அந்த ஜிமிக்கி அவளுடைய பாட்டி அவளுக்குப் பரிசாகக் கொடுத்தது. நுணுக்கமான தங்க வேலைப்பாடுகள் கொண்ட அந்த டிசைன், சீராகப் பின்னிப்பின்னி பூவும் கொடியுமாக நிறைந்து, விளிம்பில் சின்னஞ்சிறு முத்துகள் தொங்க, சின்ன குடை போல் அவளது காதுகளில் அசைந்து கொண்டிருக்கும். பேசும்போது அவளுடைய தலையாட்டலுக்கேற்ப மெலிதாக அசைந்து கன்னங்களின் ஓரத்தை உரசிச்செல்வது தனி அழகு. வலை ஜிமிக்கி வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டுக் கேட்டதற்காக பிரத்தியேகமாக அவளது பாட்டியே அதை வடிவமைத்து நகைக்கடையில் ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொடுத்திருந்தாள். அம்மாதிரி நுணுக்கத்தை இப்போது வரும் மெஷின் கட் நகைகளில் பார்க்கவே முடியாது.
அந்த ஆண்டு குலதெய்வக்கோவிலின் பொங்கல் திருவிழாவிற்காகத் தன் அப்பாவுடன் சொந்தக் கிராமத்திற்குச் சென்றிருந்தாள் சுவாதி. ஊரே கோலாகலமாக இருந்தது. உறவினர்கள் அனைவரும் பெரியப்பா வீட்டில் கூடியிருந்தார்கள். சுவாதியின் நெருங்கிய உறவினரான பெரியம்மா கஸ்தூரி, சுவாதியை உச்சி முகர்ந்து வரவேற்றார்.
அன்று மாலை திருவிழா முடிந்து அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, கஸ்தூரி சுவாதியின் காதுகளைக் கவனித்தார். வலை ஜிமிக்கியோடு அதன் முத்துகளுக்குப் பொருத்தமாக முத்துகள் கோர்த்த மாட்டலையும் அணிந்திருந்தது வசீகரமான அழகைக் கொடுத்திருந்தது. “சுவாதி, இந்த ஜிமிக்கி எங்கே வாங்கினே? என்னமா ஒரு அழகா இருக்கு! இப்போலாம் இப்படி ஒரு கைவேலைப்பாட்டைப் பார்க்கவே முடியாது,” என்று வியந்து சொன்னார்.
சுவாதி பெருமையாகச் சிரித்தாள். “ஆமா பெரியம்மா, இது எங்க பாட்டி எனக்குக் கொடுத்தது.”
கஸ்தூரி “சரோஜாக்கும் வலை டிசைன்ல ஒரு ஜோடி ஜிமிக்கி செய்யணும்னு ஆசை. இந்த டிசைன் ரொம்ப அழகாயிருக்கு. ஒரு ரெண்டு நாளைக்குக் கழட்டிக்கொடுத்தீன்னா கடையில் மாடலுக்குக் காமிச்சுட்டுத் திருப்பித்தந்திருவேன்” என்றார். சரோஜா அவரது மகள். சமீபத்தில் திருமணமாகி முதல்முறையாக அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள்.
சுவாதிக்கு இதயம் ஒரு நொடி நின்றது போலிருந்தது. காதுகளிலிருந்து அந்த பாரத்தை இறக்கி வைப்பது, தன் உயிரையே கழற்றிக் கொடுப்பது போல அவளுக்குத் தோன்றியது. அதை அணிந்த நாளிலிருந்து இது வரை கழட்டியிராததால் “பெரியம்மா… இது…” என அவள் இழுத்தாள்.
அப்பா பக்கத்துல இருந்துகொண்டு, “மக்கா, பெரியம்மதானே கேக்கா? குடு… ஒரு ரெண்டு நாள்ல தந்துருவாள்லா? சொந்தக்காரங்ககிட்ட என்ன தயக்கம்?” என்றார். அப்பாவின் சொல்லுக்கு மறுபேச்சு பேசத் தெரியாத சுவாதி, கைகள் நடுங்க அந்த ஜிமிக்கிகளைக் கழற்றிக் கொடுத்தாள். கழற்றிய பின் தன் காதுகள் வெறுமையாக இருப்பதை அவளால் சகிக்க முடியவில்லை.
