(1) ‘இன்குலாப் ஸிந்தாபாத்‘ – புரட்சி ஓங்குக – Long live ‘the Revolution’.
(2) ‘சுப்கே சுப்கே ராத் தின் ஆஸூம் பஹானா யாத் ஹை’ – அதுவாக இரவும் பகலும் கண்ணீர் பொங்கும் நினைவில் நிற்கும்!
இந்திய வரலாறும், உருதுக் கவிதை உலகும் அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் மேற்சொன்ன இரண்டு சொற்றொடர்களும் அறிமுகமாகியிருக்கும். முதல் சொற்றொடர், ‘புரட்சி ஓங்குக – இன்குலாப் ஸிந்தாபாத் (Inquilaab zindaabaad)’ ‘வெள்ளையனே வெளியேறு’ என விடுதலைப் போராட்டத்தின்போது நாடு முழுதும் ஒலித்தது. 1921இல் அதை எழுதியவர் ஹஸ்ரத் மோஹானி. இரண்டாவது சொற்றொடர் ‘சுப்கே சுப்கே’ எனத் தொடங்கும் கஜலின் தொடக்க அடி. கஜல் கேட்டவர், கேட்க நினைப்பவர் யாராயினும் முதலில் ‘சுப்கே சுப்கே ராத் தின்’ இந்தக் கஜலைக் கடந்துதான் கஜல் உலகிற்குள் வந்திருப்பர். கஜல் பேசப்படும் அனைத்து அவைகளிலும் ‘சுப்கே சுப்கே’யும் பேசப்படும். அதை எழுதியவரும் ஹஸ்ரத் மோஹானி.
அவர் எழுதிய கிருஷ்ண ஜெயந்திக் கவிதை நிலைத்த பெயர் பெற்றது. ‘அவுட்லுக்’ பத்திரிகையில் ‘கண்ணனைக் காதலித்த மௌலானா‘ என்னும் தலைப்பில் 2012ஆம் ஆண்டு ஒரு கட்டுரை வெளியானது.
// ஹஸ்ரத்துக்கும் மதுராபுரி செல்வது ஏற்புடையது
அறிந்துகொண்டேன், இன்று பக்தர்களுக்கு அருள்கிறாயாமே! //
// ஹஸ்ரத் கி பி கபூல் ஹோ மதுரா மேன் ஹாஸிரி
சுன்தே ஹைன் ஆஷிகோன் பே துமாரா கரம் ஹை ஆஜ் //
இஸ்லாமியர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர், இந்தியாவைவிட்டு வெள்ளையர்கள் முழுதாக வெளியேற வேண்டும் என்னும் கொள்கையில் தீவிரமாக இருந்தவர், இந்திய அரசியல் சட்டத்தை எழுதிய குழுவின் அங்கத்தினர், இந்திய நாடு விடுதலை அடைந்தபின் ரஷ்ய அரசைப் போன்ற கூட்டமைப்பாக இருக்க வேண்டும் என விரும்பியவர் எனப் பன்முகங்கள் கொண்டவரின் மனதுக்குள் இருந்த கவிஞர், எந்தத் தயக்கமும் இல்லாமல், // மதுராபுரிக்கு வருகிறேன் – பக்தர்களுக்கு அருள்கிறாயாமே // எனப் பாடியது அன்றைக்கு வரவேற்பைப் பெற்று இன்றளவும் பேசப்படுகிறது.
சமூக ஊடகங்களில் அவ்வப்போது நடக்கும் தவறான முன்னனுப்பல்கள் (Forwards) ஹஸ்ரத் மோஹானியையும் விட்டுவைக்கவில்லை. அம்பேத்கர் அவர்களும் ஹஸ்ரத்தும் அருகருகில் அமர்ந்திருக்கும் படம் சமூக ஊடகங்களில், ‘அம்பேத்கரும் அபுல் கலாம் ஆசாத்தும்‘ என்னும் தலைப்பில் பகிரப்பட்டது. தொப்பியும் தாடியும் கண்ணாடியும் அபுல் கலாம் ஆசாத்தின் அடையாளமாகக் கொள்ளப்பட்டு, மௌலானா ஆசாத்தின் முகமும், மௌலானா ஹஸ்ரத்தின் முகமும் தெரியாதவர்களால் ஏகப்பட்ட முன்னனுப்பல்களில் சுற்றிப் பின் அடுத்தடுத்த அலைகளால் பின்னுக்குச் சென்றது. இது, இன்றைய தலைமுறையில் ஹஸ்ரத் மோஹானியையின் முகமும் மரபும் எவ்வளவு மறக்கப்பட்டுள்ளன என்பதற்கான சிறிய எடுத்துக்காட்டு.
