- அசுரவதம் -1 முதல் சந்திப்பு
- அசுரவதம் : 2 – காலகேய தானவன்.
- அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன்
- அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்
- அசுரவதம் : 5 – புதுவரவு
- அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி
- அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை
- அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.
- அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.
- அசுரவதம்: 10 – பழியின் பயணம்.
- அசுரவதம்: 11 – நெடிது நின்ற நாயகன்.
- அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு
- அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்
- அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!
- அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்
- அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்குவா
- அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்
- அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.
- அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.
- அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்
- அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.
- அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)
- அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 3: சபரியின் தோழி)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 8: சபரி மோட்சம்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 9: புதிய நட்பு
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 – இரு மகளிர் .. இரு சிந்தனை.
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 – போகாதே.. போகாதே.. என் கணவா
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17: நீறு பூத்த நெருப்பு
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்
- அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6: உடையும் அரண்கள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.
கிஷ்கிந்தையின் அரண்மனை உப்பரிகையில் நின்று மௌனமாக இருளை வெறித்துக் கொண்டிருந்தாள் தாரை. அவள் கண்கள் இருளையும் தாண்டி எங்கோ ஊடுருவிக் கிடந்தன. இயற்கையின் ரகசியங்களைத் துருவித் தேடும் ஆவல் அந்தக் கண்களில் உறைந்து கிடந்தது.
அவள் கிஷ்கிந்தையின் பேரழகி மட்டுமல்ல, எதனையும் தீர்க்கமாக ஊகித்தறியும் மதியூகி. அவள் வாலியின் மனைவி, அவனைக் காக்கும் கவசம். கிஷ்கிந்தையின் மந்திரி.
அவளது நெஞ்சில் ஏதோ ஒரு இனம் புரியாத கலக்கம் பல நாட்களாகவே குடிகொண்டிருந்தது. வாலிக்கும் சுக்ரீவனுக்குமான பகையும், அதில் வாலி உருமையைக் கவர்ந்து கொண்டதும் அவள் நெஞ்சில் முள்ளாய்க் கிடந்தாலும், அனுமன் சுக்ரீவனோடு சென்றதுதான் அவளை மேலும் கவலைக்குள்ளாக்கி இருந்தது.
அனுமனின் மதியூகம் தன் கற்பனைகளைத் தாண்டியது என்பதை அவள் அறிவாள். யாரையும் தன் பேச்சாற்றலால் தன் வயப்படுத்துவதும், எதிரியை கண நேரத்தில் மதிப்பீடு செய்து அவர்களின் நிறை குறைகளை அறிவதில் அனுமனுக்கு நிகர் யாருமில்லை என்பதைப் பல நேரங்களில் அவள் கண்கூடாகப் பார்த்திருக்கிறாள்.
எல்லாவற்றையும் தாண்டி, அனுமனின் ஆற்றல், வாலியின் ஆற்றலை மிஞ்சியது, ஆனால் அனுமன் தன் ஆற்றலை இன்னும் முழுமையாக அறியாதவன் என்பதால் வாலிக்கு இதுவரை எந்த ஆபத்தும் இல்லை என்பதை அவள் உணர்ந்திருந்தாள்
அவள் இரு மானிடர்கள் சுக்ரீவனைத்.தேடிச் செல்வதை ஒற்றர்கள்.மூலம் அறிந்திருந்ததால் அவர்களின் அடுத்த நடவடிக்கை என்ன? என்பதில் மிக ஆர்வமாக இருந்தாள். அது வாலிக்கு ஏற்பட இருக்கும் அபாயமாக இருக்குமோ? என்ற அச்சம் அவளுக்குள் வளர்ந்திருந்தது..
அப்போது, இருளைக் கிழித்துக் கொண்டு அவளது அந்தரங்க ஒற்றர்கள் மூச்சிரைக்க அங்கே வந்தனர். அவர்கள் கொண்டு வந்த செய்தி, தாரையின் அடிவயிற்றில் பெரும் சுழலை உருவாக்கியது.
“தேவி, ரிஷ்யமுக மலையில் விபரீதம் நிகழ்ந்துவிட்டது. இரண்டு மானிடர்களும் சுக்ரீவனும் அக்னி சாட்சியாக நட்புப் பூண்டுவிட்டனர். அந்த மானிடர்களின் தோற்றம் சாதாரணமானதாக இல்லை; பிரபஞ்சத்தையே ஆளும் வல்லமை படைத்தவர்களாகக் காட்சியளிக்கிறார்கள்,” என்று ஒற்றர்களில் ஒருவன் நடுங்கும் குரலில் கூறினான்.