அடுத்த நாள் காலை, எதிர்பாராத விதமாக அப்பாவிற்கு ஒரு முக்கியமான அவசர அழைப்பு வரவே, குடும்பத்துடன் உடனே ஊருக்குத் திரும்ப வேண்டிய சூழல். சுவாதி பதறிப்போனாள்.
“பெரியம்மா, அந்த ஜிமிக்கி…”
“அதற்குள் என்னம்மா அவசரம்? நகைக்கடைக்குப் போயிட்டு, அடுத்த வாரம் உன் தம்பி ஊருக்கு வரும்போது அவன்கிட்டக் கொடுத்து அனுப்புறேன். இல்லன்னா நானே நேர்ல வந்து தர்றேன்,” என்றார் கஸ்தூரி உறுதியாக. சுவாதி கனத்த இதயத்துடன் ஊருக்குத் திரும்பினாள்.
வாரம் ஒன்று கடந்தது. சுவாதி தன் செல்போனை அவ்வப்போது எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள். கஸ்தூரியிடமிருந்து அழைப்பு வரவில்லை. பொறுத்துப் பார்த்துவிட்டு அவளே அழைத்தாள்.
“சுவாதி, இப்போதான் கூப்பிடலாம்னு இருந்தேன். இன்னும் ரெண்டு நாள்ல கொண்டு வரேன்” என்றார் கஸ்தூரி. அடுத்த வாரம் அழைத்தபோது, “உங்க ஊருக்குத்தான் பொறப்பட்டுட்டு இருந்தேன், ஒங்க மாமா சொந்தத்துல ஒரு இறப்பு, இப்ப அங்கதான் இருக்கேன். ஊருக்கு வந்ததும் மொத வேலையா ஒங்க வீட்டுக்குத்தான் வருவேன்” என்றார். இப்படி வாரங்கள் மாதங்களாகின. சுவாதிக்கு அழுகையே வந்துவிட்டது. அவளது காதுகளில் ஒரு சாதாரணக் கம்மலைப் போட்டிருந்தாள், ஆனால் அது அவளுக்கு ஏனோ அந்நியமாகவே இருந்தது.
மூன்று மாதங்கள் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாதி மீண்டும் அழைத்தாள். இந்த முறை கஸ்தூரியின் குரலில் ஒருவித நடுக்கம் இருந்தது.
“பெரியம்மா, போதும். என் ஜிமிக்கியைக் கொடுத்துடுங்க. நான் நேர்ல வந்து வாங்கிக்கவா?” என்றாள் கோபமும் அழுகையுமாக.
கஸ்தூரி நீண்ட பெருமூச்சு விட்டார். “சுவாதி… என்னை மன்னிச்சிடும்மா. சரோஜாவுக்கு ஜிமிக்கி ஆர்டர் கொடுக்கைல கொஞ்சம் பணத்தட்டுப்பாடு ஆகிட்டுது. கடையில் நின்னுக்கிட்டு இன்னும் நாலு கிராம் எடை கூடுதலாச் செய்யச்சொல்லுங்க, அப்பத்தான் பாரிக்கமா இருக்கும்ன்னு ஒரே நச்சு. எங்க பட்ஜெட்டையும் தாண்டிப்போயிட்டுது. கையிருப்பிலும் காசு இல்ல. வேற வழியில்லாம உன் ஜிமிக்கியை அடகு வச்சிட்டேன்…”
சுவாதிக்குத் தலை சுற்றியது. “என்ன பெரியம்மா சொல்றீங்க? அது என் பாட்டி எனக்குக் கொடுத்தது. அதை எப்படி நீங்க அடகு வைக்கலாம்?”
“சூழல் அப்படி சுவாதி… இன்னும் ரெண்டு மாசத்துல வயல் அறுவடையானதும் மீட்டுத் தந்துடுறேன்…” என்று அவர் ஏதேதோ சமாதானம் சொன்னார். ஆனால் சுவாதியின் காதுகளில் எதுவும் விழவில்லை. அவள் அடைந்த கோபத்திற்கு எல்லையே இல்லை. பெரியம்மா செய்த நம்பிக்கை துரோகம் அவளைக் குலைத்தது. சுவாதி கோபத்துடன் போனை வைத்தாள். “உறவுன்னா என்னப்பா? ஒருத்தரோட பலவீனத்தை இன்னொருத்தர் லாபமாக்குறதுதானா? ஏன் மனுஷங்க இவ்வளவு சுயநலமா இருக்காங்க?” என்று தன் அப்பாவிடம் பொருமினாள். மாதங்கள் ஓடின. ஆனால் ஜிமிக்கி வந்தபாடில்லை. கண்ணாடியில் முகம் பார்க்கும் போதெல்லாம் அக்காட்சி அவளை வதைத்தது.
