைப் பாராட்டினார்கள். உழைப்பும், நல்ல குணமும், தேவதையின் அறிவுரையும் அவனை நிறையப் பொருள் சேர்க்க வைத்தன. அவன் தன்னுடைய உழைப்பால் பணக்காரனாக உயர்ந்தான்.

திடீரெனப் பணக்காரனாகாமல் தன்னுடைய உழைப்பால் உயர்ந்த அவனைப் பார்த்து மலைத்தேவதை மகிழ்ந்தது.

Series Navigation<< ஜப்பானிய சிறுவர் கதைகள் 19 – மொழியாக்கம்

Author

You may also like

Leave a Comment