Home கட்டுரைதிருக்குறளில் காணலாகும் அரண் குறித்த செய்திகள்

திருக்குறளில் காணலாகும் அரண் குறித்த செய்திகள்

0 comments

ஆய்வுச் சுருக்கம்:

உலகம் போற்றும் தமிழ்மொழியில் உயர்ந்த நூல்களுள் தலையாய நூலாகத் திருக்குறள் திகழ்கிறது. இந்நூல் மொழிவேறுபாடு, இனவேறுபாடு, சமய வேறுபாடின்றி அனைவரும் ஏற்றுப் போற்றும்படியாகத் திகழ்வதால் தான் பழங்காலம் முதற்கொண்டே பலரும் இதற்கு உரை எழுதிச் சிறப்பு பெற்று வருகின்றனர். தமிழகம் வாழ்விலும், வளத்திலும், அறிவிலும், ஆண்மையிலும் தமிழினத்தை மிஞ்சிய இனம் வேறு இல்லை. போர் விரும்பத்தகாத ஒன்று; வேண்டாததும்கூட என்றாலும், போர் நிகழாத நாடும், போர் நிகழாத காலமும், போர் புரியாத உயிரினமும் இல்லை. உலகம் தோன்றிய நாள் தொட்டு போர் தொடர்ந்தே வருகிறது. நாட்டிற்கும், ஆட்சித்தலைவருக்கும் அழிவு வராமல் பாதுகாத்துக் கொள்ளும் அமைப்பு அரண் எனப்படுகின்றது. அரண் என்பது நாட்டைப் பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு வளையம் ஆகும். நமக்குச் சொந்தமாக நாடு இருந்தால் மட்டுமே பாதுகாப்பாகவும், இன்பமாகவும் வாழ முடியும். தெய்வப்புலவர் திருவள்ளுவர் மலை, நீர், மணல், காடு போன்ற இயற்கை அரண்களையும், கோட்டை போன்ற செயற்கை அரண்களையும் வடிவமைப்பளராகவே மாறி அரண் அமைவு பற்றிச் சிறப்பாக விளக்கியுள்ளார்.

முன்னுரை:

ஒரு நாட்டு மன்னனின் ஆட்சித் திறமை என்பது அந்நாட்டின் செங்கோல் கலையாமல் ஆட்சி செய்யக் கூடிய மன்னனின் கையில் உள்ளது. தன் அரண்மனையைச் சுற்றி உரிய பாதுகாப்புகளையும், இடிக்க முடியாத சுவர்களையும் ஏற்படுத்த வேண்டும். நெல்லும் நீரும் மட்டுமே தம் மக்கள் உயிர் வாழத் தேவை என்று அரசன் கருதாமல் மக்களை இடர்களிலிருந்து காப்பவனே சிறந்த மன்னன் ஆவான். மிகப்பெரிய ஆட்சி அமைப்பைக் கொண்டு இருந்தாலும் பகை நாட்டவரின் பலத்தையும், பலவீனத்தையும் நன்கு அறிந்து எதிரியின் பலத்தை அழித்தால் மட்டுமே ஒரு அரசன் அரணைச் சிறப்பாகச் செயல்படுத்த இயலும்.அரண் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றது. அது எதிரியிடமிருந்து மக்களைக் காப்பதுடன், நாட்டின் வலிமையைப் பறைசாற்றும் அடையாளமாகவும் திகழ்கிறது. தெய்வப்புலவர் திருவள்ளுவர் ‘படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண்’ (குறள். 381) எனத் தொடங்கும் குறட்பாவில் வலிமையான இராணுவம், நாட்டுப்பற்று மிக்க மக்கள், அளவற்ற செல்வம், நாட்டின் நலனைக் கருதிச் செயல்படும் அமைச்சர்கள், துன்பத்தில் உதவும் அண்டை நாடுகளின் நட்பு, அழிக்க முடியாத காவல் அரண் ஆகிய ஆறு அங்கங்களையும் உடைய அரசன் அரசர்களில் சிங்கத்தைப் போன்றவன் என்று கூறியுள்ளார்.பகைவர் மீது படையெடுத்துச் செல்வதற்கும், பகைவரால் தாக்கப்படும் போது தற்காத்துக் கொள்வதற்கும் உதவக் கூடிய அரண் சிறப்பாக ஒரு நாட்டில் அமைந்தால் மட்டுமே நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இன்று நாட்டின் பாதுகாப்புக்கு இராணுவ நிலைகள், எல்லைப் பாதுகாப்பு போன்றவை அரணாக விளங்குகின்றன. இந்திய இராணுவம் (நிலப்படை), இந்தியக் கடற்படை, மற்றும் இந்திய விமானப்படை ஆகிய அனைத்தும் சிறப்பாகச் செயல்படுவதால் மட்டுமே நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், இன்பமாகவும் வாழ முடிகின்றது. திருக்குறளில் அரண் அதிகாரத்தில் அரணின் சிறப்பை முதல் குறட்பாவிலும், இரண்டு முதல் எட்டாம் குறட்பா வரையில் அரணின் இலக்கணத்தைப் பற்றியும், கடைசி இரண்டு குறட்பாக்கள் அரணைக் காப்பவர்கள் மிகவும் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. திருக்குறள் கூறும் அரண் குறித்த செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அரண் குறித்து இலக்கியங்கள் கூற்று:

அரண் என்பது ஒரு நாட்டின் அல்லது இடத்தின் பாதுகாப்பிற்காக அமைக்கப்படும் கோட்டை அல்லது இயற்கைப் பாதுகாப்பு அமைப்புகளைக் குறிக்கும். இது பகைவர்களிடமிருந்து நாட்டையும், மக்களையும் காக்க உதவுகிறது. தொல்காப்பியத்தில் கட்டிடக்கலை பற்றியும், அரண்மனைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்றும் புறத்திணை வாயிலாக அறிய முடிகின்றது. நாட்டின் பாதுகாப்பு அரணைப் பொறுத்தே அமைகிறது. போர் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியர் உழிஞைத் திணையில் கூறியுள்ளார்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்.(குறள்.742)

அதாவது மணி போன்ற தெளிந்த நீரும், நிலமும், மலையும், குளிர்ந்த நிழலுடன் கூடிய காடும் ஆகிய இந்த நான்கையும் உடையதே அரண் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

சீவகசிந்தாமணி என்ற நூலின் ஆசிரியர் அரணை ஒரு மாதாவாக உருவகப்படுத்திக் கீழ்க்காணுமாறு பாடியுள்ளார்.

அகழ்கிடங்கு அம்துகில் ஆர்ந்த பாம்புரி
புகழ்தரு மேகலை ஞாயில் பூண்முலை
திகழ்மணி கோபுரம் திங்கள் வாள்முகம்
சிகழிகை நெடுங்கொடி செல்விக்கு என்பவே.

சிறுபஞ்சமூலம் நால்வகை அரணுடன் மக்களும் இணைக்கப்பட்டு ஐந்து ஆக்கி, இவ்வைந்தினையும் அரணாக உடையவனையே வேந்தனாக நாட்டுக என்பதைக் கீழ்க்காணும் பாடல் மூலம் உணர்த்துகின்றது.

நீண்டநீர் காடு களர்நிவந்து விண்தோயும்
மாண்ட மலைமக்கள் உள்ளிட்டு – மாண்டவர்
ஆய்ந்தன ஐந்தும் அரணா உடையானை
வேந்தனா நாட்டல் விதி.

நீர் அரணின் இன்றியமையாமையைச் சிறுபாணாற்றுப்படையில் கீழ்க்காணுமாறு கூறுகிறது.

மணிநீர் வைப்பு மாலொடு பெயரிய
பனிநீர் படுவில் பட்டினம்

‘மண்ணுற வாழ்ந்த மணிநீர்க் கிடங்கின்’ என்று மதுரைக்காஞ்சி கூறுகின்றது.

இன்றைய காலகட்டத்தில், எல்லைப் பாதுகாப்புப் படைகளும், தொழில்நுட்பப் பாதுகாப்புகளுமே நவீன காலத்து ‘அரண்’ களாகக் கருதப்படுகின்றன. இந்திய இராணுவப் படையானது இந்தியக் குடியரசின் ஆயுதப் படைகளைக் குறிக்கிறது, இதில் முக்கியமாக இந்திய இராணுவம் (நிலப்படை), இந்தியக் கடற்படை, மற்றும் இந்திய விமானப்படை ஆகிய மூன்று தொழில்முறைப் பிரிவுகள் அடங்கும். இவை அனைத்தும் சிறப்பாகச் செயல்படுவதால் மட்டுமே நாட்டில் வாழும் நாம் மிகவும் பாதுகாப்பாகவும், இன்பமாகவும் வாழ முடிகின்றது.