ஓராண்டு கழித்து, ஒரு அதிகாலை நேரத்தில் வாசலில் ஆட்டோ நிற்கும் சப்தம் கேட்டது. சுவாதியின் அப்பா கதவைத் திறந்தார். வெளியே கஸ்தூரி நின்றிருந்தார். முகம் வாடிப் போயிருந்தது. அப்பா எதையும் பேசவில்லை. கஸ்தூரி நேராக சுவாதியின் அறைக்குள் நுழைந்தார். சுவாதி அவரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள். கஸ்தூரி மெதுவாக அவள் அருகில் வந்து அவள் கையைப் பற்றிக்கொண்டார். “சுவாதி.. என்னைய மன்னிச்சிருடி. அந்த ஜிமிக்கிய அடகு வச்ச இடத்துல இருந்து மீட்க முடியல. வட்டி ஏறிப்போச்சு. இப்போ அந்த நகை மூழ்கிப்போச்சு மக்கா…” என்று விம்மினார்.
சுவாதிக்குத் தலையே சுற்றுவது போலிருந்தது, எதிர்பார்த்த அளவுக்கு வயலில் வருமானம் கிடைக்காததால் சரியான நேரத்தில் நகையை மீட்க முடியாமல் மூழ்கிப்போனதையும், எப்பாடு பட்டேனும் அதே போல் நகையைச் செய்து கொண்டு தந்தபின்தான் இனி இந்த வாசல்படி ஏறுவேன் என்றும் பெரியம்மா சொல்லிவிட்டுச் சென்றது கூட கவனத்தில் ஏறாமல் உணர்விழந்து அமர்ந்திருந்தாள். துக்கமும் கோபமும் பொங்கிப்பொங்கி வந்தது. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா!! என உள்ளுக்குள் கசந்தது.
இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. கொஞ்சங்கொஞ்சமாக அந்த நினைவுகளையெல்லாம் மறக்க முயன்று கொண்டிருந்தாள் அவள். என்னதான் எதிர்பாராதவிதமாக நடந்திருந்தாலும் தன்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் எனத்தோன்றியது. அப்பாவிடம் சொல்லி அந்தப் பணத்தைக் கொடுத்து, தானே அந்த நகையை மீட்டிருந்தால் மூழ்கியிருக்காதே! எனவும் யோசித்தாள். பாட்டி ஞாபகமாக வைத்திருந்ததை இப்படிக் கை நழுவ விட்டுவிட்டோமே என தன் மீதே கோபம் கொண்டாள். கோபம் கொஞ்சங்கொஞ்சமாக ஆறிப்போயிருந்தாலும் அதன் வடு இன்னமும் இருந்தது.
சரோஜாவுக்குக் குழந்தை பிறந்து, அதற்குப் பெயர் சூட்டும் விழாவுக்கு விருப்பமே இல்லாமல்தான் சுவாதி சென்றிருந்தாள். அங்கே போனால் அவர்களையெல்லாம் பார்க்க நேரிடும், நீறு பூத்திருக்கும் நெருப்பு கனன்று கொள்ள ஆரம்பிக்கும் எனப் பயந்தாள். வீட்டினுள் கஸ்தூரி பெரியம்மா ஒரு மூலையில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தார். சரோஜாவின் புகுந்த வீட்டிலும் நிலைமை சரியில்லை எனக் கேள்விப்பட்டிருந்தாள். ஏதோ பணப் பிரச்சனை வர, சரோஜாவின் நகைகளை எல்லாம் அவளது மாமியார் பிடுங்கிக் கொண்டதாகத் தகவல்.
