“நடிப்பின் அளவுகோல் என யாரைச் சொல்லலாம் தெரியுமா? உன்னுடைய நந்தினிதான் அது, ஆதித்த கரிகாலா!” கிட்டத்தட்டக் கத்தலாய்ச் சொன்னான் பார்த்திபேந்திரன்.
கண்களில் கொஞ்சம் பொறாமை கலந்த உணர்வா என்ன? செவேலென்றிருந்த முகம் மீண்டும் சிவந்துவிட உதடுகள் துடித்தன.
உற்றுப் பார்த்தேன் அவனை. ‘ஹோ… ஹோ…’ எனக் கூச்சலிட்டபடி ஓர் உயர அலை நாங்கள் அமர்ந்திருந்த பாறையில் முக்காலளவு மோதிவிட்டுப் போனது. தினமும் தேகப்பயிற்சி மற்றும் ஓட்டம் செய்து உடலைக் கட்டுக்கோப்பாய் வைத்திருக்கும் இளம்பெண்ணின் வயிற்றைப் போல வேகமாக உள்வாங்கிய அலைகள், அவளைக் கண்ட சற்றே குண்டான யுவதிகள் விடும் பெருமூச்சைப் போல ‘ஹோ ஹோ’வென மறுபடி சீறிப் பாய்ந்து மோதின.
மேலே மாலை நேரமானதினால் என்ன கொதிப்போ, கிட்டத்தட்டப் பார்த்திபேந்திரனின் கோபம் போலவே ஏறிக்கொண்டிருந்தான் வானத்தில் சூரியன். அவன் நிறத்தை உள்வாங்க நினைத்தும் முடியாமல் போன ஏமாற்றத்தால், நீல நிறத்தில் கடலலைகள் சற்றே ஆரவாரித்து ஆக்ரோஷமாக மோதிக்கொண்டிருந்தன.
நாங்கள் இருந்த இடம் கடல் மல்லை. கொஞ்சம் தள்ளி உள்ளிருந்த இந்த உயரப் பாறைக்கு நீந்தியே வந்திருந்தோம். ஆடைகள் காற்றிலும், அடித்த உஷ்ணம் குறைவான மாலை வெயிலிலும் கொஞ்சம் உலர்ந்துதான் விட்டன. தலைமுடி கூடக் காய்ந்து கலைந்திருந்தது எனக்கு.
நான் நிதானமாக அவனைப் பார்த்தேன். காற்றில் கலைந்த சிகையைக் கொஞ்சம் முடிந்துகொண்டேன். தாடியைத் தடவிக்கொண்டேன். பின்னர் சிரித்தேன்.
“சிரிக்காதே ஆதித்தா, எனக்கு வயிறு எரிகிறது.”
“வா, காஞ்சி அரண்மனைக்குச் செல்லலாம். கடைந்த தயிரை நீர்க்க வைத்து அதில் உப்புப் போட்டு நிறையக் குடி. எரியாது, குளிர்ந்துவிடும்.”
முறைத்தான்.
”உனக்கு எப்பொழுதும் விளையாட்டாய்ப் போயிற்று. அந்த மாயக்காரியின் வலையில் நன்றாகவே மயங்கியிருக்கிறாய். அவளைக் கடம்பூரில் சந்திக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறாய்.”
”பிறகு?”
”என்ன பிறகு? நீதானே சொன்னாய் இப்போது.”
”சொல்வதற்கு என்ன, போகத்தான் போகிறேன். ஆனால் ஒன்று பார்த்திபா!”
”என்ன?”
நான் கொஞ்சம் நிதானத்தைத் தவிர்த்தேன்.
“என் நண்பன் என்பதற்காக இப்படிப் பொறுத்தேன். எப்படி நீ குற்றம் சாட்டலாம், நந்தினியை நல்ல நடிகை என்று? பின் இன்னொன்று… அவள், நான் வணங்கும் பெரிய பழுவேட்டரையரின் மனைவி. வார்த்தைகளை அளந்து பேசு.”
”நானா உன்னிடமா? ஆதித்தா, நீயா இப்படிப் பேசுவது?” என்றான் பார்த்திபன். ”சிறுவயது முதல் பழகியிருந்த நினைப்பு மறந்துவிட்டதா?”