படை வீரர்களின் தேவைகளை நிறைவேற்றுதல்:

அரசரின் தலையாய கடமைகளுள் மிகவும் முக்கியமானது படைவீரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஆகும். உள்ளிருப்போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் உடையதாய் அரண் அமைந்து இருத்தல் வேண்டும் என்பதை ‘எல்லாப் பொருளும் உடைத்தாய்’ (குறள்.746) எனத் தொடங்கும் குறட்பா வாயிலாகத் திருவள்ளுவர் உணர்த்தியுள்ளார். மற்ற நாடுகளை உணவுப் பொருள்களுக்காக நம்பியிருக்கக் கூடாது. ‘கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த்’ (குறள்.745) எனத் தொடங்கும் குறட்பாவானது பகைவரால் கைப்பற்றப்படுவதற்கு அரிதாகத் தன்னிடம் வேண்டிய அளவு உணவுப் பொருள்களை உடையதாகவும், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதற்குரிய தன்மை படைத்ததாய் இருப்பதே சிறந்த அரண் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இக்கோட்பாட்டை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தற்காத்துக் கொள்வதற்குச் சிறந்த கொள்கையாக இன்றும் பின்பற்றி வருகின்றன.

இன்றைய மத்திய மற்றும் மாநில அரசுகள் முப்படை வீரர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன, இதில் கல்வி உதவித்தொகை, சுயதொழில் கடன்கள், மருத்துவ உதவிகள், வீட்டுவசதி, வரிச் சலுகைகள், போர்க்கால உதவித்தொகை, ஈமச்சடங்கு நிதி, மற்றும் ‘காக்கும் கரங்கள்’ போன்ற சிறப்புத் திட்டங்கள் அடங்கும்; இவை அவர்களின் குடும்பங்களின் நலனுக்காகவும், மறுவாழ்விற்காகவும் வழங்கப்படுகின்றன.

அரண் அமைப்பு:

இயற்கை அரணோடு செயற்கை அரணும் தேவை. எளிதில் எட்டமுடியாத, உயர்ந்த, அகலமான, அருமைமிகு மதில் தேவை என்று கீழ்க்காணும் குறட்பாவில் கூறியுள்ளார்.

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல். (குறள்.743)

மதில் அகலமாய் இருப்பின் படைக்கருவிகளை மறைத்து வைத்துப் பகைவர்களைத் தாக்க இயலும் என்கிறார். இவை இன்றைய விமானத் தாக்குதலில் பயனற்றவை என்றாலும், இன்றும் பல இடங்களில் இத்தகைய அரண்கள் பயன்பாட்டில் உள்ளதைக் காண முடிகின்றது. மேலும் பகைவர்கள் இது போன்ற வலிமையான அரண்களைப் பார்க்கும்போது மனத்தால் நடுங்குவர். அது அவர்கள் தோல்விக்குக் காரணமாய் அமையும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
முற்றுகையிட்டாலும், முற்றுகையிடாமல் திடீரெனப் போர் செய்தாலும், வஞ்சனையாக நெருங்க முயன்றாலும் பகைவரால் வெல்ல முடியாத தகுதியுடையதாக விளங்குவதே அரணாகும் என்பதை ‘முற்றியும் முற்றா தெரிந்தும்’ (குறள்.747) எனத் தொடங்கும் குறட்பாவில் அரண் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். கோட்டைக்குள் இருந்தபடியே இடத்தை விட்டு அகலாமல் சூழ்ந்திருக்கும் எதிரிகளை வெல்லக்கூடிய வகையில் அரண் அமைந்திருக்க வேண்டும் என்பதை ‘முற்றாற்றி முற்றி யவரும்’ (குறள்.748) என்னும் குறட்பா விளக்குகிறது.

போர் வீரர்களின் திறமை:

அரண் தன்னிடத்து நுகரப்படும் எல்லாப் பொருட்களையும் கொண்டிருப்பதோடு, படைக் கலங்களையும் பெற்றுப் பகைவர் தாக்க வரும் போது அவ்வரணைக் காக்க வல்ல வீரமுடைய நல்ல வீரர்களைப் பெற்று இருத்தல் மிகவும் இன்றியமையாததாகும்.