சுவாதியைக்கண்டதும் கஸ்தூரி ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார். கன்னம் தடவி முத்தினார். “நீ வருவேன்னு காத்திருந்தேன் மக்கா” எனச்சொன்னபோது கண்களில் அதே பழைய பாசம் மினுமினுத்ததைக் கண்ட சுவாதிக்கும் உள்ளுக்குள் ஏதோ கரைந்தது. அவளைத் தனியாகக் கூட்டிப்போனவர், பர்ஸ் உள்ளிருந்து ஒரு சிறிய ரோஸ் நிறக் காகிதப்பொட்டலத்தை எடுத்தார். அதனுள்ளிருந்த ஒரு சிறிய பட்டுத் துணியை விரித்தார். உள்ளே அதே வலை டிசைன் ஜிமிக்கி மின்னிற்று.
சுவாதி அதிர்ச்சியுடன் பார்த்தாள். “இதோ உன் சொத்து சுவாதி. இதை மீட்கத்தான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டேன். அடகு வெச்சிருந்தவங்க கிட்ட கெஞ்சிக்கூத்தாடி மறுபடி தவணை கேட்டு எப்படியோ பணத்தைப்புரட்டி உன்னோட நகையையே மீட்டுட்டேன். உன் பாட்டியையே உங்கிட்ட சேர்த்த மாதிரி தோணுது. இப்போதான் என் மனசு நிம்மதியா இருக்கு,” என்றார் கண்ணீருடன்.
சுவாதி அதை வாங்கிப் பார்த்தாள். ஒரு காலத்தில் அவளது உயிராக இருந்த அந்த ஜிமிக்கி, இப்போது அவளுக்கு வெறும் பொருளாக மட்டுமே தெரிந்தது.
கஸ்தூரியின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. சுவாதியின் கோபம் ஒரு நொடியில் பனியாகக் கரைந்தது.
“பெரியம்மா, இதுக்காக நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டீங்க?” என்றாள் சுவாதி அவரை அணைத்துக்கொண்டு.
“மானம் பெருசு சுவாதி. உன் அன்பும் பெருசு. இந்த நகை நம்ம மனசுல ஏற்படுத்தின விரிசல் ரொம்பப்பெருசு. அதை எப்படியாவது நிரப்பணும், என் பிள்ளை நீ.. என்னை விட்டு விலகிடக்கூடாதுன்னு நினைச்சேன். உன் மனசுல மதிப்புக்குறையாம இருக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். நம்ம பொருளை நம்மோட அனுமதி இல்லாம இன்னொருத்தர் அழிச்சா, மனசு என்ன பாடுபடும்ன்னு புரிஞ்சுக்கிட்டேன். என்னை மன்னிச்சிடு,” என்றார் கஸ்தூரி.
அவள் மெதுவாகச் சொன்னாள், “நகை திரும்ப வந்துட்டுது. ஆனா என் மனுஷங்க மேல இருந்த அந்த நம்பிக்கை போயிட்டுதே? நகை போனா மீட்டுரலாம், ஆனா போன நம்பிக்கையை எப்படிக் கொண்டு வர்றது? இப்போ, இந்தப் பொன் எனக்குப் பெருசாத் தெரியல பெரிம்மா. நீங்க உங்க தப்ப உணர்ந்தீங்களே, அதுதான் எனக்குப் பெரிய நகை. போயிட்டுப்போகுது. காலம் எல்லாத்தையும் ஆத்தும்ன்னு சொல்வாங்க. ஆத்தட்டும்…” என்றவள், கையிலிருந்த நகையை தொட்டிலில் கிடந்த குழந்தையின் கையில் வைத்து அதன் உள்ளங்கையை மூடி, “இது இந்தச் சித்தியோட பரிசு செல்லம்.. வளர்ந்தப்புறம் போட்டுக்கோ” என்றாள். “சரோஜா கழுத்துல, காதுல எதுவுமில்லாம இருக்கா, இதைப்போட்டுக்கச்சொல்லுங்க பெரிம்மா” என கஸ்தூரியின் காதுகளில் கிசுகிசுத்தாள்.
கண்கலங்கப்பார்த்துக்கொண்டிருந்த கஸ்தூரி, குழந்தையை எடுத்து சுவாதியின் மடியில் இட்டாள். கொஞ்சத்தொடங்கிய சுவாதியையும் மடியிலிருந்த குழந்தையையும் ஒரு சேர அணைத்தன அவள் கைகள்.