இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்கிற கடைசித் தருணத்தில்தான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். இன்று காலைவரையிலும்கூட கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. எப்படியும் ஜீவா பேசிவிடுவான் என்றே இருந்தேன். கிடைத்த தகவல்கள் என் நம்பிக்கையைச் சிறிது சிறிதாக அரித்துத் தின்றுத் தீர்த்தன.
இரண்டு ஆண்டுகள் என் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தந்தவன் ஜீவா. பணிபுரியும் கெமிக்கல் ஃபேக்டரியில் அவன் புதிய நிர்வாக மேலாளராக வந்து சேர்ந்த நாள் இன்றும் நினைவில் இருக்கிறது. தூரத்தில் இருந்து பார்க்கலாம், ரசிக்கலாம், நெருங்கக்கூட முடியாது என்கிற பேரழகு அவன்.
என்னை அவன் நெருங்கியது யார் வாழ்விலும் நடக்கக் கூடாத ஒரு பேரிடி காலத்தில்தான். ஒரு கொடூர விபத்தில் அம்மாவும் அப்பாவும் இறந்த அந்த கணத்தில் உலகமே இருண்டு போனது எனக்கு. ஒரே பெண்ணான என்னை படிக்க வைத்து ஆளாக்கி, ஒரு முழு பெண்ணாக இந்த உலகில் தனித்து விட்டுவிட்டு அவர்கள் மறைந்த அந்த நாள். துக்கம் விசாரிக்க வந்தவன் என் நிலையை உணர்ந்து கூடவே நண்பர்களுடன் கடைசி வரை இருந்தான். எப்போது எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கச் சொன்னான். நான் கேட்கவில்லை.
அவன் மிக நல்லவன். இரக்கம் அதிகம். அலுவலகத்தில் எல்லோருக்கும் சம உரிமை கொடுப்பான். சிரித்த முகம் மாறாதவன். திருமணம் ஆகாதவன். ஃபேக்டரியில் உயர்பதவி முதல் கடைநிலை ஊழியர் வரை திருமணம் ஆகாத பெண்களின் கனவுநாயகன். திருமணம் ஆன சில பெண்களும் அவனிடம் வழிவது தவறவில்லை. எளிமையாக ‘சொல்லுங்க அக்கா’ என்று சிரித்தபடி விலகிவிடுவான்.
தனித்து இருந்த என் வாழ்வின் அடுத்த திருப்பம் வீட்டு ஓனர் மூலம் வந்தது. நான் மாடியில் குடியிருந்தேன். கீழே ஓனர் குடும்பம். அப்பா சில லட்சங்களையும், இருபது பவுன் நகையையும் எனக்குச் சேர்த்து வைத்துவிட்டுத்தான் இறந்தார். பணமாக எனக்கு எந்தச் சிரமமுமில்லை. ஆனால், ‘வாடகை வேண்டாம், அதோடு பண உதவியும் செய்கிறேன்’ என வீட்டு ஓனர் என்னிடம் பேசியதை எண்ணி இரண்டு நாள் எனக்குத் தூக்கமில்லை. அலுவலகத்தில் உம்மென்றே இருந்தேன். யாரும் கவனிக்கவில்லை என நினைத்தேன். மேலாளர் அழைப்பதாகக் கேட்டு உள்ளே சென்றேன். அமரச் சொன்னான். பேசவில்லை. என்னையே கவனித்துக்கொண்டிருந்தான்.
என்ன மாயம் நிகழ்ந்ததோ, என்னை மீறி அழ ஆரம்பித்தேன். முழுதாக அழவிட்டான்.
“அழுது முடிச்சுட்டீங்களா?… இப்போ சொல்லுங்க மதி, யார் தொந்தரவு செய்தது?”
