Home நாவல்அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 15:  அட இராவணா

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 15:  அட இராவணா

by Iyappan Krishnan
0 comments
This entry is part 56 of 57 in the series அசுரவதம்

அனுமன் இராவணனை அழிக்கும் கோபத்துடன் கண்களில் கொலைவெறி தாண்டவமாடச் சற்று நிமிர்ந்தான். அவன் உடல் இறுகியது. ஒரு கணம் தன்னிலை இழந்த அனுமன், சட்டென்று தாவி இராவணனை அழித்துவிடவே நினைத்தான்.

அந்த நினைவில் தன் இரு கைகளையும் முன் கொண்டுவர முயன்றான். அவனைப் பிணைத்து இழுத்து வந்தவர்கள் தடுமாறி விழுந்தார்கள். அந்தச் சலனம் அனுமனின் எண்ண ஓட்டத்தைக் கலைத்தது.

தானிருக்கும் இடம், வந்த காரணம் என அனைத்தும் மறந்து உணர்ச்சி தன்னை ஆட்கொள்ள விட்டதை நினைத்து வருந்தினான்.

‘சினம், அறிவின் கண்களை மூடும் திரை. உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் ஒருவன் எப்போதுமே எதிரியின் கையில் பகடைக்காயாகிறான். மேலும் இந்த உணர்ச்சிகளைக் கொண்டுதானே ஆரம்பத்தில் தன்னை இராவணன் அலைக்கழித்தான்’ என்பதை அனுமன் யோசித்தான்.

உணர்ச்சிகளைக் கடந்து தன்னை ஒரு சாட்சியாக நிறுத்திக்கொள்ளும் ஒருவனால் மட்டுமே எந்தச் சூழலையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். ‘ஆகவே அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு என் செயலைத் தீர்மானிக்க நான் விடக் கூடாது’ என அனுமன் தீர்மானித்தான்.

“இராவணா, உணர்ச்சிகளைக் கொண்டு விளையாட நீ கற்றுக்கொடுத்த பாடத்தை உன்னிடமே நான் காட்டப்போகிறேன்,” என்றான் மனதுக்குள் நகைத்தபடி.

அனுமன் தன் மூச்சை ஆழமாக இழுத்து விட்டான். கோபத்தின் சிவப்பேறிய அவனது கண்கள், இப்போது குளிர்ந்த சலனமற்ற தடாகமாக மாறின. தன் உடலைத் தளரவிட்டான். அந்தச் சிறிய காலப்பொழுதில் அரண்டு போயிருந்த அரக்க வீரர்கள், மீண்டும் அனுமன் தங்கள் கட்டுக்குள் வந்ததை எண்ணி ஆரவாரம் செய்தனர்.

அனுமன் இராவணனின் சபையை ஏறிட்டு நோக்கினான். கிஷ்கிந்தையின் அரண்மனை பெரியது, ஆனால் இத்தனை ஆடம்பரங்கள் கொண்டதல்ல. அங்கே தேவைகளுக்கான பொருட்கள் இருந்தன. இங்கே உள்ளவை அப்படி அல்ல. இராவணனின் வீரத்தை, அவன் வெற்றியைப் பறைசாற்ற என்னவெல்லாம் வேண்டுமோ அவை அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. இராவணனின் அரியாசனப் படிகளின் ஒவ்வொன்றின் மீதும் ஒரு எதிரி தன் முதுகைக் காட்டிப் படுத்திருந்தான். இராவணனின் காலடித் தடம் அவன் முதுகில் பதிந்திருந்தது.

இந்த அரசவை, இந்த அரண்மனை பூமியின் நெஞ்சைக் கிழித்துக்கொண்டு வான் நோக்கி எழுந்த ஓர் அசுரக் கனவு. அரக்கர்களின் எல்லைகளைத் தாண்டிய ஆசையின் கட்டற்ற குரூர வடிவம். அத்தனை செல்வங்களையும் தன் காலடியில் குவித்துவிட்டதாக நினைக்கும் ஒரு தனி ஒருவனின் செருக்கு, அங்கே பலவித வண்ணம் கொண்ட விலைமதிப்பிலாக் கல்லாகவும் பொன்னாகவும் உறைந்து கிடந்தது.

இராவணன், அதி உன்னதமானதும், பலரின் இருக்கைக்கும் மேலாக உயர்த்திக் கட்டப்பட்டதுமான தன் இருக்கையிலிருந்து, கீழே நின்றிருந்த அனுமனை அலட்சியமாக நோக்கினான். அவனது உதடுகளில் ஒரு குரூரமான, ஏளனச் சிரிப்பு விரிந்தது.

