Home சிறப்பிதழ்கள்மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026மல்லிகா அமர்ஷேக் கவிதைகள் : மராத்தி.

தமிழாக்கம் : புதியமாதவி

வீடு திரும்பும் மனிதர்கள்

தோல்வியுற்ற படைவீரர்கள்
தங்கள் முகாம்களுக்கு
திரும்புவது போல
மனிதர்கள்
தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள்.

பெண்கள்
வீடுகளை அடைகாக்கிறார்கள்.

கூர்மையான அறிவுடன் இருந்த
குழந்தைகள் கூட
பின்னர்
ஈசாப்* போல அடிமையாகிவிடுகிறார்கள்.
அனுசரித்துப் போகும் பழக்கத்தின்
நஞ்சுக்கொடியைச் சுமந்து
சங்கிலிபோல சுழன்று
ஸ்தம்பித்துவிடுகிறார்கள்.
ஓவ்வொருவரும்
அவரவருக்கான தனிப்பட்ட
துயரங்களின் மடியில்
சத்தமின்றித் தூங்கிப்போகிறார்கள்.

வீடுகள் பின் வீடுகள்
நகரங்கள் பின் நகரங்கள்
நாடுகள் பின் நாடுகள்
ஒரு மயக்கமான உறக்கத்தில்
மூழ்கிவிடுகின்றன.

கேள்விகள் ஆணையிடுகின்றன.
அதை மட்டும்
கேட்டு நடக்கும் உலகம்.

எதிர்காலத்தின் குரங்கு
பற்களைக் காட்டி
மார்பைத் தட்டி
குதித்துக் கொண்டிருக்கிறது.

(ஈசாப் – கி/மு 564ல் கிரேக்கத்தில் வாழ்ந்த அடிமை. சிறந்த கதைசொல்லி.

பெருநகரம் 3:
மூழ்கிக்கொண்டிருக்கும் கடல்
பாலியல் நோயில் வாடும் நோயாளி
சலிப்புற்ற மூக்குக்கண்ணாடி
கருமையான அருவருப்பான உருவம்
இவையனைத்தையும் சேர்த்துக் கலந்துவிடுங்கள்
உங்களுக்குக் கிடைக்கும்
பெரிய சூது.

பெருநகரம் 10:
ஜன்னலின் வெளியிலுள்ள ஜன்னல்
ஒரு ஜன்னலின் வெளியில்
இன்னொரு ஜன்னல்.
அந்த ஜன்னலுக்கு ஒரு சட்டம்.
அந்தச் சட்டத்திற்குள்
நாம்.
நமக்குள்ளும்
ஒரு ஜன்னல் இருக்கிறது.
கூட்டுசேரா நாடுகளின் மாநாடு போல
ஜன்னல்கள் அனைத்தும்
தனித்தனியானவை.
அவை
வீட்டிற்குள் இல்லை.
வீட்டுக்கு வெளியிலும் இல்லை.
அவை சுறுசுறுப்பானவை.
கண் சிமிட்டுகின்றன.
நம்மை அழைக்கின்றன.
அல்லது
அவை அம்மாக்கள் போலக்
களைப்பின்றி காத்திருக்கின்றன.
ஜன்னல்கள்
ஈரமான கண்களாக மாறுகின்றன.
ஜன்னல்கள் தத்துவ ஞானிகள்.
மக்கள் துயரத்திலிருக்கும்போது
ஜன்னலுக்கு வெளியே உற்று நோக்குகிறார்கள்.
சொல்ல எதுவும் இல்லாத போது
அல்லது
சொல்ல நிறைய இருக்கும்போது
ஒரு ஜன்னலிலிருந்து
ஒரு ஜன்னலைப் பார்க்கவும் கூட
வாழ்நாள் முழுக்கவும்
வீட்டிற்கு வெளியே இருந்தாக வேண்டும்.

உலகப் பெண்களுக்காக

ஒன்று:
ஒரு பெண் வெங்காயத்தை உரித்தாள்.
ஒரு பெண் பூண்டை உரித்தாள்.
பிறகு
தன்னையே உரித்துக்கொண்டாள்.
பாத்திரத்தில் தன்னைப் போட்டுத்
தன் கல்லீரல் நெருப்பால்
தழல் மூட்டினாள்.
வெந்து முடிவதற்காக
விழி மூடாமல் காத்திருந்தாள்.

