- அசுரவதம் -1 முதல் சந்திப்பு
- அசுரவதம் : 2 – காலகேய தானவன்.
- அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன்
- அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்
- அசுரவதம் : 5 – புதுவரவு
- அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி
- அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை
- அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.
- அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.
- அசுரவதம்: 10 – பழியின் பயணம்.
- அசுரவதம்: 11 – நெடிது நின்ற நாயகன்.
- அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு
- அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்
- அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!
- அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்
- அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்குவா
- அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்
- அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.
- அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.
- அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்
- அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.
- அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)
- அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 3: சபரியின் தோழி)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 8: சபரி மோட்சம்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 9: புதிய நட்பு
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 – இரு மகளிர் .. இரு சிந்தனை.
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 – போகாதே.. போகாதே.. என் கணவா
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17: நீறு பூத்த நெருப்பு
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்
- அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6: உடையும் அரண்கள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.
இலக்குவன் கிஷ்கிந்தையின் வாயிலில் நின்றிருந்தான். அவன் கண்கள் கோவைப்பழம் போலச் சிவந்திருந்தன.
அவனின் சீற்றத்துக்குக் காரணமும் இருக்கத்தான் செய்தது. மழைக்காலம் தொடங்கி, மலையில் மூன்று மாதங்களாகக் கொட்டித் தீர்த்ததில் யாரும் யாரையும் சந்திக்க இயலாமல் இருந்தனர். இராமன் சீதையை நினைந்து நினைந்து அழுத கண்ணீரால் மலையில் அருவி உண்டானதா? இல்லை.. மழையினாலா? என்று யோசிக்கும் வகையில் அவன் அத்தனை துயரத்தோடு இருந்தான். இலக்குவனுக்கு அது பெரிய ஆற்றாமையாக இருந்தது.
மழை நின்று நெடுங்காலமாகியும் சுக்ரீவனிடமிருந்து எந்தத் தூதும் இல்லை, செய்தியும் இல்லை.
சொல்லப் போனால் வாலி இறந்த பின்னான இந்த இடைவெளி நேரம் சுக்ரீவனின் ஆடம்பர லௌகீகத்தை ஊட்டி வளர்த்தது.
அரச பதவி கிடைத்த போதையில், இராமனுக்குக் கொடுத்த வாக்கை மறந்து சுக்ரீவன் மதுக்கிண்ணத்தோடு கிடக்கிறான் என்ற நினைவே இலக்குவனின் நரம்புகளைத் தெறிக்கச் செய்தது.
தனது மாபெரும் வில்லின் நாணைப் பிடித்து அவன் ஆக்ரோஷமாக இழுத்து விட்டான். அந்த நாணொலி, இடி விழுந்தது போலக் கிஷ்கிந்தையின் கோட்டைச் சுவர்களை அதிரச் செய்தது. அனுமனும் அதிர்ந்தான்.
சுக்ரீவன் பெண்களின் கன்னங்களிலும் மது நிறைந்த கிண்ணங்களிலும் மூழ்கிக் கிடந்தான். அந்தப்புரத்தில் மதுவின் மணமும், மங்கையரின் சிரிப்பொலியும் மிதந்து கொண்டிருந்தன.
இலக்குவனின் கோபமோ அல்லது அவன் எழுப்பிய நாணின் ஒலியோ அவன் காதுகளைச் சென்றடையவில்லை. மதுவும் மங்கையரும் அருகிருக்க அவற்றைத் தாண்டி அவன் காதுகள் எதையும் கேட்கும் திறனற்று இருந்தன.
அங்கதனும் அவன் இருக்கும் அறைக்குள் செல்லக் கூச்சப்பட்டு வெளியே நிற்கும் நிலை என்பதைப் புரிந்துகொண்டால் சுக்ரீவனின் நிலை நமக்குத் புரியும்.
வரப்போகும் ஆபத்தின் அளவை அனுமன் கண நேரத்தில் அளந்துவிட்டான். சுக்ரீவனிடம் இப்போது பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்த அனுமன், அங்கதன் மூலமாகத் தாரையை இலக்குவனை எதிர்கொள்ளத் தூண்டி விட்டான்.
