Home இதழ்கள்இதழ் 11நீருக்குள் மீன் – கோபால் ஹொன்னால்கெரே

தொகுத்தளித்தவர்: கே.ஏ.ஜெயசீலன் (1940-)

தமிழாக்கம்: கார்த்திகைப்பாண்டியன்

கோபால் ஹொன்னால்கெரே (1942-2003)
கர்நாடகாவின் பீஜாபூர் மாவட்டத்தில் 1942-ல் பிறந்தவர். அவருடைய பள்ளிக்கல்வியையும் கல்லூரி படிப்பையும் மைசூரில் பயின்றார். சிலகாலங்களுக்கு மேற்கு வங்காளத்தின் சாந்தி நிகேதனில் உள்ள கலாபவன் கல்லூரியில் நுண்கலை மாணவராகவும் இருந்திருக்கிறார். ஒரு பள்ளி ஆசிரியராகவும் ஓவியமும் ஆங்கிலமும் கற்றுத்தருபவராகவும் பிழைப்பை ஓட்டியிருக்கிறார். என்றாலும் அவர் ஒருபோதும் நிலையான எந்த வேலையிலும் இருந்ததில்லை. கோபால் ஹொன்னால்கெரேவுக்கு மணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். ஹொன்னால்கெரேவின் கவிதைகளை முதன்முதலாக Writers Workshop Series மூலம் பி.லால் பதிப்பித்திருக்கிறார் (இரு தொகுப்புகள்). அதன் பிறகும் அவர் நான்கு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்; அவருடைய சொந்தச் செலவில் வெளியிடப்பட்ட இந்நூல்களுக்கு இலக்கிய வட்டங்களில் உரிய கவனம் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் அவருடைய கவிதைகளை அடையாளம் கண்டு கொண்டாடிய ஒரு நட்புவட்டம் அவருக்கிருந்தது, தன்னுடைய கடிதங்களுடன் கூடிய இணைப்புகளாக அந்தக்கவிதைகளை அவர்களுக்கு கோபால் அனுப்பி வைத்திருக்கிறார்; ஆக 2003-ல் அவர் இறந்த சமயத்தில் அவரது படைப்புகளில் பெரும்பான்மையானவை அதுபோன்ற கடிதங்களின் மூலம் கிடைக்கப்பெற்றவையாக இருந்தன. அவருடைய வாழ்நாளில் அவருக்குக் கிட்டிய ஒரே அங்கீகாரமென்பது சி.டி.நரசிம்மையா தொகுத்த An Anthology of Commonwealth Poetry (1990, Mcmillan) எனும் மதிப்புக்குரிய தொகுப்பில் கோபாலின் சில கவிதைகளும் இடம்பெற்றன என்பது மட்டுமே.
கே.ஏ.ஜெயசீலன் (1940-) கேரளாவின் கோழிக்கோட்டில் பிறந்தவர். மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனின் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பயின்றவர்; பிறகு கனடாவின் சைமம் பிரேசர் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். மலையாளத்தில் நன்கு பிரபலமான கவிஞர்; நான்கு தொகுப்புகள் வெளியாகி உள்ளன. ஹைதராபாத்தின் ஆங்கிலம் & பிற மொழிகள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாகப் பணியாற்றியவர். தற்போது பணிஓய்வுக்குப் பிறகு பெங்களூரில் வசிக்கிறார். கோபால் ஹொன்னால்கெரே மறைவுக்குப்பிறகு அவருடைய கவிதைகளைத் தேடிச் சேகரித்து தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.

கவிதை எழுதியவாறு நதிக்கரையில் அமர்ந்திருந்தேன். டைலன் தாமஸின் தொனியைப் பிடிப்பதற்காகக் கவிதையின் ஒவ்வொரு வரியையும் உரக்க வாசித்துத் திருத்தியும் மாற்றியும் எழுதிக் கொண்டிருந்தேன். நதியிலிருந்து மூன்று மீன்கள் நீரை விட்டு வெளியே துள்ளிச் சுடுமணலில் விழுந்தன. மீன் சொன்னது: “நதியின் நீருக்குள் நாங்கள் பேசுவதற்கு எங்களுக்கு நண்பர்களே இல்லை. நீரினுள் இருக்கும் காஃப்காவைப் போலத் தனிமையை உணர்கிறோம். நாங்கள் தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறோம்.”

