யாரோ உலுக்கிவிட்டாற்போல கண் விழித்ததில் முழிப்பு வந்துவிட்டது கிருபாவுக்கு. பஸ் உறுமி முடித்து அப்போதுதான் நின்றிருந்தது. எரிந்த கண்களைக் கசக்கிவிட்டு ஜன்னலில் பார்க்க மோட்டல் தெரிந்தது. பகல் நேர வெளிச்சம் கண்ணைக் கூச, இறங்கலாம் என முடிவெடுத்து எழுந்தான். அருகில் இன்னமும் உறங்கிக் கொண்டிருந்த பயணியின் தோள் தொட்டு எழுப்பினான்.
அவர் சட்டென விழித்தவர், இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதோ என்ற பதற்றத்தில் அரக்கப்பரக்கப் பார்த்துவிட்டு ஆசுவாசமானார். இவனைப் புரிந்துகொண்டு நகர்ந்து போக வசதியாகக் கால் மடக்கி வழிவிட்டுவிட்டு மறுபடியும் தலை சாய்த்தார். கிருபாகரன் கொட்டாவியை விழுங்கியபடி இறங்கினான்.
சேலத்தில் பைபாஸ் தாண்டிய இடம் என்பது புரிந்தது. டீக்கடைக்குள் நன்கொடை டீயை ஊதி ஊதி அருந்திக்கொண்டிருந்தனர் டிரைவரும் கண்டக்டரும். விரல்களின் இடையில் சிகரெட் சிகப்பு விளக்கு.
“ஒரு பிளாக் டீ…”
போஸ்டரில் தொங்கிக்கொண்டிருந்த அன்றைய நாளிதழின் தலைப்புச் செய்திகளை ஒரு பார்வை பார்த்தான் கிருபாகரன். என்றும் மாறாத அதே செய்திகள். அருகிலிருந்த மர பெஞ்சியில் அமர்ந்தான்.
மனதுக்குள் ரஞ்சனியின் முகம் வந்துபோனது. தன் வருகைக்காக ஆவலோடு காத்திருப்பாள். தனக்காக ஒருவர் காத்திருப்பது எத்தனை சுகமாக இருக்கிறது! இன்று வருவதாகச் சொல்லியிருந்தான். ஆனால் இந்த நேரத்தில், இத்தனை மணிக்கு எனச் சொல்லியிருக்கவில்லை. எனவே இவனைத் திடீரெனப் பார்த்தால் ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி நிச்சயம் அவளுக்கு எழலாம். அந்த எண்ணமே கிளர்ச்சி உண்டாகியது.
பிளாக் டீ வந்துவிட்டது. வாங்கின கிளாஸை உதடுகளுக்குத் தந்தான். மிதமான சூட்டில், அளவான காரப்பதத்தில் அம்சமாக இருந்தது டீ. கிருபாவால் நம்ப முடியவில்லை. பொதுவாக இந்த மாதிரி டிரைவர்கள் நிறுத்தும் டீக்கடைகளில் டீ பெயரளவுக்குத்தான் இருக்கும். ஆனால் இங்கென்னவோ நன்றாக இருக்கிறது.
ஒருவேளை தன் உற்சாக மனம்தான் சுவைக்கும் காரணமோ? எண்ணம் மீண்டும் ரஞ்சனியிடம் சுற்றியது.
அவள் அம்மா வீட்டுக்குப் போய் நேற்றோடு ஐந்து நாட்கள் முடிந்துவிட்டிருந்தன. திருமணமான நான்கு மாதங்களுக்குள் அமைந்த நீ…ண்ட பிரிவு இதுதான்.
அவள் அருகில் இல்லாதது மனதில் பேரிழப்பை உருவாக்கியிருந்தது. பகலில் கம்பெனி வேலை, சுற்றிலும் ஆட்கள், பேச்சு சத்தம் என நேரம் கழிந்திட நிறைய விஷயங்கள் இருந்தன. வீடு திரும்பிய பின்னால் அவளது இல்லாமை மனதை வெகுவாகவே உறுத்தியது. ஒருவித வெறுமையை வீட்டில் உணர முடிந்தது.
வீட்டில் அம்மா இருக்கிறாள்தான். பேசலாம், சாப்பிடலாம், ஒன்றாக உட்கார்ந்து டிவியில் ஏதாவது பார்க்கலாம் தான். ஆனாலும், பொண்டாட்டி பக்கத்தில் இல்லாதது ஒருமாதிரி ஏக்கமாக இருக்கிறது. இரவு நேரத் தொல்லைகள் என்பதைத் தாண்டி உணர்வுரீதியாக மனதில் ஒரு மாதிரியான வெற்றிடத்தை உண்டாக்குகிறது. தந்துவிட்டுப் பிடுங்கிக்கொண்ட உணர்வு.
