மால் எனத் தமிழில் அழைக்கப்படும் பல்வணிக அங்காடிக்கும், மால் என அழைக்கப்படும் மாலவன் திருமாலுக்கும் என்னென்ன ஒற்றுமைகள் என யோசித்தான் நாகராஜ்.
மால் – பல்வேறு நகரங்களில் பரவி இருந்தாலும் எல்லாம் விதவித டைமென்ஷன்கள், விஸ்தீரணம் என்றாலும் அடிப்படை ஒன்றே. பல மாடிகளாய் இருக்கும். நடுவில் பெரிய இடைவெளி. ஒவ்வொரு மாடிக்கும் லிஃப்ட், எஸ்கலேட்டர் அண்ட் கடைகள். விலை உயர்ந்தவை முதல் கொஞ்சம் விலை குறைந்தவை வரை. அதுவும் பிராண்டட். கோ கலர்ஸ், ஜாக்கீஸ், பாட்டா, ட்ரெண்ட்ஸ், லைஃப் ஸ்டைல் எனப் பல கடைகள். மக்கள் விரும்பி வருவார்களா என்றால், அவர்கள் விரும்புவது வெயிலிலிருந்து தப்பித்து வரும் ஏசி குளிர்ச்சியை; மற்றும் குழந்தைகள் விரும்புவது ஃபுட் கோர்ட் மற்றும் விளையாடும் இடம்.
மால் எனப்படும் விஷ்ணு பற்றி ஆண்டாள் என்ன சொல்லியிருக்கிறாள்?
‘நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மாவாய்… நாற்றத் துழாய் முடி நாரணன் நம் மால்…’ அதாவது அந்த நாராயணன் நம்முடைய மால்; நம் மனத்தை மந்தஹாசம் கொண்ட மதுர வதனத்துடன் மயக்குபவன்… (இந்த பல்வணிக மாலும் அப்படித்தானே!). ‘நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனாம்..’ நாம் போற்றப் பலவித பரிசுகள் தருவான். மாலில் இருக்காத கடைகளும் உண்டோ வாங்குவதற்கு? பல்வித அவதாரங்களை விதம் விதமாக எடுத்தவன் மால்… பல்வித வண்ணமாய் மால்கள் இருக்கின்றன. சிறுவர் முதல் பெரியவர் வரை (கொஞ்சம் பர்ஸ் பார்த்து) விரும்புவர். என்ன ஒன்று, மாலவன் எல்லாருக்கும் அருள் தருவார்; மால் எல்லாரிடமிருந்தும் (கொஞ்சம் ஜாஸ்தியாகவே) பொருள் பெற்றுக்கொள்ளும்! (நிறையச் செலவாகும்).
இப்படி நினைப்பது தெரிந்தால் பாவனி என்ன சொல்வாள் என நினைத்துப் பார்த்தான் நாகராஜ். கொஞ்சம் சிரிப்பும் அரும்பியது.
நாகராஜ் நின்றுகொண்டிருந்தது கோயம்புத்தூர் ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலின் உள்ளே. இரண்டாவது மாடி. அருகில் அவன் பையன் ரோஹித்.
நாகராஜின் அக்கா நித்ய கல்யாணியிடம் (சுருக்கமாக கல்ஸ் அக்கா) சில நாட்கள் ரோஹித்தை விட்டிருந்தான். அவனை அழைத்துப் போவதற்காகப் பாவனியும் நாகராஜும் வென்யூ ஓட்டி வந்திருந்தனர். மாலுக்கு வந்த இடத்தில் கல்ஸும் பாவனியும் ஜாக்கீஸின் உள் – உள்ஸ் (உள்ளாடைகள்) வாங்குவதற்குச் சென்றிருக்க, வெளியில் நின்றிருந்தான் நாகராஜ். அருகில் கொஞ்சம் நடந்தும் ஓடியும் சென்றுகொண்டிருந்த ரோஹித்தின் கண்களில் பீட்சா மற்றும் ஐஸ்கிரீம் கனவுகள்.
”என்ன வேடிக்கை பார்த்துண்டு இருக்கீங்களா?” எனப் பாவனி வெளிவர, கூடவே கையில் பைகளுடன் கல்யாணி அக்கா.
கல்யாணி அக்காவின் கணவர் வாசுதேவன் கோயம்புத்தூரிலேயே ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சீனியர் மேனேஜராக இருந்தவர். விருப்ப ஓய்வு பல வருடங்கள் முன்பே வாங்கி வடவள்ளியில் பிளாட். அவரது அப்பாவிற்குச் சில பல வீடுகள் கோவையிலேயே இருந்ததால் அதன் வாடகை மற்றும் வாசுவின் பென்ஷன் பணம் வர பிரச்சினை இல்லை. அவர் வயது 58. அவருக்கும் அக்காவிற்கும் எட்டு வயது வித்தியாசம். ஒரே ஒரு பையன் நரேஷ், இருப்பது கனடாவில். இப்போதுதான் சிட்டிசன் ஆகி இருக்கிறான். வேறு யாரையாவது பார்த்து அவன் கல்யாணம் பண்ணும் முன் அவனுக்குச் செய்ய வேண்டும்; பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
”அடுத்து எங்க போகலாம் பாவனி?” கல்யாணி கேட்க, “சோச் போலாமா அக்கா? சேல் போர்டு பார்த்தேன்” என்றாள் பாவனி.