மூன்று மீன்களையும் எனது இடதுகையில் எடுத்துக்கொண்டேன். அவற்றின் கண்கள்.. அவற்றின் கண்கள்.. ஒருமுறை கூர்நோக்கு இல்லத்திலிருந்த ஒரு சிறுவன் சிலுவையில் அறைந்த இயேசுவைக் கண்களுக்குப் பதிலாக மீன்களோடு வரைந்தது என் நினைவுக்கு வந்தது. என்னவொரு அற்புதம்! அந்த ஓவியத்தைப் பார்த்து எனக்குள் அச்சம் உண்டானது; ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ விரும்பிய வான்கோ போல, வாழ்க்கை மீது பேராசையுடன் கூடிய ஒரு வாழ்க்கை; அதனால்தான் ஒரு சவரக்கத்தியால் காதையறுத்து அவர் தற்கொலை செய்துகொண்டார். நான் பையனிடம் சொன்னேன், “தயவுசெய்து இயேசுவின் கண்களுக்குப் பதில் மீன்களை வரையாதே.” ஒத்துக்கொள்கிறேன், ’ஆற்றுத்தன்மை’யைக் கண்டு அனைவரும் அஞ்சுகிறோம்.

பிறகு அந்த ஓவியத்தின் முன்பாக மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தேன். “தேவனே, நாங்கள் உங்கள் பிள்ளைகள், எங்களைக் காத்தருளுங்கள். எங்களைக் காக்க வரும் மனிதர்களிடம் இருந்து எங்களைக் காத்தருளுங்கள். நீரில் வாழும் மீன்கள் யாவும் தங்களின் தாகத்தை உணர்ந்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எங்களைக் காத்தருளுங்கள்.” பூமியின் மீதிருக்கும் அனைத்து இல்லங்களும் கூர்நோக்கு இல்லங்கள்தான்; ஏனென்றால் அவை குகைகள் அல்ல, ஏனென்றால் அவை கூடுகள் அல்ல. ஏனென்றால் அவை மனிதர்களால் அவர்களின் எண்ணங்களால் பணத்தால் கட்டப்பட்ட கட்டிடங்கள். சில மனிதர்கள் நம்மைக் காக்க வரும்போது, அவர்கள் நம்முடைய மனதுக்குள் வேறெதையோ விதைத்து நமது வீடுகளை வதைமுகாம்களாக மாற்றிவிடுகிறார்கள்.

மூன்று மீன்களையும் எனது இடதுகையில் எடுத்துக்கொண்டு, வலதுகையில் ஒரு சிகரெட், சிகரெட் பாக்கெட்டுடன் தீப்பெட்டியையும் வைத்துக்கொண்டு நான் நகரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்போது கைவிடப்பட்ட ஒரு தேவாலயத்தின் சாளரம் வழியே ஒரு மங்கலான மஞ்சள்நிற முகம் என்னை உற்றுநோக்குவதைப் பார்த்தேன். அதுவொரு சூனியக்காரியாக இருக்கலாம் என்றெண்ணினேன். அதுவொரு கன்னியாஸ்திரியின் பேயாக இருக்கலாம் என்றும் எண்ணினேன். எனது இடதுகையிலிருந்த மூன்று மீன்களையும் அந்த மஞ்சள் முகத்திடம் காட்டிச் சொன்னேன், “இங்கே கவனி தெரசா, நான்தான் திரித்துவம். மேலும் இதையும் நான் நம்புகிறேன், தீய ஆவிகளைச் சந்திக்கும் சமயங்களில் எனக்கு நினைவுவர வேண்டிய பெயர் இதுதான் என்பதையும் – தெரசா.”