அவளை நேற்று போனில் அழைத்துப் பேசியபோது இதுபற்றியும் சொன்னான். அவளோ “ம்… ம்…” என்றதோடு சரி, பதிலாக ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ‘இங்கே எனக்கும் உங்களைப் பிரிந்திருப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது’ என்பது மாதிரி ஏதாவது சொல்லுவாள் என எதிர்பார்த்திருந்தான். அப்படிச் சொல்லியிருந்தால் இவனுக்கு ஒருவிதத்தில் மனத்திருப்தி உண்டாகியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் அவள் சொல்லவில்லை.
ஒருவேளை இத்தனை நாட்கள் பிரிந்திருந்த அப்பா, அம்மா, தம்பியைப் பார்த்தவுடன் அவள் நம்மை மறந்திருப்பாளோ? அவர்களுடனான பழைய ஒட்டுதல் புருஷன் நினைவுகளை, அவன் அருகாமை சுகங்களை மறந்து போகச் செய்திருக்குமா?
ஆனால்… நிதானமாக யோசித்துப் பார்த்தால் ஒன்று நன்றாகப்ரிகிறது. ஊருக்குப் போன இந்த ஐந்து நாட்களில் அவனாகத்தான் இரண்டு முறையும் போனில் அழைத்து அவளுடன் பேசியிருக்கிறான். அவள் அவனை போனில் அழைக்கவேயில்லை.
போன மாதம் உறவில் யாருக்கோ திருமணம் என அவளது சித்திக்காரி வந்து திருவண்ணாமலைக்கு அழைத்துப் போயிருந்தாள். அப்போதும் கூட இரண்டு தினங்களாக அவன்தான் அழைத்துப் பேசியிருந்தான். அவள் அவனை அழைக்கவேயில்லை.
எப்படியிருக்கிறாள் பார் என்றது அவன் மனம். அவள் மீது கோபமாக வந்தது. ஒரு போன் அழைப்பு பெரிய வேலையா என்ன? எத்தனை நேரம் செலவாகிவிடும்?
கணவனுடன் பேசுவதைவிட இவளுக்கு என்ன முக்கியமான வேலை? அப்படியே வேலை இருந்தாலும் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு என்னுடன் பேசலாமே. என்னை விடவா வேலைகள் முக்கியம்? எனக்கு வேலைகள் இருந்தாலும் அவளை அழைக்கிறேனே. முட்டாளா நான்?
தனக்கான மரியாதையைத் தருவதில்லை. தன் அன்பை உணராது அலட்சியம் செய்கிறாள். தன்னை அவள் நினைக்கவே இல்லை; நினைத்திருந்தால் போனில் அழைத்து பேசுவதற்கு என்னவாம்? இரவுகளில் தூங்குவதற்கு முன்பாக சில வார்த்தைகள் பேசினால் எத்தனை சந்தோஷமாக இருக்கும். ஏன் இப்படி இருக்கிறாள்?
டிரைவரும் கண்டக்டரும் டீ குடித்து முடித்துவிட்டு ‘போகலாம்’ என்பது போல வண்டியருகே வந்து நின்றனர். வாழைப்பழம சாப்பிட்டுக்கொண்டிருந்த, பேப்பர் படித்துக்கொண்டிருந்த கொஞ்சப் பேரும் நகர்ந்து வண்டிக்கு வந்தனர். கிருபாவும் எழுந்தான். வண்டியில் ஏறிக்கொண்டான்.
“எல்லோரும் ஏறியாச்சா?”
பொதுவாகக் குரல் கொடுத்தார் கண்டக்டர். டிரைவரைப் பார்த்துத் தலையாட்ட வண்டி நகர்ந்தது. கிருபாகரனுக்குத் தூக்கம் வரவில்லை. மனம் ஒட்டாது வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தான்.
பொதுவாக, கிருபாகரன் இளகிய மனம் படைத்தவன். அதிக மக்களுடன், குறிப்பாகப் பெண்களுடன் பழகியிராதவன். எனவே மனித மனங்களின் விசித்திரங்களும், அதன் நுட்பங்களும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால்தான் அவளின் குணம் அவனுக்கு அதிர்ச்சியளித்தது.
ஒரு பெண்ணின் மனம் எந்த மாதிரியிருக்கும் என யாருக்குத்தான் தெரியும்? அதுவும் மனைவியின் மனம்! தெரிந்திருந்தால் ஏன் இத்தனை மணமுறிவுகள்? பிரிவுகள்? விரிசல்கள்?
திருமணமானதில் இருந்து பெரியம்மா வீட்டுக்கு ஒருமுறை போயிருக்கின்றனர். விருந்துக்கு வா என பெரியம்மா தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே இருக்கவே இரண்டு தினங்கள் அங்கே இருந்தனர். அப்புறம் முருகாலயாவில் ஒரு சினிமா. அதுவும் ஞாயிறு பகல் ஆட்டம்.
