அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு

This entry is part 28 of 28 in the series அசுரவதம்

தற்காலக் கர்நாடகத்தின் குத்ரேமுக் மலைத்தொடரின் ஒரு பகுதியில், மேகங்கள் முத்தமிடும் சிகரங்களுக்கு இடையே ஒரு இருண்ட குகை இன்றும் மர்மங்கள் சூடி நிற்கிறது.

அது அயோமுகி குகை’. அங்கே ஆண்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பதற்கும், ஒரு பெண் பூசாரி மட்டுமே அந்த எல்லைக்குள் செல்ல முடிவதற்கும் பின்னால் இருக்கும் அந்த ஆதி வரலாற்றின் ரத்தமும் சதையுமான காட்சி இது.

கிரௌஞ்ச வனத்தின் அந்தப் பகுதியில் அந்தி மயங்கிய வேளையில், இராமன் சற்றே தொலைவில் இருந்த நீரோடைக்குச் சென்றிருந்தான். அவர்களுக்குத் தண்ணீரின் தேவை அதிகமிருந்தும் தண்ணீரில்லாமல் தேடிக்கொண்டே சென்ற போது, நிலத்தின் ஈரப்பதத்தைக் கொண்டு நதியின் போக்கை அறிவதில் இராமன் முனைந்திருந்த அந்தத் தருணத்தில், இளவல் இலக்குவன் ஒரு பெரும் பாறையின் மேல் அமர்ந்து வில்லைத் தடவிக் கொண்டிருந்தான்.

காற்றில் ஒரு விசித்திரமான பாரம் ஏறியிருந்தது; பறவைகள் அடையும் ஓசை சட்டென்று நின்று, காடே ஒருவித மயான அமைதிக்குத் தள்ளப்பட்டது. திடீரென்று, ஒரு பெரும் சூறாவளி சுழன்று அடித்தது. மரங்களின் கிளைகள் முறிந்து விழ, ஒரு கரிய மலைச்சரிவே நிலத்தில் இறங்கி வருவது போல அயோமுகி அங்கே வந்து நின்றாள். அவளது கண்கள் கொல்லன் உலையின் நெருப்பைப் போலச் சிவந்திருந்தன.

முதலில் இலக்குவனைக் கொன்று விட வேண்டும் என்ற வெறியோடு வந்த அந்த ‘இரும்பு முகத்தினள்’, அவனது அந்தத் தெய்வீக அழகைக் கண்டதும் அப்படியே ஸ்தம்பித்தாள். தேக்கு மரத்தைப் போன்ற வலிமையான தோள்கள், தீர்க்கமான கண்கள், மன்மதனின் வில்லைப் பழிக்கும் புருவங்கள் .. இலக்குவனின் அந்தத் தூய்மையான ஆண்மை நிறைந்த அழகு அவளுள் ஒரு வக்கிரமான காமத்தைத் தூண்டியது.

“காமவள்ளி இவனிடம் மயங்கி இருக்க வேண்டும். அதனால்தான் என்னை இவனிடம் இருந்து தள்ளி இருக்கச் சொல்கிறாள். இவனை நான் ஏன் கொல்ல வேண்டும்? என் தீராத தனிமைக்கு இவன் ஒரு மருந்தல்லவா? இவனை என் குகைக்குக் கடத்திச் சென்று, என் அன்பால் சிறைப்படுத்துவேன்!” என்று எண்ணிய அயோமுகி, இராமன் இல்லாத அந்தச் சமயத்தில் தன் இரும்புப் பிடியால் இலக்குவனைத் தூக்கிக் கொண்டு வானில் எழும்பினாள்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த இராமன், இலக்குவனைக் காணாமல் துடித்தான். இலக்குவனின் கையில் இருந்து கீழே சிதறிக்கிடந்த சில அம்புகளும், நிலத்தில் பதிந்திருந்த அந்த அரக்கியின் விகாரமான பாதச்சுவடுகளும் ஏதோ ஒரு விபரீதத்தை உரக்கச் சொல்லின.

இராமனின் உள்ளம் துடித்தது. சீதையை இழந்த பிறகு, அவனது ஆன்மாவின் பாதியாக இருந்த இலக்குவனும் இல்லாமல் போவதை அவனால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. இராமனின் தவிப்பு அதிகரித்தது. ஒரு மனிதன் தன் வாழ்க்கைப் பயணத்தில் நிழலை இழக்கலாம், ஆனால் தன் ஆன்மாவின் துணையை இழப்பது என்பது மரணத்தை விடக் கொடியது.