கிறிஸ்துவை ஏழு வரவேற்பறைகளில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த அதிர்ஷ்டக்கார ஸ்பானியப் பெண்தான் தெரசா. அந்த முகம் எனக்கு ஓர் இறுகிய மோனாலிசா புன்னகையைப் பரிசளித்தது. நான் பயந்துபோனேன். எனது வலதுகையிலிருந்த சிகரெட்டையும், சிகரெட் பாக்கெட்டையும் உடன் தீப்பெட்டியையும் மஞ்சள் முகத்திடம் காட்டிச் சொன்னேன், “தெரசா, தெரசா, இங்கே கவனி, நான்தான் மீண்டும் திரித்துவம்.” முகம் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுச் சொன்னது, “ஆஹா, ஓஹோ… வேசைக்குப் பிறந்தவனே, நீங்கள் ஆண்கள் எப்போதும் வேசைக்குப் பிறந்தவர்கள்தான்; கற்புக்கூட்டின் பூட்டில் உள்ள ஏழு திறவுகோல்கள்தான் வானில் உள்ள ஏழு நட்சத்திரங்கள் என்றும் சொல்வீர்கள். நீங்கள் ஆண்கள் எப்போதும் வேசைக்குப் பிறந்தவர்கள்தான், ஆனாலும் நான் உன்னை நேசிக்கிறேன். பெண்ணையும் நட்சத்திரங்களையும் உடலுறவையும் உங்களின் சொந்த விருப்புவெறுப்புகளையும் ஒன்றுகூட்டி அவற்றை ஒரு புராணக்கதையாய் நெய்து பூமியில் நீங்கள் வாழ ஒரு வீட்டைக் கண்டுபிடிக்க விழையும் உங்கள் வழிமுறைகளை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”

அந்த முகம் சொன்னது: “நான் காத்திருக்கிறேன், அவளைப் போலில்லாமல் நான் காத்திருக்கிறேன், இயேசு கிறிஸ்துவைச் சந்திப்பதற்கு அல்ல; மாறாக ஒரு நேர்மையான மனிதனைச் சந்திப்பதற்காக. நீ நேர்மையானவன் என்றால் என்னிடம் வந்து எனக்கு ஒரு நேர்மையான முத்தத்தைத் தா. என்னிடம் வர உனக்கு அச்சமாயிருந்தால் அது இந்த நரகத்திலிருந்து நம்மை விடுவிக்கும்; நான் உனக்கான கன்னிப்பெண்ணாக இருப்பேன். பயத்தால் நீ ஓடிப்போனால் அழுகிய முட்டைகளை நான் உனது முதுகின் மீது வீசுவேன்.”

நான் மஞ்சள் முகத்திடம் சொன்னேன்: “ஒரு பெண் ஓர் ஆணை வேசைமகன் என்றழைக்கக் கூடாது. நீ ஒரு பெண்ணாயிருந்து கொண்டு ஓர் ஆணை வேசைமகன் என்று அழைத்தால், உனது தாய்மைசார் உணர்வுகளுக்கு அது துரோகமிழைக்கிறது. ஆண்களைப் பற்றி எண்ணாமல் வெறும் உள்ளுணர்வால் மட்டுமே ஒரு பெண் எப்போதும் கர்ப்பந்தரிக்க வேண்டும்; அது மட்டும்தான் ஆணை இந்த பூமியில் நேர்மையானவனாக வைத்திருக்கும்; ஏனென்றால் வெதுவெதுப்பும் செழிப்பும் நிறைந்த ஓர் எதிர்காலம் பற்றிய யோசனையை அது அவனுக்குத் தருகிறது. நான் பெண்களை நேசிக்கிறேன். ஏனென்றால் ஒரு பெண் எத்தனைதான் குரூரமானவளாக இருந்தாலும் அவளால் ஆண்களிடம் குரூரமாக நடந்துகொள்ள முடியாது; அவளின் தாய்மைசார் உள்ளுணர்வு அவளுக்குத் துரோகம் இழைத்துவிடும். ஆனால், அழுகிய முட்டைகள் என்று எதை நீ சொல்கிறாய் என்று எனக்குத் தெரியாது; ஒருசில முட்டைகள் எப்போதும் குஞ்சு பொறிக்காது என்பது எனக்குத் தெரியும். ஒருசில முட்டைகள் பழையவை என்பதும் அவற்றைச் சமைக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும். அவற்றை எல்லாம் நான் ‘பணிஓய்வு பெற்ற முட்டைகள்’ என்றே அழைப்பேன். நான் நேர்மையாக இருக்கிறேன். நான் உன்னை விட்டு விலகிச் செல்கிறேன். எனது முதுகின் மீது நீ பணிஓய்வு பெற்ற முட்டைகளை வீசுவது குறித்து எனக்கு எந்தக் கவலையுமில்லை.”