“நான் நந்தினியிடமும் சிறுவயது முதல் பழகியிருக்கிறேன் என்று தெரியுமல்லவா?”
“அதனால்தான் சொல்கிறேன் ஆதித்தா. ஓ… நான் மரியாதையில்லாமல் சொல்லிவிட்டேனா? ஸ்ரீலஸ்ரீ சுந்தர சோழரின் மூத்த புதல்வர், நாளைய அரசராகப் போகும் இளவரசரை மரியாதையின்றிப் பேசியதாக நினைக்கிறாயா?”
“சிரிப்பு வருகிறது பார்த்திபா… என்ன சொன்னாய்?” எனச் சொல்லும்போது ஓர் இரண்டாள் உயர அலை ஒன்று எங்கள் பாறையில் மோத, நாங்கள் முழுவதும் நனைந்துவிட்டோம்.
”ஆதித்தா!” பதறினான் பார்த்திபன். “வா, கரைக்குச் செல்லலாம்.”
“ம்ஹும், வேண்டாம். அலைதானே வடிந்துவிட்டது. இதைவிட எவ்வளவோ அலைகள் என் வாழ்க்கையில் விளையாடியிருக்கின்றன. நந்தினியிடம் மனதைப் பறிகொடுத்த பின் எனக்கு வாழ்க்கை வெறுத்துத்தான் விட்டது. அதுவும் அவளை… அவளை…” என நான் சொல்லச் சொல்ல,
“பெரிய பழுவேட்டரையரின் மனைவியாகப் பார்த்த பிறகு,” என முடித்தான் பார்த்திபன்.
“ஆதித்தா, சொல்வதைக் கேள். உன்னைச் சுற்றி ஒரு வஞ்சக வலை பின்னப்பட்டிருப்பதாக மலையமான் சொன்னார். வானில் அந்த நட்சத்திரமும் இருப்பதால் அரசகுலத்திற்குக் கேடு என்றும் தகவல் வந்தது. வந்தியத்தேவனை நம்பாதே, கந்தமாறனை நம்பாதே, நந்தினியை நம்பாதே. இப்போது குறிப்பாகக் கடம்பூர் போக வேண்டாம். நீ ராஜாவாகப் போகிறவன் தெரியுமா?”
”ஹ!” சிரித்தேன். எழுந்தேன். “பார்த்திபா வா, கிளம்பலாம். நான் ராஜாதான் – எனக்கு, என் மனதிற்கு. நாளை இந்த ராஜ்யத்திற்கும் ஆகலாம், ஆகாமல் போனாலும் போகலாம்.
பார்த்திபா, நான் நானாக இருந்தது எப்போது?
நானாக நானிருந்த காலம் எப்போ?
நயமாக சிரித்திருந்த பொழுதும் எப்போ?
ஊனாசை ஊராசை கொண்டு நானும்
ஓடித்தான் இருக்கின்றேன் வேறே என்ன?
ஆணாக மூத்தவனாய்ப் பிறந்தே விட்டேன்
அதனாலே அரசுக்கு வாரி சானேன்
ஆனாலும் உள்மனது கேட்கு தப்பா
..அமைதியெந்தன் வாழ்வினிலே உண்டா என்றே”
பார்த்திபன் பேசவில்லை. நான் தொடர்ந்தேன்.
“என்னைச் சுற்றி வலையா? இருக்கட்டுமே, பார்க்கலாம். ஒன்றும் ஆகாது. வந்தியத்தேவன் உன்னை விட எனக்கு நட்பானவன். அவனை உனக்கு எப்போதுமே பிடிக்காது. அக்கை குந்தவை இருக்கவே இருக்கிறாள். அருண்மொழியை நீ சொல்லவில்லையே, அவனும் எனக்கெதிர் என்று. யாரும் என்னைக் கொல்ல முடியாது பார்த்திபா. ஏனென்றால்… ஏனென்றால் – நான் ஏற்கனவே மரித்தவன்தான்!” – வெறித்தனமாகச் சிரித்தேன்.
“ஹஹ்ஹஹ்ஹா!”