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.(குறள்.750)

அதாவது அரண் எவ்வளவு பாதுகாவலை உடையதாக இருந்த போதிலும், சிறப்பான போர் வீரர் இல்லாதிருந்தால் அந்த அரண் பயனற்றதாகி விடும் என்று திருவள்ளுவர் படை வீரர்களின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். படை வீரர்கள் நாட்டை ஆளும் அரசனிடத்தில் அன்பும், வீரமும், சோர்வின்மையும், நல்லார் இணக்கமும், தெய்வச் சிந்தனைகளும், கல்வி, கேள்வி, அறிவும், ஒழுக்கமும் உடையவர்களாக இருத்தல் மிகவும் இன்றியமையாததாகும்.

மறத்திலும் அறம் போற்றியவர்கள் நம் தமிழர்கள்:

வீரத்தின் வித்தினைப் பாடுபொருளாகக் கொண்ட நூலாகிய புறநானூறானது போரின்றி உலகோர் அனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டிய தேவையினை வற்புறுத்துகின்றது. சங்ககாலத் தமிழர்கள் போர்நெறிக்கு இலக்கணம் வகுத்துப் போர் முறையிலும் அறம் வளர்த்த புகழுக்குரியவர்கள் ஆவர். தன் துன்பம் பார்க்கும் போது பிறர் துன்பத்தையும் தன் துன்பம் போல் கருதி எதிரி நாட்டு மக்களையும், அரசர்களையும் நடத்திய தமிழர்களின் மரபு போற்றத் தக்கதாகும். சங்ககாலத்தில் போரிடும் நாடுகள் நேருக்கு நேர் நின்று அறநெறிப்படி போர் செய்தன. ஆனால் இக்காலத்தில் போர்நெறி இன்றி ஆகாயத்திலும், தரையிலும், கடலிலும் வரைமுறையின்றி மறைந்து இருந்து தாக்குகின்றனர். இக்காலத்தில் நடக்கும் போர் அறம் திறம்பிய போராக உள்ளது. நேருக்கு நேர் நின்று வாள், வில், ஈட்டி போன்றவற்றைக் கொண்டு போரிடுதலே போர் நெறியாக அக்காலத்தில் இருந்தது. புறமுதுகில் குத்துவதும், புறமுதுகு காட்டி ஓடுவோர்களை மன்னிக்காது துரத்திக் கொல்வதும், பலமற்ற ஒருவனைப் பலசாலி ஒருவன் களத்தில் நில்லாது கள்ளத்தனமாகக் கொல்ல நினைப்பதும், கொல்வதும் போர்க் குற்றங்களாகக் கருதப்பட்டன. பகலில் போரிட்டு இரவில் போரிடாமையைத் தமிழர்கள் போர் அறமாகப் போற்றினர். போர் நெறியானது அறவழி அடிப்படையில் இருந்தது என்பதைப் புறநானூற்றுச் செய்யுள்கள் தெளிவாக்குகின்றன.

விண்ணை இடிக்கும் தலைஇம யம்எனும்
வெற்பை யிடிக்கும் திறலுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத் ததமிழ்ப்
பார்த்திபர் நின்ற தமிழ்நாடு

என்று தமிழரது வீரத்தை மகாகவிபாரதியார் பாடியுள்ளார். தமிழர்கள் என்றும் படைக்கு முந்துவர். இன்று நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் இராணுவத்தில் சேர்ந்து பாலைவனங்களிலும், காடுகளிலும், மலைகளிலும் வீரப்போர் புரிந்து நாட்டைக் காப்பதோடு தமிழ்நாட்டின் பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றனர். மறத்திலும் அறம் போற்றியவர்கள் தமிழர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நம் தமிழகத்தில் போர்வீரர்கள் தங்கள் உயிரைத் துச்சமென எண்ணி வீரமரணம் அடைந்தோருக்கு நடுகல் அமைத்துக் கடவுளாக வழிபட்டனர்.