ஒரு வீட்டின் பழைய சுவரின் மீது ஒன்றுக்கடித்தேன்; சுவர் இடிந்து விழுந்தது. வீட்டின் பழைய சுவர்களை உடைக்கும் முயற்சியில் யாராவது ஈடுபடுவது ரொம்ப நல்ல விஷயம் என்று நான் கூறினேன். ஆனால் இந்த உலகம் நீரால் அழிக்கப்படக்கூடாது, அது நெருப்பால் அழிக்கப்பட வேண்டும். எப்போதும் ஒரு பழமையான வீட்டிலும் இளமையான மனத்திலும் எளிதில் நெருப்பு பற்றிக்கொள்ளும். ஆனால் அவற்றுக்கு நெருப்புமூட்ட நமக்கு ஒரு மொழி தேவைப்படும்; ஒன்றுக்கடிப்பதைப் போன்ற தன்னிச்சையான உணர்வாக.

லெனின் ஒரு மகத்தான மனிதர்; “இந்த உலகிலுள்ள தங்கமெல்லாம் சேகரித்து அந்தச் செல்வத்தை வைத்து மக்களுக்குப் பொதுக்கழிப்பறைகளைக் கட்டுவேன்” என்று அவர் சொன்ன அதேவேளையில், கல்கத்தா போன்ற நகரங்களில் நிறைய மனிதர்கள் வசிக்கிறார்கள்; தங்களுடைய வீடுகளில் இருக்கும்போது வீடுகளில் இருப்பதாகவே அவர்கள் உணர்வதில்லை; ஏனென்றால் அவர்களின் வீடுகளில் கழிப்பறை வசதிகள் இருப்பதில்லை.

நான் சொன்னேன், “இன்று சில அற்புதமான அனுபவங்கள் எனக்குக் கிடைக்கிறது. எனது இந்த அனுபவங்களை யாருடனாவது பகிர்ந்துகொள்ள வேண்டும்; அவர்களும் இவற்றை என்னோடு பகிர்ந்துகொள்ளும் ஆட்களாயிருக்க வேண்டும். ஆனால் யாருக்கு எழுதுவது? எழுதுவதற்கு நண்பர்கள் யாரும் எனக்கில்லை.” இதை இந்தியாவின் தலைமை அஞ்சல் அதிகாரிக்கு எழுத நான் தீர்மானித்தேன்; ஏனென்றால் இந்தியாவின் த.அ.அ-வுக்கு எழுதுவது மிகவும் எளிது. அவரொன்றும் கடவுள் கிடையாது என்றாலும் போப்பைப் போலவே அவரும் அனைவருக்கும் தெரிந்த ஒரு நபர்; எல்லோருக்கும் அவரின் முகவரி தெரியும். அவருடைய முகவரியை நான் தவறாக எழுதினால் கூடக் கடிதம் அவருக்குப் போய்ச் சேரும்; ஏனென்றால் எல்லோருக்கும் அவரின் முகவரி தெரியும்.

நான் ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து வர எண்ணினேன். ஒரு பழைய சுவரில் ஒட்டியிருந்த சுவரொட்டியைக் கிழிக்கத் தொடங்கினேன். நான் அதைக் கிழித்து எடுத்தேன்; அதற்குப் பின்னால் இன்னொரு சுவரொட்டி இருந்தது. நான் அதைக் கிழித்து எடுத்தேன்; அதற்குப் பின்னால் இன்னொரு சுவரொட்டி இருந்தது. நான் அதைக் கிழித்து எடுத்தேன்; அதற்குப் பின்னால் இன்னொரு சுவரொட்டி இருந்தது. நான் அதைக் கிழித்து எடுத்தேன்; அதற்குப் பின்னால் இன்னொரு சுவரொட்டி இருந்தது… சுவரொட்டிகளை கிழித்துக் கிழித்து எனக்குச் சோர்வாயிருந்தது.