தாரையின் நிர்வாகத்திறனும் அனுமனின் மதியூகமும் சேர்ந்து இதுவரை நடத்தி வந்த அரசுக்கு இனி ஆபத்து என்பதைச் சொல்லி, அந்த இடைவெளியில் சுக்ரீவனுக்கு நிலையின் விபரீதத்தைப் புரியவைத்தான் அனுமன்.
இலக்குவனை எதிர்கொண்ட தாரை வெண்ணிற உடையில் எதிரே வருவதைக் கண்ட இலக்குவன் மனம் துணுக்குற்றது. அவன் எண்ணம் சுமித்திரை, கோசலையை நாடிச் சென்றது. அவர்களும் இப்படித்தானே தன் தந்தை போன பின் இருப்பார்கள்? என்ற எண்ணமே அவனை வெகுவாக அலைக்கழித்தது.
“மைந்தா இலக்குவா!” என்று தாரை அன்புடன் அழைத்தாள். அதுவரை இலக்குவனிடம் இருந்த சினம் போன இடம் தெரியவில்லை. அவன் கண்கள் மேலெழுந்து பார்க்கும் திறனற்று நிலம் நோக்கியிருந்தது.
“மைந்தா, ஏனிந்தக் கோபம்? சுக்ரீவன் இன்னும் உங்களை வந்து பார்க்கவில்லை என்பதாலா?”
இன்னும் தலை நிமிராமல் ‘ஆம்’ என்பது போலத் தலையசைத்தான்.
சட்டென்று தாரையின் குரலில் இருந்த அன்னையின் கனிவு குறைந்து அரசியின் கம்பீரம் குடிபுகுந்தது.
“கவலை வேண்டாம் இளையவரே, நாங்கள் சும்மா இருப்பதாக நீங்கள் நினைத்து எங்களைச் சந்தேகித்துச் சண்டையிட வந்துள்ளீர்கள். அது தவறு. நாங்கள் நீங்கள் செய்ததை மறந்துவிடவில்லை,” என்றாள் அழுத்தமாக. அந்தக்கடைசி வார்த்தைக்கு அவள் கொடுத்த அழுத்தத்தில் கோபமும் வெறுப்பும் இயலாமையும் கலந்திருந்தன.
தாரையின் அந்த வார்த்தைகளில் இருந்த கூர்மை இலக்குவனின் மார்பைத் தைத்தது. அவனுக்குப் புரிந்தது, அவளது உதடுகள் ஏதோ சொல்லத் துடித்தன. ஆனால் தாரை அவனுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கவில்லை.
“நீங்கள் நினைப்பது போல் கிஷ்கிந்தை உறங்கிக் கொண்டிருக்கவில்லை இளையவரே. வாக்கு கொடுத்தவர் தன் கடமையை மறந்திருக்கலாம். ஆனால் அது பேரரசன் வாலி கட்டிக்காத்த கிஷ்கிந்தையின் வாக்கு. நான் அவன் மனைவி, ஒரு பேரரசிக்கு உறக்கம் ஏது?” என்றாள். அவளது குரலில் இப்போது எந்த நடுக்கமும் இல்லை. அவள் கண்களில் நெகிழ்வும் கம்பீரமும் நிரம்பி வழிந்தது.
“மழைக்காலம் முடியும் முன்னரே, என் உத்தரவின் பேரில் அனுமன் எட்டுத் திசைகளுக்கும் தூதர்களை அனுப்பிவிட்டான். விந்திய மலைகளிலிருந்தும், மேரு சிகரத்திலிருந்தும், கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் கோடிக்கணக்கான வானர வீரர்கள் கிஷ்கிந்தையை நோக்கி அணிவகுக்கத் தொடங்கிவிட்டார்கள்.”
இலக்குவன் ஆச்சரியத்துடன் தன் தலையை உயர்த்தினான்.
“மேலும் நாளைப் பொழுது விடிவதற்குள் இந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் உங்களுக்கான படைகளால் நிரம்பிவிடும். உங்களின் அடுத்த பயணத்திற்கான ஏற்பாடுகளும் உங்களைச் சீக்கிரம் வந்தடையும்,” என்றாள் தாரை.