“ஆதித்தா, இளவரசே, கொஞ்சம் மெல்ல,” என்றான் பார்த்திபன்.
நான் தொடர்ந்தேன். “என்று நந்தினி என் கால்கள் பற்றி வீரபாண்டியனுக்கு அருள் செய் என்று கேட்டாளோ அப்போதேதான். எத்தனை முறை அந்தப் போரைப் பற்றிப் பேசியிருப்பேன் உன்னிடம். எங்கோ ஒளிந்து படுக்கையில் இருந்தான் அவன். அங்கே போனால் பல நாள் கழித்து… பல நாட்களாக நான் தேடிய அவள், நந்தினி. எனக்குச் சந்தோஷம் பொங்கப் பார்க்க, அதை அவளே அணைத்தாள். என்னிடம் கேட்டாள் பாண்டியனின் உயிரை விட்டுக் கொடுக்க. ஆனால் முடியவில்லை பார்த்திபா, இந்த வாள்…” சற்று நிறுத்தினேன்.
சற்று அகலமாகவும், நன்றாக ஒன்றரை அடி நீளமாகவும், கனமான பிடியில் புலி உருவம் பதித்து, அந்த மாலையும் இருளும் சூழ்ந்த பொழுதில் கண்ணிலிருந்த சிவப்புக் கற்கள் உயிர்க்கண்களாய் மின்னியபடி இருந்த வாளைக் காண்பித்தேன்.
”இதுதான் அவன் தலையைக் கொய்தது. பின் வெளியில் சென்று மறுபடி வந்தால் அவள் இல்லை. பிறகு பார்த்தது தஞ்சை அரண்மனையில் மற்றவரின் மனையாளாக.”
“ஆதித்தா!” என்றான் பார்த்திபன்.
“தெரியவில்லை பார்த்திபா, வா கிளம்பலாம். இப்போது கிளம்பினால் விடியுமுன் கடம்பூர் அடைய முடியும் என நினைக்கிறேன்.”
“நானும் வருகிறேனே?”
“இல்லை வேண்டாம்,” என்று மறுத்து எழுந்தேன்.
இன்னும் இருளாகத்தான் இருந்தது சாலையில். கடம்பூர் செல்லும் சாலையின் இருபுறமிருந்த மரங்கள் கொஞ்சம் அதிகமாக அடித்த காற்றால் ஆடிக்கொண்டிருக்க, குதிரையில் – பக்கவாட்டில் இருளுக்கு வழிகாட்ட வேண்டுமென வைத்திருந்த கூடு விளக்கும் காற்றிலாடி மெல்லிய ஒளியைக் காட்டினாலும், வேகம் வேகம் வேகமாய்த்தான் செலுத்தினேன் நான்.
இன்னும் ஒரு நாழிகையில் கடம்பூர் வந்துவிடும். என்ன சொன்னான் பார்த்திபன்? சதிவலையா, என்னைச் சுற்றியா? இருந்தால் என்ன? நான் யார்? ஆதித்த கரிகாலன்! பல போர்க்களம் கண்டவன். பயமா எனக்கா? ஹா! எத்தனை உயிர்களை என் வாள்முனையில் எடுத்திருப்பேன். எத்தனை வெற்றிகள். இந்தப் பரந்த சோழ சாம்ராஜ்யத்தை நான் ஆள வேண்டுமென்று தந்தை சுந்தர சோழர் தீர்மானித்ததில் வியப்பென்ன?
என் வாழ்க்கையில் மறக்க முடியாத சிலர். அவர்களை நினைத்துப் பார்க்கலாமா? சகோதரி குந்தவை. என் மீதும் அருண்மொழி மீதும் பாசம் கொண்டவள், ராஜதந்திரம் மிகுந்தவள், அன்பு எல்லாரிடமும் கொண்டவள். பின் வந்தியத்தேவன். குந்தவைக்குக் கொஞ்சம் அதிகப் பிரியம் இவனிடம் இருப்பது சென்ற முறை வந்த ஓலையில் தெரிந்தது.