“நம்முடைய மனித மனம் ஒரு காலியான பழைய சுவரைப் போன்றது” என்று சொன்னேன். சரித்திரத்தின் பாதை நெடுக ஒவ்வொரு அரசனும், ஒவ்வொரு கவிஞனும், ஒவ்வொரு தலைவனும், ஒவ்வொரு கலைஞனும், ஒவ்வொரு தீர்க்கதரிசியும், ஒவ்வொரு அரசியல்வாதியும், ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரு புத்தக விற்பனையாளரும், ஒவ்வொரு சலவைத் தொழிலாளியும், ஒவ்வொரு தச்சரும், ஒவ்வொரு அமைச்சரும், ஒவ்வொரு தட்டச்சு வல்லுனரும், ஒவ்வொரு தத்துவவாதியும், ஒவ்வொரு ராமகிருஷ்ணரும், ஒவ்வொரு ஸ்ரீ அரவிந்தரும், ஒவ்வொரு சாய்பாபாவும், ஒவ்வொரு ஜென் துறவியும், ஒவ்வொரு தோட்டக்காரரும், ஒவ்வொரு நடிகனும், ஒவ்வொரு பாடகனும், ஒவ்வொரு பல்கலைக்கழகமும், ஒவ்வொரு கல்லூரியும், ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு விடுதியும், ஒவ்வொரு துறவியும் காலியான சுவர் மீது சுவரொட்டிகளை ஒன்றன்பின் ஒன்றாக ஒட்டிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். சுவரொட்டிகள் தற்போது கிட்டத்தட்ட அந்தச் சுவரின் கனத்திற்கு வந்துவிட்டன. இந்தச் சுவரொட்டிகளின் அடுக்குகளைத்தான் நம்முடைய கலாச்சாரம் என்று சொல்கிறோம்.

காலியான பழைய சுவரை நாம் ஆடைகளின்றி எதிர்கொள்ள வேண்டும். என் அத்தை ஒருகாலத்தில் கல்கத்தாவின் பரபரப்பான வீதியில் வசித்தாள் என்பதை நினைப்பதே எனக்குக் குமட்டிக்கொண்டு வரும். அவளுடைய வீட்டின் ஒரு சாளரம் மட்டும் வீதியின் பக்கம் திறக்கக்கூடியது. வீதியின் நாராச ஒலிகளைத் தவிர்க்கப் பல நாட்களாக அவள் அந்தச் சாளரத்தைத் திறக்கவேயில்லை. ஒருநாள் அவள் சாளரத்தைத் திறந்தபோது, சாளரம் முழுக்கவும் சுவரொட்டிகளால் மூடப்பட்டு இருந்தது; சுவரின் மறுபக்கமிருந்து அவை ஒட்டப்பட்டிருந்தன. சுவரொட்டிகள் கிட்டத்தட்ட அந்தச் சுவரின் கனத்திற்கு வந்துவிட்டன. தன்னுடைய கணவனின் நடைக்கோலை எடுத்து அவள் அதற்குள் ஓர் ஓட்டை போட முயற்சி செய்தாள்; அவளால் முடியவில்லை. நாள் முழுக்க அவள் விசும்பிக் கொண்டிருந்தாள். கடைசியில் அவளுடைய கணவன் வீட்டுக்கு வந்து அந்தச் சுவரொட்டிகளுக்கு நெருப்பு வைத்தான்.

ஒரு தபால்தலையை வாங்கி எனது அனுபவங்களை இந்தியாவின் தலைமை அஞ்சல் அதிகாரிக்கு அனுப்புவதற்காக அஞ்சல் நிலையத்திற்குச் சென்றேன். ஒரு முதியவர் தன்னுடைய தபால்தலையை உயர்த்திப் பிடித்தவாறு மழை பெய்வதற்காகக் காத்திருப்பதைப் பார்த்தேன். “நீங்கள் எத்தனை பெரிய முட்டாள் தெரியுமா?” என்றேன் அவரிடம். தபால்தலைகளை ஒட்டுவதற்குப் பருவமழை பொழியவேண்டும் என யாரும் காத்திருப்பதில்லை. அவரிடமிருந்த தபால்தலையைப் பிடுங்கினேன்; எனது நாக்கால் அதை நக்கித் தபால் உறையின் மீது ஒட்டினேன். அவரின் தபால் உறைக்குள் என்னுடைய அனுபவங்களையும் அள்ளிப்போட்டு, “உங்களுக்கு ஏதும் பிரச்சினையில்லை என்றால் உங்களுடையதோடு சேர்த்து என்னுடையதையும் அனுப்புங்கள்” என்றேன். “நீங்கள் யாருக்கு அனுப்புகிறீர்கள் என்பதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை.”

அவர் சொன்னார், “ஒரு தபால்தலையை உங்கள் நாக்கின் உதவியோடு ஒட்ட உங்களுக்கு மொழி தேவைப்படும், அதாவது உங்களின் தாய்மொழியைச் சொல்கிறேன். நான் ஒரு முட்டாள் மிருகம், அதனால்தான் பருவமழைக்காகக் காத்திருக்கிறேன்.” உங்களைப் போன்ற ஒரு மனிதரைச் சாலையில் பார்க்கிறேன் என்பது ஆச்சரியம்தான் என்று நான் அவரிடம் சொன்னேன். உங்களைப் போன்ற மனிதர்களைப் பெரும்பாலும் பெக்கெட்டின் நாடகங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்.

