Home தொடர்வரலாற்றில் பொருளாதாரம் – 30

வரலாற்றில் பொருளாதாரம் – 30

by Viswanaath Thyagaraajan
0 comments

சோழர்கள் வீழ்ந்த உடனே விஜயநகர ஆட்சி இங்கு தமிழகத்தில் வந்துவிடவில்லை; ஆனால் அவர்கள் இங்கு வரும்படியான நிலையை இங்கு உள்ளவர்களே உருவாக்கி இருந்தார்கள் என்பதுதான் நிஜம்.

எப்படி இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழன் ஆகியோர் செய்த படையெடுப்பு மற்றும் போர்களினால் சோழப் பொருளாதாரம் ஆட்டம் கண்டு பாண்டியர்களின் எழுச்சியின் போது அவர்களைச் சந்திக்க முடியாமல் போனார்களோ, அது போலவே பாண்டியர்களின் நிலையும் ஆனது. பொருளாதார வளர்ச்சியைக் கண்டுகொள்ளாமல் போனால் என்ன ஆகும்? என்பதற்குத் தமிழ்நாட்டில் தோன்றிய பேரரசான பாண்டியர்களும் உதாரணமாகிப் போனதுதான் சோகம்.

சோழர்களுக்குப் பின் வந்த பாண்டியர்கள் ஆரம்ப காலத்தில் ஆற்றல் மிகுந்தவர்களாகத்தான் இருந்தார்கள், ராஜ்ஜியத்திற்கான வாரிசுப் போட்டி என்ற ஒன்று வரும் வரைக்கும். இந்த வாரிசுரிமைப் போட்டி என்பது எவ்வளவு பெரிய அமைப்பையும் ஒன்றும் இல்லாமல் செய்துவிடும். அதற்கு இந்தியச் சரித்திரத்தில் மிகப்பெரிய சாட்சியாக இருப்பது முகலாயப் பேரரசுதான். அவுரங்கசீப் கூடத் தனது சகோதரர்களான தாரா ஷிகோ, முராத் பக்ஷி மற்றும் ஷா ஷூஜா ஆகியோரைக் கொன்றுவிட்டுத்தான் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தார்.

அதே மாதிரியான பாண்டிய அரசின் வாரிசுரிமைக்காகச் சுந்தர பாண்டியர் மற்றும் வீர பாண்டியன் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. நிலையான அதிகார மையம் என ஒன்று இல்லாத பொழுது இருந்த குழப்பமான அரசியல் சூழ்நிலையை டெல்லி சுல்தானகம் பெயரில் படையெடுத்து வந்த மாலிக் காபூர் பயன்படுத்திக்கொண்டு, அரசியல் மற்றும் பொருளாதார மையங்களின் கருவூலங்களைக் கொள்ளையடித்தான்.

இதன் பிறகு எவ்வளவு முயன்றும் பாண்டியர்களால் அந்தப் பெருமைக்குரிய பழைய நிலையை அடைய முடியவில்லை. முக்கியமாக வணிகர்கள் அவர்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கை போனதால் மதுரையை விட்டுத் தெற்கு நோக்கிப் போனார்கள். பின் அங்கு ஆட்சி புரிந்தவர்கள் பிற்காலப் பாண்டியர்கள் என அழைக்கப்பட்டனர்.

பாண்டியர்கள் மதுரையை விட்டுப் போன பிறகு மதுரையும் அதனைச் சுற்றி இருந்த பகுதிகளில் இருந்த நிலச்சுவான்தார்கள் தங்களைச் சுதந்திரத் தன்னாட்சித் தலைவர்களாகச் செயல்பட ஆரம்பித்தார்கள்.

இப்படியான நிலையில் மதுரை இருந்த பொழுதுதான் மதுரையில் டெல்லி சுல்தானகம் ஆளுநர் மூலம் ஆட்சி செய்ய முயன்றது. ஆனால் பொருளாதார மையம் அமைத்தல், வரிப் பணத்தைத் திருடர்களிடமிருந்து பாதுகாத்து டெல்லி அரசு கருவூலத்தில் சேர்த்தல், படையெடுப்புப் போர் ஆகியவற்றில் இராணுவ உதவி பெறுதல் ஆகியவற்றில் பல பிரச்சனைகள் நிலவி வந்தன.

இதுபோன்ற நிலையில் மதுரையில் இருந்த டெல்லி சுல்தானகத்தின் ஆளுநர் ஜலாலுத்தீன் அஹசன் கானுக்கு இங்கு இருந்த பொருளாதார மையங்கள் மூலம் கிடைத்த பெரும் வரி வருமானத்தைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஏனென்றால் கஷ்டப்பட்டு வரி வசூல் செய்து டெல்லி கருவூலத்தில் கொண்டு போய் சேர்த்தாலும் அதிலிருந்து சிறு தொகைதான் மதுரை ஆளுநருக்குச் சம்பளமாகக் கிடைத்தது.