சொன்னேன். தூக்கமில்லாத, சாப்பிடாத உடல் வலுவிழந்து, பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தேன். எழுந்தபோது அவன் மடியில் இருந்தேன். பதறி எழுந்தேன். தண்ணீர் அருந்தக் கொடுத்தான். அன்று இரவு ஒரு வேன் போன்ற வண்டியுடனும் சில வேலையாட்களுடனும் என் வீட்டிற்கு வந்தான். ஓனரை அழைத்தான். வீட்டைக் காலி செய்வதாகச் சொன்னான். அவர் திருதிருவென விழித்தார்.
“யார் நீங்க? இப்படி திடீர்னு வந்து சொன்னா? அந்தப் பொண்ணு எழில்மதி உங்களுக்கு என்ன வேணும்?” என்றார் அவர்.
“அது என் முறைப்பொண்ணு, போதுமா?”
“யாரா இருந்தா என்ன, அட்வான்ஸ் உடனே தரமுடியாது. ஆறு மாசம் ஆகும்.”
பளார் என அவன் அறைந்ததை அந்த வீட்டு ஓனர் காலத்துக்கும் மறக்கமாட்டார். முழுதாக அட்வான்ஸைத் திரும்பக் கொடுத்தார். காலி செய்து போகும் வரை வெளியே வரவேயில்லை. ஊரின் ஒதுக்குப்புறமான, ஆனால் முக்கியஸ்தர்கள் இருக்கும் பகுதியில் இந்தத் தனித்த வீட்டைப் பேசிக்கொடுத்தவன் ஜீவாதான். எல்லாம் இறக்கி வைத்துவிட்டு வண்டி ஆட்களுடன் கிளம்பி விட்டது. பொருட்களை அடுக்க அதிகாலை ஐந்து மணி ஆயிற்று. கூடவே இருந்தான். தனித்து இருந்தோம். அவனின் சுண்டுவிரல்கூட என் மேல் படவில்லை. மிக நல்லவன் அவன்.
என் புத்தக அலமாரியை அடுக்கும்போது ஆச்சரியப்பட்டான். நான் வரைந்த ஓவியங்களைப் பார்த்து வியந்து ரசித்தான். தன் புகைப்படத்தைக் கொடுத்து வரைந்து தரச் சொன்னான். இரண்டு ஆண்டுகளில் வரைய முற்படும்போதெல்லாம் அந்தக்கண்கள் மட்டும் வரையவே முடியவில்லை. என்னைக் கேலி செய்துகொண்டே இருப்பான் ஓவியத்திலும். நேரில் சொல்லுவேன்.
“நிஜமாவா சொல்ற மதி? வரையும்போது என்ன டிரஸ் போட்டிருந்த?”
“ம்? டிசர்ட்… ஏன் கேட்கறீங்க?”
“அதுதான் கண்ணு விளையாடிடுச்சு போல” என்பான். முறைப்பேன் நான் மனதுக்குள் சிரித்தபடி.
கொஞ்சுவான். சில சமயம் தொடுவான். சில… சமயம் முத்தமிடுவான். என்னுடன் நெருங்கி செல்ஃபி எடுத்து ரசிப்பான். அவனின் பாசத்தைக் கொஞ்சமும் குறையாமல் அள்ளியள்ளிக் கொடுப்பான். ஆனால் அலுவலகத்தில் அப்படி ஒரு தூர உறவைத் தொடர்வான். திருமணம் ஆகும் வரை யாருக்கும் எதுவும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். கண்பட்டுவிடும் என்பான். உலகில் யாருக்கும் கிடைக்காத காதல் உறவு அவன்.
எல்லாம் புயலில் சிதறிய சிறு ஓடத்தைப் போல நொறுங்கிப் போனது. சில நாட்களாக அவன் பேசவில்லை. வேறு நகருக்கு இடமாற்றம் என்றார்கள். பின்னர்தான் தெரிந்தது அது அவனே கேட்ட இடமாற்றம் என்று. தோழி லலிதாதான் சொன்னாள்.