நான் வீட்டுக்கு வந்தேன். மூன்று மீன்களையும் என்னுடைய இரவுணவுக்குச் சமைக்க நினைத்தேன். அழைப்புமணி ஒலித்தது. நான் வெளியே சென்றேன்; கிறிஸ்துவைப் போலத் தாடி வைத்த ஒரு மனிதன் எனக்காகக் காத்திருந்தான். “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், நான் வீட்டில் இல்லை” என்றேன். அவனுக்குள் ஆச்சரியம் உண்டானது. நான் குடித்திருப்பதாக நினைத்தான். “அநேகமாக உங்களால் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று சொன்னேன். நான் என்ன சொல்கிறேன் என்பதற்கு விளக்கக்குறிப்புகள் வேண்டுமானாலும் எழுதுகிறேன். உண்மையில் இது விளக்கக்குறிப்புகளின் காலம். அதனால்தான் என்னுடைய வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆகவே நான் வீட்டில் இல்லை. நான் ஒரு பைத்தியம் என்றெண்ணி அவன் கிளம்பிச் சென்றான்.

என்னுடைய மூன்று மீன்களைச் சமைப்பதற்காக நான் மீண்டும் சமையலறைக்கு வந்தேன். நான் ஒரு மீனை எடுத்தேன். அதற்கு மிகவும் விசித்திரமான கண்கள். என்னால் இந்த மீனை எண்ணெயில் போட்டுப் பொறித்து அதைக் கொல்ல முடியாது என்றெண்ணினேன், ஏற்கனவே அது இறந்திருந்தாலும்கூட. எனது சமையலறைக்கென்று தண்ணீரைச் சேமித்து வைக்கும் தொட்டிக்குள் அந்த மீனை விட்டேன். என்னால் மனிதர்களிடம் பேச முடியாது, ஆனால் எனக்கான வெகுமதிகளைச் செத்தவர்களுக்குத் தருவதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை.

ஹிட்லரின் நினைவுச்சின்னங்களைத் தேடுதல்

ஹிட்லர் ஒரு மாபெரும் சுயமோகி
அவர்கள் கூறினார்கள்
அவர் ஜெர்மானியர்களுக்கு
சில மாயக்கண்ணாடிகளை அளித்ததாக
ஹிட்லரின் முகங்களைத் தவிர
வேறெதையும் அவை பிரதிபலிக்கவில்லை
ஆகவே பாவப்பட்ட ஜெர்மானியர்களுக்கு
தங்களின் ஹிட்லர்-முகங்களை நேசிப்பதைத் தவிர
வேறெந்த வழியும் இருக்கவில்லை

ஹிட்லர் ஒரு மாபெரும் சுயமோகி
அவர்கள் கூறினார்கள்
பெர்லின் நகரம் சரணடைவதற்கு முன்பாக
அவர் நகரத்தை முற்றிலும் தூள்தூளாக்கினார்
விசேசமான அமிலம் நிரம்பிய
ஒரு பெரிய தொட்டியை ஆயத்தப்படுத்தினார்
அவருடைய உறுதியான எலும்புகளின் ஒவ்வொரு துகளையும்
அதனால் கரைத்துவிட முடியும்

ஹிட்லர் ஒரு மாபெரும் சுயமோகி
அவர்கள் கூறினார்கள்
அந்த அமிலம் அவருடம்பின்
ஒவ்வொரு பகுதியையும் கரைத்துவிட்டது
அவருடைய பல்லைத்தவிர

அது அவரின் ஞானப்பல்லா?
அது அவரின் செயற்கைப் பல்வரிசையில் ஒன்றா?
நான் பார்க்க விரும்புகிறேன்
அமிலத்தால் அரிக்கப்பட்ட ஹிட்லரின் பல்லை
(எக்கச்சக்கமான மிட்டாய்களோடு
செல்லம் கொஞ்சப்பட்ட ஒரு குழந்தையின்
பால்-பல்லைப் போலத் தோற்றமளிக்கக்கூடியதை)
ஒரு சோவியத் அருங்காட்சியகத்தில்
ஸ்டாலினின் சிலைக்குக் கீழே
அதன் பாதத்தில் அந்தப்பல் வைக்கப்பட்டிருப்பதை

