குமார கம்பணா மதுரை மீது போர் புரிந்து வென்ற அதே 14ஆம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தை ஒரு விஷயம் புரட்டிப் போட்டுக் கொண்டு இருந்தது. மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் வணிகப் பொருளாதாரத்திற்குப் பெரிதும் நம்பி இருந்த பட்டு வழிச் சாலையை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிட்டு, கடல் சார்ந்த வணிகத்திற்கு முதல் இடம் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதுவரையில் கடல் வணிகத்தில் பொருட்கள் பாதுகாப்பாய் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வந்தால் லாபம், இல்லையென்றால் நஷ்டம். ஏற்பட்ட நஷ்டத்தை அடுத்த வணிகப் பயணத்தில் அதிக லாபம் வைத்துச் சரி செய்து விடலாம் என்கிற நோக்கத்தில் தான் பல வணிகர்கள் கடல் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். இதனால் பெரும் செல்வந்தர்கள் கடல் வணிகத்தை நம்பி முதலீடு செய்யத் தயங்கினார்கள். ஆனால் கடல் வணிகம் தந்த அதிகப்படியான லாபம் அவர்களைக் கவர்ந்தபடியே இருந்தது.
அதில் இருந்த நிச்சயமற்ற லாபத்தைக் கடல் சார்ந்த சரக்குப் போக்குவரத்திற்குப் காப்பீட்டு முறையை இத்தாலிய வணிகர்கள் கண்டுபிடித்தனர். கடல் வழி வர்த்தகம் என்றாலே கடலோடு சம்பந்தப்பட்டிருக்கும் பல்வேறு ஆபத்துகளும் அடங்கும். புயல், மழை, கடற்கொள்ளையர்கள் ஆகியவற்றினால் பொருட்களுக்குப் பெரும் ஆபத்து இருந்தது. இக்காலத்தைப் போலவே அக்காலத்திலும் கடன் பெற்றே பல வணிகர்கள் கடல் சார் வணிகத்தில் ஈடுபட்டு வந்தார்கள். வெற்றிகரமாகக் கிழக்கத்திய நாடுகளில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு வணிகப் பொருட்கள் பாதுகாப்பாய் வந்து சேர்வது 50% என்றால், வராமல் போன பொருட்கள் 50% ஆகும். ஆக, வராமல் போன பொருட்களின் மீதான லாபத்தையும் வந்து சேர்ந்த பொருட்களின் விற்பனையில் இருந்து எடுக்கும் விதமாக, அந்தப் பொருட்களை அதிக லாபம் வைத்து விற்க ஆரம்பித்தார்கள்.
அதிக விலையைக் கொடுத்து வாங்கும் பணம் படைத்தவர்களால், உழைக்கும் வர்க்க மக்கள் பணம் சேமித்து வைத்து இதே போன்ற உடைகளை வாங்கி அணிவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் பொருட்களின் மீதான ஆசை ஒரே மாதிரி இருந்தது என்பதால், பணம் சேமித்து வாங்கக் கூடிய திறன் இருந்தும், விலை உயர்ந்தவை வாழ்வில் உயர்ந்தவர்கள் மட்டுமே அணிய வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பித்தது. ஒரே மாதிரியான உடையைப் பிரபுவும் அவருக்கு உழைக்கும் தொழிலாளியும் அணிந்தால் அந்தப் பிரபுவுக்கு என்ன மரியாதை இருக்கும்? இது பிரபுக்களின் மத்தியில் ஒரு அடையாளச் சிக்கலை உருவாக்கியது.
இந்த அடையாளச் சிக்கல் வேறொரு விதத்தில் வணிகர்களைப் பாதிக்க ஆரம்பித்தது. ஒரு தொழிலாளியும் வாங்கக் கூடிய உடைகளை நாம் ஏன் விலை அதிகம் கொடுத்து வாங்க வேண்டும் என்று நினைத்த பிரபுக்கள், அதிக விலை கொடுத்து உடைகளை வாங்க மறுத்தனர். வணிகர்களைப் பொறுத்தவரையில் பிரபுக்கள், தொழிலாளிகள் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது; ஒழுங்காய் பணம் வந்தால் போதும் என இருந்தார்கள். ஆனால், தொழிலாளிகள் சந்தையோடு ஒப்பிடும்போது வணிகர்களைப் பொறுத்தவரை பிரபுக்கள் சந்தை என்பது சிறிய சந்தை தான். சிறிய சந்தை வாய்ப்பிற்காக ஏன் பெரிய சந்தையின் லாபத்தைப் பகைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணி, தங்களது அதிகார வர்க்கத்துடனான செல்வாக்கின் மூலம் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதுதான் ஆடம்பரக் கட்டுப்பாட்டுச் சட்டம் (Sumptuary Laws).
இந்தச் சட்டம் அந்த நாளில் பல நாடுகளில் பல வடிவங்களில் பின்பற்றப்பட்டு வந்தது. கேரளாவில் இருந்த முலை வரி (மார்பு வரி). இந்த வரியை வைத்து இந்த ஆடம்பரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் உளவியல் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முயல்வோம். ஒரு பெண்ணின் மார்பை மறைக்க வரி யார் மீது விதிக்கப்பட்டது எனப் பார்த்தோமானால், அந்த வரியை யாரால் செலுத்த முடியாதோ அவர்கள் மீது தான் இந்த வரி விதிக்கப்பட்டது. இப்படி மார்பை மறைக்காமல் ஒரு சமூகத்துப் பெண் இருந்தால், அவளுக்கும் அவளைச் சார்ந்த ஆண் மனதிலும் அதிகார வர்க்கத்தின் அதிகார பலத்தை நிறுவி, சுயமரியாதையைப் போக்கி, அவர்கள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்க இந்த வரி பயன்படுத்தப்பட்டது. இப்படிச் செய்வதால் அதிகார வர்க்கத்திற்கு எப்பொழுதும் அடிமைகளாக அவர்கள் இருப்பார்கள். சுயமரியாதையை இழந்த சமூகம் யோசிக்க மாட்டார்கள். யோசிக்காதவர்கள் அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்க மாட்டார்கள்.
இந்த மாதிரியான சட்டம் தான் இத்தாலியிலும் பின்பற்றப்பட்டு வந்தது. இந்தச் சட்டத்தின் அடிப்படை அம்சம் என்னவென்று பார்த்தால், பிரபுக்களுக்கும் அதிகார வர்க்கத்தினர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான். அதிகார வர்க்கத்தில் இருந்தவர்கள் ஆடம்பரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை ஏதோ மக்களின் சேமிப்பைக் காக்க வந்த நல்லவை போன்று காட்சிப்படுத்த முயன்றாலும், அடிப்படையில் அதன் நோக்கம் என்னவோ வர்க்க பேதக் கோட்பாட்டைச் சமூகத்தில் பொருளாதார அடிப்படையில் மக்களைப் பிரித்து வைக்கத் தான்.
சரி, ஆடம்பரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை வரப்போகும் அத்தியாயங்களில் தேவையான இடங்களில் பார்ப்போம்.
(தொடரும்)