“அதிர்ஷ்டம்னா இப்படி வரணும் மதி, பாரேன். இவ்வளவு நல்ல மாப்பிள்ளை கிடைக்க அந்தப் பொண்ணு அதிர்ஷ்டம் செஞ்சதா, இல்ல வேலை செய்யற கம்பெனி முதலாளிக்கே மருமகனா போற ஜீவா சார் அதிர்ஷ்டம் செஞ்சவரா?” என்றாள் அவள்.
அவனைப் பார்க்கவே முடியவில்லை. இடமாற்றம் நிஜம்தான் என உறுதியானது. என் செல்ஃபோன் அழைப்புகளை அவன் எடுக்கவேயில்லை. ஒரு வாரம் தீயிலிட்ட உடலாய்க் கருகிக்கொண்டிருந்தேன். இன்று காலை பார்த்த அந்த மாடல் திருமணப் பத்திரிக்கை எல்லாம் நிஜம்தான் என்றது. அலுவலகம் வந்திருந்தான். யாரையும்… யாரையும் சந்திக்க நேரமின்றி ஓடிக்கொண்டிருந்தான்.
அவனுக்கு வாட்ஸாப்பில் வாய்ஸ் அனுப்பினேன்.
// மிகவும் நன்றி அனைத்துக்கும். நாளை காலை உங்களுக்குத் தகவல் வரும். என் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவும். //
வீட்டுக்கு வந்து வேகவேகமாக வரைய ஆரம்பித்தேன். அவன் உருவம் முழுதாக வந்தது. கண்கள் என்னை முறைத்தன. யாரோ போலப் பார்த்தன. என்னைக் கேலி செய்தது அந்த உருவம். வண்ணத்தை எடுத்து அந்த முகத்தில் இல்லாத மீசை தாடி எனக் கண்டபடி கிறுக்கினேன். எல்லாம் மாயை என மனது சொல்லியது.
பாட்டிலில் ஊற்றி எடுத்து வந்திருந்த விஷத்தை எடுத்தேன். கடுமையான விஷம். நாக்கில் பட்டால் சில நொடிகளில் மரணம். அதைத் திறக்கப்போகும்போது நொடியில் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான் ஜீவா.
“யேய், லூஸா நீயி?” என்றான்.
“இங்க யாரும் லூசு இல்லை. ஏமாளிங்கதான்” என்றேன் விம்மியபடி.
“அடப் பைத்தியம். நான் பேச முடியாத நிலையில் இருந்தேன். உன்கிட்ட பேசணும்னுதான் இன்னிக்கு ஆஃபிஸ்க்கே வந்தேன். சூழ்நிலை அங்க ஒத்துவரலை. சரி நாளை பேசலாம்னு இருந்தேன். அதுக்குள்ள…”
“நாளை வந்து என் பொணத்துக்கிட்ட பேசலாம்ல?”
“அடிச்சேன்னு வச்சுக்க… ஆமா, இன்னொரு தடவை அப்படிச் சொல்லாதே.”
“சொல்ல இனி என்ன இருக்கு? நீங்க யாரோ நான் யாரோ.”
“முதல்ல உட்காரு, பொறுமையா கேளு.”
“உண்மையைச் சொல்லுங்க, அந்த கல்யாணம் நிஜமா? ஏன் என்னை அப்புறம் காதலிக்கணும்? ஏன் இப்படி ஏமாத்தணும்?”
“அச்சோ, அப்படி இல்ல மதி, அது ஒரு விபத்து. போன மாசம் எம்டி மீட்டிங் போனப்போ அந்தப் பொண்ணும் வந்திருக்கு. என்னை பாத்திருக்கு. எம்டிகிட்ட சொல்லி விசாரிச்சுருக்கு. பிடிச்சுப்போயி கல்யாணம் வரை பேசிட்டுதான் என்கிட்டயே முடிவைச் சொல்லியிருக்காங்க.”
“நீங்க என்ன சொன்னீங்க?”
“என்ன சொல்ல?”
“என்ன கேள்வி இது?” என்றேன் கோபமாக.
