வாழ்க்கையின் நிராசையில்
என்ன செய்யப்போகிறேன் வாழ்ந்து
எனத் தவமிருந்து பெற்றெடுத்த பிள்ளை கூறியது
காரணம் தொடர் புகைப்பழக்கம்
பதினைந்தே வயதில்
எல்லாவற்றையும் கண்டதுபோல்
அனுபவித்து உணர்ந்ததுபோல் ஓர் உணர்வு
காரணம் கஞ்சாப்பழக்கம்
கையாலாகாதவன் ச்சீ.. தண்டம்
எனப் படுக்கையில் சுகம்காணாத மனைவி திட்டியும்
ஆண்மையைப் பழித்தும் பயனில்லை
காரணம் போதைப்பழக்கம்
பாழடைந்த வீட்டைக் காட்டிச் சீரழிந்த
குடும்பமென ஊர் பழித்தது
உண்டும் உண்ணாதும்
உறங்கியும் உறங்காதும்
படுக்கையில் விழுந்திட்ட
குடிகாரன் வீட்டைப் பார்த்து
பறவைகள் இருந்த கூடு
மங்கிய அதன் எச்சங்களோடு
பாழாய்ப் போயிருந்தது
காண்பவர் பார்வையில் சோகத்தை
வரவழைத்து.
Author
-
மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.