என் கதைக்குள் நீங்கள் போகும் முன் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். இதை நான் சொல்லச் சொல்ல எழுதுவது என் சித்தப்ஸ் எனப்படும் சித்தப்பா தான். (என்ன பாஷை பேசுறடா நீ?). எனில், நான் சொன்ன ஆங்கில வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தி, தமிழில் படுத்தி எழுதிக் கொண்டிருக்கிறார்! அவரது முகம் வயிறு சரியில்லாத பூனை போலக் கடுகடுவென்று இருக்கிறது. (கான்ஸ்டிபேஷன் வந்த கேட் என நான் சொன்னதற்கும் தமிழ், வயிறு சரியில்லாத பூனையாம்!.. பாவம்). எனில், ஏதாவது பிழை எனில் அவரைத் திட்டாதீர்கள். என்னைத் திட்டுங்கள். இப்போது என் கதையின் மேல் போகலாம். (ஓவர் டு மை ஸ்டோரி!)
“ராஜினாமா பண்ணிட்டேன்டா” என்று அவள் சொன்ன அந்த ஒரு வாக்கியம், டெல்லி டிசம்பர் நடுக்கும் குளிரை விட என் எலும்பு வரை உறைய வைத்தது. அதுவும் விடிகாலை. நேரம் பார்த்தேன். மூன்று மணி. அதுவும் மனதுக்கினியவளிடம் இருந்து. அலுவலகத்தில் பக்கம் பக்கமாய் அமர்ந்து பக்கம் பக்கமாய்க் கணினியில் கட்டளைகள் பிறப்பிப்பவளிடம் இருந்து. நானும் அவள் போலத் தான்.
நான் நாக சுப்பிரமணியம். சுருக்கமாய் நாகாஸ். “என்னடா கொத்துவியா?” எனக் கேட்டுக் கண் சுருக்கிச் சிரிப்பாள் அவள். அவளுக்கு அப்புறம் வருகிறேன். நான் சென்னைப் பையன். பிறந்து சென்னைத் தமிழில் பேசி வளர்ந்து (ஏன்யா சொல்லிக்கினு வந்துட்ட நீ) படிப்பெல்லாம் முடித்து இப்போது வேலை பார்த்துக் கொண்டிருப்பவன். என்ன வேலை? கணினிகளுடன் பேசி வேண்டியது செய்பவன்.
வேண்டியது என்பதை விளக்க வேண்டுமானால் – நான் இப்போது இருப்பது நோய்டா செக்டார் 84 – “கோட் நியூ டெக்” (அட தோல்வி அடையும் கோட் இல்லைங்க) என்ற அலுவலகத்தில் 14-வது மாடியில் அமர்ந்திருக்கிறேன். என்ன செய்கிறேன்? ஜாவா ஸ்கிரிப்ட் கோட் – தமிழில் என்றால் கொஞ்சம் கஷ்டம் அப்படியே வைத்துக் கொள்ளலாம். ஜல்லி அடித்துக் கொண்டிருக்கிறேன். வெளியே டெல்லியின் மூடுபனி. ஜன்னல் கண்ணாடிகளைக் கொஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டுக் கொண்டிருக்கும்.
இப்போது அவளுக்கு வருகிறேன். அவள் பாவனி. பாவனி பார்த்தசாரதி. அரை மலையாளி. ஆமாங்க, அவள் அம்மா அப்பா காதல் கல்யாணம். அவள் அம்மா ஓமனக்குட்டி, பாச்சு என்ற பார்த்தசாரதியைக் கல்யாணம் கழிச்சு – மன்னிக்க – செய்து கொண்டு விட்டாள் எனில் அரை. ஊர் களியக்காவிளை. கேரளா பார்டர் இருப்பினும் மலையாளத் தமிழில் மழலையில் பறைவாள்.
