Home சிறுகதைவேதாளக் கேள்வி

சில கேள்விகளுக்குச் சரியான பதில் தெரிந்திருந்தாலும், நம்மால் சொல்ல முடிவதில்லை.

அப்படித்தான் அமைந்தது, அன்று கண்ணகி என்னிடம் கேட்ட கேள்வியும்.

கண்ணகி, எங்கள் வீட்டுப் பணிப்பெண்.

நாங்கள் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து இவள்தான் வீட்டுவேலை செய்ய வருகிறாள்.

இவளது வேலை தினசரி வந்து வீடு பெருக்கி, துடைத்து, பாத்திரங்கள் தேய்த்துவிட்டுப் போவது.

வேலையில் சுத்தம். வெட்டிப்பேச்சு பேச மாட்டாள்.

பார்த்தால் பட்டப்படிப்பு முடித்தது போலச் சூட்டிகையாகத்தான் தெரிகிறாள்.

‘ச்சே.. பட்டப்படிப்பு முடித்திருந்தால், வீட்டுவேலைக்கு ஏன் வருகிறாள்?’ என்று நானாகவே நினைத்துக் கொள்வேன்.

“கண்ணகி.. உன்கிட்ட ரொம்ப நாளா ஒரு கேள்வி கேட்கணும்னு நினைக்கிறேன்.. நீ வேலை முடிஞ்சதும் சிட்டா பறந்துடுறியே?” எனப் பேச்சை ஆரம்பித்தேன்.

“நின்னு பேச எங்கம்மா நேரமிருக்கு? உங்க வீடு மாதிரி இன்னும் நாலு வீடு தினசரி வேலை பார்க்க வேண்டியிருக்கே?”

அவள் சொன்னதும் சரிதான்.

அவளது ஒற்றை வருமானத்தை நம்பி, மூன்று குழந்தைகள் இருக்கின்றன என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும்.

அவளது கணவன் பற்றிப் பேச்சுவாக்கில் கூட அவள் சொன்னதில்லை. ‘ஒருவேளை ஏமாற்றிவிட்டு வேறு யாருடனாவது ஓடிப் போயிருப்பானோ?’

“ஏதோ கேட்கப்போறேன்னு சொல்லிட்டு, நீங்க தனியா யோசனை பண்ணிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?”

கண்ணகி கேட்க, நான் நனவுலகத்திற்கு வந்தேன்.

“ஒண்ணுமில்ல கண்ணகி.. உனக்கு மூணு பிள்ளைங்கனு மட்டும் தெரியும். உன் புருஷனைப் பத்தி நீ இதுவரை சொன்னதில்ல. அதைச் சொல்லலாம்..னா..” என்று மெதுவாக இழுத்து நிறுத்தினேன்.

கண்ணகி சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பதினொன்றைக் காட்டியது.

“உனக்கு அடுத்த வீட்டுக்குப் போக நேரமாச்சுனா கிளம்பு. இன்னொரு நாள் பேசலாம்” என்றேன்.

“இல்லம்மா.. அடுத்த வீடு ஓனர் வெளியூர் போயிருக்காங்க. அதுக்கடுத்த வீட்டுக்குப் போக இன்னும் அரைமணி நேரம் இருக்கு” என்றபடியே தரையில் அமர்ந்து தனது பழைய வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தாள், கண்ணகி.

*

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளோடுதான் கண்ணகிக்குச் சொந்த ஊர். அது கிராமம் அல்ல, ஆனால் நகரமும் அல்ல.

கணவன் தியாகு, ஆட்டோ ஓட்டுநர். ஒன்றுக்கு மூன்றாகக் குழந்தைகள், முதல் இரண்டும் பெண் குழந்தைகள்; கடைசியாகத் தியாகுவின் வற்புறுத்தலின் பேரில் ஒரு ஆண் குழந்தை. எல்லாமே இரண்டிரண்டு வருட இடைவெளியில்.