முடிவுரை:

நாட்டின் பாதுகாப்பு வளையமாகிய அரண் குறித்துப் பல செய்திகளை உணர்த்திய வள்ளுவர் கண்ணால் காண இயலாத அறிவின் சிறப்பை ‘அறிவற்றம் காக்கும் கருவி’ என்னும் குறட்பாவின் வாயிலாக ஒரு அரசனுக்குப் படையும், அரணும் மட்டுமே பாதுகாக்கும் கருவி என்று எண்ணக் கூடாது. அறிவு தான் அழிவு வராமல் காக்கக் கூடிய கருவி என்பதைப் பதிவு செய்துள்ளார். அந்த அறிவு அரசனுக்கு இல்லையானால் அரணாலும், படையாலும் பயனில்லை. அறிவுடைய அரசனின் திட்டங்கள் பகைவரை நடுங்க வைக்கும் என்கிறார். நாட்டின் பாதுகாப்பிற்கு மனம் மிகவும் முக்கியம் என்பதை ‘அச்சம் உடையார்க்கு அரணில்லை’ என்ற குறட்பாவின் வாயிலாக புறப் பாதுகாப்புகள் எல்லாம் மனம் வலிமையில்லாத போது பயனற்றவை என்று கூறியுள்ளார். இக்கருத்து இன்றும் ஏற்புடையதாகும். இன்றும் கூடச் சிறிய நாடுகள் மனவலிமையால் பெரிய நாடுகளை எதிர்த்து நிலைகுலையச் செய்வதைக் காண முடிகின்றது. மாவீரன் பெரும் படையுடன் வந்து இந்தியாவில் வெற்றி பெற்றான். இறுதியில் மன வலிமை பொருந்திய சிறிய படையுடன் கூடிய மன்னன் புருஷோத்தமனை எதிர்க்க இயலாது தவித்தான். இது வரலாறு உணர்த்தும் பாடமாகும். இன்றைய முன்னேற்றமடைந்த இந்தியாவின் புதிய ஏவுகணைகளில் முக்கியமானது, அதன் அணுசக்தித் தடுப்பை அதிகரிக்கும் அக்னி-5 (Agni-5) ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்கள் (MIRV தொழில்நுட்பத்துடன்), நடுத்தர தூர அக்னி-ப்ரைம் (Agni-Prime) (அக்னி-பி) மற்றும் வரும் காலங்களில் 800 கிமீ தூரம் பாயும் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை, மேலும் ஹைபர்சோனிக் ஏவுகணை வளர்ச்சி ஆகியவை ஆகும், இவை அனைத்தும் இந்தியாவின் தற்காப்புத் திறனை வலுப்படுத்துகின்றன. 5,000 கி.மீ.க்கும் அதிகமான தூரம் சென்று பல போர்க்கப்பல்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட அக்னி-5, ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் மிகப் பெரிய பாய்ச்சலாகும். இந்த ஏவுகணைகள் அனைத்தும் இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை பலப்படுத்துவதோடு, அணுஆயுதத் தடுப்புத் திறனையும் அதிகரிக்கின்றன. நாட்டின் பாதுகாப்பு வளையமாகிய அரண் உறுப்புகளான இந்திய இராணுவம் (நிலப்படை), இந்தியக் கடற்படை, மற்றும் இந்திய விமானப்படை ஆகிய மூன்றும் சிறப்பாகச் செயல்படுவதால் மட்டுமே நாட்டில் வாழும் நாம் மிகவும் பாதுகாப்பாகவும், இன்பமாகவும் வாழ முடிகின்றது. திருக்குறள் கூறும் அரண் குறித்த செய்திகளை ஆராயுமிடத்து திருவள்ளுவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்பொழுதும் பொருந்தும் பல அரண் செய்திகளைப் பதிவு செய்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது. திருக்குறளில் கூறப்படாத செய்திகளே இல்லை எனலாம். அனைத்துத் துறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளதால் திருக்குறளைப் பல்துறை விளக்கக் கண்ணாடி என்று கூறுவது சாலச் சிறந்தது.

துணைநூல் பட்டியல்:

திருக்குறள், திருவள்ளுவர், மூலமும் உரையும், 2001, ராதா முரளி (உரையாசிரியர்), கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிட்., 372/1, மாங்காடு பட்டூர் கூட்டு ரோடு, மாங்காடு, சென்னை-600 122.

வள்ளுவர் கண்ட அரசியல், வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார், 1956, சென்ட்ரல் அச்சகம், 97, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005.

இக்கால உலகிற்குத் திருக்குறள் (தொகுதி 3), 2004, முனைவர் சா.கிருட்டிணமூர்த்தி, இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 600 113.

திருவள்ளுவரின் உலகியல் சிந்தனைகள், 2025, சிந்தனைச் சிறகுகள் நாகை சங்கமம், நாகப்பட்டினம். ISBN : 978-93-342-8559-8.

Author

You may also like

Leave a Comment