“இலக்குவா… தம்பீ…” என்று அவன் எழுப்பிய குரல் அந்த மலைத்தொடர்களில் மோதி எதிரொலித்தது. அந்த எதிரொலி அவனது தனிமையை மேலும் ஏளனம் செய்வது போல இருந்தது. மனைவியைத் தேடி அலையும் ஒருவன், தனக்கு அரணாக இருந்த தம்பியையும் இழந்து நிற்பது என்பது, துடுப்பில்லாத படகாய் நடுக்கடலில் தவிப்பதற்குச் சமம்.

அவனது கண்களில் நீர் திரையிட்டது. அதே நேரம், அப்போது தொலைவில் ஒரு பெரும் அலறல் கேட்டது. அது ஒரு பெண்ணின் குரல், ஆனால் அதில் வேதனையும் வன்மமும் கலந்திருந்தது. இராமன் அந்தத் திசையை நோக்கி மின்னலெனப் பாய்ந்தான். அங்கே கண்ட காட்சி அவனை நிலைகுலைய வைத்தது.

அயோமுகி நிலத்தில் விழுந்து புரண்டு கொண்டிருந்தாள். அவளது மூக்கும், காதுகளும், மார்பகங்களும் அறுபட்டு ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. அவளுக்கு முன்னால், கோபத்தின் உச்சியில் ஆவேசமாக நின்றிருந்தான் இலக்குவன். அவனது வாளில் அந்த அரக்கியின் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.

இராமனைக் கண்டதும் இலக்குவனின் முகத்தில் ஒரு நிம்மதி படர்ந்தது. இராமன் ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டான். “இலக்குவா, உனக்கு ஏதேனும் நேர்ந்திருக்குமோ என்று என் உயிர் ஊசலாடியது. என்ன நடந்தது இங்கே?” என்று கேட்டான்.

இலக்குவன் நடந்ததை விவரமாகச் சொன்னான். அயோமுகியை கவனித்த இராமன், சூர்ப்பனகையைப் போல இவளும் மூக்கறுபட்டிருப்பது மேலும் அரக்கர்களின் வஞ்சத்தைத் தூண்டும் என்று இராமன் கருதினான். வன்முறை என்பது வன்முறையையே ஈன்றெடுக்கும் என்ற உலக நியதி அவனுக்குப் புரிந்தது.

இராமன் அந்த அரக்கியை மீண்டும் பார்த்தான். அவளது கண்கள் இப்போது காமத்திற்குப் பதில் தீராத பகையைக் கக்கிக் கொண்டிருந்தன. இராமனும் இலக்குவனும் அவ்விடம் விட்டு நகர முற்பட்டனர். அவர்கள் அங்கிருந்து செல்வதைப் பார்த்த அயோமுகி, தன் காயங்களின் வலியையும் மீறி எழுந்து, ரத்தம் வழியும் முகத்துடன் தன் குகையை நோக்கி ஓடினாள்.

அவள் குகைக்குள் நுழைந்து ஒரு மூலையில் ஆவேசத்துடன் கதறியபடி முடங்கிக் கிடந்தாள். அவளைத் தேடிக்கொண்டு அங்கே வந்த சூர்ப்பனகை, தன் தோழியின் நிலையைக் கண்டு திடுக்கிட்டாள்.

“அயோமுகி உனக்கும் அதே கதிதானா? அந்த இராம இலக்குவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. அவர்கள் வீரமும் அழகும் கொண்டிருந்தாலும் கொடூரமானவர்கள். இரக்கமற்றவர்கள். அவர்களிடம் நாம் தோற்றுப் போனோம்” என்று தேற்ற முயன்றாள்.

அப்போது அயோமுகி சீறினாள். “சூர்ப்பனகை, தேற்றுவதை நிறுத்து. இது தோல்வியல்ல, இது இந்த ஆண் வர்க்கத்தின் திமிர். ஒரு பெண் ஒருவனை விரும்பினால், அவள் அரக்கியாகவே இருந்தாலும் அவளுக்கு அன்பு செய்ய உரிமையில்லையா? ஒருவன் அழகாக இருக்கிறான் என்பதற்காக அவனைத் தொட முற்படுவது குற்றமா? அவர்கள் ஏன் நம் அழகைச் சிதைக்கிறார்கள்? மூக்கையும் காதையும் அறுப்பது என்பது வெறும் உடல் காயம் அல்ல, அது ஒரு பெண்ணின் ஆன்மாவைச் சிதைப்பது. நாம் கேட்பது அன்பு, அவர்கள் தருவது வன்முறை.”