“அத்தை பீட்சா?” – ரோஹித். “இந்தக் கடை முடிச்சுட்டுப் போலாம் கண்ணா” – கல்ஸ்.
இரண்டாவது மாடியிலிருந்து எஸ்கலேட்டரில் மூன்றாவது மாடி செல்லுங்கால், கால் வைத்து கொஞ்சம் நடக்கையில் எதிரில் ஒரு நபர் லேசாக நாகராஜை மோத, அவன் விலகி அவரைப் பார்த்து விழிகளில் ஆச்சரியம் பொங்க, “நீங்க… நீங்க… சின்ராசுதானே?” எனக் கேட்டான்.
சின்ராசு நல்ல உயரம். தலையில் மிளகு, உப்பு கலந்த நிற முடி. நல்ல சிறந்த அடர்த்தியான மீசை; அவற்றிலும் ஆங்காங்கே நரைகள். மொழுக் முகம். ஹெஃப்டி பாடி. அரைக்கை வெள்ளைச் சட்டை. ராம்ராஜ் பட்டை கருநீலக்கரை வேட்டி. நெற்றியில் குட்டி விபூதி. கண் சுருக்கி, “நீங்க… நீ… நீ?”
“ஏங்க…. நான் நாகாஸ். மதுரை பக்கத்து வீடு. உங்க தம்பி செல்வாவோட பிரெண்ட்.”
“அட… எப்படி வளர்ந்துட்ட நாகா! அடையாளமே தெரியலை போ. ஃபேமிலியெல்லாம் சௌக்கியமா? அம்மா அப்பாவெல்லாம் ஓகேயா?”
“அம்மா நாலு வருஷம் முன் போயிட்டாங்க.. நீங்க இங்கிட்டுதான் இருக்கீங்களா?”
“ஆமா.. ஒப்பணக்கார ஸ்ட்ரீட்டில் தான் என் மெட்டல் பிசினஸ் ஹோல்சேல் கடை இருக்கு. நீ இங்ஙனக்குள்ற எங்க..?”
“அக்கா கல்யாணி தெரியுமோன்னோ? அவங்க இங்கதான் பல வருஷமா இருக்காங்க சின்ராஸ் அண்ணே. தோ போய்க்கிட்டே இருக்காங்க.. கூப்பிடறேன்.” கொஞ்சம் வேகமாய் ‘சோச்’சை நோக்கி ராம பாணங்கள் போலப் போய்க்கொண்டிருந்த கல்ஸ், பாவனியைப் பார்த்து ஓடினான் நாகாஸ்.
நாகாஸ் வளர்ந்தது, படித்தது எல்லாம் மதுரை. பக்கத்து வீட்டுச் செட்டியார் பையன்தான் இந்தச் சின்ராசு. செட்டியாருக்கு ஆறேழு பிள்ளைகள்; இவன் இரண்டாவதோ மூன்றாவதோ. கடைக்குட்டி செல்வராஜ் இவனுடைய பிளஸ் டூ செட். வேறு வேறு பள்ளி.
கல்யாணி அக்கா புதிர்ப்பார்வையோடு திரும்பி வந்து கொண்டிருக்க, பாவனியின் கைப்பிடித்து ரோஹித்.
“ஹலோ.”
“ஹலோங்க..” கொஞ்சம் வெட்கப்பட்டார் சின்ராசு, கல்யாணியிடம் பேசி இராததால். “சௌக்கியமாங்க? லீலா அண்ணி எப்படி இருக்காங்க..?”
“சௌக்கியமுங்கோ.. பொண்ணுக்கும் கல்யாணம் கட்டியாச்சு. சின்னவேடம்பட்டியில் ஒரு மிராசுதார், இல்ல ரிச் மேன்னு சொல்லலாம்; ஒரு பேத்தி இருக்கா. நீங்க?”
“எனக்கு ஒரு பையன்ங்க. அவன் இப்போ கனடாவில் இருக்கான்.” கல்யாணி அக்கா சொல்கையிலேயே அவர் உடம்பில் ஒரு பதற்றம் இருப்பதை நாகாஸால் உணர முடிந்தது.
பின் சம்பிரதாயமாய் கல்யாணி அக்கா – வாசுதேவன் பற்றி, வடவள்ளி பற்றிப் பேச, சின்ராசுவும் பேச, நாகராஜ், பாவனி, ரோஹித் மௌன சாட்சியாய் நின்றார்கள்.
”நீங்க எங்க இருக்கீங்க?” – கல்யாணி அக்கா. “வீடு காரமடையிலுங்கோ. கடைக்குப் பக்கத்துலயே ஒரு சின்ன பிளாட் எடுத்திருக்கேன். டெய்லி நைட் காரமடை போய்டுவேன். நீங்க வடவள்ளிதானுங்களே.. ஒரு எட்டு காரமடைப் பக்கம் வந்தா வாங்கோ,” என்றார் சின்ராசு.