பிறகு
இன்னும் உரத்த குரலில்
தொழிலாளர்களின் வெற்றியை
அறிவிப்பதற்கு
அவர்களுக்கு
ஏறத்தாழ ஸ்டாலினின் சிலைகளின் எண்ணிக்கையில்
ஹிட்லரின் பற்களும் தேவைப்படும்
ஒட்டுமொத்த சோவியத் யூனியனும்
அனேகமாக அவற்றையும் கூட மிகப்பெரிய அளவில்
உற்பத்தி செய்யக்கூடும்

எ என்றால் எறும்பு
ஒரு ஆப்பிளை கற்பனை செய்யுங்கள்
புவியீர்ப்புவிசையின் அத்தனை விதிகளுக்கும்
கீழ்ப்படிய மறுக்கும்
ஒரு ஆப்பிள்
அது இன்னும் காற்றில்
எந்த அசைவுமின்றி மிதக்கின்றது.
ஒரு எறும்பை கற்பனை செய்யுங்கள்
ஆப்பிளுக்குள் சிக்கிக்கொண்டு
வெளியேறும் வழிதேடி
மேலும்கீழுமாக ஓடுகிறது
அந்த எறும்பு அறிவாளியாயிருந்தால்
புவியீர்ப்புவிசையை ஒத்துக்கொண்டு
கீழே விழவேண்டும்
அல்லது அந்த ஆப்பிளுக்குள்
ஓர் இல்லத்தை அமைத்துக்கொண்டு
ஆப்பிள்-உலகத்தில் வாழ்ந்திருக்கலாம்
உணவாக அதற்கு அந்த ஆப்பிளே போதுமானதாயிருக்கும்

தோழர்
தோழர்கள் சொன்னார்கள்:
பெங்கால் பஞ்சத்தின்போது
எங்கள் தந்தையோடு சேர்ந்து நடப்போம்
மிட்டாய்கடைகள் நிறைந்த வீதியில்
ஜிலேபி, ரசகுல்லா
கலாகண்ட், கோவா, லட்டு
கண்ணாடிப்பெட்டிகளில் வைத்த விளையாட்டுப் பொருட்களென
மிகவும் பிரகாசமான நிறங்களோடு யாவுமிருந்தன

அப்போது எனக்குத் தெரியாது
அவற்றை உண்ண முடியும் என
கண்ணாடி உடையக்கூடியதென்பதை
ஒரேயொரு அடியில் அதை உடைக்கமுடிமென்பதை
அறிந்திருக்கும் வகையில்
பொறாமை நிறைந்த பார்வைகளும்
அப்போது என்னிடம் இல்லை

என் அப்பா
அவர் மனைவியோடும்
ஏழு பிள்ளைகளோடும்
வேலை தேடுபவராக
கடைகடையாகச் சென்றார்
இருப்பதில் இளையவனான எனக்கு
மாலைக்கண் நோயால்
கண்ணாடிகள் தேவைப்பட்டன
என் அப்பாவின் கைகளைப் பற்றிக்கொள்ளுமளவுக்கு
என்னால் வேகமாக நடக்கமுடியாது
ஆனால் தெளிவாகக் கேட்கமுடியும்
டாக்கா உச்சரிப்போடு என் அப்பா சொல்வார்
அவருக்கு நான்கு பிள்ளைகள் மட்டுமிருந்ததாக
எங்களில் சிலருக்கு உணவூட்டும்வகையில்
அவருக்கு வேலை கிடைக்கும்போது
நான்கு மட்டுமே பிழைத்திருக்குமென்பது
அவருக்கு ஏற்கனவே தெரியுமென்பதைப்போல.

Author

  • எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான கார்த்திகைப் பாண்டியன் 1981-ல் மதுரையில் பிறந்தவர். பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். 2011 முதல் இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதிவருகிறார். இதுவரையில் 2 சிறுகதைத் தொகுப்புகளும் 10 மொழிபெயர்ப்புகளும் வெளியாகியுள்ளன. எழுத்தாளன் என்பதைவிட ஒரு நல்ல இலக்கிய வாசகன் எனும் அடையாளமே தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகச் சொல்கிறார்.

You may also like

Leave a Comment