மூன்றாவது குழந்தை பிறந்ததும், தியாகுவின் வருமானம் மட்டுமே குடும்பத்தை நடத்த போதாது என்று தோன்றியது.

எனவே வீட்டின் முன்பக்கமாக ஒரு பெட்டிக்கடை திறந்து, கண்ணகி அதை நிர்வகித்துக் கொண்டிருந்தாள்.

மூத்த பெண் குழந்தை ரேவதி, பத்தாம் வகுப்பு படிக்கும் சமயம், தியாகு ஒரு விபத்தில் இறந்துவிட, மொத்தக் குடும்ப பாரத்தையும் அவளே சுமக்க வேண்டியதாகிவிட்டது.

“மூத்த பொண்ணை இந்த வருஷத்தோட படிப்பை முடிச்சிடு.. பிளஸ் டூவெல்லாம் வேண்டாம்..” துக்கத்திற்கு வந்திருந்த கண்ணகியின் தாய் கூற..

“எதுக்கும்மா அப்படிச் சொல்ற?” என்றாள், கண்ணகி.

“உன்னோட வருமானத்தில இந்த மூணு குழந்தைகளையும் கடைசி வரைக்கும் படிக்க வச்சிட முடியுமா? பையனை மட்டும் படிக்க வை.. போதும்.”

“இப்படிச் சொல்லியே என்னையும் பத்தாம் வகுப்பிலேயே நிப்பாட்டி வச்சிட்டீங்க.. என் பிள்ளைங்க எல்லாரையும் எப்படியாவது பட்டப்படிப்பு படிக்க வைப்பேன்” ஆணித்தரமாகச் சொன்னாள் கண்ணகி.

“படிப்புச் செலவு எவ்வளவு ஆகும்னு தெரியுமா?”

“வருமானத்தைக் கூட்டறதுக்கு வேற ஒரு யோசனை வச்சிருக்கேன்.”

“என்ன யோசனை.. கண்ணகி?”

“நீயும் கிராமத்தில தனியாதானே இருக்கே?”

“அதுக்கு?” என்ற தாய் ‘இவள் என்ன சொல்ல வர்றா?’ என்று யோசித்தாள்.

“நீ என்கூட இரு.. நான் காலையில வீடுகளுக்குப் பால் பாக்கெட், பேப்பர் போடப் போகலாம்னு நினைக்கிறேன்.”

“ஆமாம் பாட்டி.. நீங்க எங்க கூடவே இருங்க,” என்றாள் ரேவதி, இடைபுகுந்து.

கண்ணகி தன் தாயிடம் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்..

“அத்தோட காலையில சந்தைக்குப் போய் கொஞ்சம் காய்கறி வாங்கிட்டு வந்து, அதையும் நம்ம கடையில விற்பனை செய்யலாம்னு இருக்கேன்.”

கண்ணகியின் தாய், மகள் பேசியதைக் கேட்டு வியந்தாள். ‘உண்மையில் இவளை அதிகம் படிக்க வைத்திருந்தால், இன்னும் அதிகம் சாதித்திருப்பாள்’ எனத் தோன்றியது.

சில நாட்களில் அவள் சொன்னபடியே பெட்டிக்கடையில் காய்கறி வியாபாரமும் ஆனது. குடும்ப வருமானமும் பழைய நிலைமைக்கு வரத் தொடங்கியது.

எல்லாம் பக்கத்துத் தெரு கோமதி இவளிடம் வந்து அவளது காதல் தோல்வியைச் சொல்லிப் புலம்பும் வரைதான்.

கோமதிக்கு கண்ணகி மகள் ரேவதியை விட மூன்று வயது அதிகம் இருக்கும். கோமதியும், அவளது நண்பன் திவாகரும் காதலித்ததும், கோவில், சினிமா என்று சுற்றியதும் கண்ணகிக்கு மட்டுமல்ல, அந்த ஊருக்கே தெரியும்.