”கண்டிப்பா. நீங்களும் வடவள்ளிக்கு வாங்கோ” என விடைகொடுத்த கல்யாணி அக்காவின் கண்கள் சற்றே அலைபாய்ந்ததைக் கவனித்தான் நாகாஸ்.
மறுபடி திரும்பி நடக்கையில், “அக்கா சோச்… போகவேண்டாமா? ஏன் அந்தப் பக்கம் போறீங்க?” கல்ஸ் எதுவும் பேசாமல், “ஃபுட் கோர்ட் போயிடலாம் இவளே..”
ஃபுட்கோர்ட்டில் அமர்ந்து ரோஹித்திற்குப் பீட்சா, மற்றவர்களுக்கு விதவித உணவு என ஆர்டர் செய்தபோதும் சரி, சாப்பிட்டபோதும் சரி, கல்ஸ் அக்கா பேசவே இல்லை. பாவனி எதுவோ கேட்க, அதற்கு மட்டும் கொஞ்சம் பதில் வந்தது.
“அக்கா.. சின்ராசு கூட முன்னப் பின்னப் பேசி இருக்கியா?” – பேசி இருக்க மாட்டார்.
“எங்க.. பார்த்ததோட சரி.. அவங்க கல்யாணம் குஜராத்தி சமாஜில் தானே நடந்துச்சு; அப்பத்தான் லீலா அண்ணியையும் பார்த்தேன். அதுக்கப்புறம் ஆறு மாசத்துல எனக்கே ஆகிடுச்சே!”
“நீ அப்படியே இருக்கேன்னு சொன்னாராக்கா. எப்படி?”
“எங்கடா சொன்னான்? சும்மா ரீல் விடாதே!” சின்ராசு சொன்னதைக் கேட்டிருந்தான் நாகாஸ். கொஞ்சம் புன்சிரித்தான்.
“அது சரி.. இந்தாளுக்கு அத்திம்பேர் வயசு இருக்குமா? அதுக்குள்ற இவ்வளோ நரைச்சுப் போச்சு..”
“ஆமாமா. உன் அத்திம்பேர் டை உபயம்.. உனக்கென்ன தெரியும்..?”
பாவனியும் நாகராஜும் கண்களால் பேசிப் புன்சிரித்துக்கொண்டனர்.
கீழ் கார்பார்க்கிங் வந்து ஹூண்டாய் வென்யூவை எடுத்து வெளியே வருகையில், “அக்கா உன்னை ஒண்ணு கேட்கணும்” என நாகாஸ் ஆரம்பிக்க, பாவனி கையில் செல்லுடன் இருந்த ரோஹித்தைக் காட்டிக் கிள்ளினாள்.
”சரி” என யூடியூப் போட, சுதா ரகுநாதன் “சென்று வா நீ ராதே” என ஆரம்பிக்க, போன் பார்த்துக்கொண்டிருந்த ரோஹித், ”அப்பாவ்.. இங்கிலீஷ்” எனக் கத்தினான். நாகராஜுக்குக் கர்நாடக இசை மற்றும் தமிழ்ப்பாடல் பிடிக்குமென்றால், ரோஹித்திற்கு ஒன்லி இங்கிலீஷ். பாட்டு கேட்கப் பிடிக்கும்; நாகாஸுக்கு இங்கிலீஷ் பாட்டுப் பார்க்கப் பிடிக்கும்! அந்தச் சமயங்களில் பாவனியை ஓட்ட வைத்து விடுவான்.
நிறுத்தி ‘One, One, One… Talking in my sleep’ என டுவா லிப்பாவைப் போட, ரோஹித் ”அப்பா ரொம்பக் கெத்தா ப்ரிட்னி போடு” எனக் கேட்க, ப்ரிட்னி ஸ்பியர்ஸ் பாட்டுப் போட்டான்.
ஒரு மணி நேரத்தில் வடவள்ளி வர, லிஃப்டிற்குப் பாவனியும் ரோஹித்தும் முன்னால் செல்ல, காரைப் பார்க் பண்ணி அவன் வருவதற்காகப் பின் தங்கிய கல்ஸ் அக்காவிடம் நாகாஸ், “அக்காவ்.. உண்மையைச் சொல்லு.. சின்ராசு கிட்ட உனக்கு ஒரு கிரஷ் உண்டுதானே? அவனைச் சைட்டடிச்சிருக்கதானே?..”
“உதைப்பேன்டா.. அவன் தான் என்னைச் சைட்டடிச்சான். ஆனாக்க.. அப்போல்லாம் ஜம்னு இருப்பான்!..”
“இப்போக்கா?..”
“சே.. உன் அத்திம்பேரை விடக் கிழமா இருக்கான்!” எனச் சொன்னபடி லிஃப்ட் பார்த்து நடந்தாள் கல்யாணி அக்கா.