அவளை முதலில் பார்த்தது வேலைக்காக அறிமுகம் செய்யப்பட வைக்கும் அறிமுக நிகழ்வு நடத்தும் இடத்தில். சுருக்கமாக இண்டக்ஷன் ஹாலில்.
“ஹாய் நான் நாகாஸ்”.. “ஹாய் நான் பாவனி ஆணு”..
ஒரு கையில் மேக்புக், இன்னொரு கையில் நட்சத்திர மூட்டைப்பூச்சி காஃபி – மொழிபெயர்ப்பு தப்பா? சரி ஸ்டார்பக்ஸ் காபி கப்.. அவளது மலையாளம் கலந்த ஆங்கில உச்சரிப்பு ஒரு மெல்லிய இசை போல இருக்கும். என் சித்தப்பா முணுமுணுக்கும் அந்தக் காலப் பாடலான ‘மந்தார மலரே’யில் ‘எண்ட பெயர் அம்முக்குட்டி’ என வரும் குயிலின் குரல். நாங்கள் இருவரும் ஒரே ப்ராஜக்ட். ஒரே மாடி.
வெளியே டெல்லி – நோய்டா டெல்லியில் இருந்து சற்றுத் தள்ளித்தானே இருக்கிறது. ஆனால் உள்ளே டெல்லி இல்லை. ஏனெனில் வெளியே மூடுபனி – ஜனவரி மாதத்து 3 டிகிரி க்ளைமேட். உள்ளே ஏசி 24 டிகிரி. கக்கக்க என நடுங்கவெல்லாம் வேண்டாம். தைரியமாக நடக்கலாம். காலை ஒன்பது மணிக்கு அலுவலகம் சென்றால் மூடுபனி அணிந்திருக்கும் கண்ணாடி வழியாக உள்ளே வரும். இரவு பதினொரு மணிக்குக் கிளம்பினால் கையெல்லாம் மரத்தும் போகும். அந்தக் குளிருக்கு நடுவில்தான் நாங்கள் காதலாகிக் கசிந்து உருகினோம்.
எங்களுடையது ஒரு இன்றைய தலைமுறைக் காதல். அதாவது ஜென்-Z – 1997-2012-இல் பிறந்தவர்களாக்கும். என் வயது 27; அவள் வயதை நான் கேட்டதில்லை. கொஞ்சம் முறைத்து உறவையே உடைக்கும் அபாயம் உண்டு. எங்கள் குணாதிசயங்கள் – பத்திரிகைகளில் கிரக நிலைகள் சொல்வது போல் இருக்காது. இன்ஸ்டாகிராமில் – ‘உறவுக்குள் இருக்கிறேன்’ – என்று நிலைத் தகவல் சொல்ல மாட்டோம். சமூக ஊடக பயோவில் – சுயத் தகவலில் என் பெயர் என்றால் நான் மட்டும் – மற்றவர் பெயர் – என் பெண்டாட்டி (தற்சமயம் இல்லை) என் காதலி – ம்.. பாவனி அதெல்லாம் வராது.
ஆனால் பாடல்கள் கேட்கும் ஸ்பாட்டிஃபை பிளெண்ட் ஆப்பில் எங்கள் பாடல்கள் ஒன்றாகக் கலந்திருக்கும்.. உணவிற்கான சொமாட்டோ ஆப்பில் ஒரே அக்கவுண்டில்தான் ஆர்டர் செய்வோம். (சின்சியராகப் பிரித்து நீ இவ்வளவு என நான் சொல்ல, ‘நீ பே பண்ணிக்கோ.. பின்ன நோக்கலாம்’ என லிப்ஸ்டிக் இதழ் மலரச் சொன்னால், படக்கென பட்டன் அழுத்தி பின் கோட் போட்டு முழுப் பணம் கொடுத்துவிடுவேன்!). மதிய உணவு வேளையில் ‘ஸ்டேஷன் காண்ட்டீன்’ என இன்றைய பொழுதுகளில் அழைக்கப்படும் எங்கள் ஆபீஸ் கேண்ட்டினில்தான் சேர்ந்து சாப்பிடுவோம்.
