இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. அதாவது முன்பு ஒரு காலத்திலே..
ஜப்பானின் ஒரு சிறிய கிராமத்தில், ஒரு நல்ல தாத்தாவும் அவருடைய மனைவியான பாட்டியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்களுடைய சிறிய நிலத்தில் விவசாயம் செய்து, அதில் கிடைக்கும் உணவை உண்டு மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை என்ற வருத்தம் மட்டுமே இருந்தது. மற்றபடி, அவர்களின் வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அவர்களுக்கு உற்றார், உறவினர், நண்பர்கள் என்று யாருமில்லை. ஷிரோ என்ற ஒரு நாயை மட்டுமே செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார்கள். தாத்தாவும் பாட்டியும் தங்கள் முதிர் காலத்தில், சேர்த்து வைத்திருந்த அத்தனை அன்பையும் ஷிரோவுக்குக் கொடுத்தார்கள்.
அவர்கள் ஷிரோவை ரொம்பவே நேசித்தார்கள் . அவர்களுக்குச் சாப்பிட நல்ல உணவு கிடைத்தால், அதை அவர்கள் உண்பதை விட ஷிரோவுக்குக் கொடுப்பதையே விரும்பினார்கள். ஷிரோவே அவர்களின் குழந்தை போல் ஆகிவிட்டது. ஷிரோ என்றால் “வெள்ளை” என்று பொருள்; அதன் நிறத்தால்தான் அதற்கு அந்தப் பெயர் வந்தது. அது ஒரு ஜப்பானிய வகை நாய், பார்ப்பதற்கு ஒரு சிறிய ஓநாய் போல இருக்கும்.
தாத்தா வயலில் வேலை முடிந்து திரும்பியதும், இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, அதில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு வீட்டின் முன் பகுதிக்கு வருவார். ஷிரோவும் தாத்தாவுக்காகவும், மாலை நேரச் சிற்றுண்டிக்காகவும் அங்கே காத்துக் கொண்டிருக்கும். தாத்தா “சின், சின்!” (அதாவது ‘எழுந்து நில்’ என்று சொல்வது போல) என்று சொல்ல, ஷிரோ தன் பின்னங்கால்களால் எழுந்து உட்கார்ந்து கெஞ்சும். அப்போது தாத்தா அதற்கு உணவைக் கொடுப்பார். இந்த நேரம்தான் தாத்தாவுக்கும் ஷிரோவுக்கும் தினமும் மிகவும் மகிழ்ச்சியான நேரம்!
இந்த நல்ல தாத்தா பாட்டிக்கு அடுத்த வீட்டில், இன்னொரு வயதானவரும் அவருடைய மனைவியும் வாழ்ந்தார்கள். அவர்கள் இருவரும் மிகவும் பொல்லாதவர்களாகவும் , கொடுமைக்காரர்களாகவும் இருந்தனர்.
அவர்கள் தங்கள் நல்ல அண்டை வீட்டுக்காரர்களையும், செல்லப் பிராணியான ஷிரோவையும் வெறுத்தார்கள் . ஷிரோ எப்போதாவது அவர்களின் சமையலறைப் பக்கம் வந்தால், அதை உதைப்பார்கள் அல்லது அதன்மேல் எதையாவது தூக்கி எறிவார்கள், சில நேரங்களில் அடித்து காயத்தையும் ஏற்படுத்துவார்கள்.
ஒரு நாள், ஷிரோ தாத்தாவின் வயலில் ஒரு மரத்தின் அருகே நின்று நீண்ட நேரம் குரைத்துக்கொண்டே இருந்தது. ‘பறவைகள் ஏதும் தானியங்களைச் சாப்பிட வந்துவிட்டனவா?’ என்று நினைத்த தாத்தா, என்னவென்று பார்க்க ஓடினார்.
