ஈற்றடிக்கோர் பாட்டு – 10

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “குறைவிலா வாழ்வெனக் கூறு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.

உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:

கறைபடா கைகள் கலங்கிடா எண்ணம்
மறைசொல்லும் நீதி மனத்தில்; – உறைந்து
சிறைபடா நெஞ்சமே சீர்மிகுச் செல்வம்
குறைவிலா வாழ்வெனக் கூறு
.

இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும் கவிதைகளும்.

இப்னு ஹம்துன்
வாக்கில் இனிமையும் வாழ்வினில் நேர்மையும்
ஆக்குமுறச் செய்யும் அறிவன்பும் – நோக்கும்
துறைதொறும் நோவினைத் தீர்த்தலு மாயின்
குறைவிலா வாழ்வெனக் கூறு.

சின்னக்கண்ணன்
சேர்த்திருக்கும் செல்வத்தை சீராய்ச் செலவழித்து
ஊர்மக்கள் உள்ளத்தில் நல்லவனாய் – நேர்மை
உறைந்திருக்க ஊக்கமுடன் நல்லவைகள் செய்தால்
குறைவில்லா வாழ்வெனக் கூறு

மாலா மாதவன்
சித்தம் கலங்காதே சிந்தனை கொள்ளாதே
பித்தை எதன்மீதும் வைக்காதே – நித்தம்
இறைபலம் கொண்டுன் இருப்பை நிரப்பிக்
குறைவிலா வாழ்வெனக் கூறு

சுந்தர ராசன்
கடனிலாக் கஞ்சி! கடவுள்மேல் பக்தி!
உடலிலே நோயிலா ஓட்டம்! விடமாம்
கறையிலா நெஞ்சம் கவலையிலாத் தூக்கம்
குறையிலா வாழ்வெனக் கூறு!

உஷா கண்ணன்
வானமே எல்லையாய் வையமே இருக்கையாய்
வீடே கோவிலாய் செய்யும்தொழிலே தெய்வமாய்
அன்பே அச்சாரமாய் எண்ணி வாழ்வதே
குறைவிலா வாழ்வெனக் கூறு

ஹேமா செந்தில்
அழகான வாழ்க்கை மணியான மக்கள்
குழப்பமில்லா தாம்பத்யம் பஞ்சமில்லா வாழ்வு
இறையின் அருளால் அமையப் பெறின்
குறைவிலா வாழ்வெனக் கூறு

கண்மணி பாண்டியன்
துன்பத்தில் தோள் கொடுக்கும் நட்பு
இன்பத்தில் கைகோர்க்கும் உறவு
எதிலும் போதும் என்ற மனநிறைவு
ஈகை தரும் உவகை
கற்ற கல்வியால் மேன்மை
இவை அனைத்தும் கிடைக்கப் பெற்றால்
குறைவிலா வாழ்வெனக்கூறு

நளினி சுந்தரராஜன்
சின்னஞ்சிறு நெஞ்சில் அரும்பியதே ஆசைகள்
மின்னல் இடியென தாக்கியதே
இடையூறுகள்
கண்ணீரில் நாளும் கரைந்தே காத்திருந்தோம்
திண்ணமாய்க் காதலை மட்டும் பற்றியிருந்தோம்!
பிரிவு என்னும் புயல் வந்து சூழ்ந்த போதிலும்
பிரியாத வரமான காதல் வழித்தடம் மாறாதிருந்தோம்
காலம் கனிந்தொரு நாள் அன்பன் கரம்பிடிக்க
காயங்கள் ஆறித் தோன்றினவே மகிழ் மாயங்கள்!
மாலை தனைச் சூடித் தோளில் சாய்ந்த கணத்தினிலே
மங்காத இன்பம் உள்ளமெங்கும் பொங்கிடவே
கைகூடிய காதல் தந்த நிம்மதி என்றும்
குறைவிலா வாழ்வெனக் கூறு!

ருக்மணி வெங்கடராமன்
அழகான மனைவி மக்கள் சுற்றத்துடன்
அன்பான இல்வாழ்க்கை
நிறைவுடன்
ஊரார் போற்ற சுற்றத்துடன் கூடி
உவகையுடன் தான தர்மங்கள் செய்து
மாசற்ற வாழ்க்கை வாழ்வதை
குறைவிலா வாழ்வென கூறு

ப்ரபா ஸ்ரீதர்
கண்ணாடியின் தன்மை கொண்ட
கள்ளமில்லா பிள்ளை மனத்தில்
கறைதுளியும் ஏறாது கவனம் சேர்த்து
தண்ணீரின் தூய்மையெனத் தவம்பயின்றால்
ஆங்கே, கண்ணீரும் வருமோ சொல்!

முல்லை மலர்களே பல்லெனப் பூக்க
இதயம் மலர்ந்த வெள்ளைச் சிரிப்பு ;
மனிதன் நிலையை மனதின் தரத்தை
உள்வாங்கி உமிழும் பழுதற்ற பிம்பத்தின்
எல்லையிலும் விரியும் வண்ணச் சிதறல்!

மறைசொல்லும் முறையோடு
பிழையின்றி வரையும் தடங்களில்;
நிறை கொண்ட உளமதில்,
உரமெனவே வரும் உறவுகளால் என்றும்,
குறைவிலா வாழ்வெனக் கூறு

வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.

Author

Related posts

ஞான நூல்கள் – 16 & 17

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 8: மாயைக் குகைகள்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 9