அவளுக்குப் புட்டும் கடலையும் பார்சல். எனக்கு அது ஆரம்பத்தில் பிடிக்காமல் இருந்தது. ஆனால் அவள் தன் நகம் செதுக்கிய விரல்களால் பிசைந்து ஊட்டிவிடும் போது, அந்தப் புட்டு அமிர்தமாகத் தெரியும். எனக்கு ரசம் சாதம். அவளுக்கு அது ‘மஞ்சள் நீராணு’. ஆனால் நான் ரசத்தை உறிஞ்சி சப்புக் கொட்டிக் குடிக்கும் போது ஒரு விதமான ஆச்சரியத்தோடு என்னைப் பார்ப்பாள்.
பிரச்சனை ஆரம்பித்தது டிசம்பர் மாத வேலைச் செயல் அலசலில். என் மேனேஜர் கே. என். நந்தகுமார் என்னைக் கூப்பிட்டான். கே.என்.என் ஒரு 90s குழந்தை. அவனுக்குத் தொலைப்பார்வை அல்லது ‘விசிபிலிட்டி’ (Visibility) தான் எல்லாம்.
“நாகாஸ், நீ டெக்னிக்கலி சாலிட். உன்னோட கோட் சுத்தமா இருக்கு. ஆனா உன்கிட்ட விசிபிலிட்டி இல்லை. வாடிக்கையாளர் தொலைபேசியில் கூப்பிட்டால் (Client Call) நீ பேசுவதே இல்லை. செயலூக்கத்துடன் – முழிக்காதே – தமிழில் ப்ரோஆக்டிவா இருக்கணும். இப்போ இருக்கிற பொருளாதார நிலைப்பாடு உனக்குத் தெரியும்ல? அடுத்த வேலை எடுப்பு நிகழ்வில் (லேஆஃபில்) உன் பேர் வராம இருக்கணும்னா நீ உன்னை நிரூபிக்கணும் பையா”.
ஐடி கணினித்துறை. அது ஒரு நிச்சயமில்லாத உலகம். இன்று இந்தாப்பா எனச் சம்பள உயர்வைத் தூக்கிக் கொடுப்பார்கள். நாளையே ‘ஐ ஆம் சாரி ப்ரோ’ என பிங்க் வண்ணத் துண்டுச் சீட்டு, அதாவது வேலை இல்லை எனச் சொல்லும் குறிப்பைக் கொடுப்பார்கள்.
நான் கோட் எல்லாம் ஒழுங்காய்த் தான் சமர்த்தாய் எழுதுவேன். ஆனால் என்னை நானே முன்னிறுத்தி விற்க எனக்குத் தெரியாது. பாவனிக்கு அதெல்லாம் அத்துப்படி. வாடிக்கையாளரின் தொலைபேசி, காணொளிப் பேச்சில் அவள்தான் நட்சத்திரம். மேனேஜர் நந்து, “பாவி, உன்னால் இதைச் செய்ய இயலுமா?” என்றால் “யா.. ஏன் முடியாது.. முடியும்” என்பாள். வெறுமே அல்ல. இதழ்க்கடையில் பூவாய் நெளியும் சிரிப்போடு. அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு முடிக்கவும் செய்து விடுவாள்.
அன்று இரவு பாவனியின் அறைக்குப் போனேன். லஜ்பத் நகரில் ஒரு சின்ன 1BHK. ரூம் ஹீட்டர் அனல் வீசிக் கொண்டிருந்தது. வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. கையில் சூடாக இரண்டு இஞ்சி டீ.
“என்னடா நாகுக் கண்ணா டல்லா இருக்க?” என்றாள் அவள். அவள் கைவிரல்கள் என் தலைமுடியைக் கோதின.
“ரிவ்யூ சரியில்லை பாவனி. நந்து மறைமுகமா தூக்கிடுவேங்கறான். வேலை போயிடும் எனக் கொஞ்சம் மனசுக்குள் பயம்”.