தாத்தாவைக் கண்டதும், ஷிரோ வாலை ஆட்டியவாறு ஓடி வந்து, தாத்தாவின் ஆடையைப் (கிமோனோ – ஜப்பானிய ஆடை) பிடித்து, ஒரு பெரிய மரத்தின் அடியில் இழுத்துச் சென்றது. அங்கே அது மிகுந்த ஆர்வத்துடன் தன் கால்களால் தோண்ட ஆரம்பித்தது. தோண்டும்போது மகிழ்ச்சியில் ஊளையிட்டது .
தாத்தா திகைப்புடன் நின்று பார்த்தார். ஷிரோ தொடர்ந்து குரைத்துக்கொண்டே, தோண்டிக்கொண்டே இருந்தது. ‘மரத்தின் அடியில் ஏதோ மறைந்திருக்கலாம், நாய் அதைக் கண்டுபிடித்திருக்கலாம்’ என்று நினைத்த தாத்தா, வீட்டிற்கு ஓடிச் சென்று மண்வெட்டியை எடுத்து வந்தார்.
அவர் அந்த இடத்தில் தரையைத் தோண்ட ஆரம்பித்ததும், அவருக்குப் பெரிய ஆச்சரியம்! அங்கே பழங்கால நாணயங்களின் ஒரு குவியலைக் கண்டார்! அவர் ஆழமாகத் தோண்டத் தோண்ட, மேலும் பல தங்க நாணயங்களைக் கண்டுபிடித்தார்.
தாத்தா மகிழ்ச்சியில் மூழ்கியதால், மூங்கில் வேலி வழியாகத் தன்னைப் பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரரின் கோபமான முகத்தைக் கவனிக்கவில்லை.
கடைசியில், எல்லாத் தங்க நாணயங்களும் தரையில் பளபளவென்று கிடந்தன. ஷிரோவும் பெருமையுடன் நிமிர்ந்து உட்கார்ந்து, ‘நான் நாய்தான் என்றாலும், நீங்கள் காட்டும் பாசத்திற்கு இது என் பரிசு’ என்று சொல்வது போலத் தாத்தாவைப் பார்த்தது.
தாத்தா ஓடிச் சென்று பாட்டியை அழைத்தார். இருவரும் சேர்ந்து அந்தப் புதையலை வீட்டிற்குக் கொண்டு சென்றனர். ஒரே நாளில் அந்த ஏழை முதியவர் பணக்காரர் ஆனார். இந்த விசுவாசமான நாயின் மீது தாத்தா வைத்திருந்த நன்றிக்கு அளவே இல்லை. முன்பு இருந்ததைவிட அதை இன்னும் அதிகமாக நேசித்தார் .
புதையல் கண்டுபிடிக்கப்பட்டதைப் பார்த்து பொறாமைப்பட்ட பக்கத்து வீட்டுக்கிழவருக்கு, அதே அதிர்ஷ்டம் தனக்கும் வேண்டும் என்ற பேராசை வந்தது. சில நாட்களுக்குப் பிறகு, அந்தக் கிழவர் தாத்தாவின் வீட்டிற்குச் சென்று, ஷிரோவைத் தனக்குக் கொஞ்ச நேரம் கடன் கொடுக்குமாறு மிகவும் நைச்சியமாகவும் மரியாதையாகவும் கேட்டார்.
பொல்லாத பக்கத்து வீட்டுக்காரர் தன் செல்ல நாயை என்றுமே நேசித்ததில்லை, பார்க்கும்போதெல்லாம் அதை அடிக்கவே நினைப்பார் என்பது தாத்தாவுக்குத் தெரியும். ஆனால் தாத்தா இரக்க குணம் கொண்டவர் என்பதால், மறுக்க முடியாமல், நாயை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் அதைக் கடனாகக் கொடுக்கச் சம்மதித்தார்.
அந்தத் தீய கிழவர் தன் வீட்டிற்குத் திரும்பி, மண்வெட்டியை எடுத்துக்கொண்டு, ஷிரோவை இழுத்துக்கொண்டு தன் வயலுக்குச் சென்றார். அங்கே இருந்த ஒரு மரத்தின் அடியில் சென்று, நாயைப் பார்த்து மிரட்டினார்.