“மகனே மேகநாதா…”

என்றான் இராவணன், குரலில் அத்தனை அலட்சியத்தைக் குழைத்து.

“இந்தச் சிறு குரங்குதானா நமது அவ்வளவு பெரிய வனத்தை அழித்தது? இந்தச் சிறு விலங்கா உன் தம்பி அக்‌ஷய குமாரனைக் கொன்றது? என்னால் நம்ப முடியவில்லை. உண்மையில் இவனையா நீ பிரம்மாஸ்திரம் தொடுத்துக் கட்டி இழுத்து வந்தாய்? அல்லது நமது வீரர்களின் பலம்தான் இவ்வளவு மலிந்துவிட்டதா? எங்கோ உன் கணக்கில் நீ பிழை செய்திருக்க வேண்டும் மகனே,”

என்று தன் சொந்த மகனையும், படையையும் எள்ளி நகையாடினான்.

இராவணனின் அந்த ஏளனச் சிரிப்பைக் கேட்ட அனுமன், பதிலுக்குச் சப்தமாக நகைத்தான். மேகநாதன் பதிலுக்குக் காத்திராமல் அந்த நகைப்பு சபையின் தூண்களில் பட்டு எதிரொலித்தது.

“ஐயம் வேண்டாம் அரசே, தங்கள் மகன் பிணைத்து இழுத்து வந்த அந்தக் குரங்கு அடியேன் தான். உங்கள் மகனைக் கொன்ற அந்த அற்பச் செயலைச் செய்ததும்…” என்று வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தினான்.

இராவணனின் கோபம் எல்லையைக் கடந்தது. அனுமனின் வலைக்குள் வீழத் தொடங்கினான். அக்‌ஷய குமாரனின் மரணம் பற்றிய பேச்சு வந்ததும் இராவணனின் உணர்ச்சிகள் கரைபுரண்டோடின.

“யாரடா நீ, நான் இலங்கேஸ்வரன், பகிரண்டங்கள் அனைத்தையும் வென்று நிகரில்லா புகழுடைய அரசன்.. நான் அமர்ந்திருக்கும் அரியணையின் ஒரு படிக்கு இணையில்லாத நீ என் மகனைக் கொன்றாயா? வெட்கம்!” என்றான்.

அனுமன் முகத்தில் புன்னகை பூத்தது. இராவணன் சுயத்தில் சிந்திக்கும் திறனை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டான். அவனை இன்னும் கொஞ்சம் சீண்டினால் போதும், அவன் முழுதும் தன்னிலை இழப்பான் என்று முடிவெடுத்தான்.

“வந்திருப்பவன் யாரென்றும் அறியாத நீயெல்லாம் ஒரு அரசனா? சொல்கிறேன் கேளடா, அட இராவணா! நான் இராமனின் தூதனடா!”

இராவணனின் முகம் இருண்டது. “மேலும் கேளடா, இந்த அற்பக் குரங்கு, நீ நினைப்பது போல் வீரமற்றவனல்ல.. பாரடா.. இந்த இராமனின் அடிமையின் வலிமையை!”

என்று அனுமன் உடலை லேசாகச் சிலுப்பினான். அவன் உடலில் இருந்த அத்தனைக் கட்டுகளும் சுழற்காற்றில் அலைந்தலையும் பழுத்த இலைகளைப் போல உதிர்ந்து வீழ்ந்தன.

இராவணனின் அவை அதிர்ச்சியில் உறைந்தது. பிரம்ம கணையால் கட்டுண்ட ஒரு கைதி, சிங்கம் தன் பிடரியைச் சிலுப்புவதைப் போலக் கட்டுகளை அறுத்துக்கொண்டு சுதந்திரமாக நின்ற காட்சியைக் கண்டு அஞ்சி அரக்கர்கள் பின்வாங்கினர். இராவணன் நம்ப முடியாமலும், அவமானத்தாலும் உண்டான பெரும் சினத்துடன் தன் கால்களால் ஓங்கித் தரையை மிதித்தான். அரங்கம் அதிர்ந்தது.

அனுமன் தொடர்ந்தான்.

“முடியரசனின் தன்மை யாரையும் தாழ்த்திப் பேசுவதல்ல, யாரையும் குறைத்து மதிப்பிடுவதல்ல. என்னை உன் படிக்கும் கீழானவன் என்றாய். இதோ பார்!”