பாவனி சத்தமாகச் சிரித்தாள். “நாகாஸ்.. வேலை போனா இன்னொரு வேலை. நாமல்லாம் ஜென் ஸீ கிட்ஸ். உங்க சித்தப்பா மாதிரி பூமர் அங்க்கிள்கள் கிடையாது. ஒரு கம்பெனியில் செட்டில் ஆகி ரிட்டயர் ஆகிறவங்க இல்லை. ஒரே இடத்துல நம்மால தேங்கி இருக்க முடியாது. நமக்கு நம்ம திறமை தான் சொத்து. (சித்தப்பா, ‘ஸ்கில்’னே போட்டிருக்கலாம்). கம்பெனி வெறுமனே பிளாட்பார்ம் தான்”.
“பாவனி உனக்குச் சொல்றது சுலபம். எனக்குக் கொஞ்சம் பயம் தான். சென்னையில் அம்மா தனியாய். 30கே நான் அனுப்பணும். தங்கச்சி கல்யாணம். கார் இ.எம்.ஐ இருக்கு. நடுத்தர வர்க்கக் கனவுகள் கொஞ்சம் சுமக்கச் சுமக்க வலிக்கத்தான் செய்யும்”.
“நாகா.. கணினித்துறையில் நாம பயன்படுத்தறோமே மணல் பெட்டி – முழிக்காதே – சாண்ட்பாக்ஸ், நிரல்களைச் சோதிக்க மாற்ற எக்சட்ரா. சரியாயிடுச்சுன்னா ஓகே, தோல்வின்னா அழிச்சுட்டுப் புதுசா உறுதி செய்யலாம். அதாவது ஐடி பாஷையில் கமிட். ரொம்ப ஆங்கிலம் பயன்படுத்தியே பழகிட்டோம் இல்லையா. வாழ்க்கையே ஒரு கிட் (Git) மாதிரி.”
எனக்கும் பாவனிக்கும் வித்தியாசமே அதுதான். அவளுக்கு வாழ்க்கை ஒரு கிட்-னு சொல்லிக்கிறேன். (அதும்பாட்டுக்குப் போட்டா ஓடிக்கிட்டிருக்கும் டூல்). சொல்வது கிட் (Kid – குழந்தைக்கும் அது தானே). எனக்குப் புரொடக்ஷன் சர்வரே அது தான். ஒரு சின்னத் தப்பு.. பூம்.. விழுந்துவிடும் எனும் பயம் எனக்கு எப்போதும் உண்டு.
ஜனவரி 15-ம் தேதி. நம் ஊரில் மாடுகளின் கொம்புகளுக்குப் பெயிண்ட் அடிப்பார்கள்; மாட்டுப் பொங்கல். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டெல்லாம் இருக்கும்; தொலைக்காட்சியில் சோகையாக மாடு பிடித்துக் கொண்டிருப்பார்கள். டெல்லி அப்படியில்லை. உச்சக்கட்டமாகக் குளிரும். அன்று அலுவலகம் சென்றால் பரபரப்பாய் இருந்தது. ‘கோட் நியூ டெக்’ அமெரிக்காவின் ஒரு பெரிய கம்பெனியுடன் கலக்கப் போகிறதாம் (மெர்ஜ்). அதன் விளைவாக 40 சதவிகித ஊழியர்கள் கலாஸ். அதாவது நீக்கம். பட்டியல் நாளை வருமாம்.
பதற்றமாய் எல்லாரும் இருந்தார்கள். தனித்தனிக் குழு அறைகளில் (ஸ்லாக் மென்பொருளில் உள்ள அரட்டை அறைகள்) வேலை நீக்கம் பற்றியான அனுதாப அலைகள் பறந்தன. பாவனி மட்டும் அமைதியான பொம்மையாய் இருந்தாள். ”வர்றது வரட்டும்டா பையா.. பார்த்துக்கொள்ளலாம் “ என்றாள்.