“உன் எஜமானனின் மரத்தடியில் தங்க நாணயங்கள் கிடைத்தால், என் மரத்தின் அடியிலும் கிடைக்க வேண்டும்! அதைக் கண்டுபிடி! இல்லையென்றால் அடி விழும்!” என்று சொல்லி அடிக்க ஆரம்பித்தார்.
அந்த அருவருப்பான மனிதனின் பிடியிலிருந்து விடுபட, ஷிரோ பயத்தில் தரையைத் தோண்ட ஆரம்பித்தது. ‘தங்கம் கிடைத்துவிட்டது!’ என்று மகிழ்ந்த கிழவர், ஷிரோவைத் தள்ளிவிட்டுத் தானே தோண்ட ஆரம்பித்தார். ஆனால் அங்கே துர்நாற்றம் வீசும் குப்பைக் கூளமும், எருவும்தான் புதைக்கப்பட்டிருந்தது!
ஏமாற்றமும், கோபமும் அடைந்த கிழவர், ஷிரோவைக் குறை கூறினார் . பேராசை காரணமாக உண்டான கோபத்தாலும், தாத்தாவின் அதிர்ஷ்டம் தனக்குக் கிடைக்காமல் போனதால் உண்டான ஏமாற்றத்தாலும், அவர் மண்வெட்டியால் ஷிரோவை அடித்துக் கொன்றார். பிறகு நாயின் உடலை அந்தக் குழியிலேயே போட்டு மண்ணால் மூடினார்.
பல நாட்கள் ஆகியும் ஷிரோ திரும்பாததால், தாத்தா கவலைப்பட்டுப் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். அந்தக் கிழவனார், தான் ஷிரோவைக் கொன்றுவிட்டதாக, வெட்கமே இல்லாமல் சொன்னார்.
இந்தக் கொடூரமான செய்தியைக் கேட்டுத் தாத்தா மனம் உடைந்து அழுதார். அப்போதும் பக்கத்து வீட்டுக்காரரைத் திட்ட முடியாத அளவுக்கு அவர் நல்லவராக இருந்தார். ஷிரோ புதைக்கப்பட்டிருந்த மரத்தை அதன் நினைவாகத் தனக்குக் கொடுக்கும்படிக் கேட்டார்.
குற்ற உணர்வால் அந்தக் கிழவர் மரத்தைக் கொடுக்கச் சம்மதித்தார். தாத்தா அந்த மரத்தை வெட்டி வீட்டிற்குக் கொண்டு சென்று, அதன் அடித்தண்டிலிருந்து ஒரு உரலைச் செய்தார்.
தாத்தாவும் பாட்டியும் ஷிரோவின் நினைவாக ஒரு படையல் இட எண்ணி, பாட்டி உரலில் அரிசியைப் போட்டார். தாத்தா அதை இடித்து மோச்சி (ஜப்பானிய தின்பண்டம்) செய்ய ஆரம்பித்தவுடன், ஒரு அதிசயம் நடந்தது!
உரலில் இருந்து மோச்சி கொஞ்சம் கொஞ்சமாக தானாகவே அளவில் பெரியதாகவும் அதிக எண்ணிக்கையிலும் வெளிவர ஆரம்பித்தது. மோச்சிகள், யாரோ ஒரு கண்ணுக்குத் தெரியாதவர் வேலை செய்வதுபோல உரலிலிருந்து தாமே வெளியே வந்தன.
இது ஷிரோ தங்கள் அன்பிற்காக அளித்த வெகுமதி என்று தாத்தாவும் பாட்டியும் புரிந்துகொண்டார்கள். அவர்கள் மோச்சியைச் சுவைத்துப் பார்த்தார்கள். அது மிகவும் சுவையாக இருந்தது. அந்த உரல் தொடர்ந்து மோச்சிகளை வழங்கியதால், அதன்பின், அவர்களுக்கு உணவைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.
இந்தப் புதிய அதிர்ஷ்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பொறாமை கொண்ட பக்கத்து வீட்டுக்காரர், முன்பு இருந்ததை விட அதிகப் பேராசையும் கொண்டார். தாத்தாவிடம் சென்று, ஷிரோ இறந்ததற்கு வருத்தம் தெரிவிப்பது போல் நடித்து, அந்த உரலைத் தனக்குக் கொஞ்ச நேரம் கடன் கொடுக்குமாறு கேட்டார்.
