Home இதழ்கள்இதழ் 17ஈற்றடிக்கோர் பாட்டு – 15 – பாமாலை

ஈற்றடிக்கோர் பாட்டு – 15 – பாமாலை

by Iyappan Krishnan
0 comments

வழக்கமாக ஈற்றடியைக் கொடுத்து நடத்தும் போட்டியிலிருந்து, நவராத்திரி வரவிருப்பதால் சற்றே மாறுதலாக பாமாலை எழுதும் போட்டி நடத்தப்பட்டது. அப்போட்டியில் பரிசு பெற்ற பாமாலைகள் உங்கள் பார்வைக்கு..

ஜெயந்தி நாராயணன்
மண்மகள், மாலின் மனம்கவர் மங்கை
எண்வகைச் செல்வம் எளிதினில் தருவாள்
எண்ணமும் செயலும் எழிலுறச் செய்வாள்
பண்ணுடன் அவளைப் பாடிநாம் பணிவோம்

பணிந்தவர் பாதை பாங்குடன் செல்ல
பிணியெலாம் பனிபோல் விரைவினில் விலக
துணிவுடன் என்றும் துஷ்டனை எதிர்க்க
மணியெனத் திகழும் மாவவள் அருள்வாள்

அருளும் அன்பும் அள்ளித் தருவாள்
இருளைப் போக்கி இன்பம் அளிப்பாள்
பொருளும் பொன்னும் வாரிக் கொடுப்பாள்
திருமால் மார்பில் உரையும் தேவி

தேவியின் கருணை தேனென இனிக்கும்
பாவிகள் துயரம் பட்டென மறையும்
கூவியே அழைத்தால் குறைகளும் தீரும்
தூவிய மலரால் அவளைத் துதிப்போம்

துதிப்பவர் மனதில் தூயவள் இருப்பாள்
கதியென வந்தால் கைவிட மாட்டாள்
பதியுடன் வந்து பக்தருக் கருள்வாள்
நிதியினைப் பொழிவாள் நித்தமும் அவளே

அவளின் கழலை அன்பில் பற்ற
துவளும் மனமும் துள்ளத் துவங்கும்
உவந்து அவளை நிதமும் வணங்க
புவன மெங்கும் செழிக்கும் நிலமண்

மாலா மாதவன்
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருக்கும் தேவியவள்
தெள்ளிய சிந்தையை நல்கிடுவாள் – துள்ளிவரும்
சந்தம் கவிதை சரஸ்வதி பார்வையால்
பந்தலாய்ப் பாமழை பார்

பார்க்கும் திசையாவும் பார்வை கடாட்சமாம்
சீர்மிகு செல்வியாம் ஸ்ரீதேவி – பார்போற்றும்
செல்வத் திருமகளைச் சேவித் தெழுந்திடச்
செல்வத்தின் செல்வமுனைச் சேர்ந்து

சேர்ந்துவிடும் வேலையில் சோர்வுமிகும் போதெல்லாம்
நேர்ந்துவிடும் தாமதம் நேரமாகும் – சோர்வகற்றச்
சக்திதரும் சக்தியை சாம்பசிவன் பாதியை
முக்திதரப் பக்தியுடன் பற்று

பற்றுக தெய்வத்தைப் பக்தியே பூரணமாம்
குற்றம் கரைந்திடும் கும்பிட்டால் – சுற்றமுடன்
கூடியே பூசித்துக் கூட்டத்தில் தானமிடத்
தேடிவரும் தேனாய்த் தெளிவு

தெளிவுறப் பக்தியால் தேட இறையை
களிப்புற்றுக் கண்கள் நிறையும் – எளிதுதான்
பக்தியே பாதை பரம்பொருள் பற்றிடு
சக்தி சரஸ்வதிமா சார்ந்து

சார்ந்துந்தன் பாதம் பணிந்தெழுந்தோம் சக்திதா
கூர்மதிதா கூடுறை செல்வம்தா – தேர்ந்தபெரும்
பூக்களால் பூசித்தோம் புன்னகைக்கும் பாரெங்கள்
பூக்கூடைப் பூக்கள்வெள் ளை

சின்னக்கண்ணன்
தேவை யான வார்த்தை கோர்த்து
தீர்க்க மாக எழுதிட
சேவை செய்து வணங்கி டுவேன்
சீர்மி குந்த கால்களை
பூவின் மீது அமர்ந்து வீணை
பொலிந்தி ருக்கும் அன்னையே
பாவை யுந்தன் விழிகள் கொண்டு
பார்க்க வேண்டும் வாணி நீ
**
வாணி நீயும் பார்த்து விட்டு
வரமும் தந்த போதினில்
பேணி உள்ளம் ஊனில் என்றும்
பெருமை சேர்க்கும் திருமகள்
ஆணிப் பொன்னாய் மிளிர்ந்து என்னை
ஆட்டு விக்க என்றுமே
வாணி கூட சேர்ந்து நீயும்
வரங்கொ டுக்க வந்திடு
**
வந்திடு என்று நானும்
வண்ணமாய் வாணி லஷ்மி
சொந்தமாய் நிற்க வேண்டி
சூட்சுமப் பாட்டை நெய்தேன்
பந்தமாய் வீரம் தந்து
பக்குவம் கொள்ள என்றும்
தங்கமாம் மலையின் மகளே
தந்திடு எந்தன் தேவை.

ராமலக்ஷ்மி

கல்வி
புத்தகங்களும் தேர்வுகளும்
பட்டங்களும் மட்டுமன்று
ஒவ்வொரு காலையிலும்
ஒரு பாடத்துடன் உடன் வரும்
ஆசிரியராக இருக்கும் வாழ்க்கை

வாழ்க்கை கற்றுத் தருகிறது
நிறைவின் வழியே
இழப்பின் வழியே
மறந்துவிட விரும்பும்
தவறுகளின் வழியே
ஒருவரின் நாட்களுக்குள்
வருபவர் வழியே
விலகிச் செல்பவர் வழியே.
கற்க வயதென்றும்
தடையன்றென புரிய வைத்து
இறுதிவரையிலும் அறிந்துகொள்ள
ஏதோவொன்றை முன்வைத்து
காத்திருக்கிறது உலகம்

உலகம்
ஒருபோதும் மூடப்படாத புத்தகம்
அந்நியரின் கருணை
புயலைத் தாங்கி நிற்கும் மரம்
கேள்வி கேட்கும் குழந்தை
பாதையை மாற்றும் தோல்வியென
எந்தப் புத்தகத்திலும் காண முடியாத
அறிவைத் தந்து
வாழ்வின் மீதான பார்வையை
மாற்றுகையில் அங்கே
செருக்கழிந்து மலர்கிறது அன்பு

அன்பு
தராசில் அளக்கும் பொருளன்று
கற்றதற்கான சான்று
அரவணைக்கும் கை
உதவும் உள்ளம்
வெறுப்பைக் கரைக்கும் மென்சுடர்
பகிரப் பகிர வளரும் பேரொளி
உலகை இணைக்கும் நூல்கண்டு
இவற்றை உணரும்போது
கனிகின்ற ஞானம்

ஞானம் எனும் உன்னத நிலை
அனைத்தையும் அறிந்திருப்பதன்று
அறிந்தவற்றைச் சரியாக
பயன்படுத்தத் தெரிந்திருப்பது.
பொறுமையானவருக்கு
கிடைக்கும் பரிசு.
உணர்ந்தவற்றால்
அன்பைக் கொடுக்க
அமைதியைப் பரப்ப
கற்றுக்கொண்டதையும்—
பகிர்வது கல்வி.

வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.

Author

You may also like

Leave a Comment