எனக்கோ தூக்கம் கண் சிமிட்டி ஓடியது. மடிக்கணினி திறந்து எனது பணி அனுபவச் சுருக்கம் (ரொம்பத் தமிழ் சித்தப்பா!) ரெஸ்யூமேயை வலைத்தளங்கள் நௌக்ரி, லிங்க்ட் இன் என எல்லா இடங்களிலும் பதிப்பித்தேன். எல்லா இடங்களிலும் என் கடன் பணி செய்யக் காத்திருக்கிறது என்றுவிட்டேன். அப்போது தான் அதி அதி காலை மூன்று மணிக்கு பாவனியிடம் இருந்து செல்லிடைப் பேசியில் குரல்.
“தூங்கலையா?” “இல்லை பாவி. ஆனா பயம்ம்ம்.” ”நாளைக்குக் காலை கன்னாட் பிளேஸ் வா. பேசலாம்.”
காலை ஏழு மணிக்கு 2 டிகிரி குளிர். டெல்லியில் மூடுபனியில் எதிரே இருக்கும் ஆள் தெரியவில்லை. சென்ட்ரல் பார்க்கில் ஆள் இல்லை. பாவனி ஒரு குரங்குக் குல்லாய், நீளமான கோட், கழுத்தில் மஃப்ளர் அணிந்து வந்திருந்தாள். கண்களில் வழக்கமான நட்சத்திர மின்னல் தெரியும். இன்று கலக்கம்.
“ராஜினாமா பண்ணிட்டேன் டா.” என் மூளைக்கு உறைக்கவில்லை. “இன்னும் பட்டியல் வரலையே பாவனி?” ”நாகாஸ் கண்ணா.. அந்த லிஸ்ட்ல பேர் வர்றதுக்குள்ள போறேன். காலிக்கட்டில் ஒரு ஸ்டார்ட் அப் ஆஃபர் – புதிய கம்பெனியின் ஆஃபர். ஃபுட் டெக். அதுல ஒருத்தி நான். கொஞ்சம் நிறையவே ரிஸ்க் தான். சம்பளம் பாதி. ஆனா அதுதான் எனக்குக் கிக்கா, சுவையா இருக்கு. இங்க இருந்தா நானும் சிஸ்டம்ல ஒரு சக்கரத்தில உள்ள பல் மாதிரி தானே.”
“நான்?.. நம்ம உறவு? தமிழில் ரிலேஷன்ஷிப்?”.
அவள் கண்களில் மூடுபனியால் விளைந்த நீரோ, அவளால் வந்த கண்ணீரோ வழிந்தது. “நாகா.. நான் உன்னைக் காதலிக்கிறேன். ஆனால் என்னையும் லவ் பண்றேண்டா. நீ ஆதிகால ஆசாமி மாதிரி பாதுகாப்புத் தேடுற ஆள். ஞான் சுதந்திரம் தேடும் கொச்சானு. ஒரே தண்டவாளத்தில் ரெண்டும் போறது கஷ்டம். நம்ம மனசு வேற வேற லெவலில் பயணம் போகுது. இப்போ கொஞ்சம் கனிவா மென்மையா பிரிஞ்சா நல்ல நண்பர்களா இருக்கலாம். இல்லைன்னா நாளைக்கு ஒருத்தரை ஒருத்தர் வெறுக்க ஆரம்பிப்போம்”.
என் ஜென்-Z மூளைக்கு அது சரியான தர்க்கமாக (லாஜிக்.. ஹச்சோ சித்தப்பா நறநற) தெரிந்தது. ஆனால் என் தமிழ் நெஞ்சத்துக்கு மரண அடி.