தாத்தாவுக்குக் கொடுக்க விருப்பம் இல்லை என்றாலும், தன் இரக்க குணத்தால் மறுக்க முடியாமல் சம்மதித்தார். பொறாமைக்காரக் கிழவர் உரலை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அவர் மோச்சி செய்ய முயன்றபோது, அதிலிருந்து துர்நாற்றம் வீசும் ஒரு பொருள் மட்டுமே வெளியே வந்தது. கோபத்தில், அவர் உரலை உடைத்து, நெருப்பு மூட்டி எரித்துவிட்டார்.
பல நாட்கள் கழித்து, உரலுக்காகக் காத்திருந்த தாத்தா, பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்று கேட்டார். உடைக்கப்பட்ட உரலின் துண்டுகளால் நெருப்பு மூட்டப்பட்டிருப்பதைக் கண்ட தாத்தாவிடம், அந்தக் கிழவர், “உரலை உடைத்து எரித்துவிட்டேன். அதிலிருந்து நாற்றமடிக்கும் பொருள் மட்டுமே வந்தது!” என்று சொன்னார்.
தாத்தா வருத்தப்பட்டாலும் கோபப்படாமல், “பரவாயில்லை. உனக்கு மோச்சி தேவைப்பட்டால், என்னிடம் கேட்டிருக்கலாம். இப்போது தயவுசெய்து அந்த உரலை எரித்த சாம்பலை மட்டும் கொடுங்கள். நான் அதை என் ஷிரோ நினைவாக வைத்திருக்க விரும்புகிறேன்” என்று கேட்டார்.
பக்கத்து வீட்டுக்காரரும் உடனடியாக ஒரு கூடை நிறையச் சாம்பலைக் கொடுத்துவிட்டார்.
கொஞ்ச நாள் கழித்து, எதேச்சையாக தாத்தா அந்தச் சாம்பலில் கொஞ்சம் எடுத்துத் தன் தோட்டத்து மரங்களின் மீது தூவினார். அப்போது ஒரு மிக அற்புதமான அதிசயம் நடந்தது!
அது இலைகள் உதிரும் காலம். ஆனால் சாம்பல் அவற்றின் கிளைகளைத் தொட்டவுடனேயே, செர்ரி மற்றும் மற்ற எல்லா மரங்களும் பூக்க ஆரம்பித்தன! தாத்தாவின் தோட்டம் உடனே வசந்த காலத்தின் அழகான சோலையாக மாறியது. தாத்தாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
தாத்தாவின் தோட்டத்தைப் பற்றிய கதை எல்லா ஊர்களுக்கும் பரவியது. மக்கள் அந்த அதிசயமான காட்சியைக் காண வந்தனர்.
ஒரு நாள், தாத்தாவின் வீட்டுக் கதவைத் தட்டிய ஒரு ஜப்பானியப் படை வீரன், தன்னுடைய டெய்மியோ (பெரிய பிரபு/அதிபதி) தோட்டத்தில் உள்ள செர்ரி மரம் வாடிவிட்டது என்றும், அதை மலரச் செய்யக்கூடிய அற்புதமான முதியவரை அழைத்து வர டெய்மியோ (அதிபதி) அனுப்பியதாகவும் சொன்னான்.
தாத்தா மிகுந்த மரியாதையுடன் அந்த வீரனைப் பின்தொடர்ந்து அதிபரின் அரண்மனைக்குச் சென்றார்.
அதிபர் (டெய்மியோ), “நீங்கள்தான், இலையுதிர் காலத்திலும் வாடிய மரங்களை மலரச் செய்யும் அந்த வயதான மனிதரா?” என்று கேட்டார்.
தாத்தா, “ஆம் ஐயா, நான் தான்!” என்றார்.