“அவங்க என்னைப்பத்தி விசாரிச்சிருக்காங்க. தனிக்கட்டை, காதல் கீதல் அப்படி எதுவும் இல்லாதவன்னு எல்லாம் விசாரிச்சுதான் முடிவு எடுத்திருக்காங்க.”
“ஓ, இப்படி எல்லாம் நடக்கும்னுதான் நம்ம பழகறதை யாருக்கும் தெரியாம பாத்துக்கிட்டீங்களா?”
“ஆமா பெரிய இண்டர்நேஷனல் திட்டம் பாரு… லூசு. எல்லாம் திடீர் சம்பவம்தான்.”
“புரியலை எனக்கு, நான் என்ன பண்ண?”
“புரியணும் மதி உனக்கு. யோசிச்சுப்பாரு. எனக்கோ உனக்கோ கொடுத்து உதவ யாரும் இல்லை. எனக்கு நாற்பது லட்சம் வரை கடன் இருக்கு. உனக்கேத் தெரியும். நீயே உன் பணம் அஞ்சு லட்சம், இருபது பவுன் நகை எல்லாம் எனக்குக் கொடுத்து உதவியிருக்கே.”
“நான் உங்ககிட்ட கணக்கு பாக்கலை.”
“கேளு முழுசா, எம்டிக்கு பலகோடி சொத்து இருக்கு. அனாமத்தா வருது. நாங்க இருக்கப்போறது பெங்களூர் பிராஞ்ச். மாசம் ரெண்டு தடவை சென்னை விசிட் வருவேன். நான்தான் வருவேன்.”
“புரியலை.”
“கேளு கண்மணீ, முதலில் உன் செல்லைக் கொடு இங்க.”
கொடுத்தேன். அவன் அதை வாங்கி கேலரியைத் திறந்தான். நானும் அவனும் இருக்கும் புகைப்படங்களை ஒவ்வொன்றாகப் பேசிக்கொண்டே அழிக்க ஆரம்பித்தான்.
“அதாவது, இந்த கல்யாணம், சாஸ்திரம் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அது ஊருக்குதான். சும்மா டம்மிதான். உண்மையில் நீயும் நானும்தான் புருஷன் பொண்டாட்டி. உன் புருஷனான நான் வெளியூர்ல வேலையில் இருக்கேன்னு நினைச்சுக்கோ, மாசம் ரெண்டு தடவை இங்கே வருவேன்னு வச்சுக்கோ. அவ்ளோதான்” என்று சிரித்தபடி என் செல்லைத் திரும்பக் கொடுத்தான். முழுமையாகப் புகைப்படங்கள், வீடியோக்கள், சில மெசேஜ் என அனைத்தும் நிரந்தரமாக அழித்திருந்தான்.
“ஓ, அதாவது… என்னை நீங்க வப்பாட்டியா வச்சுக்கறீங்க…” என் முகம் சிவக்க ஆரம்பித்தது.
“யேய் பைத்தியம், இதைச் சொன்னதுக்கு…”
“சொன்னதுக்கு?”
“பேசாம நீ செத்திருக்கலாம். காப்பாத்தினதுதான் தப்பு.”
“ஓ, இனி செத்தா உங்களுக்கு ஆபத்தில்லை. அதானே?”
“என்ன உளர்ற?” என்று சொல்லிவிட்டு அவன் அங்கே இருந்த அவனின் ஓவியத்தைப் பார்த்தான். அருகே சென்றான்.
