மதங்கமுனியின் ஆசிரமம் சற்றே காலத்தில் உறைந்து நின்றது போல இருந்தது. சபரியின் மரணம் குறித்த செய்தி சுற்றி இருந்தவர்களுக்குத் தெரிந்து அங்கே குழும ஆரம்பித்திருந்தார்கள்.
இராமன் கலங்கி நின்றான். சற்று முன்பு வரை தாய் அன்பின் ஊற்றாக நின்ற ஒரு மூதாட்டி, தன் கண் முன்னே வெறும் உடலாக இருக்கிறாள். ஒரு சக்கரவர்த்தியின் மைந்தன், உலகையே காக்கும் நாயகன், ஒரு வேடுவப் பெண்ணின் உடலுக்கு முன்னால் ஒரு தாயை இழந்த பிள்ளையைப் போல விம்மி நின்றான்.
மரணம் என்பது யார் மனதையும் உருக்கிவிடும் நிக்ழ்வு. துறவியே ஆனாலும் தாயின் மரணம் அவர்களைக் கண்ணீர் சிந்தவே வைக்கும். மரணம் என்பது ஒரு கனி பழுத்துத் தானாகவே காம்பிலிருந்து விடுபடுவது போன்ற செயல். இங்கே சபரியின் உயிர் இந்த உடலெனும் கூட்டை விட்டுப் பிரிந்திருக்கிறது. இதில் துயரப்பட ஏதுமில்லை; மாறாக, ஒரு கடமை நிறைவடைந்ததற்கான அமைதியே அங்கே நிலவுகிறது. பல்லாண்டு காலக் காத்திருப்பு, லட்சியம் நிறைவேறிய அந்தத் தருணத்தில் மரணம் ஒரு வரமாக வந்து அவளைத் தழுவிக்கொண்டது.
இராமன் இதையெல்லாம் அறியாதவன் அல்லன், ஆனால் அவன் மனதை இப்போது சூழ்ந்திருப்பது சபரி என்னும் தாயின் மரணத்தின் சோகம்.
இராமனின் கண்களில் கண்ணீர் பூத்து நிற்பதைக் கண்ட இலக்குவன் ஆதரவாகத் தோள்களைப் பற்றிக்கொண்டான். அழுகை என்பது இறந்தோரின் பிரிவிற்காகவா அல்லது அந்த அன்பின் ஸ்பரிசம் இனி இல்லை என்ற சுயநலத்திற்காகவா? இராமன் அந்தச் சுயநலம் காரணமாகக் கண்ணீர் வடிக்கிறானா?
“இது ஒரு வகையில் சுயநலம்தான் இலக்குவா. தந்தையைப் போன்ற ஜடாயு நமக்காகப் போரிட்டு இறந்தார். இதோ இந்தத் தாய் என்னைப் பார்ப்பதற்காக இத்தனைக் காலம் உயிரைப் பிடித்துக் காத்திருந்தாள். இத்தனை அன்பிற்கு நான் என்ன செய்தேன்? இவர்கள் இறப்பிற்கு நான் காரணமானதைத் தவிர” என்று கலங்கினான் இராமன்.
இலக்குவன் பேச ஆரம்பித்தான்.
“அண்ணா, காலம் என்பது ஒரு மகாநதி; அதில் மரணம் என்பது ஒரு சுழி. ஆன்மா அந்தச் சுழியில் சிக்கி மறையும் பிம்பம்; அது நதியின் வேறொரு பகுதியில் மீண்டும் ஒரு அலையாக எழும். சபரியோ அல்லது சடாயுவோ மறைந்துவிடவில்லை; அவர்களின் தூய அன்பில் நம்முடன் என்றும் வாழ்கிறார்கள். சிரஞ்சீவியாக வாழ்கிறார்கள்” என்றான்.
இராமன் மெல்ல சபரியின் உடலின் அருகே அமர்ந்தான். சபரியின் முகத்தில் தெரிந்த அந்தப் பேரமைதி, மரணம் என்பது ஒரு தண்டனை அல்ல, அது ஒரு நீண்ட தவத்தின் முற்றுப்புள்ளி என்பதை அவனுக்கு உணர்த்தியது.
மரணம் என்பது ஆடையைக் களைவதைப் போன்றது என்ற எதார்த்தம் இராமனின் மனக்கண்ணில் நிழலாடியது. இத்தனை காலம் இராமனுக்காகவே காத்திருந்து, ஒவ்வொரு கனியையும் சுவைத்துச் சேகரித்த அந்த விரல்கள் இப்போது ஓய்வெடுக்கின்றன. அந்த உடலுக்கும் உயிருக்கும் இருந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது.
“ஆம் இலக்குவா, காலம் என்ற மகா கலைஞன் ஒரு சித்திரத்தை வரைந்து முடித்ததும் தூரிகையைக் கீழே வைப்பதைப் போல, சபரியின் வாழ்வை அழகாகச் செதுக்கி முடித்துவிட்டு மரணமெனும் ஓய்வைத் தந்திருக்கிறான். இந்த உடல் ஒரு கருவி; காரியம் முடிந்ததும் கருவி ஓய்வு கொள்கிறது” என்றான் இராமன்.