“நீ எனக்காகக் கூட யோசிக்கவில்லைதானே பாவனி?”. “யோசிச்சேன் நாகா.. ஒரு மாதம். நீ பயத்தில் அப்படியே உறைந்து இருக்க. நான் பறக்க நினைக்கிறேன். உன்னைக் கூட்டிட்டுப் போகவும் முடியாது, விட்டுட்டுப் போகவும் முடியலை. சோ, அதான் இந்தப் பிரிவு”.
அவள் திரும்பி நடந்தாள். மெல்ல மெல்ல அந்தத் தடிமனான மூடுபனி அவளை விழுங்கியது. என் விரல்கள் மரத்துப் போயிருக்க அங்கேயே நின்றேன். திரும்பிப் பார்ப்பாளா? ம்ஹூம்.. பார்க்கவேயில்லை.
அன்று மதியம் எடுக்கப்பட்டவர் பட்டியல் வந்தது. என் பெயர் இல்லை. நான் தப்பித்துவிட்டேன். ஆனால் தோற்றும் விட்டேன்.. நான்கு மாதங்கள் ஓடி விட்டன. மே மாதம். டெல்லியின் குளிர் போயே போச்.. ஆனால் இப்போ டூ மச் வெயில். நான் இன்னும் அதே கம்பெனி. அதே ஃபுளோர். ஆனால் பாவனியின் சீட் காலியாகத்தான் இருந்தது. மனிதவளம் அங்கே ‘வேலைக்கு எடுக்கிறோம்’ என போர்டை மாற்றி இருந்தார்கள்.
ஆனால் நான் மாறத் தொடங்கியிருந்தேன். மேனேஜர் நந்து சொன்ன “விசிபிலிட்டி” அதாவது தெளிவாகப் போடும் நிரலி கற்றுக் கொண்டுவிட்டேன். பயத்திற்காக இல்லை; எனக்காக. வாடிக்கையாளர்களின் பேச்சு வரும் தொலைபேசி, செல்லிடைப்பேசி, காணொளிகளை நானே செய்தேன். தப்பு செய்தேன். திட்டுகளும் வந்தன. அவற்றைச் சரியும் செய்தேன்.
ஒரு நாள் நள்ளிரவு. புரொடக்ஷன் சர்வர் தொபால் என விழுந்தது. முன்னெப்போதும் இல்லாத தைரியம் பிளஸ் நரசிம்ம ஸ்லோகம் (சித்தப்பா உபயம்) சொல்லிக்கொண்டு விடிய விடிய அமர்ந்து கோடைச் (Code) சரி செய்தேன். அப்போது தான் என் மூளைக்குள் மின்னல். அது என்ன சொல்வார்கள்? ஞானம் வந்தது. தோல்வி யாரையும் கொல்லாது; தோல்விக்குப் பயந்தால் அதுவே நம்மைச் சாகடித்து விடும் என்று.
நேற்று காலிகட்டிலிருந்து (கோழிக்கோடு என்று ஏன் சரி செய்யவில்லை சித்தப்பா?!) ஒரு குரலொளி எழுப்பி இருந்தாள். “நாகாக் கண்ணா.. இந்த ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கவே இல்லை. பைசா வங்கியிடம் இருந்து கிடைக்கலை. நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம். ஆனா இந்த ஆறு மாதங்களில் ஆறு வருஷ அனுபவம் கிடைத்து விட்டது. நீ எப்படி இருக்கே?” ஆங்கில உரை தான்.
நான் பதில் அனுப்பினேன். குரலிலேயே. “பாவனிக் கண்ணாட்டி.. நான் இங்கேயேதான் இருக்கேன். வேலை போகவில்லை. பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. நீ சொன்ன மணல்பெட்டித் தத்துவம் இப்போதான் புரியுது. நானும் ராஜினாமா பண்ணலை. வேற ஒரு குழுவிற்கு மாற்றல் கேட்டிருக்கேன். செய்யறிவு டீம் – முழிக்காதே – ஏஐ (AI) டீம். எனக்கு ஒண்ணுமே தெரியாது. மறுபடி முட்டையிலிருந்து.. அதான் ஜீரோவிலிருந்து ஆரம்பிக்கணும். கொஞ்சம் பயம்தான். ஆனா அதோடதான் குதிக்கப் போறேன்”.