அதன் காரணமாக டெல்லி சுல்தானகத்திலிருந்து வெளியேறி மதுரை சுல்தானகத்தை நிறுவித் தன்னைச் சுதந்திர அரசராக அறிவித்துக் கொண்டார்.

சுதந்திரச் சுல்தானகமாக அறிவித்துக் கொண்ட ஜலாலுத்தீன் அஹசன் கானுக்கு வந்த முதல் பிரச்சனையே நிர்வாகம் செய்ய, ஆட்சி நடத்த நிதி தேவை என்பதுதான்.

பாண்டியர்களின் வாரிசுரிமைப் போட்டிச் சண்டைகளால் மதுரையின் பொருளாதார மையங்கள் பலவீனமடையத் தொடங்கியிருந்தன. அதற்குச் சிகரம் வைத்ததுபோல் மாலிக் கபூரின் படையெடுப்பு மற்றும் அதன் வழியே நடந்த கொலை, கொள்ளை ஆகியவை மதுரையின் அக்கால வணிகத் திறனையும் பாதுகாப்புத் திறனையும் கேள்விக்குறியாக்கின.

இப்படிக் கேள்விக்குறியான இடத்தில் தங்களது பாதுகாப்புக்கருதி அயல்நாட்டு வணிகர்கள் மதுரைப் பக்கம் வரவில்லை. அதுவரையில் வழிபாட்டு மையங்கள் சார்ந்த வணிகச் சாலையின் முக்கியப் புள்ளியாக இருந்த மதுரையை உள்ளூர் வணிகர்களும் தவிர்க்க ஆரம்பித்தனர். பல வணிகர்கள் மதுரையை விட்டு வெளியேறி அப்பொழுது பொருளாதார ரீதியாக வளர்ந்து வந்துகொண்டு இருந்த நகரங்களான ஹம்பி, மைசூர் ஆகியவற்றில் குடியேறத் தொடங்கியிருந்தார்கள்.

இந்த நிலையின் தொடக்கக் காலத்தில்தான் மதுரை சுல்தானகம் அமைக்கப்பட்டது. அப்படி அமைக்கப்பட்ட இடத்திலிருந்து மதுரை சுல்தானகத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு வரிகள், வருமானம் கிடைக்கவில்லை. நிலச்சுவான்தார்கள் யாரும் குத்தகைக்குக் கோயில் நிலங்களிலிருந்து வந்த வருமானத்தில் கோயிலுக்குச் சேர வேண்டிய பங்கைத் தரவில்லை; கொடுத்த கடன்களுக்கான வட்டியைச் செலுத்தவில்லை. இதனால் வழிபாட்டு மையங்களிலிருந்து எந்த வருமானமும் கிடைக்கவில்லை.

இதனால் சுல்தானகம் திம்மி மக்கள் (இஸ்லாமிய ராஜ்ஜியத்தில் வாழும் மற்ற மத மக்களைக் குறிக்கும் சொல்) மீதான ஜிஸ்யா வரியை (திம்மி மக்கள் தங்களது பாதுகாப்புக்குச் செலுத்தும் வரி) அதிகப்படுத்தினார்கள்.

மேலும் மதுரை சுல்தானகத்தின் வருமானத்தைப் பெருக்கப் பிற்காலப் பாண்டியர்களுடன் போர் புரிந்தனர். பிற்காலப் பாண்டியர்கள் தங்களது பழைய பகுதிகளை மீட்டெடுத்து அதில் வணிக வாய்ப்புகளை உருவாக்கிப் பொருளாதாரத்தில் உயர்ந்து கொண்டு இருந்தார்கள்.

ஹோய்சாள பேரரசுடன் போர் புரிந்தனர். மதுரை சுல்தானகத்துடனான போருக்குப் பின் ஹோய்சாள பேரரசு வீழத் தொடங்கியது.

இந்தப்போர்கள் எல்லாம் மதுரை சுல்தானகத்தை இன்னும் கடனில் தள்ளியது. வணிக வாய்ப்பு, வருமான வாய்ப்பு ஆகிய இரண்டும் குன்றிப் போயிருந்த காலகட்டத்தில்தான் மதுரை சுல்தானகத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது.

14ஆம் நூற்றாண்டில் அந்த முடிவுரையை எழுதியவர் விஜயநகர பேரரசைச் சேர்ந்த புக்க ராயரின் மகனான குமார கம்பணர்.

குமார கம்பணர் படையோடு வந்த பின்னர் இங்கு மதுரையில் பல குடும்பங்கள் குடியேறின. அது போன்ற குடும்பத்திலிருந்து வந்தவர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் என்கின்றன சில வரலாற்றுக்குறிப்புகள்.

(தொடரும்)

Author

You may also like

Leave a Comment