அதிபர், “நீங்கள் என் தோட்டத்தில் உள்ள அந்த இறந்த செர்ரி மரத்தை, உங்கள் புகழ்பெற்ற சாம்பலின் மூலம் மீண்டும் மலரச் செய்ய வேண்டும்” என்றார்.
தாத்தா, சாம்பல் பானையுடன் மரத்தில் ஏறி, கிளைகள் அனைத்திலும் தூவினார். விளைவு உண்மையிலேயே மிக அற்புதமாக இருந்தது. வாடிய அந்த மரம் உடனடியாக முழுமையாகப் பூத்தது. அதிபருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
அவர் தாத்தாவுக்கு நிறைய தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைப் பரிசாக அளித்தார். மேலும், இனிமேல் அந்த வயதான மனிதர் ஹனா-சகா-ஜிஜி அல்லது “பூக்களைப் பூக்கச் செய்யும் முதியவர்” என்றே அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வழக்கம் போலவே, தாத்தாவின் புதிய அதிர்ஷ்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பொல்லாத பக்கத்து வீட்டுக்காரர், பொறாமையாலும் காழ்ப்பு உணர்வாலும் துடித்தார். ‘இந்த முறை வாடிய மரங்கள் மீது சாம்பலைத் தூவும் வேலையில் நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்’ என்று பேராசைப்பட்டார்.
உரலை எரித்த இடத்திலிருந்த எல்லாச் சாம்பலையும் சேகரித்துக்கொண்டு, “இதோ பூக்களைப் பூக்கச் செய்யும் அற்புதமான மனிதன் வருகிறான்” என்று உரத்த குரலில் கத்திக்கொண்டே ஊரைச் சுற்றி வந்தார்.
இதைக் கேட்ட அதிபர், “அந்தப் பூக்களைப் பூக்கச் செய்யும் முதியவர்தான் போகிறார். அவர் நம் தோட்டத்தில் இருக்கும் மற்ற பட்ட மரங்களையும் உயிர்ப்பிக்கட்டும். நமக்கும் அதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும்” என்று சொல்லி, தன் வீரர்களை அனுப்பி அவரைக் கூட்டி வரச் செய்தார்.
அதிபர் இவரைக் கண்டு, “நீங்கள் தான் ஹனா-சகா-ஜிஜியா? நீங்கள் நான் பார்த்தவரைப் போல் இல்லையே?” என்று விசித்திரமாகக் கேட்டார்.
பொறாமைக்காரக் கிழவர், “நான்தான் உண்மையான ஹனா-சகா-ஜிஜி!” என்று பொய் சொன்னார்.
“சரி, அப்படியானால் நீங்கள் என்ன செய்ய முடியும் என்று செய்து காட்டுங்கள்!” என்றார் அதிபர்.
பொறாமைக்காரக் கிழவர் தோட்டத்திற்குச் சென்று, இறந்த மரத்தின் மீது சாம்பலைத் தூவினார். ஆனால் மரம் பூக்கவில்லை , துளிர்க்கவும் இல்லை. பல முறை சாம்பலைத் தூவியபோது, பலமான காற்று வீசி, சாம்பல் அதிபரின் கண்களில் விழுந்தது.
இது அதிபருக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர் தன் வீரர்களை அழைத்து, அந்தப் போலி ஹனா-சகா-ஜிஜியை ஒரு மோசடிப் பேர்வழி என்று சொல்லி, உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்கும்படிக் கட்டளையிட்டார்.
இந்தச் சிறைவாசத்திலிருந்து அந்தக் கிழவர் விடுவிக்கப்படவில்லை. இப்படியாகத்தான் அவர் தன் அனைத்துத் தீய செயல்களுக்குமான தண்டனையை அடைந்தார்.
தாத்தா தன் வீட்டில், ஷிரோ கண்டுபிடித்துக் கொடுத்த தங்க நாணயப் புதையலுடனும், அதிபர் கொடுத்த அனைத்துப் பரிசுகளுடனும், தன் முதுமைக் காலத்தில் செல்வந்தராகவும் , அனைவராலும் நேசிக்கப்பட்டவராகவும் மதிப்புமிக்கவராகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்.