அந்த திவாகர் வீட்டில் வேறு இடத்தில் அவனுக்குத் திருமண நிச்சயம் பேச, கோமதி அவனிடம் போய்க் கேட்டதற்கு ‘நான் உன்னை மணக்கப்போவதில்லை’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டதாக அழுது புலம்பினாள்.

அவனுக்குப் புதிதாகத் திருமணம் பேசிய இடம் வசதி படைத்த குடும்பம் என்பதால், அதிக வரதட்சணை கிடைக்குமெனப் பேசிக்கொண்டார்கள்.

கோமதி வீடு, நடுத்தரக் குடும்பம்தான்.

“அக்கா.. அந்த திவாகரோட எப்படியாவது எனக்குக் கல்யாணம் முடிச்சு வைங்க..” என்றாள் கோமதி.

“நான் சொன்னா யாரு கேப்பா.. கோமதி? உங்க வீட்டில நீ சொன்னியா?”

“அதெல்லாம் சொல்லியாச்சு. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் உட்கார்ந்து அழத்தான் தெரியுது. அவங்க வீட்டில போய் கேட்கப் பயப்படுறாங்க.”

கண்ணகிக்கு மனசு சங்கடமாக இருந்தது.

‘இவங்க காதல் இந்த ஊர் முழுக்க தெரிஞ்சு போச்சு. இப்போ அவன் மாட்டேன்னு சொன்னா இந்தப் பொண்ணு மேல களங்கம் வந்திடும். அப்புறம் இவ எப்படி கரையேறுவா?’

தனக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், பெண் குழந்தை பெற்ற தாயின் கோபம் அவளுக்கு வந்தது.

கோமதியின் பெற்றோர், மற்றும் அவர்களது உறவினர்களில் இளைஞர்கள் சிலர் என அழைத்துக்கொண்டு, திவாகரின் வீட்டுக்குச் சென்றாள்.

அங்கே ஏற்கனவே ஒரு கூட்டம் காத்திருந்தது. திவாகருக்குப் பக்கத்து ஊர்ப் பெண்ணை நிச்சயம் செய்யக் கிளம்புவதாகக் கூறினார்கள்.

“முதல்ல இங்கே உள்ள வழக்கை தீர்த்துட்டுப் பக்கத்து ஊருக்குக் கிளம்புங்க,” கண்ணகியுடன் வந்த இளசு ஒன்று கத்தினான்.

“என்னப்பா.. வழக்கு?”

“இங்கே ஒரு பெண்ணைக் காதலிச்சு, துரோகம் பண்ணிட்டு, அடுத்த ஊருல ஒரு பொண்ண நிச்சயம் செய்றது சரியா?”

“யாரை அவன் காதலிச்சான்?” எதிர் தரப்பிலிருந்து ஒரு குரல் கேட்டது. எதற்கும் தயாராகத்தான் இருக்கிறார்கள் போல.

“அவனையே கூப்பிட்டுக் கேளுங்க.”

திவாகர் வந்து நிற்குமுன்பே, இரு தரப்பிலும் வாதப் பிரதிவாதங்கள் உஷ்ண நிலைக்குச் சென்றிருந்தன.

கூட்டத்தை விலக்கிவிட்டுத் திவாகர் முன்னுக்கு வந்தான். கண்ணகியை நேருக்கு நேர் பார்த்தான்.

உண்மையில் கோமதி மீதான காதல் அவனுக்குக் குறையவில்லை. ஆனாலும் அவனைக் கேட்காமலேயே அவனது பெற்றோர் புதிய இடத்தில் பேசி முடிவுசெய்துவிட்டனர். அன்றைய நிச்சயதார்த்தம் வெற்றுச் சடங்குதான்.

இந்த உண்மையான காரணத்தை ஊர் மத்தியில் சொல்லத் தயங்கினான்.

