சமணத்திற்கு எதிராக சைவ சமயத்தினர் வாதம் செய்துகொண்டு இருந்த அதே காலத்தில் அவர்களுக்கு எதிராக இன்னொரு சமயம் வளர்ந்து கொண்டு இருந்தது. இருந்தாலும் 11-ஆம் நூற்றாண்டு வரைக்கும் வைணவ சமயத்தைப் பலப்படுத்தும் விதமாகக் குறிப்பிடப்படும் யாரும் வரவில்லை. இராமானுஜர் தனது காலத்தில் சமணத்திற்கு எதிராகத் தமிழ்நாட்டில் சைவர்கள் எப்படி களத்தில் செயலாற்றிக் கொண்டு இருந்தார்களோ, அப்படியான களச் செயல்பாட்டை இராமானுஜர் கர்நாடகாவில் நிகழ்த்தி இருக்கிறார்.
இராமானுஜரின் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஆதிகேசவப் பெருமாள் கோயிலைத் தவிர்த்து, அவரது வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்த கோயில்கள் எனப் பார்த்தால் அது ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி கோயில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில், திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயில், மேல்கோட்டை திருநாராயணசாமி கோயில். இந்தக் கோயில்கள் அமைந்துள்ள எல்லா இடங்களுக்கும் இருக்கும் பொதுவான விஷயம் என்னவென்று பார்த்தால், நெசவுத் தொழில் சார்ந்த வணிக மையங்களாக இருந்ததுதான்.
இராமானுஜர் வைணவத்தைப் பரப்புவதைக் காட்டிலும் குறிப்பிட்ட சில கோயில்களை அதிகாரமிக்க ஆன்மீக மையங்களாக நிலைநிறுத்தத்தான் பெரிதும் முயன்று இருக்கிறார். அப்படி நிலைநிறுத்தச் செய்த முயற்சிகளெல்லாம் சைவ வைணவ சித்தாந்தப் போர்களில் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. இராமானுஜரின் பல முயற்சிகள் எல்லாம் வைணவத்தை ஒரு சக்தி வாய்ந்த சமயமாக மாற்றும் முயற்சிகளாகவே இருந்தன.
இராமானுஜரின் பக்தி சார்ந்த சமத்துவக் கொள்கை, சாதிப் பாகுபாடின்றி மக்கள் எல்லோரும் கோயிலுக்குள் வந்து அவர்கள் நம்புகின்ற இறைவனை வழிபடலாம் என்பதைக் கொண்டு வந்தார். அப்படியானால் மற்ற சமயங்களில் அது போன்ற பாகுபாடு இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இப்படியான மாற்றங்கள் மூலம் அதுவரையில் மற்ற சமயங்களால் தொடாத ஒரு வகுப்பு மக்களை வைத்துத் தொழில் வாய்ப்பினை உருவாக்கி, அதற்காக உழைத்துக் கோயிலுக்கு வரி செலுத்தும் ஒரு புதிய பொருளாதாரச் சமூகத்தை உருவாக்கினார். காலங்காலமாய் இப்படி அடிப்படை வசதிகள் இல்லாத வகுப்பினருக்குத் தொழில் வாய்ப்பினை உருவாக்கித் தருவதை ஆளுகின்ற வர்க்கத்தினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தற்காலத்திலேயே இதற்கு உதாரணங்கள் நிறைய இருக்கின்றன. அரசு இலவசக் கல்வி கொடுப்பதன் மூலம் கல்வி என்பது வரி செலுத்தும் ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிச் சைவ வைணவ சமயங்களுக்குள் விவாதப் போர் நடந்துகொண்டு இருந்தாலும், அதிகார வர்க்கத்தைத் தங்களது வசம் வைத்திருக்கப் பல்வேறு சமயத்தாரும் முயன்று கொண்டு இருந்தனர். 11-ஆம் நூற்றாண்டுக்குள் மிகப்பெரிய கட்டமைப்பைக் கொண்டிருந்த சைவ சமயத்தை எதிர்த்து வைணவ சமயம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டிருக்கிறது.