தாரையின் முகம் வெளுத்தது. சுக்ரீவன் ஒருபோதும் தகுதியற்றவர்களிடம் நட்பு கொள்ள மாட்டான் என்பதை அவள் அறிவாள்.
” யாரந்த இருவர்” என்று கேட்டாள் உணர்சிகள் முற்றும் மறைந்து பேரரசியின் கம்பீரம் மட்டுமே அவள் கண்களில் காணப்பட்டது.
ஒற்றர்கள் சொன்ன அடுத்தத் தகவல் அவளை மேலும் திகிலடையச் செய்தது.
அவர்கள், “தசரத மைந்தர்கள்…” என்று ஆரம்பித்து அவர்கள் அங்கே கேட்ட மொத்தக். கதையையும் சொல்லி முடித்தனர்.
” இருவர்களில் ஒருவன், பெயர் இலக்குவனாம், அவன் தன் கட்டை விரலால் உந்தித் தள்ளியதும் வாலி மகராஜா பல நாட்கள் போரிட்டு வீழ்த்திய துந்துபியின் உடல் கூடு.. பலகாதம் பறந்து சென்று கடலில் வீழ்ந்ததைக் கண்டு பிரமித்தோம்” என்றான் ஒருவன்.
“மேலும் அரசியாரே, அங்கே இன்னொரு ஆபத்தும் பதுங்கியிருக்கிறது. அந்த மானிடர்களை நாங்கள் மட்டுமல்ல, வேறு சில கண்களும் வேவு பார்ப்பதை உணர்ந்தோம். அவர்களின் உருவம் அரக்கர்களைப் போல இருந்தன. சூர்ப்பனகையின் ஒற்றர்கள் அவர்கள் என்பதை நாங்கள் உறுதி செய்துகொண்டோம்,” என்றான் மற்றொரு ஒற்றன்.
தாரையின் மனதில் குழப்பமும் அதிர்ச்சியும் பரிபூர்ணமாகக் குடிபுகுந்தது.
ஒற்றர்களின் தகவல்கள் தாரையின் மனக்கண்ணில் ஒரு மாபெரும் அபாயத்தின் சித்திரத்தை வரைந்தன.
மானிடர்கள், அரக்கர்கள், மற்றும் வானரர்கள் என மூன்று துருவங்களும் ஒரு புள்ளியில் இணைகின்றன என்றால், அது ஒரு மாபெரும் அழிவின் தொடக்கம். வாலியின் கர்வம் அவனைச் சிந்திக்க விடாமல் தடுக்கக்கூடும், ஆனால் தாரையின் அறிவு வரப்போகும் ஆபத்தை நுட்பமாக உணர்ந்தது.
“நீங்கள் செல்லலாம்” என்றாள் அவள் உணர்ச்சிகள் ஏதுமற்ற குரலில். அவர்கள் நகர்ந்ததும் அவள் உதடுகள் தானாக முணுமுணுத்தன.
“விதி.. இது.. இல்லை இல்லை விதியின் சதி”
என்றது அவளின் மென்மையான உதடுகள். அவள் பெருமூச்சின் வேகத்தில் எழும்பி இறங்கிய இரு மேடுகள் அவள் உணர்ச்சிகளின் உச்சத்தில் ஆட்பட்டிருக்கிறாள் என்பதை உறுதி செய்தன.
விதி என்பது ஒரு கண்ணுக்குத் தெரியாத சிலந்தி வலை. அகங்காரம் கொண்டவர்கள் தங்களின் பலத்தால் அந்த வலையை அறுத்துவிடலாம் என்று நம்புகிறார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு திமிறுகிறார்களோ, அவ்வளவு இறுக்கமாக அந்த வலை அவர்களைச் சுற்றிக் கொள்ளும். தாரை நெஞ்சில் கைவைத்துத் தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
“இராவணனின் அரக்கர் குலத்துக்கும் இந்த மானிடர்களுக்கும் ஒரு பெண் காரணமாகத் தீராத பகை இருக்கிறது. அந்தப் பகையின் நெருப்பில் சுக்ரீவன் குளிர்காயப் போகிறான், அந்த நெருப்பு கிஷ்கிந்தையையும் பெண்ணைக் கவர்ந்த வாலியையும் சுட்டெரிக்கப் போகிறதா”
” அனுமன் மிகுந்த புத்திசாலி, அவன் தசரதனின் மைந்தர்களை சுக்ரீவனுடன் கூட்டுச் சேர்த்திருக்கிறான் என்றால்”.. என அவள் எண்ணங்கள் என்கெங்கோ சுழன்றன. இராம இலக்குவர்கள் குறித்த முழு தகவல்களையும் திரட்டினாள். அவை தந்த விவரங்கள் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கி நின்றாள். கரதூஷணர்கள் வதம் அந்த இருவர் மீதான மதிப்பைப் பலமடங்கு உயர்த்தியது.