“நான் யாரையும் காதலிக்கல.. அண்ணன் தங்கையா பழகுறதை வச்சு யாரும் திரிச்சு பேச வேண்டாம்..” என்று மட்டும் சொன்னான்.

கண்ணகிக்கு கோபம் வந்தது. கோமதி ஏற்கனவே அவளுக்கு அனுப்பிய புகைப்படத்தைத் தனது கைப்பேசியிலிருந்து எடுத்துக் காண்பித்தாள்.

“இந்த போட்டோல இருக்கிறவங்க அண்ணன், தங்கை உறவாதான் பழகினோம்னு சொன்னா.. யாராவது நம்புவாங்களா?”

கோமதி, திவாகர் நெருக்கமாக இருந்தபோது எடுத்த புகைப்படம், அப்போது பொதுவெளிக்கு வந்தது.

இதுவரை அவர்களது உறவை சந்தேகக் கண்ணோடு பார்க்காதவர்கள் கூட, நடைபெற இருக்கும் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிடும்படி பேசினர்.

“நிச்சயதார்த்தத்தை நிறுத்தினா மட்டும் போதாது.. இவங்க கல்யாணம் உடனடியா நடக்கணும்..” என்றாள் கண்ணகி.

அவள் ‘உடனடியாக’ என்று சொன்னதை, அவளுடன் வந்த கூட்டம் ‘இப்பவே’ என்று திருத்திக் கூக்குரலிட்டனர்.

அதைச் சமாளிக்க முடியாத திவாகர் குடும்பம், வேறு வழியின்றி ஒத்துக்கொண்டது.

கூட்டத்தின் கூச்சலும், தன் பெற்றோருக்கு நிகழ்ந்த அவமானமும் திவாகரை மனதளவில் காயப்படுத்தியது.

இரவு ஏழு மணிக்கெல்லாம் அந்த ஊரில் இருந்த முருகன் கோவிலில் வைத்து, திவாகர், கோமதிக்கு அவசரக் கல்யாணம் நடந்தது.

அன்றிரவே திவாகர் வீட்டில் வைத்து சாந்தி முகூர்த்தம் என முடிவுசெய்து, கோமதியை அலங்காரம் செய்தனர்.

திவாகரின் அம்மா பால் சொம்பை கோமதியிடம் கொடுக்க, தோழிகள் கிண்டல் செய்ய, முகத்தில் ஏகப்பட்ட புன்சிரிப்போடு திவாகரின் அறைக் கதவைத் திறந்த கோமதி, அதிர்ச்சியடைந்து ‘ஆ’வென கத்தினாள்.

அங்கே திவாகர், உத்திரத்து மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருந்ததால், உயிரற்ற அவன் உடல் ஆடிக்கொண்டிருந்தது.

*

“என்ன சொல்றே.. கண்ணகி?” இப்போது நான் அலறினேன்.

“ஆமாம்க்கா.. பாவிப்பய எதுக்காக இப்படிச் செஞ்சான்னு ஒரு கடுதாசிகூட எழுதி வைக்காம தூக்குல தொங்கித் தொலைச்சிட்டான்.”

“அப்புறம் அந்தப் பொண்ணோட கதி என்னாச்சு?”

“அந்தப் பொண்ணோட கதி மட்டுமல்ல.. என்னோட கதியும் பாழாய்ப் போச்சு..”

“நீ சொல்றது புரியல.. கண்ணகி.”

“ஒரு உசுரு போனபிறகு அவங்க வீட்டுக்காரங்க சும்மா விடுவாங்களா? போலீஸ் கேஸ் ஆயிடுச்சு.. எங்க தரப்பில ஒரு நாலஞ்சு ஆம்பிளைங்களையும், என்னையும் போலீஸ் கைது பண்ணி ஜெயில்ல போட்டுட்டாங்க..”