“என் மேல் இவ்வளவு கோபமா மதி? மீசை தாடி எல்லாம் வரைஞ்சு, அடக்கடவுளே, ஆனாலும் என் அடையாளம் அழகா வரைஞ்சு இருக்கே. நான் எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு என் டேபிளின் அலமாரியைத் திறந்தான். அங்கே இருந்த என் டைரியை எடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டுத் தனியே எடுத்து வைத்துக்கொண்டான். அடுத்து கீழ் ட்ராவைத் திறந்து அவன் அனுப்பி நான் பொக்கிஷமாக வைத்திருந்த கிரீட்டிங் கார்டுகளைக் கவனமாக எடுத்துப் பத்திரப்படுத்திக்கொண்டான். இப்போது நான் மெசேஜ் செய்திருந்தால், ‘சாகட்டும்’ என இருந்திருப்பான் என்றே தோன்றியது. அவன் அந்த ஓவியத்தின் அருகே அமர்ந்து அந்த கிறுக்கல்களைச் சரிசெய்ய முடியுமா என ஆராய்ந்துகொண்டிருந்தான்.
எனக்குள் பிரளயமே ஏற்பட்டுக்கொண்டிருந்தது. மிகக் கேவலமாக எங்களின் உறவை அடையாளப்படுத்தும் எல்லாவற்றையும் அழித்துக்கொண்டிருக்கும் இவன் ஜீவாவே இல்லை எனத் தோன்றியது. அவனைப் போலவே தோற்றமளிக்கும் இவன் யாரோ. என் அறையில் உரிமையாக வந்து அதிகாரமாகப் பேசும் ஒரு பணப்பேய். சுயநலக் கிருமி. சுற்றிலும் பார்த்தேன். தூரத்தே அந்தச் சுத்தியல் கண்ணில் பட்டது. எடுத்து வந்து அவன் தலையிலேயே ஒரே போடு… என மனதில் மிருகம் சிலிர்த்து எழுந்தது. அவன் மூளை சிதறும். ஜீவாவைப் போன்ற இந்த போலி அப்படியே தரையில் விழுந்து துடிப்பான். செத்து ஆவியாக இங்கேயே அலைவான். ஜீவாவின் ஓவியத்திலும் அவனின் ரத்தத்துளிகள் தெறிக்கும். அதுவும் அழகாகவே இருக்கும்.
“மதி…” என்றான் அவன்.
அந்தக் குரலில் ஜீவாவின் தொனி இருந்தது. ஜீவா குழந்தை. அவனின் முகத்தில் ஜீவாவின் அழகைப் பார்த்தேன். இவன் ஜீவாதான். என்ன காரியம் செய்ய இருந்தேன். எங்கே இருந்தாலும் இவன் நன்றாக இருக்க வேண்டும்.
“சொல்லுங்க…”
“ஒன்னு கேட்பேன், தப்பா நினைக்கக்கூடாது.”
“என்ன…”
“உனக்கு ஞாபகம் இருக்கா, ஒரு மழைநாளில் என்னோட பைக்ல வந்தோமே. ரெண்டுபேரும் முழுசா நனைஞ்சிருந்தோம். இதே இடம். இதே இரவு நேரம். குளிர். உனக்கு இப்போ எதுவும் தோணலையா… இனிமே எப்போ சந்திக்கப்போறோமோ தெரியலை… இன்னிக்கு ஒரே ஒரு தடவை….”
அவனின் அந்த வார்த்தைகள் எனக்குள் பூகம்பமாய் வெடித்து என்னை தலைகீழாகப் புரட்டிப்போட்டது.
“தயாரா இரு… ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்” என்று உள்ளே போனான் அவன்.
நான் என் டிரஸ்ஸிங் டேபிள் அருகே சென்றேன். தலையை லேசாக ஒதுக்கினேன். மெல்லிய பவுடர் பூச்சை என் முகத்துக்குக் கொடுத்தேன். லிப்ஸ்டிக்கை அந்த விஷ பாட்டிலில் முங்கி எடுத்து என் உதட்டோரங்களில் தடவினேன். அவனின் சுயநல முகம், நான் மனதுக்குள் கட்டிவைத்திருந்த மிருகத்தின் சங்கிலியைச் சுக்கல் சுக்கலாக உடைத்துப்போட்டது. அவனை மன்னிக்கத் தயாராகத்தான் இருந்தேன்.
இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்கிற கடைசித் தருணத்தில்தான் கொலை செய்ய முடிவெடுத்தேன்.