10-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் தான் சிறுசிறு பகுதிகளாகக் கட்டமைப்பில்லாத சமயமாக, முக்கியமாகப் பொதுமக்களிடமிருந்து விலகி இருந்த வைணவ சமயத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியான சமயமாக மாற்றினார். அதுவரையில் யாரும் கண்டுகொள்ளாமல் மறந்தே போயிருந்த ஆழ்வார்கள் பாடிய வைணவப் பாடல்களைத் தொகுத்து நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்களுக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்தார். மேலும், இந்த நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்களுக்கு இசையமைத்தார். இது மக்களிடத்தில் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்க எளிதாக்கியது.
வடமொழி மற்றும் சமஸ்கிருதப் பாடல்கள்தான் அதுவரையில் வழிபாட்டு மையங்களில் பாடப்பட்டுக்கொண்டு இருந்தன. அந்த நிலையை மாற்றித் தமிழ்மொழிப் பாடல்களை வழிபாட்டு மையங்களில் பாடச் செய்ததில் இவருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இதன் மூலம் சைவ சமயத்திற்கு மாற்றாக வைணவத்தை முன்னிலைப்படுத்தியதில் நாதமுனிக்கு முக்கியப் பங்கு உண்டு.
அவருக்குப் பின்னர் இராமானுஜர் காலம் வந்தது. இந்தக் காலத்தைச் கொஞ்சம் கவனித்துப் பார்த்தோமானால், தென்னிந்திய மொழிகளில் இராமாயணம் எழுத ஆரம்பிக்கப்பட்டது இந்தக் காலத்தில்தான். அதற்கு முன்னரே இராமாயணக் கதை தமிழகத்தில் நிலவி வந்த கதையாக இருந்தாலும், அவை பெரும்பாலும் வாய்மொழிக் கதைகளாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டதாக இருந்தது. அதனால்தான் ஒவ்வொரு மொழி இராமாயணத்திற்கும் கதை வடிவத்தில் பல மாறுதல்களைக் காண முடிகிறது.
முக்கியமாகத் தென்னிந்திய மொழிகளில் இராமாயணம் எழுதப்பட்டது எல்லாம் பக்தி மார்க்கத்தின் விளைவு என்றெல்லாம் நிலவி வரும் செய்திகளை எல்லாம் நம்ப முடியாது. ஏனென்றால், தமிழில் இராமாயணத்தை எழுதிய கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் பெரும் செல்வந்தர். அக்காலச் செல்வந்தர் என்றால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது வணிகராக இருக்க வேண்டும். ஆக, வணிகக் காரணங்களுக்காகக் கம்பரை வைத்து இராமாயணம் எழுத வைத்திருக்க வேண்டும்.
சடையப்ப வள்ளல் திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்தவர். இந்தத் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயிலில்தான் சிவபெருமான் சிவனடியாராக வந்து சுந்தரமூர்த்தி நாயனாரிடம் அடிமைச் சாசனம் காட்டித் திருவிளையாடல் புரிந்ததாக நம்பப்படுகிறது.
இந்தத் திருவெண்ணெய்நல்லூர் கோயில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. அக்காலத்தில் திருவண்ணாமலை, திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்று இடங்களும் முக்கிய வணிக மையங்களாகத் திகழ்ந்திருக்கின்றன. திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்துத் தமிழில் இராமாயணம் எழுத வைக்கிறார்.
இது எப்பொழுது நிகழ்கிறது என்றால், கிருமி கண்ட சோழன் சிதம்பரம் கோயிலிலிருந்து வைணவச் சிலைகளை அகற்றிய பின்னர் இராமாயணம் தமிழ்நாட்டில் கதை வடிவமாக எழுதப்பட்டது. கிருமி கண்ட சோழனின் தொடர்ந்த இடையூறுகளால் இங்கிருந்து தப்பித்து இராமானுஜர் கர்நாடகம் செல்கிறார். அங்கு ஆட்சியில் இருந்த ஹொய்சாள ராஜா விஷ்ணுவர்த்தனைச் சமண சமயத்திலிருந்து வைணவச் சமயத்தை ஏற்க வைத்தார்.
ஆனால், அது சோழர்களைப் பலவீனமடையச் செய்தது.
தொடரும்….