அயோமுகி தன் தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு, குகையின் சுவர்களைத் தன் கைகளால் அறைந்தபடி சபதம் எடுத்தாள்.

“சூர்ப்பனகை, இனி எனக்கு எந்தத் தேறுதலும் வேண்டாம். ஒரு பெண்ணின் அழகையும் ஆசையையும் சிதைத்த இந்த ஆண் இனத்தின் மீது எனக்கு வெறுப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது.”

வேதனையுடன் அவளைப் பார்த்தாள் சூர்ப்பனகை.

“மான்களுக்குத் தன் பக்க நியாயம் உண்டென்றால், புலிகளுக்கும் தங்கள் பக்க நியாயம் உண்டல்லவா? அவர்கள் நம்மை ‘அரக்கி’ என்கிறார்கள், ஏனெனில் நாம் நம் ஆசைகளை வெளிப்படையாகச் சொல்கிறோம். ஆனால் ஆண்களோ தங்கள் வக்கிரங்களை ஒளித்து வைத்துக்கொண்டு நம்மைச் சிதைக்கிறார்கள்.”

சூர்ப்பனகை மௌனமாக இருந்தாள். அவள் கண்முன் தன் கணவன் மார்பில் வாளைப் பாய்ச்சிய இராவணனின் நிழல் வந்து போனது.

அயோமுகி தொடர்ந்தாள்.

“இன்று முதல் இந்தக் குகை ஒரு எல்லையாக மாறும். எந்த ஒரு ஆணும் என் குகைக்குள் நுழைய முடியாது. அவன் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி, மீறி நுழைபவன் என் வஞ்சத்தின் வெப்பத்தால் கருகிப் போவான். இனி இந்தக் குகையில் ஒரு பெண் மட்டுமே நுழைய முடியும். ஆண்களின் நிழல் கூட இங்கே விழக்கூடாது! இது என் ரத்தத்தால் எழுதப்பட்ட சாசனம்!” என்று கதறினாள்.

அந்தச் சபதம் அந்தக் குகையின் சுவர்களில் நிரந்தரமாகப் பதிந்தது. பெண் எப்படியானவளாக இருந்தாலும் அவளின் ஆசை மறுக்கப்படும்போது கனன்று தகித்து எழும் வன்முறைக்குச் சாட்சியாக இந்தக் குகை இன்றும் நிற்கிறது. அந்த ஆதி வடு இன்றும் அங்கே ஒரு சாபமாக உறைந்து கிடக்கிறது.

அங்கே காட்டில், பொழுது விடியத் தொடங்கியபோது, இராமனும் இலக்குவனும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இரவு முழுவதும் நடந்த போராட்டங்கள் அவர்களின் உடலை வாட்டினாலும், அவர்களின் மன உறுதி குறையவில்லை. காட்டின் அடர்த்தி மெல்லக் குறையத் தொடங்க, தூரத்தில் ஒரு குடிசையிலிருந்து மெல்லிய புகை எழுவதைக் கண்டனர். அந்தப் புகை ஒரு யாகத்தின் வாசனையையும், அதே சமயம் ஒரு புதிய விடியலின் நம்பிக்கையையும் சுமந்து வந்தது.

தன் வாழ்க்கையின் போக்கை நிர்ணயிக்கும் இடம் அது என்றும், தங்களின் தேடலுக்கான விடை அங்கு மட்டுமே கிடைக்கும் என்றும் இலக்குவனின் உள் மனது சொன்னது.

“அண்ணா” என்றான் இலக்குவன்.

இராமன் இலக்குவன் முகத்தைப் பார்த்தான். மெதுவாகப் புன்னகைத்தான். அவன் சொல்ல வந்ததைப் புரிந்துகொண்டது போல இருந்த அந்தச் சிரிப்பைப் பல நாள்கள் கழித்துப் பார்த்த இலக்குவன் கண்களில் ஆனந்த பாஷ்பம் பொழியத் தொடங்கி இருந்தது.

அது அன்பின் தேடலில் அவர்கள் அடைந்த முதல் வெற்றி.

(தொடரும்)

Series Navigation<< அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்) 

Author

Related posts

வலை ஜிமிக்கி

சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 9

வரலாற்றில் பொருளாதாரம் – 22