அதேவேளையில், ரிஷ்யமுக மலையில் அக்னி சாட்சியாக நட்புப் பூண்ட பிறகும், சுக்ரீவனின் அடிமனதில் வாலியின் அசுர பலம் குறித்த ஒரு மெல்லிய பயம் ஊசலாடிக் கொண்டே இருந்தது.
நட்பு என்பது வேறு, போர்க்களத்தில் வாலியை வீழ்த்துவது என்பது வேறு. வாலியின் தோள் வலிமையை முழுமையாக அறிந்த சுக்ரீவன். ஆனால் அவன் இராமனிடம் இதைச் சொல்லத் தயங்கினான்.
அனுமன் சுக்ரீவனின் எண்ணத்தைப் புரிந்துக் கொண்டவன் போல இராமனிடம் சென்று
“ஐயனே, என்னை மன்னிக்க வேண்டும். உங்களின் வில்லின் திறத்தை நாங்கள் சந்தேகிக்கவில்லை. ஆனால், வாலியின் பலம் அளப்பரியது. அவன் மலைகளைப் பந்து போலத் தூக்கி எறிபவன். அவனது வலிமைக்கும் வேகத்துக்கும் முன்னால் ஈடுகொடுக்கப் பெரும் ஆற்றல் வேண்டும்,” என்று தயங்கித் தயங்கிக் கூறினான்.
இராமன் மெலிதாக நகைக்தான்.
” மாவீரனே, நீயே அதற்கான விடையைச் சொல். என்ன செய்தால் உங்களின் அச்சம் தீரும் ” என்றான்
சற்றுத் தள்ளி தூரத்தில் தெரிந்த மாபெரும் ஏழு சால் மரங்களைக் கைகாட்டினான் அனுமன்.
“ஐயனே, அந்த ஏழு மரங்களைப் பாருங்கள். அந்த ஒவ்வொரு மரங்களும் ஒவ்வொரு வாலிக்கு இணை. அந்த மரங்களில் ஒன்றையேனும் தங்களின் அம்பு ஊடுருவினால், அதுவே வெற்றிக்கான அறிகுறி. உங்களின் பலத்தை என் கண்கள் காண வேண்டும்,” என்று பணிவாகக் கோரினான்.
அந்த ஏழு சால்மரங்களும் சாதாரண மரங்கள் போலக் காணப்பட்டாலும் அவற்றிற்கு பின்புலக் கதை உண்டு. அவை இரும்பைப் போல இறுகியக் கட்டைகளைக் கொண்டவை. வளைந்து நெளிந்து, ஒன்றையொன்று மறைத்தபடி நின்ற அவை, பல யுகங்களாக அந்த மலையின் காவல் தெய்வங்களைப் போலக் காட்சியளித்தன.
முன்பொரு காலத்தில் சந்திர வம்சத்தைச் சேர்ந்த மணிபத்ரன் என்ற மன்னனின் ஏழு குமாரர்கள், மயனிடம் வித்தை கற்றுத் தருக்குடன் திரிந்தனர். ஒருமுறை அவர்கள் ஒரு பெரிய பாம்பின் மீது அமர்ந்து கொண்டு, அந்தப் பாம்பைச் சுருட்டி வைத்துக்கொண்டு அதன் மேல் ஏழு மரங்களாக நின்றனர். அந்த வழியாக வந்த அகத்திய முனிவரை அவமதிக்கும் வகையில் அவர்கள் வழிமறித்தனர். இதனால் கோபமடைந்த அகத்தியர், “நீங்கள் இப்படியே மரங்களாக நிற்கக்கடவது” என்று சபித்தார். அப்படிப் பலகாலமாக நின்ற அவர்களின் அந்த சாபத்தின் விமோசனம் நிறைவேறும் காலம் வந்துவிட்டது.
இராமன் எவ்வித அகங்காரமுமின்றித் தன் வில்லைக் கையில் ஏந்தினான். அந்த மரங்களை நோக்கினான். அவை நேர்க்கோட்டில் இல்லாமல் வளைந்திருப்பதைக் கண்டு தன் வில்லின் நுனியை தரையில் வேகமாக ஊன்றினான். அந்த ஏழு மரங்களும் எந்தக் கோணத்தில் நேர்க்கோட்டில்.வரும் என்று அவதானித்தான்.
