Home கவிதைஅதிசயங்கள் – வால்ட் விட்மன்

தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன்

வால்ட் விட்மன் (1819–1892) பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அமெரிக்கக் கவிஞர், இதழாளர் மற்றும் கட்டுரையாளர். இவர் "புதுக்கவிதையின் தந்தை” (Father of free verse) என்றழைக்கப்படுகிறார். இவரது புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பு "புல்லின் இலைகள்" (Leaves of Grass). இத்தொகுப்பு அதன் மரபுசாராத பாணிக்காகப் பெயர் பெற்றது.

அதிசயத்தைப் பற்றி யார் பெரிதாகப் பேசுகிறார்கள்?
அதிசயங்களைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது,

நான் மன்ஹாட்டன் வீதிகளில்
நடந்தாலும் சரி,

அல்லது வீடுகளின் கூரைகளுக்கு
மேல் விண் நோக்கி
பார்வையைச் செலுத்தினாலும் சரி,

அல்லது கடற்கரை ஓரத்தில்
வெற்றுக் கால்களுடன்
நீரின் விளிம்பில் நடந்தாலும் சரி,

அல்லது அடர் கானகத்தின்
ஊடே மரங்கள் அடியில்
நின்றிருந்தாலும் சரி,

அல்லது இரவுப் பொழுதில்
பலருடன் உணவருந்த
மேஜையில் வீற்றிருந்தாலும் சரி,

அல்லது எதிர் வாகனத்தில்
அமர்ந்திருக்கும் அந்நியர்களை
பார்ப்பதானாலும் சரி,

அல்லது வேனிற் கால முற்பகலில்
தேன்கூட்டில் சுறுசுறுப்பாகச் சுற்றும்
தேனீக்களைக் கவனித்தாலும் சரி,

அல்லது வயல்களில் மேய்ச்சல்
செய்து உண்டு களிக்கும்
கறவைக் கூட்டங்களானாலும் சரி,

அல்லது புள்ளினங்கள்,
அல்லது காற்றில் மிதக்கும்
பூச்சிகளின் அற்புதம் என்றாலும் சரி,

அல்லது அந்தியில் ஆதவனின் அற்புதம்,
அல்லது அமைதியாய் மின்னும்
விண்மீன்கள் என்றாலும் சரி,

அல்லது வசந்த கால
புது நிலவின் நேர்த்தியான
மென் வளைவு என்றாலும் சரி;

இவையெல்லாம் மற்றவற்றுடன் சேர்ந்து,
ஒன்றுடன் ஒன்று இணைந்து,
ஒவ்வொன்றும் அதிசயங்கள் தான் எனக்கு,
ஒன்றாக முழுமைப் பெற்றும்,
ஒவ்வொன்றும் தனக்கென
தனித்தன்மையும் வாய்ந்தது.

எனக்கு ஒவ்வொரு கணத்தின்
ஒளியும் இருளும் ஓர் அதிசயம்,
வெளியின் ஒவ்வொரு
கன அங்குலமும் ஓர் அதிசயம்,
பூமிப் பரப்பின் ஒவ்வொரு
சதுர கஜமும் அதிசயத்தால் விரிந்திருக்கிறது,
பூமியின் உள்ளே ஒவ்வொரு
அடியும் அதனாலேயே நிரம்பியுள்ளது.

எனக்குக் ஆழ்கடல் ஒரு தொடர் அதிசயம்,
நீந்தும் மீன்கள் –
நெடும் பாறைகள் –
ஆடும் அலைகள் –
மிதக்கும் கலன்களில் மனிதர்கள்,
இவற்றை விட ரசித்திட
விந்தையான அதிசயங்கள்
வேறு என்ன இருக்க முடியும்?

Author

  • கவிஞர் நளினி சுந்தரராஜன் வட அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதும் இவர், அமெரிக்காவில் தமிழ்ச்சங்கப்பேரவை, கவியரங்கங்கள் மற்றும் உலகத்திருக்குறள் மாநாட்டில் கவிதைகள் வாசித்திருக்கிறார். "Face in Face" இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். "திக்குகளின் புதல்வியர், உறைபனி உதிர்த்த இறகு, வலசை சென்ற வண்ண மயில்கள்" ஆகிய தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

You may also like

Leave a Comment