சையத் ஃபஸ்லுல் ஹசன், உத்தரப் பிரதேசத்தில் ‘மோகன்‘ என்னும் ஊரில் பிறந்தவர். பொதுவாக உருதுக் கவிஞர்கள் புனைபெயரில் ஜெய்ப்பூரி, மீரட்டி, இலாஹாபாதி, தெஹல்வி (தில்லி) எனத் தங்கள் ஊர்ப்பெயரை இணைத்துக்கொள்வர். சையத் ஃபஸ்லுல் ஹசன் தனது புனைபெயர் ஹஸ்ரத்துடன் மோகன் என்னும் ஊர்ப்பெயரை இணைத்து ‘ஹஸ்ரத் மோஹானி’யானார்.
காதல் தோல்வியின் பிரிவைப் பாடும் ஒரு கவிதை:
// காதல் தோல்வியில் உண்மை வெளிப்பட்டது ‘ஹஸ்ரத்’
இனி முன்னிலும் அதிகமாக அவள் நினைவு உன் மனதில் //
// ஹகீகத் குல்கயி ஹஸ்ரத் தேரே தர்க்-ஏ-மொஹப்பத் கி
துஜேதோ வோ பெஹ்லேசேபி பட்கர் யாத் ஆத்தே ஹைன் //
மீர்ஸா காலிப், மீரைப் புகழ்ந்து எழுதிய கவிதை வரிகள் இத்தொடரின் முந்தைய கட்டுரைகளில் வெளியாகியுள்ளன. ஹஸ்ரத்தும் மீரைப் புகழ்ந்து கவிதை எழுதியுள்ளார்.
// துயரங்களைக் கவிதையாக எழுதிவிடுகிறேன் ‘ஹஸ்ரத்’
ஆனால், மீரின் சொல்லழகை எங்கிருந்து கொண்டுவருவேன் //
// ஷேர் மேரா பி ஹைன் புர்-தர் வா-லெக்கின் ‘ஹஸ்ரத்’
மீர் கா ஷேவா-ஏ-குஃப்தார் கஹான்சே லாவூன் //
எகிப்தில் நிலவிய ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிரான கட்டுரை ஒன்று ஹஸ்ரத் ஆசிரியராக இருந்த இந்திய உருதுப் பத்திரிகையில் வெளியானது. அது ‘வெள்ளையனே வெளியேறு’ முழக்கம் இந்தியாவில் இருந்த காலகட்டம். அப்போது பிரிட்டிஷ் அரசு அக்கட்டுரையை எழுதியவர் பெயரைத் தெரிவிக்கும்படி அவருக்கு ஆணையிட்டது. கட்டுரையை எழுதியவரின் பெயரைத் தெரிவிக்க ஹஸ்ரத் மறுத்தார். அதனால், இரண்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார். அதற்கு முன்பும் பின்பும் விடுதலைக்காக நடந்த போராட்டங்களில் பங்குபெற்றுச் சிறைக்குச் சென்றவர்.
பாரதி, இக்பால், ஹஸ்ரத் போன்றோர் இவ்வுலகிற்குச் சொல்லும் முக்கியமான செய்தி என்னவென்றால், கவிஞன் என்பவன் பேனாவைக் கையில் வைத்துக்கொண்டு புத்தகத்தின் பின் அட்டைப்படத்தில் சிரிப்பவன் அல்லன். கவிஞனுக்கு ஆழமான அரசியல் பார்வைகள் இருக்கும்; கவிஞன் நாட்டைப் பற்றிச் சிந்திப்பான்; தன்னுடைய அரசியல் பார்வைகளைச் சொல்வதோடு மட்டுமல்லாமல் இயக்கங்களிலும் ஈடுபடுவான்; காதலையும் அழகியலையும் துயரங்களையும் கவிதையில் வடிப்பது மட்டுமே தன் பணியென அவன் குறிப்பிட்ட எல்லைக்குள் இருப்பவன் அல்லன். கவிஞன் களப்போராளியாகவும் இருப்பான்; சமகால அரசியல் நிகழ்வுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வான்; வாய்ப்புக் கிடைக்கையில் நாட்டை உருவாக்குவதிலும் அவன் பங்கு வகிப்பான். அனைத்திலும் பங்கேற்றபடி கவிதைத் தொகுப்புகள் மட்டுமல்லாமல் மற்ற தலைப்புகளிலும் ஏராளமான நூல்களையும் எழுதுவான் என முன்னோடியாகச் சென்றது சிறப்பு.
குறும்பு தெறிக்கும் காதல் கவிதைகளையும் மௌலானா விட்டுவைக்கவில்லை.
இந்த உலகம் முழுவதும் உன்னைப் பின் தொடரட்டும், உன் பார்வைக்காகக் காத்திருக்கட்டும், ஆனால் என்னைப்போல் உயிரைப் பணயம் வைத்து உன்னை நெருங்க நினைப்பவர் வேறு யாரும் இவ்வுலகில் இருக்க முடியாது எனக் காதலனாகி நிற்கும் மௌலானாவின் கவிதை வரிகளைப் படிக்கையில் வியக்கிறோம்.