ஒரு ஒற்றை அம்பை நாணில் பூட்டினான்.
நாணொலி விண்ணைப் பிளந்தது. இராமனின் வில்லில் இருந்து புறப்பட்ட அந்த அம்பு, மின்னலின் வேகத்தைக் காட்டிலும் அதிவேகமாகப் பாய்ந்தது. அது முதல் மரத்தைத் துளைத்தது, பின் அதே வேகத்தில் இரண்டாவது, மூன்றாவது என வரிசையாக ஏழு மராமரங்களையும் துளைத்துக் கொண்டு மறுபுறம் சீறிப் பாய்ந்தது.
அடுத்த நொடி, அங்கே ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அந்த மரங்களில் இருந்து ஏழு பேரொளிப் பிழம்புகள் வானை நோக்கி எழுந்தன. சாப விமோசனம் பெற்ற அந்த ஏழு முனிவர்களும் ஒளி உடலோடு இராமனின் முன்னே தோன்றி, கைகூப்பித் தொழுதனர்.
“ஐயனே , உமது அம்பின் ஸ்பரிசத்தால் எங்கள் அகங்காரம் அழிந்தது, பல யுகங்களாக நாங்கள் சுமந்திருந்த மரமெனும் சிறையிலிருந்து எங்களுக்கு முக்தி அளித்தீர். வாழிய நீவிர்” என்று வாழ்த்திவிட்டு அவர்கள் வான்வழியே மறைந்தனர்.
இந்தக் காட்சியைக் கண்ட சுக்ரீவன் சிலையாக உறைந்து நின்றான். அவனது நரம்புகளில் ஊறியிருந்த வாலி குறித்த அச்சம், அந்த முனிவர்கள் மறைந்த மறுகணமே வேரோடு அழிந்தது.
இவன் மனிதனல்ல, பிரபஞ்சத்தையே ஆட்டிப்படைக்கும் பரம்பொருள் என்பதை அவன் முழுமையாக உணர்ந்தான். சுக்ரீவன் இராமனின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.
அவன் கண்களில் இப்போது அச்சமில்லை; வாலியை வென்றுவிடலாம் என்ற முழுமையான நம்பிக்கையும், தர்மத்தின் மீதான அசைக்க முடியாத பற்றுதலும் மட்டுமே நிறைந்திருந்தன.
இந்த விவரங்களை முழுவதுமாக சூர்ப்பனகைக்கு அவளின் ஒற்றர்கள் தெரிவித்தனர். அவள் தன் எண்ணம் நிறைவேறும் காலம் வந்துவிட்டதை அறிந்து மகிழ்ந்தாள்.
ஆனால் கிஷ்கிந்தையில் தாரையின் மனமோ.. மிகுந்த அச்சத்தில் வீழ்ந்து கிடந்தது.
” வாலி… என்னருமைக் காதலனே…என் சொல் கேட்பாயா” என்று அவள் மனம் கதறிக் கொண்டிருந்தது.
பி.கு
வெட்டம் மாணி (1921–1987) கேரளாவைச் சேர்ந்த ஒரு சிறந்த இந்திய அறிஞர் மற்றும் எழுத்தாளர் . இவர் சமஸ்கிருதப் புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் (மகாபாரதம், ராமாயணம்) குறித்த ஆழமான ஆராய்ச்சிக்காகப் புகழ்பெற்றவர். இவரது மிக முக்கியப் படைப்பு புராண கலைக்களஞ்சியம் (Puranic Encyclopedia) ஆகும்,
வெட்டம் மாணி (Vettam Mani) தொகுத்த இந்தப் புகழ்பெற்ற கலைக்களஞ்சியத்தில் ‘மணிபத்ரன்’ (Maṇibhadra) மற்றும் ‘சப்தசாளம்’ (Saptasāla) ஆகிய தலைப்புகளின் கீழ் இந்தக் கதை விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த ஏழு மரங்களும் நேர்க்கோட்டில் இல்லாமல் வளையமாக இருந்ததால், ராமபிரான் தனது கட்டைவிரலால் அந்தப் பாம்பின் தலையை அழுத்த, அது வலியால் நேராக நிமிர, அதன் மேல் இருந்த மரங்களும் நேர்க்கோட்டிற்கு வந்தன; அப்போதுதான் ஒரே அம்பால் ஏழு மரங்களையும் துளைக்க முடிந்தது என்பது இக்கதையின் சுவாரஸ்யமான பகுதி.