சபரி வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் அன்பால் ஆனது, அதனால் அவளது மரணம் ஒரு மங்கலமான விடைபெறல். துக்கம் என்பது அறியாமையின் வெளிப்பாடு. இயற்கை என்னும் பேரொளி சகலத்தையும் ஏற்கக்கூடியது. சபரியின் ஆன்மா இப்போது அந்தப் பேரொளியில் கலந்திருப்பதை இராமன் உணர்ந்தான்.
இராமன் மெல்ல எழுந்து சபரியின் உடலை நோக்கிக் கைகூப்பினான். சபரி தன் வாழ்நாள் முழுவதும் இராமன் என்ற நாமத்தைச் சுவாசித்து, தன் கடனைத் தீர்த்துவிட்டாள்.
சபரிக்கான இறுதி மரியாதைகளைச் செலுத்திவிட்டு, இராம இலக்குவர்கள் தெற்கு நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். இராமனின் கால்களில் ஒரு மெல்லிய தொய்விருந்தது. அன்னை கௌசல்யையின் அரவணைப்பைத் தேடும் ஒரு ஏக்கம் அவன் மௌனத்தில் வழிந்தது.
“இலக்குவா, நம் அன்னையர்கள் நம்மைப் பிரிந்து எவ்வளவு வாடி இருப்பார்கள் என்பதை நினைத்தால் என் மனது உடைந்து தூள் தூளாகிறது. அனைவரையும் துன்பத்திற்கு உள்ளாக்கிவிட்டேனோ என்ற குற்ற உணர்வு என்னை வாட்டுகிறது” என்றான் இராமன்.
இலக்குவனின் கைகள் இராமனின் தோளை ஆதரவாகப் பற்றிக்கொண்டன. அவன் ஏதும் பேசவில்லை. பேச்சுமொழிக்கு இங்கே வேலை இல்லை என்பதை இலக்குவன் அறிவான். அவர்களின் பயணம் மெதுவாகவே இருந்தது. அவனுக்கும் தன் அன்னையர்களின் சிந்தனை மனதில் ஊறிக் கிடந்தது. ஆனாலும் அந்தச் சிந்தனைகளையும் மீறி உள்ளுணர்வு எச்சரிக்க, இலக்குவன் சொன்னான்:
“அண்ணா, நாம் சஞ்சலப்பட இது நேரமில்லை. நம்மைச் சில கண்கள் கண்காணிக்கின்றன. நம்மைச் சுற்றி ஏதோ நடக்கிறது. நாம் எதற்கும் ஆயத்தமாக இருக்க வேண்டிய தருணம் இது” என்றான்.
அவர்கள் ரிஷ்யமுக மலையின் அடிவாரத்தை நெருங்கியபோது, காட்டின் சுபாவம் மாறியிருந்தது. வழக்கமான இயற்கையின் ஒலிகளுக்கு இடையே, யாரோ அவர்களைத் தொடர்வதைப் போன்ற ஒரு அந்நியச் சலசலப்பு நிலவியது.
கலைந்து செல்லும் பறவைகளும், மிரண்டு ஓடும் விலங்குகளும் ஏதோ ஒரு வேவு பார்க்கும் கண்களை உணர்த்தின. இராமன் நின்றான். அவனது கரம் அநிச்சையாகக் கோதண்டத்தின் நாணைப் பற்றிச் சுண்டிவிட்டது. அந்த ‘டங்’ என்ற நாணொலி, மலை முகடுகளில் இடியோசையாக எதிரொலித்தது.
“இது என் கட்டளை. யாராக இருந்தாலும் எங்கள் முன் வந்து நிற்க வேண்டும். அடுத்த எச்சரிக்கை என்னிடம் இருந்து வராது.. இது சத்தியம்!” என்று இராமன் முழங்கினான்.
சட்டென்று அந்தச் சலசலப்பு நின்றது. பாறை இடுக்குகளில் இருந்து ஒரு வேடுவ இளைஞன் வெளிப்பட்டான்.
அந்த இளைஞனின் தோற்றம் விசித்திரமாக இருந்தது. மார்பில் புலித்தோல், கையில் வில், தலையில் ஒரு மயிற்பீலி என ஒரு முழுமையான காட்டுவாசியாக அவன் காட்சியளித்தான். ஆனால், அவனது கண்களில் இருந்த ஒளியும், அவன் பேசிய தெளிவான மொழியும் அவன் ஒரு சாதாரண வேடுவன் அல்ல என்பதை உணர்த்தின.
இலக்குவன் கை தானாக உடைவாளை இறுகப்பற்றியது. அவன் கண்களில் சந்தேகத்தின் சாயல் முழுமையாகப் படர்ந்து கிடந்தது. இலக்குவன் அவனைச் சற்றே விரோதத்துடன் பார்த்தான்.
(தொடரும்)