என்று அனுமன் சொல்லிவிட்டுத் தன் உடலைச் சற்றுப் பெரிதாக்கினான். அவன் நின்ற தோரணையில் இராவணன் அனுமனைத் தலைநிமிர்ந்து பார்க்கும் நிலை ஏற்பட்டது. அவனது வால் மெல்ல நீளத் தொடங்கியது. ஒரு மாபெரும் கருநாகம் சுருண்டு எழுவதைப் போல, அவனது வால் தரையில் வட்டமாகச் சுருண்டு, சுருண்டு, வளையங்களாக மேலெழும்பத் தொடங்கியது. அது இராவணனின் அரியாசனத்தின் உயரத்தைத் தாண்டியது. அவனது மணிமகுடத்தின் உயரத்தைத் தாண்டி ஒரு அடி உயரத்தில் சென்று ஒரு மாபெரும் கம்பீரமான ஆசனமாக நிலைத்து நின்றது.

அனுமன் அதில் தன்னிரு கால்களையும் மடித்து ஒரு வீரனின் பொலிவுடன் அமர்ந்தான். இதுவரை தான் கண்ட குரங்கின் இயல்பு இதுவல்ல என்பதை இராவணன் உணர்ந்தாலும், கொதிக்கும் எரிமலையில் வீழ்ந்த மழைத்துளி போலச் சிந்திக்கும் திறனைச் சினம் அழித்திருந்தது. இராவணனின் உடல் சினத்தின் உச்சத்தில் தள்ளாடியது. ஒரு குரங்கு தன்னிடம் காட்டும் இந்த மாபெரும் அவமதிப்பை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவனது பொறுமை முற்றிலுமாகக் காற்றோடு போனது. அரசவை மாண்பை மறந்து பெருங்கூக்குரலுடன் ஆணையிட்டான்.

“கொல்லுங்கள் இவனை!” என்ற குரல் கேட்டுத் தங்கள் ஆயுதங்களை உயர்த்தியபடி அரக்கர்கள் அனுமனை நெருங்கினர். அதே நேரம்,

“நிறுத்துங்கள்!” என்ற குரல் ஓங்கி ஒலித்தது.

அரங்கத்தில் தன் இருக்கையிலிருந்து எழுந்து விபீஷணன் தன் குரலை உயர்த்தினான்.

“அண்ணா! சினத்தில் தர்மத்தை மறந்துவிடாதீர்கள்!” என்று இரு கரங்களையும் கூப்பி இராவணனைத் தடுத்தான்.

“அரசனின் கோபம் நீதியின் எல்லையைத் தாண்டக் கூடாது. இவன் நம் எதிரியாகவே இருந்தாலும், இவன் ஒரு தூதன். ஒரு தூதனைக் கொல்வது அறத்திற்கு விரோதமானது. எளியோரை வதைத்தல் அறமல்ல, தேவர்கள் நம்மைக் கண்டு நகைப்பார்கள். இதுவரை நாம் அடைந்த வெற்றிகள் எதிலும் நாம் தூதர்களைக் கொன்றதில்லை. அந்தப் பழியை இப்போது உண்டாக்கிவிடாதீர்கள்,” என்ற விபீஷணனின் குரல் உறுதியாகவும் அறம் பிறழாமலும் நின்றது.

இராவணன் நிதானித்தான். அவன் விபீஷணன் சொல்லில் இருந்த உண்மையைப் புரிந்துகொண்டான். அவன் இதழ்களில் ஒரு வஞ்சகப் புன்னகை தவழ்ந்தது.

“அப்படியானால், அடையாளத் தண்டனை கொடுப்பது கொல்வதாகாது இல்லையா.. என் அன்புத் தம்பியே, இந்த அவையின் மந்திரியே… என் யோசனை சரிதானே?” என்றான்.

அவன் குரலில் அனுமன் மீதான வன்மம் இன்னும் கொழுந்துவிட்டு எரிவதை விபீஷணன் உணர்ந்தான். பதிலுரைக்க முயன்றான்.

ஆனால் இராவணன் விபீஷணனின் பதிலுக்கும் காத்திராமல் அவனைக் கையுயர்த்தித் தடுத்து, தன் உத்தரவை மாற்றினான்.

“மரணம் என்பது விரைவான தண்டனை. என் மகனைக் கொன்றவனுக்கு அந்த எளிய தண்டனையைக் கொடுத்துவிட இருந்தேன். என்ன ஒரு மூடத்தனம்..”

அவன் கண்கள் இரையைக் கண்ட கருநாகத்தின் விழிகள் போல மின்னின.

“வீரர்களே, அவனைக் கொன்றுவிடாதீர்கள்… அவனுக்கான தண்டனை வேறொன்று உள்ளது..” என்று அரங்கம் அதிரச் சிரித்தபடி சொன்னான்.

“அது மரணத்தை விடக் கொடியது.

(தொடரும்)

அசுரவதம்

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 14:  காற்றின் போர்

Author

You may also like

Leave a Comment