இலக்குவன் விக்கித்து நின்றான். இவள் உலகை ஆளும் சக்கரவர்த்தினி. இவள் மகா தேவி… இவளின் மதிநுட்பம் விளங்கிக்கொள்ளும் மனித நிலைக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்தான். சுக்ரீவன் இந்த கிஷ்கிந்தையின் அரசன் என்பது வெறும் பெயருக்கு மட்டுமே, ஒட்டுமொத்த அரச இயந்திரம் இப்பேரரசியின் இயக்கத்தில்தான் நகர்கிறது என்ற உண்மை புரிய அவனுக்கு அத்தனை நேரம்.தேவைப்படவில்லை.
ஒரு கணம் அமைதியாக நின்றவன் அவளை நேருக்கு நேர் கண்களை நோக்கி, “அன்னையே, மன்னிக்க வேண்டும். இந்தப் பிழை நிகழாது இருந்திருக்கலாம்,” என்றான்.
அவன் கண்கள் சொன்ன செய்தி தாரையின் நெஞ்சத்தைத் தொட்டது. அவன் சொல்ல வந்தது வாலி வதத்தையும், சினம் கொண்டு அவன் வில்லேந்தி வந்ததையும் சேர்த்தே சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாள்.
இவன் சாதாரண வீரன் மட்டுமல்ல, மிகச்சிறந்த அறிவாளி; உன்னத மனிதன். இவனைத் தம்பியாக அடைந்த இராமன் மீது லேசான பொறாமையும் வந்தது.
இலக்குவன் தொடர்ந்தான்.
“தங்களின் முன்னேற்பாடு வியக்கவைக்கிறது அன்னையே. சுக்ரீவனைப் படைகளுடன் என் அண்ணன் முன் வந்து நிற்கச் சொல்லுங்கள்,” என்று பணிவுடன் கூறிவிட்டு, மீண்டும் ஒருமுறை தாரையைத் தலைவணங்கிவிட்டு வந்த வழியே திரும்பி நடந்தான்.
தாரை ஒரு பெரிய பெருமூச்சு விட்டாள். மாபெரும் அழிவிலிருந்து கிஷ்கிந்தை ஒருவழியாகத் தப்பித்துவிட்டது. ஆனால், இனி வரப்போகும் போர் சுக்ரீவனுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தின் விதியையும் கர்மவினையையும் தீர்மானிக்கப் போகும் போர் என்பதை அவள் நன்கு உணர்ந்திருந்தாள்.
அதே நேரம் மண்டோதரி மீண்டும் முன்பு கேட்ட அதே கேள்வியைக் கேட்டாள்.
“காமவள்ளி, உண்மையைச் சொல்… என் மகள் யார்? அவள் எங்கிருக்கிறாள்?”
சூர்ப்பனகை சிரித்தாள். அந்தச் சிரிப்பில் சினம் தீயெனத் தெறித்தது.
பி.கு:
ஆந்திரப் பகுதியின் ரங்கநாத ராமாயணத்திலும் தாரையின் இந்த ராஜதந்திரம் விளக்கப்பட்டுள்ளது. சுக்ரீவனின் பிழையைச் சூசகமாக ஏற்றுக்கொண்டு, அதே சமயம் வாலியின் மரண வலியை இலக்குவனுக்கு உணர்த்தி அவனைக் காப்பாற்றும் பொறுப்பைத் தாரை கையாள்வது அதில் கூறப்பட்டுள்ளது.
தென்னிந்தியக் கூத்து மரபுகளில், குறிப்பாகத் தமிழகத்தின் தெருக்கூத்து மற்றும் தோற்பாவைக் கூத்துகளில் ‘இலக்குவன் சீற்றம்’ அல்லது ‘கிஷ்கிந்தை காண்டம்’ நிகழ்த்தப்படும்போது, அனுமனின் இந்த மதியூகம் பிரதானமாகக் காட்டப்படும். ஒரு மாவீரனின் கோபத்தை இன்னொரு வீரனால் அடக்க முடியாது, ஆனால் ஒரு கைம்பெண்ணின் முன்னே சத்திரிய தர்மம் தலைகுனியும் என்ற உளவியல் தந்திரத்தை அனுமன் பயன்படுத்தித் தாரையை முன்னிறுத்துவதாகவே நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடுவார்கள்.
(தொடரும்)