// உலகம் முழுதும் உன் காதலர்கள்
அவர்களுள்
என் போன்றொரு
அஞ்சாநெஞ்சனைக் காட்டு //
// யூன்தோ ஆஷிக் தேரா ஸமானா ஹுவா
முஜ்சா ஜான்பாஸ் தூஸ்ரா நா ஹுவா //
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானுக்குச் செல்ல அழைப்பு விடுக்கப்பட்ட பின்னரும், “இந்தியாவில்தான் இருப்பேன்” எனச் சொன்ன முக்கியமான முஸ்லிம் தலைவர்களுள் ஹஸ்ரத்தும் ஒருவர். அலிகாரில் இருந்த மொஹமடன் ஆங்க்லோ ஓரியண்டல் கல்லூரியைப் போன்ற கல்வி நிலையத்தில் பயின்று இளம் பட்டதாரியாக வெளிவந்த அவர், பின்னாளில் ‘மாவீரர் மௌலானா’ (Maverick Maulana) எனவும் அழைக்கப்படுவார் என யாரும் நினைத்திருக்க வாய்ப்பு இல்லை. கல்வியை முடித்தவுடன் உருதுப் பத்திரிகையைத் தொடங்கியது, கிலாஃபத் இயக்கத்தாலும் ஈர்க்கப்பட்டது, இந்திய தேசிய காங்கிரசில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு முன்பும் 1900களின் தொடக்கத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துச் சிறை சென்றது என நீண்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர். பன்னாட்டு அரசியலிலும் தன்னை அடையாளப்படுத்தி 1938இல் கெய்ரோவில் நடைபெற்ற பாலஸ்தீன மாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து சென்று வந்தவர்.
தீர்க்கமான அரசியல் பார்வை, விடுதலைப் போராட்டம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ரஷ்யத் தாக்கம், அரசியலமைப்புச் சட்டம் என அவருடைய பொதுவாழ்க்கை இருப்பினும், அவருக்குள் இருந்த கவிஞன் அந்தப் பரபரப்பு வாழ்க்கையில் காணாமற் போகவில்லை. சிறையில் இருந்த நாள்களில் எழுதிய சிறைக் குறிப்புகள் ‘முஷாஹிதாத்-ஏ-ஸிந்தான்‘ என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. மீர்ஸா காலிபின் கவிதைகள் தொடர்பாக இவர் எழுதிய குறிப்புகள் நூலாக்கம் பெற்றுள்ளன. காலிபின் கவிதைகளை மாறுபட்ட பார்வையில் அணுகிப் புரிந்துகொள்வதற்கு அந்த நூல் முக்கியமானது என்பது ஆய்வாளர்கள் கருத்து.
ஆங்கிலேயரை எதிர்த்த காலகட்டத்தில் ஹஸ்ரத்தின் சிறை வாழ்க்கையின்போது, அவருடைய குறிப்புகள், நூல்கள், ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன; பழிவாங்கும் கண்ணோட்டத்தில் மலிவு விலையில் விற்கப்பட்டன. விடுதலையான பின்னர் தன்னுடைய பொருளாதாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள அச்சகங்களில் பிழைதிருத்தும் பணியையும் அவர் மேற்கொண்டதுண்டு.
இந்தியப் பிரிவினையை ஆதரிக்காத நிலைப்பாடு, இந்தியாவும் ரஷ்யாவைப் போன்ற அரசியல் அமைப்பினை ஏற்க வேண்டும் என்னும் கருத்தியல் தாக்கம் இரண்டையும் ஹஸ்ரத் கொண்டிருந்தும், இந்திய அரசியலமைப்புச் சபையின் உறுப்பினராகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். ஆனால், அது தன்னுடைய பார்வைகளுக்கு மாறுபட்டதாக இருப்பதால் அதில் கையெழுத்திடாமல் தவிர்த்தவர். தன்னுடைய கொள்கையளவில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியா குடியரசாக விளங்குவதற்கு உழைத்ததும், அதன் பின்னர் கருத்தியலின் அடிப்படையில் விலகி நின்றதும் அவருடைய அறிவுமுதிர்ச்சியின் வெளிப்பாடு.
மாவீரர் மௌலானா, கிருஷ்ணனை விரும்பிய மௌலானா, கம்யூனிஸ்ட் மௌலானா, தேசியவாத மௌலானா என யார் வேண்டுமானாலும் ஹஸ்ரத் மோஹானியை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளட்டும்.
தேசியவாதி, கம்யூனிஸ்ட், கிருஷ்ண பக்தர், விடுதலைப் போராளி, அரசியலமைப்புச் சபை உறுப்பினர் எனப் பல அடையாளங்கள் ஹஸ்ரத் மோஹானியைச் சுற்றியிருந்தாலும், உருதுக் கவிதை உலகில் அவரது நிரந்தர முகவரி கவிதையே.
கஜல் உலகில் // சுப்கே சுப்கே ராத் தின் ஆஸூம் பஹானா யாத்… // என குலாம் அலியின் குரலில் இழையோடும் மெல்லிய சோகத்துடன் அந்த கஜல் ஒலிக்கையில் ரசிகனுக்கு, கவிஞர் ஹஸ்ரத் மோஹானிதான் நினைவுக்கு வருவார்.
(தொடரும்)