இடைவேளையில் பாப்கார்னும் ஐஸ்கிரீமும் பகிர்ந்துகொண்டார்கள். அவளுடன் இணைந்து படம் பார்த்தது அவனுக்குப் பிடித்திருந்தது. சுமாரான படம் என்றாலும் ரசித்துப்பார்த்தான். அவள் கைகள் கோத்துக்கொண்டு தோள் உரசினபடி…
ரஞ்சனி ஓரளவுக்கு எல்லோருடனும் நன்றாகத்தான் பழக ஆரம்பித்திருந்தாள். அவனது உறவுகள், அக்கம்பக்கம் எனப் பெரிதான குறைகள் இல்லை. என்ன, வெளியூர் போனால் தான் கிறுக்குப் பிடித்துவிடும் போல. கணவனுக்கு போன் செய்து பேச மாட்டாள்.
கிருபாவுக்கு அவளது செயல் வினோதமாக இருந்தது. மனம் அதையே நினைத்தபடி டென்ஷன் ஆனது. வீட்டை விட்டு இறங்கினால் ஒரு பெண்ணுக்கு வீடு மறந்துபோகுமா, புருஷன் நினைவுக்கு வரமாட்டானா? என்ன இவள்! ஒருவேளை எல்லா பெண்களும், மனைவிகளும் இப்படித்தானா? நண்பர்களுடன் பேசும்போது இதைப் பற்றி விசாரிக்கலாமா? ‘உன் வீட்டிலும் இப்படி உண்டா’ என?
‘பொண்டாட்டி ஊருக்குப் போனா சந்தோஷமா இருப்பியா, அதை விட்டுட்டு…’ கிண்டல் செய்வார்களோ?
அதெப்படி சந்தோஷமாக இருக்கும்? அவனுக்குப் புரியவில்லை. புதுப் பொண்டாட்டி மோகம் குறைந்து குழந்தைகள் ஆன பின்னால் தான் அது புரியுமோ?
ஆனாலும் இவள் கருணையில்லாதவள் தான். என் மேல் அன்பில்லாத அரக்கி. மிகச் சாதாரணமான ஒரு விஷயம். ‘ஹலோ எப்படியிருக்கீங்க, வீட்டில் எல்லோரும் நலமா? நல்ல தண்ணீர் வந்ததா?’ என மிக இயல்பாக விசாரிக்கலாம். ஆனால் செய்யவில்லை.
அலட்சியம்தான் காரணமாக இருக்க முடியும். திமிர். என்னை அடிமையாக நினைத்துக்கொண்டிருக்கிறாளோ? அழகில் மயங்கியவன், ஏமாளி என எண்ணுகிறாளோ? அதுதான்.
இதுவரை அவளுடன் சண்டையோ, கருத்து வேறுபாடோ, வாக்குவாதமோ வந்ததில்லை. அப்படியல்ல இப்படி என வரும்போது பெரும்பாலும் அவனே ‘சரி’ என விட்டுக்கொடுத்துவிடுவான்.
அம்மாவும் அப்பாவும் எப்படி குடும்பம் நடத்தினர் என யோசித்துப்பார்த்தான். அப்பாவின் முன்கோபம் ஊரறிந்தது. அதிக நேரங்கள் ஹிஸ்டீரியா நோயாளி போல வீட்டில் அம்மாவுடன் கத்திக்கொண்டே இருப்பார். வீடு என்றால், அப்பா என்றால் எரிச்சல் கூட வந்ததுண்டு.
அம்மாவை ஒருவேளை பிடிக்கவில்லையோ, அன்பு செலுத்தவில்லையோ என பல நேரம் நினைத்ததுண்டு. ஆனால் அதே அப்பாதான் புறநகரில் வீட்டுமனை வாங்கியபோது அம்மாவின் பெயரில் நிலத்தைப் பதிந்தது. ஆபீஸிலிருந்து பெரும் பணம் வந்தபோது அம்மாவுக்கு நகைகள் வாங்கித் தந்தது.
என்ன மாதிரியான இல்லறம் இது எனப் புரிந்துகொள்ளாமல் திணறியபோது, “உனக்கும் கல்யாணம் நடக்கும்போது புரிஞ்சுக்குவே…” என அண்ணனால் பதில் சொல்லப்பட்டதுண்டு.
கொட்டாவி வந்தது. பையிலிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்துக்குடித்தான். போன் எடுத்து கொஞ்ச நேரம் முகநூல் பார்த்தான். அப்படியே கண்கள் மயங்க, போனை எடுத்துப் பேண்ட் பாக்கெட்டில் சொருகிக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.