கண்ணகியின் மனதில் அவளைக் கைது செய்தபோது, அவள் ஊர் மக்கள் முன் அவமானப்பட்டு நின்றதும், தன் மூன்று குழந்தைகளும் போலீஸ் ஜீப்பின் பின்னர் ஓடி வந்ததும் ஞாபகம் வந்ததால், கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“உங்களை எதுக்கு கைது பண்ணினாங்க?” அடக்க முடியாத ஆத்திரத்தில் கேட்டேன்.

“நாங்கல்லாம் அவனைத் தற்கொலைக்குத் தூண்டினோமாம்!”

“இது என்ன வம்பா போச்சு? நீங்க என்ன கயிறா எடுத்துக் கொடுத்தீங்க?”

“நீங்க சொல்றது சரிதான்.. ஆனா போலீஸ்கிட்ட ஏது நியாயம், அநியாயம்? பிரச்சனையைப் பெருசாக்காம உடனடியா தணிக்கிறது மட்டும் தானே அவங்க வேலை?”

இந்த நிலைமையிலும் இவ்வளவு தெளிவாகப் பேசுகிறாளே என்று நான் ஆச்சரியப்பட்டேன்.

“அப்படின்னா.. நீ இப்போ ஜாமீன்லதான் இருக்கியா?”

“ஆமாம்க்கா.. விழுப்புரம் கோர்ட்ல கேஸ் நடக்குது.” அவள் சொல்லும்போதே இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த வழக்கு நடக்குமோ என்ற சலிப்பு தெரிந்தது.

எனக்கு மனசு கலங்கியது.

“அப்புறம்.. உங்க ஊருல கடையெல்லாம் வச்சிருந்தியே? அதை இப்போ யாரு பார்க்குறாங்க?”

“என்னை போலீஸ் பிடிச்சிட்டு போன உடனேயே, ஊருல இருந்து எங்களை ஒதுக்கி வச்சிட்டாங்க.. எங்க அம்மா, என்னோட மூணு பிள்ளைகளையும் கிராமத்துக்குக் கூட்டிட்டு போயிட்டாங்க.”

“அடக் கடவுளே!”

“அப்புறம் மூணு பிள்ளைக, எங்க அம்மானு நாலு பேரைக் காப்பாத்த வேண்டியிருக்கே? அதுக்குத்தான் இங்கே வந்து நாலு வீட்டில பாத்திரம் தேச்சுக்கிட்டு இருக்கேன்.”

என் நெஞ்சில் சொல்லமுடியாத துக்கம். பாவம் கண்ணகி!

ஆனாலும் திவாகர் குடும்பம் இப்படி ஒரு வழக்கு கொடுத்திருக்க வேண்டியதில்லை என்று நான் நினைத்தேன்.

‘இவள் சாதாரண பணிப்பெண் தானே, இவளது வாழ்க்கையில் பெரிதாக என்ன சங்கடங்கள் இருந்துவிடப் போகிறது?’ என்ற என் அகங்காரத்துக்குச் சம்மட்டி அடி விழுந்தது.

நான் யோசிப்பதைப் பார்த்து, கண்ணகி கடைசியாகக் கேட்டாள்..

“நீங்களே இப்ப சொல்லுங்கக்கா.. அவங்க ரெண்டு பேரும் காதலிச்சது நிஜம்.. அதை மறுத்து அவன் வேற இடத்தில கல்யாணம் செய்யப்போனது நிஜம்.. ஒரு பொண்ணு வாழ்க்கை பாழாயிடக் கூடாதுனு நான் நியாயம் கேட்கப்போனது தப்பா?”

‘விக்ரமாதித்தன் தோளில் இருந்த வேதாளம்’ போல அவள் எளிதில் கேட்டுக் விட்டாள்.

சரியான பதில் சொல்ல, நான் ஒன்றும் மன்னன் விக்ரமாதித்தன் இல்லையே?

Author

You may also like

Leave a Comment