அவள் சிரித்த சத்தம் வாய்ஸ் நோட்டில் எதிரொலித்தது. “அதான் டா என் நாகா! உன்னை மாற்றங்களைச் சேமிக்கும் உறுதிப்படுத்தப்பட்ட பதிவுகளின் வரலாற்றில் (இது என் சித்தப்பா மொழிபெயர்ப்பு) பார்க்கிறேன்” . (சீ யூ இன் த கமிட் ஹிஸ்டரி (Commit History)!”)
பேசி முடித்தாகி விட்டது. நொய்டா செக்டார் 84 – அலுவலக ஏசி இன்னும் 22-தான். என் மனது டெல்லியில் ஏப்ரல் மாதத்து இளவெயில் போலப் புதிய தொடக்கத்தில் இருக்கிறது. என் வாழ்வின் கிட் (Git) கணக்கில் ஒரு புதிய கிளை (Branch) உண்டாக்கி விட்டேன். அதன் பெயர்: v2.0_நாகாஸ். இனி செய்ய வேண்டியதெல்லாம் துணிச்சலாக உறுதிப்படுத்துவது தான் – மென்பொருள் நிலைத் தகவல்களை.
போன் செய்து சித்தப்பாவிற்குச் சொன்னேன். அவர்தான் வம்படியாக என்னிடம் இந்தக் கதையைக் கேட்டவர். தமிழிலும் சொல்ல வேண்டுமாம். கஷ்டம்தான். என் காதல் கதை கேட்டு ஒரு கணம் மௌனமாக இருந்தார். எழுதுகிறேன் என்றவர் இதோ எழுதியும் விட்டார்.
“என்ன சித்தப்பா?” “ம்.. டைட்டில் தாண்டா யோசிக்கறேன். கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம்!” “ஏன் திட்டறீங்க சித்தப்பா?” “ச்.. எங்க காலத்தில பெண்களை வர்ணிப்போம். இப்போ காதலே அப்படி ஆகிடுத்து. ‘காதல் ட்வெண்டி சிக்ஸ்’னு வைச்சா பெயரிலேயே ஆங்கிலம்னு சொல்வாங்க.”
“ஏதோ புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு சித். ஆனா ஒண்ணு. எங்க தலைமுறையைப் பொறுத்தவரை தேங்கி இருப்பது என்பது ஆபத்து. அதனால போய்க்கினே இருப்போம். அது தவிர, பிரிவுங்கறது ஒரு கோட் பேஸிலிருந்து பிரியும் இரண்டு வெர்ஷன் மாதிரி. ஐடி உலகில் ‘ஃபோர்க்’ம்பாங்க. அது வெவ்வேறு திசையில் வளரும். எதிர்காலத்தில் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்துக் கலந்தாலும் கலக்கும்.. இல்லைன்னாலும் இல்லை. இரண்டுமே செழிப்பாக இருக்கறவரைக்கும் நல்லதுதான் தெரியுமா? என்ன புரியலையா? நேர்ல வாங்க விளக்குகிறேன். பை!” எனச் சொல்லிச் செல்லிடையை வைத்துவிட்டேன்.
இப்போது என்ன செய்யலாம்? பசிக்கிறதே. மதிய உணவு வேளை ‘ஸ்டேஷன்’ கேண்டீனுக்குப் போனேன். தனியாக. ரசம் சாதம் சொன்னேன். பக்கத்து மேஜையில் ஒரு புதுப் பெண். புட்டும் கடலையும் கழித்துக் கொண்டு – சே – சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். மலையாளியாக இருக்குமோ? என்னைப் பார்த்து கையசைத்துச் சிரித்தாள் மெலிதாக.
நானும் சிரித்தேன்.
(முற்றும்)