பார்த்திபேந்திரனுக்கு என்னைப் பிடிக்கும். பின் நந்தினியையும் பிடிக்கும். நந்தினியே என்னிடம் சொல்லியிருக்கிறாள், அவன் பார்வை சரியில்லை என்று. மந்திரவாதி எனச் சொல்லப்படும் ரவிதாஸன், வீரபாண்டியனின் ஆபத்துதவிகளைச் சார்ந்தவன்… அவனாலா எனக்கு ஆபத்து வரும்? கந்தமாறன் பிள்ளைப்பூச்சி என நினைத்திருந்தேன். வந்தியத்தேவன் மேல் குற்றம் மேல் குற்றமாய்ச் சொல்கிறான். இப்போது நந்தினியைப் பார்க்கப் போகிறேன். வரச் சொல்லியிருக்கிறாள், எதற்காக இருக்கும்?
‘டக டக டக’ என்று சென்ற குதிரையை இறுக்கிப் பிடித்தேன். அது என்ன? அரண்மனைக் கோட்டையின் திட்டி வாசலில் இருக்கும் விளக்கு. குதிரையைக் கட்டிச் சென்றேன். யாரோ முக்காடிட்டு நடந்து கொண்டிருந்தார்கள். தொடர்ந்தேன். ஒரு கட்டிடத்தில் நுழைய, நானும் நுழைய அந்த உருவத்தைக் காணோம்.
அந்த மாளிகைக்குள் போயிருப்பதாகத் தெரியவில்லை. தோட்டத்தைச் சுற்றினேன். இது என்ன? தரைக்குள் படிகள்! திறந்தே இருக்கிறதே! நிலவறை! இது என்ன மாளிகை? இங்கே இப்படி எதற்குத் தோட்டத்தில் நிலவறை? உள்ளே காரிருள். அடடா, குதிரையில் இருந்த கூடு விளக்கை எடுத்திருக்கலாமே என நினைக்கையில், தூரத்தே வெளிச்சம்.
சென்றால் திடுமெனப் பரந்த ஓர் இடம். சுற்றிலும் வெவ்வேறான சிலைகள் அந்த வெளிச்சத்தில் நிழல்களைப் பிரதிபலிக்க, அந்த விளக்கைப் பிடித்திருந்தவள் – நந்தினி.
”நந்தினி!” – பாய்ந்தேன், கரம் பற்றினேன். அவளது கண்களில் அது என்ன? பயமா? திகிலா?
“நீங்களா? ஏன் இங்கு வந்தீர்கள்?”
“நீதானே வரச் சொன்னாய் நந்தினி?”
தெப்பலாய் வியர்வையில் நனைந்திருந்த என் உடைகளைப் பார்த்தாள். மங்கிய விளக்கொளியில் என் மீது படிந்திருந்த புழுதியையும்.
“எதற்காக வந்தீர்கள்? அச்சச்சோ, உங்கள் உயிர்!”
“என் உயிர் நீ நந்தினி.”
“அபத்தமாய்ப் பேசாதீர் ஆதித்தரே! உங்கள் உயிருக்கு ஆபத்து!” என அவள் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அந்த விளக்கொளியில் ஒரு நிழல் அசைவது தெரிந்தது. தலைச் சிகையைப் பார்த்தவுடன் புரிந்தது… வந்தியத்தேவன்.
“இவனா என்னைக் கொல்லப் போகிறான்?”
நிமிர்ந்தால் அவனில்லை. ஆனால் நந்தினி? கொஞ்சம் தள்ளிச் சென்றிருந்தாள். நானிருந்த இடத்தில் காரிருள் இருக்க, அவளது விளக்கொளியைத் தேடியபடி சென்றால்..
”வீல்!” அலறினாள் அவள். என்ன என்பதற்குள் விளக்கு கீழே விழுந்து உருளவும், என் மீது ஒரு வாள் பாயவும் சரியாக இருந்தது. அந்த விளக்கொளியில் என் மீது வாள் பாய்ச்சிய நபரைப் பார்த்தேன்… அதிர்ந்தேன்… ஏன்? ஏன் இப்படி? இன்னொரு குறுவாள் என் கழுத்தருகே பாய்ந்தது. வலி. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் என் கண் செருகச் செருக, முழுவதுமாய் இருள் சூழ்ந்தது என்னை.
(தொடரும்)