இரண்டு:
அந்தப் பெண் நிலத்தைத் தோண்டினாள்.
கிணற்றைத் தோண்டினாள்
தோண்டினாள் தன்னையே.
பச்சைப்பசேலென்று
மாறிக்கொண்டே போனாள் அந்தப் பெண்.

மூன்று:
உள்ளங்கையில் நிரப்பிக்கொண்டாள்
மழையை.
இப்போது மழையும் பெண்ணும்
வானமும் ஒன்றாகிவிட்டனர்.
இதுவும் நல்லதுதான் பெண்ணே;
யார் கண்ணுக்கும் தெரியப்போவதில்லை
உன் கண்ணீர்.

நான்கு:
மெழுகுவர்த்தி
அகர்பத்தி
தீபம்
அங்காரம்
நெருப்பு
எதுவும் தெரியவில்லை எனக்கு.
எனக்குத் தெரிவதெல்லாம்
ஒரு பெண் தீப்பற்றி எரிகிறாள்.

ஐந்து:
அவளுக்காக எந்த உச்சத்தைத்
தேடுவது?
அவள் உடல்
அவள் இருப்பு
தூசி புகையாகி
வானத்தில் பரவுகிறது.
நான் பார்வையை உயர்த்தி
அவளையே நோக்கிக்கொண்டிருக்கிறேன்,
கண்களில் தீப்பொறி
அவள் உலகைத் தாங்கும்
சக்தியாக மாறுவதைக் கண்டு.

ஆறு:
மரங்கள் நகரத்துக்குள் வந்துவிடுகின்றன.
மனிதர்கள் மரங்களை வெட்டுகிறார்கள்.
பின்னர்
அந்த மரங்கள்
காகிதங்களாக மாறுகின்றன.
மேசையாக மாறுகின்றன.
அல்லது
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட
பெண்ணாக மாறுகின்றன.
மிருகங்கள் நகரத்துக்குள் வந்துவிடுகின்றன.
மனிதர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
பின்னர்
அவை அப்படியே நடந்து சென்று
மனிதர்களின் உள்ளுக்குள் சென்று
உறங்கிவிடுகின்றன.
மழை நகரத்துக்குள் வந்துவிடுகிறது.
மனிதர்கள் குடைகளை
எடுத்துக்கொள்கிறார்கள்.
மழை அமைதியாகப்
பெண்களின் விழிகளில் தங்கி
இமை மூடிப் படுத்துக்கிடக்கிறது.

Author

  • புதியமாதவி(மல்லிகா) (பிறப்பு: மார்ச் 17, 1956) மும்பையை வாழிடமாகக் கொண்ட தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், சமூகப் போராளி, அரசியல் விமர்சகர். மும்பைப் பெரு நகர வாழ்வை, மாறிவரும் பெண்களின் உலகத்தை, சமகால சமூக, அரசியல் நிகழ்வுகளை தன் படைப்புகளில் பதிவு செய்தார். மும்பையின் தமிழ் இலக்கிய முகமாகக் கருதப்படுகிறார். மும்பை தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான இலக்கியக் குரலாகவும், முதன்மையான பெண்ணியக் கவிஞராகவும் அறியப்படுகிறார். பல்வேறு அமைப்புகளில் இலக்கிய மற்றும் சமூகப் பங்களிப்புகளை முன்னெடுத்து ஒருங்கிணைத்து வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழியாக்கம் மற்றும் புத்தக விமர்சனம் எனப் பன்முகத் தன்மையுடன் இயங்கி வருகிறார். மதச்சார்பின்மை, சுற்றுச்சூழல், பெண் மறுப்பு அரசியல் போன்ற சமகாலப் பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். நகர வாழ்வின் நெருக்கடிகள், சமூக அரசியல் நிகழ்வுகள் மற்றும் பெண்ணியச் சிந்தனைகளைத் தனது படைப்புகளில் ஆழமாகப் பதிவு செய்யும் புதியமாதவி, தற்காலத் தமிழ் இலக்கியத்தின் ஒரு வலிமையான ஆளுமையாவார்.

You may also like

Leave a Comment